வழிபாட்டுத் தலம்
குண்டாங்குழி மகாதேவர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | குண்டாங்குழி மகாதேவர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருக்குண்டாங் குழ-சேரி ஒழுக்கரை மகாதேவன், திருபுவனை மகாதேவி சதுர்வேதி மங்கலம் |
| ஊர் | மதகடிப்பட்டு |
| வட்டம் | வானூர் |
| மாவட்டம் | புதுச்சேரி |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | மகாதேவர் |
| தாயார் / அம்மன் பெயர் | சௌந்தரநாயகி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜராஜசோழன் |
| கல்வெட்டு / செப்பேடு | இக்கோயிலில் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன் போன்ற சோழ அரசர்களின் காலக் கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. இக்கல்வெட்டுகள் வாயிலாக இக்கோயில் முதலாம் ராஜராஜசோழனால் (கி.பி 985-1016) எடுப்பிக்கப்பட்ட கற்றளி என்று அறியமுடிகிறது. "ஸ்ரீ ராஜராஜ தேவர் எடுபித்-தருளின திரு கற்றளி" என்ற வரிகளும், இக்கற்றளியை ஸ்ரீ ராஜராஜத் தேவர் மற்றும் ஸ்ரீ பட்டன் கட்டுனர் என்பவராவர் என்ற செய்தியைத் இக்கோயிலின் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இவ்விடம் குண்டாங்குழி என்றும் இக்கோயிலில் வீற்றிருக்கும் தேவர் திருக் குண்டாங் குழ-சேரி ஒழுக்கரை மகாதேவன் என்றும் கல்வெட்டுகள் குறிக்கின்றன. இவ்வூர் திருபுவனை மகாதேவி சதுர்வேதிமங்கலம் என்றும் அழைக்கப்பட்டது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறை தேவகோட்ட சிற்பங்கள் கிழக்கு, வடக்கு, தெற்கு, ஆகிய மூன்று பக்கங்களிலும் இறையுருவங்களின்றி உள்ளன. கோட்டசிற்பங்களாக அணிசெய்த தென்முகக் கடவுள், நான்முகன், விட்ணு ஆகிய திருவுருவங்கள் தற்போது புதுவையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. வட்டவடிவுடன் கூடிய கிரீவத்தின் நாற்புறமும் கிரீவ கோட்டங்கள் அமைந்துள்ளன. கிழக்கில் முருகன் (பிரம்ம சாஸ்தாவாக), மேற்கில் விஷ்ணு, தெற்கில் யோக தட்சிணாமூர்த்தி, வடக்கில் நான்முகன் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். கிரீவகோட்டத்தின் மேல் உள்ள மகாநாசிகைகள் வெறுமையாக உள்ளன. கிரீவத்தின் மேற்பகுதியில் சுற்றிலும் அழகிய அன்னவரிகள் காட்டப்பட்டுள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1000 ஆண்டுகள் பழமையானது. முதலாம் இராஜராஜ சோழனின் கற்றளி. |
|
சுருக்கம்
புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் புதுச்சேரியிலிருந்து 24 கி.மீ தொலைவில் மதகடிப்பட்டு என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. திருபுவனை மகாதேவி சதுர்வேதி மங்கலம் என்று அன்னாளில் அழைக்கப்பட்ட இவ்வூர் காலப்போக்கில் தற்போது மதகடிப்பட்டு என்றழைக்கப்படுகிறது. இவ்வூரில் நெடுஞ்சாலையின் தென்புறத்தே சிறிது தொலைவில் முதலாம் இராஜராஜன் சோழர் எடுப்பித்த குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படும் கோயில் அமைந்துள்ளது. குண்டாங்குழி மகாதேவர் திருக்கோயில் சிகரத்தின் வடிவம் நார்த்தாமலை, மேல்பாடி அரிஞ்சிகை ஈஸ்வரம் மற்றும் இதர முதலாம் ராஜராஜனுடைய விமான சிகரத்தினை ஒத்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் வளாகம், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் வேலி அமைக்கப்பட்டு நன்முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோயிலின் தகவல் பலகை, இக்கோயிலை திருகுந்தன்குடி மகாதேவர் கோயில், மதகடிப்பட்டு என்று தவறாக அறிவிக்கிறது.
|
|
குண்டாங்குழி மகாதேவர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் வளாகம், குண்டாங்குழி மகாதேவர் உறையும் முழுதும் கருங்கற்களாலான அழகிய கோயில், அம்மன் திருமுன், சப்தமாதர்திருமுன் ஆகிய மூன்றினையும் உள்ளடக்கியது. திருக்கோயில் விமானம், ஏகதளக் கலப்பு வேசர விமான அமைப்பினைக்கொண்டதாகும். முழுவதும் கருங்கற்களாலான இக்கோயிலின் அதிஷ்டானம் முதல் முதல் தளம் வரை சதுரமாகவும், மேலே கிரீவம் வட்டமாகவும், சிகரம் பெரிய மணி வடிவிலும் அமைந்துள்ளது. அதிட்டானம் கபோதபந்த தாங்குதள அமைப்பினைக் கொண்டமைந்துள்ளது. உபானம் மீது எழும் ஊர்த்துவபத்மம், அதன் மீது எழும் உபரிக் கம்பின் மீது ஜகதி,அதன் மீது ஊர்த்துவபத்மம், தாமரை வரிகளுக்கு இடையில் ருத்ர (உருள்)குமுதம், கம்புகளுக்கு இடையிலான கண்டம்போன்ற தாங்குதள உறுப்புகளுடன் அமைந்துள்ளது.அதன் மேலெழும் கபோதம்,நாசிகைகள் மற்றும் கூடுகளுடன் காட்டப்பட்டுள்ளது. கூடுகளில் மனித உருவங்கள், விலங்கு உருவங்கள், ஆடற்கரண சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. பிரதிவரி, யாளி வரி, உபரி கம்பு, கண்டங்கள், தாமரை வரி போன்ற உறுப்புகளுடன் வேதிகண்டத் தொகுதி அமைந்துள்ளது. சாலைப்பத்தியில் அதிட்டானம் கர்ணப் பத்திகளிலிருந்து சற்றே முன்னிழுக்கப்பட்டுள்ளது. கருவறை சுவர்ப் பகுதியில் கர்ண பத்தியின் தூண்கள் விஷ்ணுகாந்த வகையைச் சார்ந்ததாகவும், சாலைப்பகுதியில் கோஷ்டத்தின் அணைவுத் தூண்கள் ருத்ர காந்தமாகவும் அமைந்துள்ளன. தூணின் பாதம் சதுரமாகவும், மேலெழும் உடல் பகுதி விஷ்ணுகாந்தமாகவும் காட்டப்பட்டுள்ளன. தூண்கள், தூணின் உறுப்புகளான பாதம், உடல், மாலாஸ்தானம், தாமரைக்கட்டு, கலசம், காடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம், போதிகை ஆகிய தூணின் அனைத்து உறுப்புகளையும் கொண்டு அமைந்துள்ளன. தரங்கப் போதிகைகள் தமது விரிகோணக்கைகளால் உத்திரம் தாங்குகின்றன.போதிகைகளின் தரங்கங்களின் ஊடே வெட்டும் காட்டப்பட்டுள்ளது. போதிகைகள் தாங்கும் உத்திரம் பேரளவினதாகக் காட்டப்பட்டுள்ளது. பிரஸ்தாரத்தில் (கூரை) வலபி பரப்பில் பூதகணங்களும், பூமிதேசத்தில் யாளி வரியும் காட்டப்படுள்ளன. கிழக்கு முனையில் இருபுறங்களிலும் இரு நந்திகள் அமர்ந்த நிலையில் இருத்தப்பட்டுள்ளன. கருவறை கூரையான கபோதத்தின் சாலைப்பத்தி முன்னிழுக்கப்பட்டு கர்ணப்பத்தியுடன் இணைந்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கபோதத்தின் கீழ்ப்புற ஓரங்களில் சந்திரமண்டலமும், கபோதத்தின் ஓரங்களை லதாமண்டலமும் அலங்கரிக்கின்றன. கபோதத்தின் கர்ணப்பத்தி தொகுதியில் நேத்ர நாசிகைகளும், சாலைப்பத்தித் தொகுதியில் அல்ப நாசிகைகளும் அதன் உறுப்புகளும் காணப்படுகின்றன. சில நாசிகைகள் சிதிலமடைந்து கீர்த்தி முகங்களின்றி காணப் பெறுகின்றன. கபோதக் கூடுகளில் மனிதத்தலைகள், விலங்கு உருவங்களைக் கொண்டுள்ளன. சில கூடுகள் எந்த உருவமுமற்று வெறுமையாகக் காட்சியளிக்கின்றன. சுவர் பகுதி கர்ணபத்தி, சாலைபத்தியென பிரிக்கப்பட்டு தேவ கோட்டங்கள், கோட்டங்களின் அணைவு அரைத்தூண்கள், மற்றும் பிற அரைத்தூண்களுடன் காணப்பெறுகின்றது. வட்டவடிவுடன் கூடிய கிரீவத்தின் நாற்புறமும் கிரீவ கோட்டங்கள் அமைந்துள்ளன. கிழக்கில் முருகன் (பிரம்ம சாஸ்தாவாக), மேற்கில் விஷ்ணு, தெற்கில் யோக தட்சிணாமூர்த்தி, வடக்கில் நான்முகன் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். கிரீவக் கோட்டத்தின் மேல் உள்ள மகாநாசிகைகள் வெறுமையாக உள்ளன. கிரீவத்தின் மேற்பகுதியில் சுற்றிலும் அழகிய அன்னவரிகள் காட்டப்பட்டுள்ளன. சிகரம் வட்டவடிமாகவும் பெரிய மணியை கவிழ்த்த நிலையில் அமைந்துள்ளது. சிகரத்தின் மேற்பரப்பில் ஊர்த்துவபத்மம் மலர்ந்த தாமரை மலராகக் காட்டப்பட்டுள்ளது. சிகரத்தின் கீழ்பகுதி சற்று உயர்த்தியவாறு கூரைபோன்று அமைக்கப்பட்டு பெரிய மணி போன்று காணப்படுகிறது. ஸ்தூபி வட்டவடிவுடன் கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. அர்த்தமண்டபத்தின் அதிட்டானம், சுவர்ப் பகுதி, பிரஸ்தரத் தொகுதி ஆகிய தாங்குதள உறுப்புகளுடன் அமைந்துள்ளது. அர்த்தமண்டபத்தின் மேற்குப் புறத்தில் இருபுறமும் அமர்ந்த நிலையில் இரு நந்திகள் அமைந்துள்ளன. அர்த்தமண்டபத்தின் தெற்கிலும், வடக்கிலும் இடம் பெற்றுள்ள கோட்டங்கள் இறையுவங்களின்றி காட்சியளிக்கின்றன. முகமண்டபத்தின் தாங்குதளம் குமுதம் வரையில் மட்டுமே காணமுடிகிறது. ஏனைய பகுதிகள் சிதைந்து காணப்படுகிறது. கருவறை சதுரமாகவும், இறை உருவமான லிங்கத்திருமேனி ஆவுடையின்றி பாணம் மட்டும் அமையப் பெற்று குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படுகிறது. அமர்ந்து நிலையில் நந்தி ஒன்று பாணத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ளது. நந்தி பிற்சேர்க்கையாக இருக்கலாம். அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் விமானத்தில் அதிட்டானம், தூண்கள், சுவர்ப் பகுதி, பிரஸ்தாரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி ஆகிய அனைத்து உறுப்புகளையும் காணமுடிகிறது. இவை கலப்பு வேசர விமான வகையயைச் சார்ந்ததாகும். அம்மன் திருமுன் மற்றும் இறைவனின் திருமுன் இரண்டையும் இணைக்கும் வகையில் முகமண்டபத்தின் தாங்குதளத்தின் கற்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது. முகமண்டபத்தில் அமர்ந்த நிலையில் காட்டப்படுள்ள நந்தி பிற்காலச் சேர்க்கையாகும். இவ்வளாகத்தில் சப்தமாதர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தனி சன்னதிகள் சிதைந்து காணப்படுகிறது. சப்தமாதர் சன்னதிகள், சோழர்காலத்தில் சப்தமாதர்களின் வழிபாடு சிறந்து விளங்கியதை அறியமுடிகிறது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திரிபுவனை கோயில், தோதாத்ரி வரதராசப் பெருமாள் கோயில், மணக்குள விநாயகர் கோயில் |
| செல்லும் வழி | புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் புதுச்சேரியிலிருந்து 24 கி.மீ தொலைவில் உள்ள மதகடிப்பட்டு என்னும் ஊரின் நெடுஞ்சாலையின் தென்புறத்தே சிறிது தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 11.00 மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 01 Oct 2018 |
| பார்வைகள் | 215 |
| பிடித்தவை | 0 |