Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு குறுங்காலீசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு குறுங்காலீசுவரர் கோயில்
வேறு பெயர்கள் குறுங்காலீசுவரர், குசலவபுரீஸ்வரர்
ஊர் கோயம்பேடு
வட்டம் அமைந்தகரை
மாவட்டம் சென்னை
தொலைபேசி 044-24796237
உட்பிரிவு 1
மூலவர் பெயர் குறுங்காலீசுவரர்
தாயார் / அம்மன் பெயர் தர்மசம்வர்த்தினி (அறம் வளர்த்த நாயகி)
தலமரம் பலாமரம்
திருக்குளம் / ஆறு குசலவ தீர்த்தம்
வழிபாடு காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
திருவிழாக்கள் இரதஸப்தமி, மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, கார்த்திகை, பங்குனி உத்திரம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு / மூன்றாம் குலோத்துங்க சோழன்
கல்வெட்டு / செப்பேடு கல்வெட்டுகளில் சோழ அரசன் மூன்றாம் குலோத்துங்கன் பெயர் காணப்படுகிறது. இவ்வரசன் கி.பி. 1178 முதல் கி.பி. 1218 வரை நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளான். பாண்டியரை வென்று “மதுரையும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளிய” என்ர விருதினைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டவன். இந்த விருதுப்பெயர், இக்கோயில் கல்வெட்டுகளில் வருகின்றது. கல்வெட்டுகளில் இவனுடைய ஆட்சியாண்டு 25 என வருவதால், இக்கோயில் கல்வெட்டுகள் கி.பி. 1203 ஆண்டளவில் பொறிக்கப்பட்டவை என்பது உறுதியாகின்றது. எனவே, கோயில் 800 ஆண்டுகள் பழமைகொண்டது எனத்தெளியலாம். ஒரு கல்வெட்டு, இதே ஊரைச்சேர்ந்த பேரையன் மகன் காளி ஆண்டான் என்ற திருஞானசம்பந்தன், கோயிலில் சந்திவிளக்கு எரிப்பதற்காகப் பசு ஒன்றையும் காசுகள் சிலவும் கொடையாகத் தந்துள்ளான் எனத் தெரிவிக்கிறது. கோயிலில் பூசைப்பணி புரிந்த சிவப்பிராமணர்கள், கொடையாளி கொடுத்த பசுவையும் காசுகளையும் பெற்றுக்கொண்டு சந்திவிளக்கு எரிக்கும் அறச்செயலை இடையூறின்றிக் கதிரவனும், நிலவும் உள்ளவரை பொறுப்பேற்றி நடத்துவதாக உறுதிமொழி அளிக்கும் செய்தி கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு பொறுப்பேற்ற சிவப்பிராமணர்கள் பலரது பெயர்கள் கல்வெட்டில் காணப்படுகின்றன. இப்பகுதி குலோத்துங்கசோழவளநாட்டிலும், புலியூர்க்கோட்டத்திலும் சேர்ந்திருந்தது. நாட்டுப்பிரிவாக மாங்காடு நாடு என்னும் பிரிவு கல்வெட்டில் குறிப்பிடப்பெறுகிறது. மாங்காடு, இப்போதும் இப்பகுதியில் இருப்பதைக் காண்கிறோம். கோட்டத்தைக் குறிக்கும் புலியூரும் (பல நாடுகளை உள்ளடக்கியதால்) சென்னையைச் சுற்றியுள்ள பெரும்பரப்பில் எங்கோ இருக்கவேண்டும். (சரியான தகவல்களைத் தேடியிருக்கவேண்டும்; ஆனால் செய்யஇயலவில்லை.) கல்வெட்டுகளில், ”கோயம்பேடு” என்றே இவ்வூர் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் “குறுங்கால் ஆண்டார்” என்னும் பெயரில் குறிப்பிடப்பெறுகிறார். (இங்கேயுள்ள “ஆண்டார்” என்னும் வழக்கு, கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் “ஆளுடையார்” என்று வழங்குவதைக் காண்கிறோம். பெரும்பாலான கோயில்களில் இறைவனின் பெயர், கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறும் பெயரினின்றும் வேறுபடும். இங்கே, இப்பொழுதும் இறைவனின் பெயர் “குறுங்காலீசுவரர்” என்னும் பெயரால் பழமையை இழக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோயம்பேடு என்னும் ஊர்ப்பெயரும் தன் பழம்பெயரை இழக்காமல் இருப்பது சிறப்பு.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கோயில் கருவறையில் இலிங்கம் ஆவுடையாருடன் சிறிய அளவில் காணப்படுகிறது. கருவறைத் திருச்சுற்றில் கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மன், துர்க்கை ஆகிய திருவுருவங்கள் காணப்படுகின்றன. சண்டிகேசுவரருக்கு தனி திருமுன் அமைந்துள்ளது. கருவறைத் திருச்சுற்றில் சூரியன் நின்ற நிலையில் காணப்படுகின்றார். ஜூரகேஸ்வரர் மற்றும் பைரவர் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்திற்கு எதிரே உள்ள ஒரு மண்டபத்தில் காணப்படும் 16 தூண்களில் மிகவும் எழில் வாய்ந்த புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை நான்கு கைகள் கொண்ட மகிஷனும், தசமுக இராவணனும், சரபேஸ்வரரும் ஆவர்.
தலத்தின் சிறப்பு 800 ஆண்டுகள் பழமையானது. பிற்காலச் சோழர் கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது.
சுருக்கம்
இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாகும். பிற்காலச் சோழர் கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. குறுங்காலீசுவரர் கோயில் கருவறையில் வடதிசை நோக்கி இறைவன் இருப்பதால் இது மோட்ச தலமாகவும், இங்குள்ள தீர்த்தம் பித்ரு பரிகார பூஜை செய்ய ஏற்ற இடமாகவும் கூறப்படுகிறது. இத்தலத்தில் வேறொரு சிறப்பும் உண்டு. அது யாதெனில், தர்மசம்வர்த்தினி என்னும் அறம் வளர்த்த நாயகி அம்பாளும் வடதிசை நோக்கி நின்றவாறு தனிச் சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். குறுங்காலீசுவரர் சிவன் கோயிலின் அருகில் வைகுண்டவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் அருகருகே அமைந்திருப்பதால் கோயம்பேடு பகுதி சோழர் காலத்திலோ, அதற்கு முன்னரோ பிரம்மதேயமாக இருந்திருக்கலாம். பிரம்மதேயமாக கொடுக்கப்பட்ட ஊர்களில் இவ்விரு சமயக் கோயில்களும் அமைவது இயல்பு. குறுங்காலீசுவரர் கோயிலின் தலவரலாறு இராமாயணத்தோடு தொடர்புபடுத்தப் படுகிறது. இது நோக்கத்தக்கது. இப்பகுதி பண்டு கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் நிலமாக இருந்திருக்க வேண்டும். கோ அம் பேடு என்று பிரித்து பொருள் கொண்டால் பெற்றங்களை கொண்ட அழகிய தலைவன் ஆண்ட பகுதி என்ற பொருளில் வருகிறது. பெற்றம் என்பது மாட்டுச் செல்வம். கோ என்பது தலைவனைக் குறிக்கும். அம்மன் கருவறையின் எதிரே ஈசானிய மூலையில், நவக்கிரக திருமுன் அமைந்துள்ளது. சாயா தேவி, உஷாதேவி இருபுறமும் இருக்க, சூரியன் பகவான் ஏழு குதிரை பூட்டிய தேரில் வீற்றிருப்பதும், அந்தத் தேரை சூரியபகவானின் தேர் சாரதி அருணன் ஓட்டுவது போலவும் அமைந்த காட்சியும், சூரிய பகவானைச் சுற்றிலும் மற்ற கிரகங்கள் இருப்பதும் இங்கு தனிச் சிறப்பாகும். இந்த ஈஸ்வரனை வணங்கி லவன், குசன் இருவரும் தோஷ நிவர்த்திப் பெற்றதால், இவரை வணங்குபவர்களின் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும். இத்திருத்தலத்தில் உள்ள முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளார். அவர் தம் பாடலில இத்தலத்தை கோசை நகர் என்று குறிப்பிடுகின்றனார்.
அருள்மிகு குறுங்காலீசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு நுழைவாயிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் காணப்படுகின்றது. இராஜகோபுரம் வடக்கு திசையில் காணப்படுகிறது. உள்ளே சென்றால் கொடி மரம், பலி பீடங்களை காணலாம். அடுத்து நான்கு கால் மண்டபத்தில் நந்தி சிற்பம் உள்ளது.. நந்தியை கடந்து சென்றால் 40 தூண்களுடன் கூடிய மகாமண்டபத்தை அடையலாம். மகாமண்டப தூண்களில் சிற்பங்கள் காணப்படுகின்றன லவ, குச இருவரும் அஸ்வமேதயாக குதிரையைக் கடிவாளத்தோடு பிடித்துக் கொண்டிருக்கும் சிற்பம் கலை நயம் மிக்கது. இந்த மண்டபத்தின் நுழையும் பகுதியில் விசாலாட்சி சமேத விசுவநாதர் சன்னதியும், சோமாஸ்கந்தர் சன்னதியும் உள்ளன. அடுத்து இறைவன் வீற்றிருக்கும் கருவறை உள்ளே செல்லுமுன் அர்த்த மண்டபத்தில் இருபுறமும் துவாரபாலகர்கள் நிற்கின்றனர். குறுங்காலீசுவரரின் இடது பக்கம் துயர் தீர்க்கும் தும்பிக்கை விநாயகரும், வலது பக்கம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். கருவறையில் சுமார் 4 அங்குல உயரமே கொண்ட லிங்க பாண வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். கருவறை விமானம் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. விமானம் திராவிட பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதளம் முதல் கூரை வரை கற்றளியாகவும், அதற்கு மேல் உள்ள தளப்பகுதி சுதையாலும் அமைந்துள்ளன. கருவறைத் திருச்சுற்றில் கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மன், துர்க்கை ஆகிய திருவுருவங்கள் காணப்படுகின்றன. சண்டிகேசுவரருக்கு தனி திருமுன் அமைந்துள்ளது. கருவறைத் திருச்சுற்றில் சூரியன் நின்ற நிலையில் காணப்படுகின்றார். ஜூரகேஸ்வரர் மற்றும் பைரவர் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்திற்கு எதிரே உள்ள ஒரு மண்டபத்தில் காணப்படும் 16 தூண்களில் மிகவும் எழில் வாய்ந்த புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை நான்கு கைகள் கொண்ட மகிஷனும், தசமுக இராவணனும், சரபேஸ்வரரும் ஆவர். தர்மசம்வர்த்தினி என்னும் அறம் வளர்த்த நாயகி அம்பாளும் வடதிசை நோக்கி நின்றவாறு காட்சியளிக்கிறார்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோயில், வடபழனி முருகன் கோயில், வடபழனி சிவன் கோயில்,
செல்லும் வழி சென்னை மாநகரின் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேம்பாலம் செல்லும் வழியில், குறிகைத் (signal) தாண்டி மேற்கு திசையில் இடதுபுறம் திரும்பினால் சிவன்கோவில் தெரு வரும். அந்தத் தெருவில் நடந்து சென்றால், வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00-12.30 முதல் மாலை 4.30-8.30 வரை
அருள்மிகு குறுங்காலீசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் கோயம்பேடு
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சென்னை கோயம்பேடு
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி சென்னை மாநகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் மதுரை கோ.சசிகலா
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 63
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்