Back
வழிபாட்டுத் தலம்
திருக்கச்சூர் கச்சபேசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருக்கச்சூர் கச்சபேசுவரர் கோயில்
வேறு பெயர்கள் திருக்கச்சூர் ஆலக்கோயில்
ஊர் திருக்கச்சூர்
வட்டம் செங்கல்பட்டு
மாவட்டம் காஞ்சிபுரம்
தொலைபேசி 044 - 27464325, 09381186389
உட்பிரிவு 1
தாயார் / அம்மன் பெயர் அஞ்சனாட்சி, கன்னி உமையாள்
தலமரம் ஆல்
திருக்குளம் / ஆறு கூர்ம தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் மகாசிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார். திருமாலுக்கு அருளிய இவர் ஓர் சுயம்பு லிங்கமாவார். நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். பதினாறு கால் மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் அழகிய புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. நட்சத்திர மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆமை உருவில் மகாவிஷ்ணு சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது. கருவறையின் திருச்சுற்றில் தேவகோட்டத்தில் மூர்த்திகளாக விநாயகர், தென்முகக்கடவுள், திருமால், நான்முகன், துர்க்கை ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே சண்டேசுவரர் நான்கு முகத்துடன் காட்சி தருகிறார். இங்கு முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. பாடல் பெற்ற தலம். சுந்தரர் பாடியுள்ளார்.
சுருக்கம்
திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் விருந்திட்ட ஈஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற திருத்தலமாகும். பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டு வட்டத்தில் திருக்கச்சூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. அந்தணர் வேடத்தில் வந்து இறைவன், சுந்தரரின் பசி தீர்த்தமை மற்றும் திருமால் கச்சப (ஆமை) வடிவில் இருந்து வழிபட்டமை ஆகியன இத்தலத்தில் நிகழ்ந்தன, மகாவிஷ்ணுவிற்கு இத்தலத்தில் இறைவன் தனது நடனத்தைக் காட்டி அருளியுள்ளார் என்பதாக தலவரலாறு கூறுகிறது. இத்திருக்கோயிலின் மூலவர் கச்சபேசுவரர். இக்கோயில் தியாகராஜசுவாமி திருக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் தியாகராஜர் சந்நிதி உள்ள கோவில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். ஊர் நடுவிலுள்ளது கச்சபேசம் திருக்கோயில். இக்கோயில் ஆலக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தியாகராஜர் , அமிர்த தியாகேசர் என்றழைக்கப்படுகிறார். இத்தலம் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம்.
திருக்கச்சூர் கச்சபேசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு திருக்கச்சூர் தலம் ஆலக்கோவில் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு கோபுரமில்லை. கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. இக்குளத்திற்கு அருகில் தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது. மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றவுடன் கிழக்கு வெளிச் சுற்றில் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. தெற்கு வெளிச் சுற்றில் 27 தூண்களை உடைய நட்சத்திர மண்டபம் உள்ளது. நட்சத்திர மண்டபத்தைக் கடந்து நேரே சென்றால் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் உபயவிடங்கர் எனப்படுகிறார். மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சியின் சந்நிதி உள்ளது. வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக் கோவிலாகவே உள்ளது. அம்பாள் சந்நிதி முன் உள்ள மண்டபத்திதிருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் இலிங்கவடிவில் உள்ளாரர். கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது. கருவறை திருச்சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் சந்நிதியைக் காணலாம். கருவறை திருச்சுற்று வலம் வரும்போது வடக்குச் சுற்றின் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. வடக்கு வெளிச் சுற்றில் கிழக்கு நோக்கிய முருகன் சந்நிதியும், விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதிக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் சந்நிதியும் அமைந்துள்ளது. வடக்கு வெளிச் சுற்றில் தெற்கு நோக்கிய பைரவர் சந்நிதியும் இருக்கிறது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருக்கச்சூர் மருந்தீசுவரர் கோயில்
செல்லும் வழி சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் திரும்பி ரயில்வே கேட் தாண்டி சுமாராக 1 கி.மி. தூரம் சென்ற பின் வலதுபுறம் பிரியும் சாலையில் மேலும் 1 கி.மி. தூரம் சென்றால் திருக்கச்சூர் ஆலயத்தை அடையலாம். ஊரின் நடுவே கோவில் உள்ளது. சிங்கப்பெருமாள்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்வது நல்லது. இல்லாவிடில் சுமார் 2 கி.மி. தொலைவு நடந்து செல்ல வேண்டும்.
கோவில் திறக்கும் நேரம் காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
திருக்கச்சூர் கச்சபேசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருக்கச்சூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில்
அருகிலுள்ள விமான நிலையம் மீனம்பாக்கம்
தங்கும் வசதி செங்கல்பட்டு வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 53
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்