வழிபாட்டுத் தலம்
திருவிடை மருதூர் மகாலிங்கசுவாமி கோவில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருவிடை மருதூர் மகாலிங்கசுவாமி கோவில் |
|---|---|
| வேறு பெயர்கள் | இடைமருது, மத்தியார்ச்சுனம், திருவிடைமருது, மருதவனம், சண்பகாரண்யம், சத்திபுரம் |
| ஊர் | திருவிடைமருதூர் |
| வட்டம் | திருவிடைமருதூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | மகாலிங்கேஸ்வரர், மருதவனேஸ்வரர், மருதவாணர் |
| தாயார் / அம்மன் பெயர் | பிருகத்சுந்தரகுஜாம்பிகை, பெருநலமுலையம்மை |
| தலமரம் | மருது (அர்ஜு னம்) |
| திருக்குளம் / ஆறு | காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | தேர்த்திருவிழா |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| கல்வெட்டு / செப்பேடு | இக்கோயிலில் 149 கல்வெட்டுக்கள் உள. இவற்றுள் ஒரு கல்வெட்டிலிருந்து அந்நாளில் சுவாமி திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டுவர மண்குடங்களே பயன்படுத்தப்பட்டன என்னும் செய்தியை அறிகிறோம். கல்வெட்டில் இத்தலம் ‘உய்யக்கொண்ட சோழவளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடை மருதூர்’ என்று குறிக்கப் பெறுகின்றது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | உமாதேவியார், விநாயகர், முருகன், திருமால், காளி, இலக்குமி, சரஸ்வதி, வேதம், வசிட்டர், உரோமேச முனிவர், ஐராவணம், சிவவாக்கியர், கபிலர், அகத்தியர், வரகுண பாண்டியன் முதலியோர் இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். மருதமரத்தின் கீழே கட்டுண்ட கண்ணனின் உருவம் உள்ளது. பக்கத்தில் காவிரி ஓடுகிறது. மூலவர் மகாலிங்கேஸ்வரர் - அழகான மூர்த்தி. நிறைவான தரிசனம். அம்பாள் அழகிய கோலத்துடன் தரிசனம். அம்பிகை மௌனமாக இருந்து தவஞ்செய்த மூகாம்பிகை சந்நிதியும், மேரு பிரதிஷ்டையும் தரிசிக்கத் தக்கவை. கோயில் நன்கு பராமரிக்கப்பட்டுப் பொலிவுடன் திகழ்கிறது. தைப்பூசத்தில் சுவாமி காவிரிக்கு எழுந்தருளி ஐராவணத்துறையில் தீர்த்தம் கொடுப்பது சிறப்பாக நடைபெறுகிறது. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். |
|
சுருக்கம்
சோழநாட்டு (தென்கரை)த் தலம். ‘இடைமருது’ - ‘மத்தியார்ச்சுனம்’ எனப் புகழப்படும் பதி. வடக்கே ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீசைலம் (மல்லிகார்ச்சுனம்) தலைமருது என்றும்; தெற்கில் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள ‘திருப்புடைமருதூர்’ (புடார்ச்சுனம்) கடைமருது என்றும் வழங்கப்படும். இவையிரண்டுக்கும் இடையில் இருப்பதால் இஃது இடைமருது ஆயிற்று. (அர்ச்சுனம் -மருதமரம்) மகாலிங்கத் தலம் என்று புகழப்படும் இத்தலத்தைச் சுற்றிப் பரிவாரத் தலங்கள் ஒன்பது உள்ளன. இத்தலத்திற்குக் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பாடியுள்ள தலபுராணமும் ; மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடியுள்ள ‘உலா’வும் உள்ளன. (தலபுராணம் - மருதவனப்புராணம்) இத்திருக்கோயிலில் ஆதித்தபிச்சன் என்பவனால் நிறுவப்பட்ட அறக்கட்டளைகள் ‘பிச்சைக் கட்டளை’ என்றழைக்கப்படுகின்றன. இக்கட்டளை தருமையாதீனத்தின் நிர்வாகத்தில் இருந்து வருகின்றது.
|
|
திருவிடை மருதூர் மகாலிங்கசுவாமி கோவில்
| கோயிலின் அமைப்பு | பெரிய கோயில். நான்கு பிராகாரங்கள். வீதியையும் சேர்த்தால் பிராகாரம் ஐந்தாகும். வெளிப்பிராகாரம் பெரிய பிராகாரம் “அஸ்வமேத பிராகாரம்” எனப்படும். இதன் மூலம் சுவாமி அம்பாள் கோயிலை வலம் வரலாம். இப்பிராகாரத்தை வலம் வந்தால் பேய், பைத்தியம் முதலியன நீங்கும். இன்றும் இவற்றால் பீடிக்கப்பட்டோர் வந்து வலம் செய்து குணமடைவதைப் பார்க்கலாம். அடுத்துள்ள பிராகாரம் “கொடுமுடிப் பிராகாரம்” - இதன் மூலம் சுவாமியை மட்டும் வலம் வரலாம். அடுத்து பிரணவப் பிராகாரத்தினால் சுவாமியை வலம் வரலாம். இப்பிராகாரத்தில் தலமரம் உள்ளது. அம்பாள் கோயில் உள்ளது உள் பிராகாரம். (இதனுள்ளும் ஒரு பிராகாரமுள்ளது.) தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. தேரடியில் விநாயகர் கோயிலும், கீழவீதியில் விசுவநாதர் கோயிலும், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோயிலும், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் இருக்க; இவற்றிற்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கின்றார். எனவே இத்தலத்தை “பஞ்ச லிங்கத் தலம்” என்றும் சொல்வர். வடக்குக் கோபுர வாயிலில் அகோர வீரபத்திரர் கோயிலும், மேற்குக் கோபுர வாயிலில் குமரன் கோயிலும் உள்ளன. கிழக்கு வாயிலில் படித்துறை விநாயகரும் பட்டினத்தாரும் ; மேல் வாயிலில் பர்த்ருஹரியாரும் தரிசனம் தருகின்றனர். சொக்கநாதர் கோயிலில் உள்ள மூர்த்திக்கு அபிஷேகம் செய்து மேகராகக் குறிஞ்சி பண்பாடினால் மழைபெய்யும் என்பது மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும். சுவாமி அம்பாள் சந்நிதிகள் கிழக்கு நோக்கியன. கோயிலின் உள்ளே உள்ள பாண்டியன் கோபுரத்தையும் சேர்த்து ஐந்து ராஜகோபுரங்கள் உள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருவலஞ்சுழி, சுவாமி மலை, தில்லை, சூரியனார் கோயில், ஆலங்குடி, சீர்காழி, திருவாவடுதுறை, திருவாரூர், திருவாய்ப்பாடி |
| செல்லும் வழி | மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப் பாதையில் உள்ள நிலையம். மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்துச் சாலையில் உள்ள தலம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
திருவிடை மருதூர் மகாலிங்கசுவாமி கோவில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | திருவிடைமருதூர் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | திருவிடைமருதூர் |
| அருகிலுள்ள விமான நிலையம் | திருச்சி |
| தங்கும் வசதி | திருவிடைமருதூர் வட்டார விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Nov 2018 |
| பார்வைகள் | 47 |
| பிடித்தவை | 0 |