Back
வழிபாட்டுத் தலம்
காஞ்சி கைலாசநாதர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் காஞ்சி கைலாசநாதர் கோயில்
வேறு பெயர்கள் இராஜசிம்மேஸ்வரம்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் கைலாசநாதர்
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பல்லவ மன்னன் இராஜசிம்மன்
கல்வெட்டு / செப்பேடு இராஜசிம்மன், அவன் மனைவி ரங்கபதாகை கல்வெட்டுகள்
சுவரோவியங்கள் சிதைந்த நிலையில் உள்ளன.
சிற்பங்கள் கருவறைக் கோட்டங்களிலும், திருச்சுற்று சிற்றாலயங்களிலும் சிற்பங்கள் காணப்படுகின்றன. தட்சிணாமூர்த்தி, கங்காதரர், கங்காளர், பிட்சாடனர், காலாந்தகமூர்த்தி, திரிபுராந்தகர், கஜசம்ஹார மூர்த்தி, ஆடல்வல்லான், துர்க்கை, ஜேஷ்டாதேவி, முருகன், விஷ்ணு, நரசிம்மர், 64 சிவ வடிவங்கள், சப்தமாதர்கள், சோமாஸ்கந்தர், பன்னிரு ஆதித்தியர், ஏகாதச ருத்திரர், மகிஷாசுரமர்த்தினி, பெண் தெய்வங்கள், சிவனின் ஆடல் கோலங்கள், நந்தி, பூதகணங்கள், விநாயகர் போன்ற அதிகளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. பரிவார சந்நிதிகள் இடம்பெறவில்லை. கோபுரங்கள் இடம் பெறவில்லை. நின்ற நிலை யாளித்தூண்கள் மிகவும் எழிலானவை. வரிசையாக அரைத்தூண்கள் போன்று அவை நிற்கின்றன. முழுத்தூண்கள் இங்கு இடம் பெறவில்லை.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் கால கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. முதலில் தோன்றிய கற்றளிகளுள் ஒன்று. சிற்பக்கருவூலமாகத் திகழ்கிறது.
சுருக்கம்
காஞ்சி கைலாசநாதர் கோயில் இராஜசிம்ம வர்ம பல்லவ மன்னனால் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிற்பக் கருவூலமாய் விளங்கும் இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டது. மூன்றுதளங்களைக் கொண்டு விளங்கும் இக்கோயில் திராவிடபாணியில் அமைந்துள்ளது. கட்டடக்கலையின் சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் தான் முதன் முதலாக கருவறையைச் சுற்றி வரும் பாதையான சாந்தார நாழிகை இடம் பெற்றுள்ளது. திருச்சுற்று மாளிகை முழுவதும் சுற்றிலும் நான்கு திசைகளிலும் 58 சிற்றாலயங்கள் காணப்படுகின்றன. இச்சிற்றாலயங்களின் உள்ளே சோமாஸ்கந்தர் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இது இராஜசிம்மனின் முன்னோர்களைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது. நடுவில் கைலாயம் போன்று இறைவனுக்கு எடுப்பிக்கப்பட்ட கருவறை அமைந்திருக்க சுற்றிலும் அமைந்த 56 தேசங்களாய் இந்த சிற்றாலயங்கள் விளங்குகின்றன. சிற்றாலயத்தின் முகப்பில் அமைந்த நாற்கரக் கோட்டத்தில் சிவவடிவங்களும், விஷ்ணு வடிவங்களும் இடம் பெற்றுள்ளன. இரு சிற்றாலயங்களுக்கு இடைப்பட்ட வெளியில் தாய்த் தெய்வ உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகு அமைப்பு சிறப்பு வாய்ந்தது. கருவறை விமானத்தின் தேவக்கோட்டங்களில் மிகப்பெரிய அளவில் சிவவடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கில் தென்முகக் கடவுள், மேற்கில் கங்காளர், வடக்கில் கங்காதரர் ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. கங்காதரர், ஆடல்வல்லான் சிற்பங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. விமான தாங்குதளத்தில் பூதகணங்கள் காட்டப்பட்டுள்ளன. மேலும் கருவறை விமானத்தைத் தாங்கியபடி அமர்ந்த யானைகள் காட்டப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கு அமைந்துள்ள கொற்றவை, துர்க்கை, மூத்ததேவி, யானைத் திருமகள், சப்தமாதர்கள் ஆகிய சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. நின்ற நிலையில் பாய்ந்தவாறு உள்ள யாளித்தூண்கள் வியப்பூட்டுபவை. இக்கோயில் முழுவதும் வண்ணங்களால் தீட்டப்பட்டிருந்தது. அதன் எச்சங்களை இப்போதும் பல சிற்பங்களில் காணலாம். இங்குள்ள கல்வெட்டுகள் பல்லவ கிரந்த எழுத்துகளில் மயில்தோகை போன்றும், அன்னப்பறவை இறகு போன்றும் அமைந்துள்ளன. இவ்வகை கிரந்த எழுத்துக்கள் காலத்தால் முந்தியவை. இவை பல்லவர்களின் கல்வெட்டு கலைத்திறனின் கைவண்ணத்தைக் காட்டுபவை.
காஞ்சி கைலாசநாதர் கோயில்
கோயிலின் அமைப்பு கோயில் கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டது. நுழைவு வாயில் சிறிய கோபுரம் போன்ற அமைப்புடன் விளங்குகிறது. கோபுரங்களுக்கு இது ஒரு முன்னோடியாகும். விமானம் நாகரபாணியாக அமைந்துள்ளது. கருவறை விமானம் மூன்று தளங்களை உடையது. தளங்கள் புனரமைக்கப்பட்டவை. தற்போது சுதைச் சிற்பங்களைக் கொண்டுள்ளன. உயர்ந்த உபபீடத்தின் மேல் தாங்குதளம் அமைந்துள்ளது. தாங்குதளத்தின் அடியில் அமைந்துள்ள உபபீடம் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. கருவறைச் சுற்றின் வெளிச்சுவரில் அமைந்துள்ள சிற்பங்கள் அளவில் பெரியவை. மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் உட்புறம் சிறிய சுற்றாக சாந்தாரநாழிகை பெற்று விளங்குகிறது. திருச்சுற்று மாளிகையில் 58 சிற்றாலயங்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் இறைவடிவ சிற்பங்களைப் பெற்றுள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம் ஆகிய அமைப்புகளைப் பெற்று விளங்குகிறது. மண்டபங்கள் சோழர்கால உருத்திரத்தூண்களைப் பெற்று விளங்குகின்றன. மிகப்பரந்த திருச்சுற்றினைப் பெற்றுள்ளது. திருச்சுற்றில் சிற்றாலயங்கள் நாற்புறமும் அமைந்துள்ளன. அவற்றுள்ள சிவ மற்றும் விஷ்ணு உருவங்கள் இடம் பெற்றுள்ளன. திருமதில் சுவரின் மேலே நாற்புறத்திலும் யானைகள், நந்தியுருவங்கள் வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் கச்சி அனேகதங்காதீஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், கச்சபேஸ்வரர் கோயில்
செல்லும் வழி சென்னையிலிருந்து 65கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. நடந்தும் செல்லலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
காஞ்சி கைலாசநாதர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி காஞ்சிபுரம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 100
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்