Back
வழிபாட்டுத் தலம்
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோயில்
வேறு பெயர்கள் கரபுரம், திரு விரிஞ்சை, விரிஞ்சைபுரம்
ஊர் விரிஞ்சிபுரம்
வட்டம் வேலூர்
மாவட்டம் வேலூர்
தொலைபேசி 0416-2914546
உட்பிரிவு 1
மூலவர் பெயர் மார்க்கபந்தீசுவரர் என்ற வழித்துணை நாதர்
தாயார் / அம்மன் பெயர் மரகதவல்லி
தலமரம் பனைமரம்
திருக்குளம் / ஆறு சிம்ம தீர்த்தம், சூலி தீர்த்தம், சோம தீர்த்தம், பாலாறு
வழிபாடு ஆறு கால பூசை
திருவிழாக்கள் மகாசிவராத்திரி, ஆடிப்பூரம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி ஆரூத்ரா தரிசனம், பங்குனி பிரம்மோத்சவம், மாசி தெப்போத்சவம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர், விசயநகரர், சம்புவராயர்
கல்வெட்டு / செப்பேடு அவனி நாராயணச் சதுர்வேதி மங்கலத்துள் பல்வேறு வாரியங்களைச் சார்ந்தோரும், சான்றோர்களும் கூடியிருந்த மகாசபையில், திருக்கரபுரக் கோயிலில் உள்ள சிவப்பிரான் மாகண்ட நன்பெருமாள் அங்கு வந்து திருக்கரபுரத்துப் பெருமானுக்குச் சொந்தமான தோட்டமும் நிலமும் ஆறு உடைத்து மணல் நிரம்பிக் கிடக்கிறது என்று விண்ணப்பம் செய்தனன். கேட்ட சபையார் கோயிலுக்கு மேலும் சில நிலங்களையளித்து அவற்றின் வருவாயைக் கொண்டு கரபுரத்து இறைவனுக்கு இருநாழி நெல்லால் கிடைக்கும் அரிசியைக் கொண்டு அமுது படைக்கவும், மூன்று பொழுது திருவிளக்கேற்றி ஆராதனை செய்து வருமாறும் பணித்து, இதனைச் சிலாலோகை செய்து வைக்கவும் உத்தரவிட்டனர் என்ற செய்தி கல்வெட்டில் காணப்படுகிறது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் மூலவர் பெரிய ஆவுடையாரில் உயரமான பாணத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறார். திருச்சுற்றில் பல சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. அவற்றில் ஒன்று பஞ்சமுக லிங்கமாகவுள்ளது. இவற்றுக்கு மத்தியில் காரைக்காலம்மையார் திருவுரு மட்டும் உள்ளது. சுவாமி சந்நிதி உள்சுற்றில் நால்வர், பொள்ளாப்பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், தொடர்ந்து அறுபத்து மூவர் மூலத் திருமேனிகள் வரிசையாக உள்ளன. கல்யாண மண்பத்தின் தூண்களில் சிவவடிவங்களும், பிற தெய்வ வடிவங்களும், வீரர்களும், சிவபுராணத் தொடர்புடைய காட்சிகளும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மற்றும் முக மண்டபத்தில் தூண்களில் உள்ள குதிரை வீரர்களின் சிற்பங்கள் அளவில் பெரியவை.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். திருஞானசம்பந்தர், அப்பர், திருமூலர், பட்டினத்தார், அருணகிரியார் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். பல்லவர் காலம் முதல் சோழர் காலம் வரை தொடர்ச்சியான கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது.
சுருக்கம்
வேலுர் மாவட்டத்தில் மாநகருக்கு மேற்கே சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் விரிஞ்சிபுரம் அமைந்துள்ளது. இங்குள்ள மார்க்கபந்தீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். வணிகர்களோடு இத்தலம் தொடர்புடையதாய் உள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் காட்டுகின்றன. இங்கு பைரவர் வழிபாடு சிறப்புப் பெற்றதாக விளங்குகிறது. சிவ ரகசியம், பிரம்மாண்ட புராணம், காஞ்சீ புராணம், காளத்தி மான்மியம், அருணகிரி புராணம் ஆகிய நூல்களில் இந்தத் திருத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லவர் காலம் முதல் சோழர், விசயநகரர், சம்புவராயர் ஆகிய மன்னர்களது கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. இங்குள்ள முற்காலச் சோழர் கலைப்பாணி சிற்பங்கள் மிகுந்த எழில் வாய்ந்தவை.
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு கருவறை விமானம் தூங்கானை மாடக் கோயில் அமைப்புடையது. திருச்சுற்றில் சிம்ம தீர்த்தம் உள்ளது. சுதையால் செய்யப்பட்ட பெரிய சிம்மத்தின் வாயினுள் செல்வது போலப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றின் இருகோடியிலும் சிற்பக் கலையழகு வாய்ந்த இரு கல்யாண மண்டபங்கள் உள்ளன. இவையிரண்டிலும் பங்குனிப் பெருவிழாவில் இறைவனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. கல்யாண மண்டபத்தின் தூண்களில் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதையடுத்து நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. 110 அடியும், 7 நிலையும் உள்ள அழகிய கோபுரம், கோயிலைச் சுற்றி மதில் சுவர் உயரமானது. இக்கோயில் திருமதில் பெயர் பெற்றது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் வேலூர் அருங்காட்சியகம், வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவர் கோயில், அப்துல்லாபுரம் அரண்மனை, அப்துல்லாபுரம் அன்னச்சத்திரம், ஸ்ரீபுரம் பொற்கோயில்
செல்லும் வழி வேலூரில் இருந்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அரசமரம் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் பயணித்தால் பாலாற்றுக் கரையோரம் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் கோவிலை அடையலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 -11.00 மணி இரவு 5.00 - 8.00 மணி வரை
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் விரிஞ்சிபுரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் விரிஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி வேலூர் வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் திரு.சரவணன் ராஜா
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 14 Mar 2019
பார்வைகள் 311
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்