Back
வழிபாட்டுத் தலம்
திருப்புட்குழி விசயராகவப்பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருப்புட்குழி விசயராகவப்பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் திருப்புட்குழி
ஊர் திருப்புட்குழி
வட்டம் பாலுசெட்டிசத்திரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் விஜயராகவப் பெருமாள்
தாயார் / அம்மன் பெயர் மரகதவல்லி
திருக்குளம் / ஆறு ஜடாயு தீர்த்தம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, இராமநவமி
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / பாண்டியர், விசயநகரர்
கல்வெட்டு / செப்பேடு இக்கோவிலில் அதிக அளவிற்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன் மூலம் பாண்டிய மன்னர்களும் விஜயநகரப் பேரரசும் இத்தலத்திற்கு ஆற்றிய தொண்டினைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இங்குள்ள கல்வெட்டுக்கள் இக்கோவிலைப் ‘போரேற்றுப் பெருமாள் கோவில்’ என்றும் ‘சித்தன்னவேலி திருப்புட்குழி நாயனார் கோவில்’ என்றும் பலவாறு குறிப்பிடுகின்றன. மன்னு மரகதத்தை புட்குழியெம் போரேற்றை என்பார் திருமங்கையாழ்வார்.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் விஜயராகவப் பெருமாள் நான்கு புஜங்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம். தனி திருமுன்னில் மரகதவல்லி தாயார் அமர்ந்த கோலம்.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
சுருக்கம்
மன்னு மரகதத்தை புட்குழியெம் போரேற்றை என்பார் திருமங்கையாழ்வார். ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு எதிர்ப் புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. மூலவர் தமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு ஸமஸ்காரம் செய்யும் பாவணையில் அமர்ந்துள்ளார். இந்த தாபத்தைத் தாங்க முடியாமல் இடம், வலமாக மாறி எழுந்தருளியுள்ளார். வலப்பக்கத்தே இருக்க வேண்டிய ஸ்ரீதேவி இடப்பக்கத்தே இருப்பது இங்கும் திருவிடவெந்தையில் மட்டுமே. இங்கு பெருமாள் வெளியே புறப்பட்டு திருவீதி கண்டருளும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதைகளும் உண்டு. இங்கு எழுந்தருளியுள்ள விஜயராகவப் பெருமாளுக்கு வடமொழியில் ஸமர புங்கவன் என்பது பெயர். இதைத்தான் போரேறு என்று தமிழ்படுத்தினார் ஆழ்வார். இந்த ஊரில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி இரவில் மடியில் (பெண்கள்) வறுத்த பயறு கட்டிக்கொண்டு படுக்க மறுநாள் விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்கட்கு குழந்தைப்பேறு உண்டாகும். இங்கு இது அனுபவரீதியாகக் காணப்படும் உண்மையாகும். இதனாற்றான் இந்தத் தாயாருக்கு வறுத்த பயறு, முளைவிக்கும் மரகதவல்லித் தாயார் என்று பெயர் பிரசித்தம். இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடமே இராமானுஜர் அத்வைத பாடங்களைப் பயின்றார். இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது. (இராமானுஜரோடு எம்பாரும் இங்குதான் கற்றார்.) நம்பிள்ளையாரின் சீடரான பின்பழகிய பெருமாள் ஜீயர் அவதரித்த தலம் ஆகும். இக்கோவிலில் அதிக அளவிற்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன் மூலம் பாண்டிய மன்னர்களும் விஜயநகரப் பேரரசும் இத்தலத்திற்கு ஆற்றிய தொண்டினைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இங்குள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமானதாகும். கல் குதிரை என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இதைச் செய்த தச்சன் இது மாதிரி இனி யாருக்கும் செய்துகொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர்துறந்தானாம். இவனது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டுத் தெரிவித்து பெருமாள் 8-ஆம் உத்சவத்தன்று அவனது வீதிக்கு எழுந்தருளுகிறார். இராமானுஜரும், மணவாள மாமுனிகளும் பன்முறை எழுந்தருளியுள்ளனர். நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதியில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இப்பெருமாளைப் பலவாறு போற்றிக் கூறுகிறார்.
திருப்புட்குழி விசயராகவப்பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் விமானம் விஜயகோடி விமானம் என்ற வகையைச் சார்ந்தது. சதுரமான கருவறை.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் கிழார் சிவன் கோயில், கோலியம்மன் கோயில், பூவராகப் பெருமாள் கோயில்
செல்லும் வழி புட்குழி என்னும் இத்தலம் காஞ்சிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ள பாலுசெட்டிசத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சாலையில் சுமார் 2 பர்லாங் தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வேலூர் சாலையில் அமைந்துள்ள இந்த பாலுசெட்டிசத்திரத்திலிருந்து நடந்தே செல்லலாம். சென்னையிலிருந்தும் காஞ்சிபுரத்தில் இருந்தும் தற்போது ஏராளமான பேருந்துகள் உண்டு.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
திருப்புட்குழி விசயராகவப்பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருப்புட்குழி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி பாலுசெட்டிசத்திரம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 29 Nov 2018
பார்வைகள் 53
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்