|
-சே.பச்சைமால் கண்ணன்
தென்கலைச் செல்வர் (தட்சிணக் கலாநிதி), பெரும் பேராசிரியர் (மகாமகோபாத்தியாய) என்னும் பட்டங்களைப் பெற்றவர் உ.வே. சாமிநாதையர்.
உ.வே. சாமிநாதையர் சிறந்த தமிழ்ப் பற்றாளராக விளங்கினார். தமிழ்நாட்டில் ஆசிரியர், பேராசிரியர் ஆகியோரின் புலமைக்குச் சான்றளிப்பவராகத் திகழ்ந்தார். அதுமட்டுமல்லாமல் மன்னர்களின் அரண்மனைகளிலும், சைவ வைணவ மடங்களிலும், வறுமைக்குள்ளான புலவர்களின் மரபினரிடமும் இருந்த தமிழ் இலக்கியங்களைக் கொண்ட ஓலைச்சுவடிகள் செல்லரித்தும், தீக்கிரையாகியும், ஆற்றுவெள்ளத்தில் இடப்பட்டும் அழிவதைக் கண்டு அவர் உள்ளம் வாடியது. அதனால் அழியும் நிலையில் இருந்த ஓலைச்சுவடிகளை அரிதின் முயன்று தேடிக் கண்டுபிடித்துப் படியெடுத்ததுடன், அவற்றை அச்சிற்பதிப்பித்து நூலாகக் கொண்டுவந்தார். அவரின் அருமுயற்சியால்தான் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பதினெண்கீழ்க்கணக்கு எனச் சங்க இலக்கிய நூல்களைப் படிக்கும் வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம். அதனால் அவரைத் தமிழ்ப் பாட்டன் என்று அழைப்பது மிகப் பொருத்தமாகும்.
உ.வே.சாமிநாதையர் மடல்கள் என்னும் தலைப்பிட்ட இந்தத் தொகுப்பில் 1877ஆம் ஆண்டு முதல் அவர் காலம் வரை எழுதப்பட்ட இரண்டாயிரத்து அறுநூற்றுக்கும் மேற்பட்ட மடல்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அவருக்குக் கல்வியாளர்களும், குறுநில மன்னர்களும், தமிழார்வலர்களும் எழுதியவை.
ஐயரின் மாணவராகத் தமிழ்படித்துப் பின்னாளில் சென்னை மாகாணத் தலைமை அமைச்சராக உயர்ந்த சுப்பராயன், ஆங்கிலேயராட்சியில் மத்தியச் சட்டமன்றத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த காங்கிரஸ் அரசால் இந்தி திணிக்கப்பட இருந்தது குறித்து ஐயரின் கருத்தறிய விரும்பி எழுதிய மடலும் இந்தத் தொகுப்பில் உள்ளது.
இவற்றை வெறும் மடல்கள் என்று கருதிவிட முடியாது. அந்நாளில் நிலவிய கல்வி, சமூக, பொருளாதாரச் சூழலை நாம் அறிந்துகொள்ள உதவும் வரலாற்றுச் சான்றுகளாக இவை உள்ளன.
ஐயருடன் நாமும் உலவுவது போலும், ஐயர் பேராசிரியராக இருந்த கல்லூரியில் எதிரில் அமர்ந்து நாம் கல்வி கற்பது போலவும் மெய்ந்நிகர் உணர்வு இந்த மடல்களைப் படிக்கும்போது நம் ஒவ்வொருவரின் மனத்திலும் தோன்றும். கிடைத்தற்கரிய கருவூலமான இந்தத் தொகுப்பு தமிழருக்கான பெருஞ்செல்வமாகும்.
உ.வே.சா. மடல்களைக் காண இங்கே சொடுக்கவும்
|