Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு தியாகராஜர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு தியாகராஜர் கோயில்
வேறு பெயர்கள் ஆதிபுரீஸ்வரர், படம்பக்க நாதர், தியாகேசர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், ஆனந்தத்தியாகர்.
ஊர் திருவொற்றியூர்
வட்டம் மாதவரம்
மாவட்டம் சென்னை
தொலைபேசி 044 - 25733703, +91-9444479057.
உட்பிரிவு 1
தாயார் / அம்மன் பெயர் வடிவுடையம்மன், திரிபுரசுந்தரி
தலமரம் அத்தி, மகிழம்
திருக்குளம் / ஆறு பிரம்ம தீர்த்தம்
வழிபாடு விச்வரூபம், திருவனந்தல், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
திருவிழாக்கள் மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-15-ஆம் நூற்றாண்டு / பல்லவர், சோழர், விஜயநகர, நாயக்கர்
கல்வெட்டு / செப்பேடு இக்கோயிலில் சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், இராஷ்டிர கூடர்கள், விஜய நகர மன்னர்கள், சம்புவராய மன்னர்கள் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன. திருவொற்றியூர் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா சிறப்பாக நடைபெறுவதை, "ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்தமாக வொளி திகழும் ஒற்றியூர்" என அப்பர் பாடியுள்ளார். அதே விழா தொடர்ந்து நடைபெற்று வந்ததை இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் (கி.பி. 1166--1181) கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. அதாவது பங்குனி உத்திரத் திருவிழாவின் போது அக்கோயிலில் உள்ள மடத்தின் மடாதிபதியாகிய வாகீஸ்வர பண்டிதர் என்பவர் ஆளுடை நம்பியாகிய சுந்தரரின் ஶ்ரீபுராணத்தை (பெரிய புராணம்) வாசித்தார். அப்போது அக்கோயில் இறைவன் மகிழ மரத்தின் கீழ் எழுந்தருளியிருந்து கேட்டார் என்கிறது அக்கல்வெட்டு. அந்த மகிழ மரத்தீனடியில் தான் சுந்தரர் சங்கிலி நாச்சியாரை மணம் முடித்தார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அதே மகிழ மரத்தடியில் சுந்தரர் கதை படிக்கப் பட்டது எனத் தெரிகிறது. அப்பர் பாடிய "வடிவுடை மங்கை" என்ற பெயரைத் தான் திருவொற்றியூர் இறைவிக்குச் சூட்டிக் கோயிலெடுத்தான் இரண்டாம் குலோத்துங்க சோழன். (1133--1150)வீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063--1070) உடல் நலம் குன்றியிருந்த போது அவன் உடல் நலம் பெறவும் தனது மகனுக்கு வாரிசு உருவாக வேண்டும் என்றும், தன் மாங்கல்ய பாக்யத்திற்காகவும் சோழ அரசி திருவொற்றியூர் கோயிலுக்கு நிவந்தமளித்தாள். அக்கோயிலில் "திருப்பள்ளி எழுச்சியும் திருவாதிரை நாளில் திருவெம்பாவையும் தேவாரமும் பதினாறு பெண்களால் பாடப்பட வேண்டும் என்றும் அப்போது இருபது பெண்கள் ஆடவேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதன்படியே ஆடலும் பாடலும், தேவார, திருவெம்பாவைப் பாடல்கள் இசையுடன் நிகழ்த்தப் பெற்றதை அக்கோயில் கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன.
சிற்பங்கள் ஆதிபுரீஸ்வரர் கருவறை விமானத்தின் கோட்டங்களில் கணபதி, தென்முகக் கடவுள்,விஷ்ணு, பிரம்மன், துர்க்கை ஆகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. வடபுற கருவறைச் சுற்றில் வட்டப்பாறை அம்மன் சிற்பம் அமைந்துள்ளது. கருவறை நுழைவு வாயிலில் இருபுறமும் சோழர் கால துவாரபாலகர் சிற்பங்கள் அமைந்துள்ளன. பைரவர்க்கு தனி திருமுன் அமைந்துள்ளது. சோழர் கால கலைப்பாணியாக பைரவர் காட்சியளிக்கிறார். வெளிச்சுற்றில் அமைந்துள்ள அம்மன் கருவறையில் வடிவுடையம்மன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். 'ஒற்றியூர் ஈஸ்வரர் ' கோயில் முன் மண்டபத் தூண்கள் அற்புதமான சிற்பங்களையுடையது; மேலே உள்ள தூணில் - விதானத்தில் சூரியன் தலைப்புறமும், சந்திரன் காற்புறமும் அமைய மனிதனுடைய உடல் அமைக்கப்பட்டு, அவ்வுடலில் பஞ்சாட்சர விளக்கம் அமைத்துக்காட்டப்பட்டுள்ள (கற்சிற்பம்) அழகு கண்டுணரத் தக்கது. தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு பக்கத்தில் ஆதிசங்கரர் உருவமும்; அடுத்துள்ள வேப்பமர நிழலில் பெரிய லிங்கம் ஆவுடையாரின்றி உள்ளது.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் கால கலைப் பாணியைப் பெற்றுள்ளது. தேவார மூவரால் பாடல் பெற்ற திருத்தலம்.
சுருக்கம்
ஆதிபுரி என்றழைக்கப்படும் தலம். இத்தல இறைவனை மூவர் பெருமக்கள், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், வள்ளலார் ஆகியோர் போற்றிப் பாடியுள்ளனர். சுந்தரர், சங்கிலியாரை மணந்துகொண்ட சிறப்புடையத் தலம். ஒரு காலத்தில் திருத்தலங்கள் உட்பட எல்லா ஊர்களுக்கும் இறை (வரி) விதித்து, அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது, அரசனுக்கும் ஓலைநாயகத்திற்கும் தெரியாதபடி, இறைவனருளால் ஓலையில் வரி பிளந்து, "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாக கொள்க" என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து, அவ்வூருக்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், இறைவனுக்கு "எழுத்தறியும் பெருமான்" என்றும் பெயர் ஆயிற்று. இச்செய்தி பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. உபமன்யு முனிவரிடத்து சிவதீட்சை பெற்றுத் தம்மை வழிபட்ட வாசுகியைத் தம் திருமேனியில், இறைவன் ஐக்கியம் செய்து கொண்டமையால், "படம்பக்கநாதர் " என்ற திருநாமத்தையும் பெற்றார். அப்பாம்பின் வடிவத்தை (சுவடு) இறைவன் திருமேனியில் இன்றும் காணலாம். சுந்தரர், சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, இத்தலமரமான மகிழ மரத்தின் முன்னால், "நான் உன்னைப் பிரியேன்" என்று சங்கிலியாரிடம் சத்தியம் செய்து, இத்தல எல்லையைத் தாண்டியதும், தன் கண்பார்வையை இழந்தார். 'வட்டப்பாறை அம்மன் ' (காளி) சந்நிதி - இந்த அம்மன் ஒரு காலத்தில் மிக்க உக்கிரத்துடன் விளங்கி, பலிகளைக் கொண்டதாகவும், ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்துச் சாந்தப்படுத்தியதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது. பட்டினத்துப் பெருமானுக்குப் பேய்க் கரும்பு இனித்த இடம் இஃது ஆகும்; ஆதலின் தனக்குரிய இடம் இதுவே என்று முடிவு செய்து கடற்கரையொட்டிய (அவர் கோயில் உள்ள) இவ்விடத்தில் சமாதியானார் என்பது வரலாறு. கலிய நாயனாரின் அவதாரத் தலம்.
அருள்மிகு தியாகராஜர் கோயில்
கோயிலின் அமைப்பு ஆதிபுரீஸ்வரர் கோயிலின் இராஜகோபுரம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் மிகப் பரந்த அளவில் திருச்சுற்று காணப்படுகின்றது. திருச்சுற்றின் வலதுபுறம் இறைவி வடிவுடையம்மன் திருமுன் (சந்நிதி) அமைந்துள்ளது. மேலும் கிழக்கு பக்க திருச்சுற்றில் நவக்கிரகம், விநாயகர், பாலசுப்ரமணியர் மற்றும் குழந்தையீஸ்வரர் ஆகிய தனித்தனி திருமுன்கள் அமைந்துள்ளன. மேற்கு வெளிச் சுற்றில் தென்மேற்கு மூலையில் அண்ணாமலையார் திருமுன் மற்றும் ஜம்புலிங்கேஸ்வரர், நாகலிங்கேஸ்வரர், காளத்தி நாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய திருமுன்கள் அமைந்துள்ளன. வடமேற்கு மூலையில் திருவொற்றிசுவரர் கருவறை தனி முன் மண்டபத்துடன் காணப்படுகின்றது. வடக்கு வெளிச் சுற்றில் பைரவர், கல்யாண சுந்தரர் ஆகிய சிறு கோயில்கள் உள்ளன. மூலவர் ஆதிபுரீஸ்வரர் கருவறை கிழக்கு இராஜகோபுர வாயிலுக்கு நேரே இல்லாமல் சற்று இடதுபுறம் தள்ளி அமைந்திருக்கிறது. தூங்கானை மாட வடிவில் கருவறை விமானம் அமைந்துள்ளது. கருவறைத் திருச்சுற்றில் சோழர்கால உருளைத் தூண்கள் இரண்டு வரிசையாக இடம் பெற்றுள்ளன. கருவறை விமானத்தின் கோட்டங்களில் கணபதி, விஷ்ணு, பிரம்மன், துர்க்கை ஆகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. வட்டப்பாறை அம்மன் திருமுன்னும் வடக்குப்புற கருவறைத் திருச்சுற்றில் இடம் பெற்றுள்ளது. கருவறையில் சுயம்பு வடிவில் ஆதிபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் எண்ணூர் பட்டினத்தார் சமாதி கோயில், மாசிலாமணியீஸ்வரர் கோயில், அஷ்டலெட்சுமி கோயில்
செல்லும் வழி சென்னையின் ஒரு பகுதி திருவொற்றியூராகும். உயர்நீதி மன்றப் பகுதியிலிருந்து திருவொற்றியூருக்கு அடிக்கடி நகரப் பேருந்து செல்கிறது. காலடிப்பேட்டையை அடுத்து, 'தேரடி' நிறுத்தத்தில் இறங்கினால் வீதியின் கோடியில் கோயிலைக் காணலாம். சென்னையின் முக்கியப் பகுதிகளிலிருந்தும் நகரப்பேருந்து வசதி உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.30 வரை
அருள்மிகு தியாகராஜர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருவொற்றியூர், எண்ணூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சென்னை சென்ட்ரல்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி சென்னை மாநகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 77
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்