Back
வழிபாட்டுத் தலம்
திருக்குறுக்கை வீரட்டேசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருக்குறுக்கை வீரட்டேசுவரர் கோயில்
வேறு பெயர்கள் யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம், திருக்கொருக்கை, திருக்குறுக்கை வீரட்டம்
ஊர் கொருக்கை
வட்டம் மயிலாடுதுறை
மாவட்டம் நாகப்பட்டினம்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் வீரட்டானேஸ்வரர்
தாயார் / அம்மன் பெயர் ஞானாம்பிகை
தலமரம் கடுக்கா
திருக்குளம் / ஆறு சூல தீர்த்தம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் மாசிப் பெருவிழா - காமதகனம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
கல்வெட்டு / செப்பேடு சோழ, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கோஷ்ட மூர்த்தங்களாகத் துர்க்கை, பிரமன் (இம்மூர்த்தத்தின் மேலே ரதி, இறைவனை வேண்டுவது போல சுதையாலான சிற்பம் உள்ளது.) லிங்கோற்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சண்டேஸ்வரர் சந்நிதி தனிக்கோயிலாக உள்ளது. உட்பிரகார வலம் முடித்துப் படிகளேறி, மண்டபத்தை அடையலாம். மண்டபத்தின் வலப்பால் நவக்கிரக சந்நிதி. வாயிலைக் கடந்து உள்சென்றால் இடப்பால் நடராசசபை உள்ளது. எதிரில் வாயில் உள்ளது. இச் சபையில் சிவகாமி, மாணிக்கவாசகர் திருமேனிகள் உள. இச் சபை, ‘சம்பு விநோத சபை’, ‘காமனங்கநாசனி சபை’ எனப் பெயர் பெறும். துவாரபாலகர்களைக் கடந்து உட்சென்றால் நேரே மூலவர் தரிசனம். சுயம்பு மூர்த்தி. சதுர ஆவுடையார் - உயர்ந்த பாணம், மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் (ஐந்து அம்புகளுள்) ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று.
சுருக்கம்
இலக்குமி, திருமால், பிரமன், முருகன், ரதி ஆகியோர் வழிபட்ட தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று, மன்மதனை எரித்த தலம். “ஆடல் அநங்கனை அமுது செய்த செங்கணான் இருக்கை ஈது” என்பது திருவிளையாடற்புராணத் தொடர். இத்தலம் திருக்குறுக்கை வீரட்டம் எனப்படும். அப்பர் பாடல் பெற்றது. காமதகனவிழா மாசிமகத்தன்று, இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகின்றது. காமனைத் தகனம் செய்த இடம் ‘விபூதிக்குட்டை’ என்ற பெயரில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இக் குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாகவேயுள்ளது. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.
திருக்குறுக்கை வீரட்டேசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு இராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. எதிரில் சூல தீர்த்தம் உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதி. இராஜகோபுரத்தில் பைரவர், தட்சிணாமூர்த்தி, சதாசிவர் முதலிய பலவகைச் சிற்பங்கள் உள்ளன. இவற்றுள் பன்றி, யானை, நரசிம்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய ஒரு மூர்த்தியின் உருவம் - சிற்பம் காணத்தக்கது. வாயிலில் உட்புறமாகத் துவாரகணபதியும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளிச்சுற்றில் தோட்டம் மட்டுமே - சந்நிதிகள் ஏதுமில்லை. கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் மட்டும் உள்ளது. வௌவால் நெத்தி மண்டபம். இம்மண்டபத்தில் இடப்பால் அம்பாள் - ஞானாம்பிகை சந்நிதி உள்ளது. தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். எதிரில் நந்தி, பலிபீடம் உள்ளது. இருபுறமும் துவாரபாலகியர் உள்ளனர். மண்டபத்தின் ஒருபுறம் பள்ளியறை உள்ளது. வாயிலைக் கடந்து அடுத்த மண்டபத்தையடைந்தால் இடப்பால் வள்ளி தெய்வயானை சுப்பிரமணியர் தரிசனம். அடுத்து கஜலட்சுமி தரிசனம். பக்கத்தில் தலமூர்த்தியாகிய ‘காம தகன மூர்த்தி’ சந்நிதி உள்ளது. இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபயமுத்திரையுடன், இடக்கையை மடக்கிய கால்மீது வைத்து, அமர்ந்த திருக்கோலத்தில் இம்மூர்த்தி காட்சியளிக்கின்றார். களிற்றுப்படிகள் உள்ளன. சந்நிதியின் உள்ளே பக்கத்தில் உமையும் எதிரில் ரதி, மன்மதன் உற்சவத் திருமேனிகளும் உள. சுவாமிக்குப் பக்கத்தில் சனகாதி முனிவர்களின் திருமேனிகள் உள்ளன. மன்மதன் கையில் கரும்பு வில்லும், ரதியின் கையில் கிளியும் உள்ளன. உள் பிரகாரத்தில் தலமரம் ‘கடுக்கா’ உள்ளது. குறுங்கை விநாயகர் - தலவிநாயகர் சந்நிதி உள்ளது. இச்சந்நிதியில் விநாயகர் சதுர ஆவுடையாரில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். பக்கத்தில் தீர்த்தபாகுமுனிவர் உருவம் உள்ளது. அடுத்து, நின்ற கோலத்தில் ‘சோகஹரேஸ்வரர்’ காட்சி தரும் சந்நிதியுள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் தருமபுர ஆதினம்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள்
செல்லும் வழி மக்கள் வழக்கில் ‘கொருக்கை’ என்று வழங்குகிறது. மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - மணல்மேடு பேருந்துச் சாலையில் நீடூர் தாண்டி ‘கொண்டல், பாலந்தாண்டி, ‘கொண்டல்’ ஊரையடைந்து, ‘கொருக்கை’ என்று வழிகாட்டிப் பலகை (கைகாட்டிமரம்) உள்ள (குறுக்கைச்) சாலையில் இடப்புறமாக 3 கி.மீ. சென்று (குறுகியபாதை) பாலத்தைக் கடந்து இத்தலத்தை அடையலாம். கார், வேன், பஸ் செல்லும். மயிலாடுதுறை - மணல்மேடு நகரப் பேருந்து உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
திருக்குறுக்கை வீரட்டேசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் நீடூர், கொருக்கை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி மயிலாடுதுறை விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 05 Dec 2018
பார்வைகள் 39
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்