Back
வழிபாட்டுத் தலம்
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் திருக்கோளூர்
ஊர் திருக்கோளூர்
வட்டம் ஆழ்வார் திருநகரி
மாவட்டம் தூத்துக்குடி
தொலைபேசி 4639273607
உட்பிரிவு 2
மூலவர் பெயர் காய்சின வேந்தர் (காசினி வேந்தர்) பூமிபாலர்
தாயார் / அம்மன் பெயர் குமுதவல்லி, கோளூர் வள்ளி
திருக்குளம் / ஆறு குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம், தாமிரபரணியாறு
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, பவித்ர உற்சவம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / பாண்டியர்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் நிசேபவித்தன், வைத்தமா நிதிப்பெருமான் இறைவன் செல்வத்தைப் பாதுகாத்து அளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் இங்கும், சோழ நாட்டு வைணவத் திருத்தலமான திரு ஆதனூரில் ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயிலில் மட்டுமே காணப்படுகிறார்.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த பாண்டிய நாட்டுத் திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
சுருக்கம்
இத்திருத்தலத்தினை நம்மாழ்வார் மட்டும் 12 பாக்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். ஸ்ரீஸ்வாமி தேசிகன் தனது ப்ரபந்த ஸாரத்தில் இத்தலத்தினையும் மதுரகவியாழ்வாரின் அவதாரத்தையும் கூறுகிறார். மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்துள்ளார். மதுர கவியாழ்வாரின் அவதாரதினத்தையும் திருக்கோளுரையும்ஸ்ரீ மணவாள மாமுனிகள் பின்வருமாறு கூறுகிறார்.
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு இழந்த செல்வத்தைப் பெற இப்பெருமானை வழிபட்டால் இயலும் என்ற நம்பிக்கை உண்டு. பிரம்மாண்ட புராணத்திலேயே இதற்கொரு கதை பேசப்படுகிறது. வியாச வம்சத்தில் வந்த தர்ம குப்தன் என்பவன் 8 ஆண் குழந்தைகளையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று மிகுந்த தரித்திரனாக ஆகி, வறுமையினின்றும் மீள முடியாத நிலையேற்பட தமது குலகுருவாகிய நர்மதா நதிக்கரையில் தவஞ்செய்து கொண்டிருந்த பரத்வாஜ முனிவரைச் சரணடைய, தமது ஞானக்கண்ணால் நடந்ததையறிந்து, தர்மகுப்தனை நோக்கி, முற்பிறவியில் பெருஞ் செல்வத்திற்கு அதிபதியான ஒரு அந்தணனாகப் பிறந்த நீ, யாருக்கும் ஒரு தர்மமும் செய்யாது, பணத்தாசை பிடித்து அலைந்து திரிபவனாயிருந்தாய், உன் ஊர் அரசன் உன்னிடம் வந்து உனக்குள்ள செல்வம் எவ்வளவு யென்று கேட்க, நீ ஒன்றுமில்லை என்று பொய் கூறினாய் இதனால் உன் செல்வம் முழுவதும் கள்வர்களால் அபகரிக்கப்பட்டு, மன நோயால் பீடிக்கப்பட்டு இறந்தாய். பிராமணனாகவே இப்பிறவியில் பிறந்தாலும் உன் பழவினை உன்னைத் தொடர்கிறது. இதற்கு ஒரே மார்க்கம், நவநிதிகளும் சரணடைந்துள்ள, திருக்கோளூர் வைத்தமாநிதியைத் தொழுதால் உனது சாபந் தீருமென்று கூறினார். தர்ம குப்தனும் அவ்விதமே வந்து (தன் குடும்பத்துடன்) வெகு காலம் இப்பெருமானைச் சேவித்து எண்ணற்ற பணிவிடைகளைச் செய்து கொண்டிருக்க, ஒரு நாள் நீராடச் செல்லுங்காலை மாதனங் கண்டெடுத்து, மீளவும் பெருஞ் செல்வந்தனாகி நெடுங்காலம் சுகவாழ்வு வாழ்ந்திருந்தான். குபேரனும், தர்ம குப்தனும் இழந்த செல்வத்தைப் பெற்றதால் இழந்த பொருளை மீட்டுத் தரும் சக்தி வாய்ந்த திருத்தலமாக இது கருதப்படுகிறது. இத்தலத்துப் பெருமாள் (வைத்தமாநிதிப் பெருமாள்) தலைக்கு மரக்கால் வைத்துப் படுத்தார் இதற்கு காரணம் இப்பெருமாள் செல்வத்தைப் பாதுகாத்துச் செல்வமளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து கையில் அஞ்சனம், மை, போன்றன தடவி நிதி எங்கிருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றும் கூறுவர். மரக்கால் வைத்து எம்பெருமான் பள்ளி கொண்டுள்ளது இங்கும் சோழ நாட்டுத் திவ்ய தேசமான திரு ஆதனூரில் மட்டுமே. இவ்வூரில் கல்வி கேள்விகளில் சிறந்த “விஷ்ணுசேநர்” என்ற முன்குடுமிச் சோழிய ஸ்ரீவைஷ்ணவர் வாழ்ந்து வந்தார். வைத்த மாநிதிப் பெருமாளிடம் மாறாத அன்பு பூண்டிருந்த இவருக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் அன்று அவதரித்த தவப்புதல்வரே மதுர கவியாழ்வார் ஆவார். ஆழ்வாரின் திருவதாரஸ்தலமாக இத்தலம் விளங்குதல் இதன் மேன்மைக்கோர் எடுத்துக்காட்டாகும். நம்மாழ்வாரான சூரிய உதயத்திற்கு “அருணோதயம்” (விடிகாலைப் பொழுதைப்) போன்றது இவர் அவதாரம் என்று பெரியோர் கூறுவர். திருப்புளிங்குடி நிகழ்ச்சியைப் போலவே, இராமானுஜர் இவ்வூரை அணுகியதும், வைணவ இலச்சினையுடன் எதிர்ப்பட்ட ஒரு பெண்ணை வணங்கி நீயெங்கு நின்று புறப்பட்டாய் என்று கேட்க, திருக்கோளூரிலிருந்து விடை கொண்டேன் என்று அவள் சொல்லவும் அவளை நோக்கி, இராமானுஜர் “ஒருவா கூறை யெழுவருடுத்துக் காய் கிழங்கு சாப்பிட்டு, திண்ணமென்னிள மான்புகுமூர் திருக்கோளூரே என்று” எல்லோரும் புகும் ஊர் உனக்குப் புறப்படும் ஊராயிற்றா என்றார். அதற்கவள் (இவ்வூரில் பிறந்து வடதேச யாத்திரை சென்று காய், கனி, கிழங்குகளைப் புசித்து வந்த மதுரகவியாழ்வார் ஜோதி தெரிந்து மீண்டும் இவ்வூருக்கே வந்து நின்றதை மனதிற்கொண்டே இராமானுஜர் இங்ஙனம் கூறுகின்றாறெண்ணி) பல அருஞ்செயல்கள் செய்த அடியவர்களைப் போல யானேதும் அருஞ்செயல்செய்தேனோ, முதல் புழுக்கைவயலில் கிடந்தென், வரப்பிலே கிடந்தென் என்று பதிலளிக்க, இதைக்கேட்ட இராமானுஜர் இவளதறிவு கண்டு வியந்து, இவளில்லத்தில் விருந்துண்டு சென்றார்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோயில், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில், ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்
செல்லும் வழி நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்திவ்ய ஷேத்திரம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சற்றே தென்கிழக்கில் உள்ளது. ஆழ்வார் திருநகரிலியிருந்து பேருந்து வசதி இருப்பினும் நடந்து சென்று சேவித்து வரலாம். இது ஒரு மிகச் சிறிய கிராமம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.30 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் ஆழ்வார் திருநகரி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் ஆழ்வார் திருநகரி
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி ஆழ்வார் திருநகரி விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 05 Dec 2018
பார்வைகள் 164
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்