Back
வழிபாட்டுத் தலம்
அச்சிறுப்பாக்கம் ஆட்சீசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அச்சிறுப்பாக்கம் ஆட்சீசுவரர் கோயில்
வேறு பெயர்கள் அச்சுஇறுபாக்கம், அச்சிறுபாக்கம்
ஊர் அச்சிறுபாக்கம்
வட்டம் மதுராந்தகம்
மாவட்டம் காஞ்சிபுரம்
தொலைபேசி 044 - 27523019. 09842309534.
உட்பிரிவு 1
தாயார் / அம்மன் பெயர் இளங்கிளி அம்மை, உமையாம்பிகை
தலமரம் சரக்கொன்றை
திருக்குளம் / ஆறு தேவ, பானு, சங்கு
ஆகமம் காமீகம்
வழிபாடு இருகால பூசை
திருவிழாக்கள் சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், பௌர்ணமி வழிபாடு
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள்
கல்வெட்டு / செப்பேடு மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்துத் தென்பால் தனியூர் அச்சிறுபாக்கம்' என்று இவ்வூர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றது. கருவறைத் திருச்சுற்றுச்சுவரில் சோழர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் இலிங்க வடிவில் ஆட்சிபுரீசுவரர் காட்சியளிக்கிறார். கருவறை வெளிப்புற தேவகோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, நான்முகன் உள்ளனர். அர்த்தமண்டப கோட்டங்களில் விநாயகர், துர்க்கை ஆகிய சிற்பங்களும், பிரமகபால மாலையுடன் பைரவர், நாகமொன்று சிவலிங்கத்தை வழிபடுவது, காரைக்காலம்மை தலையால் நடப்பது, கண்ணப்பர் கண்ணைப் பெயர்க்கும்போது இறைவனின் கை வெளிப்பட்டுத் தடுப்பது, ஒரு தலையுடன் இருமான்கள் போன்ற புடைப்புச் சிற்பங்களும், தனி சந்நிதியில் அச்சுமுறி விநாயகர், முருகன் ஆகிய தனி சிற்பங்களும் குறிப்பிடத்தக்கவை. உமையாட்சீஸ்வரர் கருவறை வாயிலில் இருபுறமும் அலமேலுமங்கை, ஸ்ரீனிவாச பெருமாள், பழனிஆண்டவர், உற்சவ மூர்த்திகள், லட்சுமி துர்க்கை சரஸ்வதி, ஆறுமுகசாமி ஆகியோரின் சந்நிதிகள் அழகுற அமைந்துள்ளன. கருவறைக்குள் உமையாட்சீஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் காட்சி தருகிறார். லிங்க உருவின் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
சுருக்கம்
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகத்தை அடுத்து இவ்வூர் உள்ளது. அச்சரப்பாக்கம் என்று தற்போது மக்கள் வழக்கில் வழங்கப்பட்டு வரும் அச்சிறுப்பாக்கம் சிவன் கோயில் தொண்டைமண்டலத்தின் பாடல் பெற்ற தலங்களில் 29-வது தலமாகும். திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பாடியுள்ளார். இக்கோயிலில் ஆட்சீசுவரர், உமையாட்சீசுவரர் என இரண்டு கருவறைகள் உள்ளன. உமையாட்சீஸ்வரர் சந்நிதி, வாயிலுக்கு நேரே உள் திருச்சுற்றில் அமைந்துள்ளது. சித்திரைத் பெருவிழாவில் 11-ஆம் நாள் சுவாமி 'பெரும்பேறு கண்டிகை' கிராமத்திற்கு எழுந்தருளி, அகத்தியருக்குக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது. கௌதமமுனிவர், கண்ணுவமுனிவர் ஆகியோர் இங்கு வழிபட்டதாக தலபுராணம் கூறுகின்றது. தலபுராணத்தோடு தொடர்புடைய அச்சு முறி விநாயகர் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
அச்சிறுப்பாக்கம் ஆட்சீசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் இக்கோயில் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் நேராக இல்லாமல் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை சற்று இடதுபுறம் அமைந்துள்ளது. இக்கோயிலில் இரண்டு கருவறைகள் அமைந்துள்ளன. கோபுர வாயிலுக்கு நேரே உள்ள உள் வாயில் வழியாகச் சென்றால் நேர் எதிரே உமையாட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. உள் வாயில் நுழைந்தவடன் சற்று வலதுபுறத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றிற்கு எதிரே உள்ளபடி அமைந்திருக்கும் ஆட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. இந்த ஆட்சீஸ்வரர் சந்நிதி இக்கோயிலின் முக்கியமான மூலவர் கருவறையாகும். உள் வாயிலைக் கடந்தவுடன் வலதுபுறம் உள்ள ஆட்சீஸ்வரரை தரிசித்துவிட்டு சற்று நேரே உமையாட்சீஸ்வரர் கருவறை அமைந்துள்ளது. கோயிலின் வடபுற வெளித்திருச்சுற்றில் தலமரமான சரக்கொன்றையின் அடியில் கொன்றையடி ஈஸ்வரர் சந்நிதி காணப்படுகின்றது. அருகில் நந்திகேசுவரரும், சிவனை வணங்கியபடி திரிநேத்ரதாரி முனிவரும் உள்ளனர். வடபுற வெளித்திருச்சுற்றின் வடகிழக்கு மூலையில் இத்தலத்தின் பிரதான அம்பாள் இளங்கிளி அம்மை தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். சிவபெருமானின் தேர் அச்சை முறித்த விநாயகர் "அச்சுமுறி விநாயகர்" என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் மேல்மருவத்தூர் அம்மன் கோயில், செய்யூர் முருகன் கோயில்
செல்லும் வழி அச்சிறுபாக்கத்திற்கு முந்தைய ரயில் நிலையமான மேல்மருவத்தூரில் இறங்கி, சுமார் 4 கி.மீ. பயணம் செய்தால் அச்சிறுபாக்கம் கோயிலை அடையலாம். அச்சிறுபாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இடப்பக்கம் பிரியும் ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 96 கி.மி. தொலைவில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6-30 மணி முதல் 11-30 மணி மாலை 4-30 மணி முதல் 8-30 மணி
அச்சிறுப்பாக்கம் ஆட்சீசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் அச்சிறுப்பாக்கம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம் மீனம்பாக்கம்
தங்கும் வசதி சென்னை விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 1209
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்