வழிபாட்டுத் தலம்
தில்லை நடராசர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | தில்லை நடராசர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | சித்சபை, திருச்சிற்றம்பலம், தில்லை, பூலோக கயிலாயம், புண்டரீகபுரம் சிதாகாசத்தலம் |
| ஊர் | சிதம்பரம் |
| வட்டம் | சிதம்பரம் |
| மாவட்டம் | கடலூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | நடராசர், அம்பலக்கூத்தர், திருச்சிற்றம்பலமுடையார், அம்பலவாணர், (கூத்தபிரான், கனகசபாபதி,சபாநாயகர்.) |
| தாயார் / அம்மன் பெயர் | சிவகாமி, சிவகாமசுந்தரி |
| தலமரம் | தில்லை, ஆல் (திருமூலட்டானப் பிராகாரத்தில் ‘ஆல்’கருங்கல் வடிவில் செய்து வைக்கப்பட்டுள்ளது.) |
| திருக்குளம் / ஆறு | சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்ரபாத தீர்த்தம்,(திருப்புலீச்சரம்) பிரமதீர்த்தம், அனந்த தீர்த்தம் முதலியன. |
| ஆகமம் | மகுடாகமம் |
| வழிபாடு | ஆறுகால பூசை |
| திருவிழாக்கள் | ஆனி திருமஞ்சனம், ஆருத்திரா தரிசனம், மார்கழி திருவாதிரை |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர-நாயக்கர் |
| கல்வெட்டு / செப்பேடு | சிற்றம்பலம், நடராசப் பெருமான் திருநடம்புரிந்தருளும் இடம். “தூய செம்பொன்னினால் எழுதிவேய்ந்த சிற்றம்பலம்” என்பார் அப்பர். இவ்வம்பலம் ‘தப்ரசபா’ எனப்படும். முதலாம் ஆதித்த சோழனின் மகன் முதற்பராந்தகசோழன் இச்சிற்றம்பலத்திற்குப் பொன்வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் ‘லெய்டன்’ நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன. இவனுக்கு முன் இரண்யவர்மன், பொன்வேய்ந்தான் என்று கோயிற்புராணம் தெரிவிக்கின்றது. இக்கோயிலுக்கு, மிகச்சிறப்பான திருப்பணிகளைச் செய்த விக்கிரம சோழன் காலம் வரையில் வழங்கப்பட்ட நிவந்தங்கள் சண்டேஸ்வரர் பெயரால் நடைபெற்று வந்தன. அம்மன்னனின் காலத்திற்கு பிறகு குறிப்பிட்ட குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தது. அக்குழுவில் தில்லை வாழ் அந்தணர்கள் சிலரும் வழிபாடு செய்யும் உரிமை கருதிச் சேர்க்கப்பட்டனர். சோழ மன்னர்களின் ஆட்சிக்குப் பிறகு இக்கோயில் தில்லைவாழ் அந்தணர்க்கு உரியதாயிற்று. இவ்வாறு, கல்வெட்டுத் துறையின் ஆண்டறிக்கை கூறுகின்றது. (Annual Reports on South Indian Epigraphy) ‘மணவில்’ என்ற ஊரின் தலைவனும், முதற்குலோத்துங்க சோழன் விக்கிரமசோழன் ஆகியோரின் படைத்தலைவனுமாகிய பொன்னம்பலக்கூத்தன் என்பவன் தில்லையில் நூற்றுக்கால் மண்டபத்தைத் தன் மன்னன் பெயரால் விக்கிரம சோழன் மண்டபம் செய்வித்தான் ; தேவாரம் ஓதுவதற்கு மண்டபம் கட்டினான் ; தேவாரப் பதிகங்களைத் தன் அமைச்சனான காளிங்கராயனைக் கொண்டு செப்பேட்டில் எழுதுவித்தான் ; ஞானசம்பந்தப் பெருமான் கோயிலைப் பொன்னால் வேய்ந்தான் ; நடராசப் பெருமான் மாசிக்கடலாட்டின் போது எழுந்தருளியிருக்க, ‘கிள்ளை’ என்னும் ஊரில் மண்டபம் அமைத்தான். இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் ‘இடங்கழி’ நாயனார் வரலாற்றில் கூறுகின்றார். தில்லைக் கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும்,படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என்று கூறுகின்றது. பேரம்பலம் இது தேவசபை எனப்படும். மணவில் கூத்தனான காளிங்கராயன் விக்கிரமசோழன் காலத்தில் இச்சபையைச் செம்பினால் வேய்ந்தான் என்று தில்லைக்கோயில் பாடலால் அறியலாம். பின்பு, இப்பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தவன் மூன்றாங்குலோத்துங்கன் சோழன் ஆவான். இங்குதான் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர். இம்மணவில்கூத்தன் செம்பொற்காளமும் செய்து தந்தான் ; நூற்றுக்கால் மண்டபம் அமைத்தான் ; நந்தவனம் அமைத்தான் ; ஓராயிரம் கறவைப் பசுக்களைக் கோயிலுக்கு வழங்கினான் ; திருப்பதிகங்கள் ஓத மண்டபம் அமைத்தான் ; திருமுறைகளைச் செப்பேடு செய்வித்தான் என்னும் பல அரிய செய்திகளும் கல்வெட்டுக்களால் தெரியவருகின்றன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | நடராச சந்நிதிக்கான தங்கத்தகடு வேய்ந்த கொடிமரம் உள்ளது. பிரகாரத்தில் அம்பாள் சந்நிதி, கம்பத்திளையனார், தாயுமானவர், விநாயகர், சுப்பிரமணியர், படிகளேறிச் சென்றால் திருமுறை காட்டிய விநாயகர் (பொல்லாப் பிள்ளையார்) சுதை சிற்பம் முதலியனவுள்ளன. தொடர்ந்து பிராகாரத்தில் விசுவநாதர் லிங்கம், வைத்தியநாதர் தையல் நாயகி சந்நிதி, காலபைரவர், சண்டேசுவரர், விநாயகர், அறுபத்துமூவர் திருமேனிகள் உள்ளன. திருமூலட்டானம் சுவாமி சந்நிதி. பக்கத்தில் “உமைய பார்வதி’ தங்கக் கவசத்தில் பேரழகோடு காட்சி தருகின்றாள். அர்த்தசாம அழகர் புறப்பாட்டுச் சபையுள்ளது. உற்சவமூர்த்திகள் வைத்துள்ள மண்டபம், சனிபகவான் சந்நிதி உள்ளது. சிற்றம்பலத்து நடமாடும் சிவக்கொழுந்தைத் தரிசிக்கும்போது மனம் லயிப்புற்றால் ‘என்று வந்தாய்’ எனும் குறிப்பு நமக்கும் கிடைக்கும். நிருத்த சபை நடராசப் பெருமானின் கொடிமரத்துக்கு (துவஜஸ்தம்பத்திற்கு)த் தென்பால் உள்ளது. ஊர்த்துவ தாண்டவம் செய்தருளிய இடம் இதுவே. அப்பெருமானின் திருமேனி இங்கே உள்ளது. இராச சபை : இஃது ஆயிரக்கால் மண்டபமாகும். சோழ மன்னர் மரபில் முடிசூடப் பெறுபவர்களுக்கு முன்னர்ச் சொல்லிய பஞ்சாக்கரப் படியில் அபிஷேகமும் இம்மண்டபத்தில் முடிசூட்டு விழாவும் நடைபெற்று வந்தன. இம்முடிசூட்டினைத் தில்லைவாழ் அந்தணர்களே செய்து வந்தனர். நடராசப் பெருமானை நின்று தரிசிக்கும் போது இடப்பால் கோவிந்தராசப் பெருமாள் சந்நிதியுள்ளது. ‘திருச்சித்ரகூடம்’ எனப்படும். இச்சந்நிதியில் பெருமாள் கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார். உள்ளே வலமாக வரும் போது வேணு கோபாலர் சந்நிதி யதிராசர், யோக நரசிம்மர், கூரத்தாழ்வார், ஆசார்யர்களின் உற்சவ மூர்த்தங்கள், ஆஞ்சநேயர் திருமேனிகள் முதலியவை உள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். |
|
சுருக்கம்
இக்கோயிலுள் 1. சிற்றம்பலம் 2. பொன்னம்பலம் 3. பேரம்பலம் 4. நிருத்தசபை 5. இராசசபை என ஐந்து பெருமன்றங்கள் உள்ளன. இத்திருத்தலத்தில் மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்று ஊமைப் பெண்ணைப் பேசவித்தது போன்ற அற்புத நிகழ்வுகள் திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக் கண்டது உமாபதிசிவம் ‘கொடிக்கவி’ பாடிக் கொடியேற வைத்தது. திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப்பட்ட தேரை ஓடச் செய்தது. திருமுறைகளை வெளிப்படுத்தியது. சேக்கிழார் பெருமானுக்குத் திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துத் தந்தது முதலிய பலவாகும். தேவாரப் பதிகங்கள், திருவாசகம், திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, கோயில் நான்மணி மாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட் கோவை, சிவகாமி இரட்டை மணிமாலை, தில்லைக் கலம்பகம், கோயிற் புராணம் முதலிய நூல்களாலும், ஏனைய அளவற்ற நூல்களில் ஆங்காங்கு வரும் பகுதிகளாலும் இத்தலத்தின் பெருமையை அறியலாம்.
|
|
தில்லை நடராசர் கோயில்
| கோயிலின் அமைப்பு | பேருந்துச் சாலையோரத்தில் அமைந்துள்ள கீழ்வாசல் கோபுரம் ஏழு நிலைகளுடன் விளங்குகிறது. வாயிலைக் கடந்து உட்சென்றால் உள்கோபுரமும் ஏழு நிலைகளுடன் காட்சியளிக்கிறது. வலப்பால் தில்லைமரம் வளரும் மேடையுள்ளது. நாற்புற வாயில்களிலும் நடனக்கலைச் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. வாயிலைக் கடந்ததும் வலப்பால் ஆயிரக்கால் மண்டபம் உள்ளது. அடுத்துள்ளது சிவகங்கைத் தீர்த்தம். கரையில் தென், கீழ்புறச் சுவர்களில் திருவாசகப் பாடல்கள் முழுவதும் கல்வெட்டுக்களாகப் பதிக்கப் பட்டுள்ளன. குளத்தின் மேற்கரையில் ‘பாண்டி நாயகம்’ என்கிற முருகன் சந்நிதி உள்ளது. சிவகாம சுந்தரி சந்நிதி தனிக்கோயிலாகப் பொலிவுற உள்ளது. உள் பிராகாரத்தில் சபாநாயகர் (தருமை) கட்டளை அறை, நிருத்தசபையில் வலக்காலை மேலே தூக்கியுள்ள ஊர்த்துவ தாண்டவர், சரபமூர்த்தி முதலிய சந்நிதிகள் உள்ளன. வெளிப்பக்கத்தில் பிட்சாடனர் சுதை சிற்பம் உள்ளது. அம்பலக் கூத்தர் இருப்பது சிற்றம்பலம் - சிற்சபை. முன் மண்டபம் பேரம்பலம். நடராசப் பெருமானுக்குப் பக்கத்தில் ‘சிதம்பர ரகசியம்’ உள்ளது. இந்த ரகசியம் உள்ள இடத்தில் வில்வதளங்கள் தொங்குகின்றன. இச்சிற்றம்பலம் உள்ள இடம் உயர்ந்த அமைப்புடையது. பக்கவாயில் வழியாக மேலே செல்ல வேண்டும். இச்சிற்றம்பலத்தின் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் -பஞ்சாக்கரப் படிகள் உள்ளன. இப்படிகளின் இருபுறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு சாஸ்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்த போது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராசப் பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூலுக்குத் ‘திருக்களிற்றுப் படியார்’ என்ற பெயர் ஏற்பட்டது. நடராசப்பெருமானின் வலப்பால் ‘ரஹஸ்யம்’ - அருள்ஞானப் பெருவெளி - உள்ளது. பொன்னம்பலம்(கனகசபை): நடராசப்பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம். சிற்றம்பலத்திற்கு முன்னால் உள்ள பகுதி. இங்கு ஸ்படிகலிங்கத்திற்கு நாடொறும் ஆறுகால பூஜையும், இரண்டாங்காலத்தில் ரத்னசபாபதிக்கு அபிஷேக வழிபாடுகளும் நடைபெறுகின்றன. நாற்புறமும் கோபுரங்கள். தெற்குக் கோபுரவாயிலே பிரதான வாயிலாகும். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | தில்லைக் காளி கோயில், பிச்சாவரம் காடுகள் |
| செல்லும் வழி | |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 23 Nov 2018 |
| பார்வைகள் | 120 |
| பிடித்தவை | 0 |