Back
வழிபாட்டுத் தலம்
ஆனைமலை லாடன் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் ஆனைமலை லாடன் கோயில்
வேறு பெயர்கள் முருகன் குடைவரை
ஊர் நரசிங்கம்பட்டி
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 4
மூலவர் பெயர் முருகன் தெய்வானை இணை
தாயார் / அம்மன் பெயர் தெய்வானை
காலம் / ஆட்சியாளர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் முருகன் தெய்வயானை இணை அமர்ந்த நிலையில் உள்ளனர். முகமண்டபத்தில் வாயிற் காவலர்கள் போன்று இருமுனிவர்கள் உள்ளனர். முகமண்டபத்தில் அடியவர் ஒருவர் வலதுபுறமும், விலங்கு ஒன்று இடது புறமும் உள்ளனர். போதிகையில் கணம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. சேவலும் மயிலும் கொடிக்கம்பங்களின் மீது இருபுறமும் அமைந்துள்ளன.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. முற்காலப் பாண்டியர் கலைப்பாணியைக் காட்டுகின்றது.
சுருக்கம்
ஆனைமலையின் வடக்குச் சரிவில் பாண்டிய மன்னன் ஜடில பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் (கி.பி.768) குடைவிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ள நரசிம்மப் பெருமாள் கோயிலை அடுத்து லாடன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள முனிவர் சிற்பம் ஒன்றுக்கு லாட முனிவர் என்று பெயர் கொடுத்து இக்கோயிலை லாடன் கோயில் என்று இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இக்குடைவரை கோயில் முற்கால பாண்டியர காலத்தியது ஆகும். இது முருகப்பெருமானுக்காக குடைவிக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். இக்குடைவரை சதுரமான சிறய கருவறையும், நீள் சதுர முகமண்டபத்தையும் உடையது. முகமண்டபத்தை இரு தூண்கள் அலங்கரிக்கின்றன. கருவறையில் இருகரங்களை உடையவராய் முருகப் பெருமான் அமர்ந்திருக்க அவர் அமர்ந்துள்ள நீண்ட இருக்கையிலேயே அவரது இடதுபுறம் தெய்வானை அமர்ந்து உள்ளார். கருவறையின் வாயிலின் இருபுறம் சேவலும் மயிலும் கொடிக்கம்பங்களின் மீது செதுக்கப்பட்டுள்ளது. கருவறை வாயிலின் இருபுறமும் ஆடையுடனும், கௌபீனத்துடனும் இரு முனிவர்கள் கைகளில் மலர் கொத்துகளுடன் விளங்குகின்றனர். முகமண்டபத்தின் ஒருபுறம் சிதைந்த ஒரு விலங்கின் உருவமும், மறுபுறம் மன்னனை ஒத்த உருவம் கையை உயர்த்தி மண்டியிட்டு வணங்கும் நிலையில் சிற்பங்களாக உள்ளன. இவ்விடத்தில் ஒரு பாறைச் சுவரில் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இதன் காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டாகும்.
ஆனைமலை லாடன் கோயில்
கோயிலின் அமைப்பு உயர்ந்த தாங்குதளத்தைக் கொண்ட இக்குடைவரைக் கோயில் எளிய அழகிய தோற்றத்தை உடையது. கருவறையும் முகமண்டபமும் கொண்டு விளங்குகிறது. முகமண்டபத்தில் முழுத்தூண்கள் தாங்குகின்றன. தாங்குதளத்தின் மையப்பகுதியில் முனிவர் உருவம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. முகமண்டபத்தில் வாயிற்காவலர்கள் போன்று கைகளில் மலர்க்கொத்து தாங்கிய முனிவர்கள் இருவரும், அடியவர் ஒருவரும் உள்ளனர். தூண் போதிகையில் கணம் காட்டப்பட்டுள்ளது. சேவலும் மயிலும் இருபுறமும் வாயிலில் அமைந்துள்ளன. கருவறையில் முருகன் தெய்வானை இணை பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளனர்.
பாதுகாக்கும் நிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் ஆனைமலை நரசிங்கப் பெருமாள் கோயில், திருமோகூர் கோயில், ஆனைமலை பிராமிக் கல்வெட்டு, ஆனைமலை தீர்த்தங்கரர் சிற்பங்கள்
செல்லும் வழி மதுரையிலிருந்து வடகிழக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ள ஆனைமலையின் பின்புறம் நரசிங்கப்பட்டி என்னும் ஊர் அமைந்துள்ளது. அவ்வூரிலே இலாடன் கோயில் என்னும் கந்தன் குடைவரை அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
ஆனைமலை லாடன் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் நரசிங்கப் பெருமாள் கோயில்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரை, மேலூர் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 38
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்