வழிபாட்டுத் தலம்
திருஆலம் பொழில் வடமுலேசுவரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருஆலம் பொழில் வடமுலேசுவரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | வடமுலேசுவரர், திருஆலம் பொழிலான், ஆத்மநாத ஈசுவர் |
| ஊர் | திருவையாறு |
| வட்டம் | திருவையாறு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | ஸ்ரீவடமுலேசுவரர் |
| தாயார் / அம்மன் பெயர் | ஞானாம்பிகை |
| தலமரம் | ஆலமரம் |
| திருக்குளம் / ஆறு | குடமுருட்டியாறு |
| வழிபாடு | காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
| திருவிழாக்கள் | ஆவணி மூலத்திருவிழா, கார்த்திகை சோமவாரம், மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு / சோழர்கள் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இறைவன் கருவறை விமானத்தின் தென்புறக்கோட்டத்தில் பிற்காலத்திய தென்முகக் கடவுள் உள்ளார். மேலும் அதனையடுத்து உள்ள பஞ்சரக் கோட்டத்திலும் ஒரு தென்முகக் கடவுள் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. நான்முகன், விஷ்ணுதுர்க்கை, சண்டேசர், நவக்கிரகம், நால்வர், அப்பர் ஆகிய பிற்கால சிற்பங்களும் உள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றின் கூரைப்பகுதியில் யாளிவரி செல்கிறது. இறைவன் கருவறை விமானத்திலும், அம்மன் கருவறை விமானத்திலும் சுதைச்சிற்பங்கள் உள்ளன. இராஜகோபுரத்தில் சுதைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற தலம். திருநாவுக்கரசர் பாடியுள்ளார். தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்று |
|
சுருக்கம்
இத்திருத்தலம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றத் தலம். தென்பரம்பைக்குடி என பண்டு இத்தலம் பெயர் பெற்றுள்ளது. கி.பி.6-7-ஆம் நூற்றாண்டுகளில் இத்தலம் பரம்பைக்குடி என்ற பெயர்பெற்றுள்ளது எனத் தெரிய வருகிறது. தோஷ பரிகாரத்தலமாக விளங்குகின்றது. ஆத்மநாத ஈசுவரர் என்று இறைவன் திருப்பெயர்ப் பெற்றுள்ளார். சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாகக் கருதப்படுகிறார்.
|
|
திருஆலம் பொழில் வடமுலேசுவரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | மேற்கு நோக்கிய திருத்தலமாக இக்கோயில் விளங்குகிறது. இக்கோயில் இறைவன் கருவறை தாங்குதளத்திலிருந்து சுவர் வரை கற்றளியாகவும், கூரையிலிருந்து விமானத்தின் மேற்பகுதி சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சோழர்காலத்தில் கற்றளியாக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கோயிலை அப்பர் தனது திருமுறையில் பாடியுள்ளதால் கி.பி.6-ஆம் நூற்றாண்டிலேயே இக்கோயில் இருந்திருக்க வேண்டும். பின்பு இக்கோயில் சோழர்காலத்தில் கற்றளியாக்கப்பட்டிருக்க வேண்டும். கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கட்டடக்கலைப் பாணியில் ஆங்காங்கே சோழர்கால எச்சம் தெரிகிறது. தாங்குதளத்தின் உபானம், ஜகதி ஆகிய உறுப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. உருளைக் குமுதம் வெளியேத் தெரிகின்றது. சுவர்களில் உள்ள கோட்டங்களில் சோழர்கால சிற்பங்கள் காணப்படவில்லை. அரைத்தூண்களுக்கு நடுவே கோட்டங்கள் அமைந்துள்ளன. பஞ்சரப்பத்தியிலும் கோட்டங்கள் உள்ளன. அவையும் வெற்றுக் கோட்டங்களாகவே உள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், இராஜகோபுரம் ஆகியன இடம் பெற்றுள்ளன. அர்த்தமண்டபம் மற்றும் முகமண்டபத்தின் கூரைப்பகுதியில் யாளிவரி செல்கிறது. இராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. கோபுரத்தில் சுதைச் சிற்பங்கள் அழகு செய்கின்றன. அம்மனுக்கு தனி சிறுகோயில் அமைந்துள்ளது. அம்மன் கருவறை விமானம் ஒரு தளத்தைப் பெற்றுள்ளது. இது பிற்காலக் கட்டடக்கலைப் பாணியாகும். இக்கருவறைக் கோட்டங்களும் வெற்றிடமாகவே உள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதியகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் |
| செல்லும் வழி | திருச்சியிலிருந்து பூதலூர் வழியாக திருவையாறு செல்லும் பேருந்துகள் இத்தலத்தைக் கடந்து செல்கின்றன. திருவையாறுக்கு தென்மேற்கே 5கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் பேருந்துகள் இவ்வழியே செல்கின்றன. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 35 |
| பிடித்தவை | 0 |