Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கோயில்
வேறு பெயர்கள் கொடிமாடச் செங்குன்றூர், தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி  
ஊர் திருச்செங்கோடு
வட்டம் திருச்செங்கோடு
மாவட்டம் நாமக்கல்
தொலைபேசி 04288-255925
உட்பிரிவு 1
மூலவர் பெயர் அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர்
தாயார் / அம்மன் பெயர் பாகம்பிரியாள்
தலமரம் இலுப்பை
திருக்குளம் / ஆறு தேவதீர்த்தம், சங்கு தீர்த்தம்
வழிபாடு காலசந்தி, உச்சிக்காலம், இராக்காலம்
திருவிழாக்கள் மகாசிவராத்திரி, சித்திரைப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகப் பெருந்திருவிழா, புரட்டாசி கேதார கௌரி அம்மன் விரதம், கார்த்திகை தீபம், மாசி மகம் விழா, பங்குனி உத்திரம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-15-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு கோவை மாவட்டம் காடாம்பாடி எனும் ஊரில் ஐநூற்றுச் செட்டியார் எனும் இனத்தில் பிறந்த பக்தர் பாததூளி- சுந்தரியம்மாள் தம்பதியினருக்கு மகப்பேறு வாய்க்காமல் போக, அவர்கள் திருச்செங்கோடு உமையொருபாகனை வழிபட்டு உமைபாகன் எனும் மகனைப் பெற்றனர். உமைபாகனுக்கு 5 வயது ஆகியும் பேசாமல் ஊமையாக இருந்தமையால், தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேர்க்காலில் மகனை உருட்டிவிட்டனர். உமைபாகன் மீது தேர் எறிச் சென்றப் பின்பு அவன் பேசத்தொடங்கினான். இந்த அதிசயத்தின் சாட்சியாக அவ்விடத்தில் மடம் நிறுவி தானதருமம் செய்து வந்துள்ளனர். அவர்களது மரபில் பிறந்தவர்கள் ஒன்றினைந்து திருச்செங்கோடு மலைமீது இராஜகோபுரம் அமைத்து தந்துள்ளனர் என இங்குள்ள தற்காலக் கல்வெட்டொன்று தெரிவிக்கின்றது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் இக்கோயிலின் தூண்கள், மண்டபச் சுவர்களென அனைத்துப் பகுதிகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. யாளி வீரன், திக்பாலர்கள், மன்னர்கள் மற்றும் தேவியரின் சிற்பங்கள், பூதகணங்கள், கொடிப்பெண், பெருமாள், சிவன் போன்ற தெய்வங்களின் மற்றைய வடிவங்கள், கூத்துக் கோமாளி, இசைக்கலைஞன் ஆகிய சிற்பங்கள் எழில் வாய்ந்தவை. இவை யாவும் தூண்களில் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. மேலும் கருவறைகளில் திருமகள், நிலமகள் உடனுறை ஆதிகேசவப் பெருமாள், செங்கோட்டு வேலவர், இலிங்க வடிவத்தில் நாகேசுவரர் ஆகிய திருவுருவச் சிற்பங்கள் உள்ளன. நாகவழிபாடு சிறப்புற்ற இக்கோயிலில் நாகச் சிற்பங்களும் காணப்படுகின்றன.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.
சுருக்கம்
கொங்குநாட்டில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்றத் தலங்களுள் முதன்மையானது திருச்செங்கோடு அர்த்தநாரீசவரர் கோயிலாகும். இத்தலத்து இறைவனை சம்பந்தர் பாடியுள்ளார். இத்தலத்தின் இறைவன் அர்த்தநாரீசுவரரை திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107 ஆவது திருப்பதிகத்திலும் திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார். இங்கு அருள்புரிகின்ற சிங்காரவேலவனை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். கொங்கேழ் தலங்களுள் தலையாயதும், தலைசிறந்ததுமான இத்தலம் கொடிமாடச் செங்குன்றூர் என்று பண்டு அழைக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும். மலை மீது அமைந்துள்ள இக்கோயில் பண்டைய காலத்தில் நாகவழிபாட்டினையும், வேட்டுவர்கள் தங்களின் குலதெய்வமான பெண் தெய்வத்தை வணங்கிய இடமாகவும் திகழ்ந்துள்ளது. திருச்செங்கொடு மலை அடிவாரத்தில் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது.
அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் ஒரு மலைக் கோயிலாகும். மலை அடிவாரத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்திலுள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதை 1200 படிகளைக் கொண்டுள்ளது. கிழக்கு-மேற்கில் 262 அடி நீளமும் தென்-வடலாக 201 அடி நீளமுடையது இக்கோயில். இதன் வடக்கு வாசல் இராஜகோபுரம் கிட்டத்தட்ட 84.5 அடி உயரத்துடன் ஐந்து நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, தென்திசைகளிலும் இக்கோயிலுக்கு வாயில்களுண்டு. அவற்றுள் தென் திசை வாயிலுக்கு மட்டும் சிறுகோபுரம் உள்ளது. அர்த்தநாரீசுவரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவப் பெருமாள் என மூன்று கடவுளர்களுக்கு தனித்தனி திருமுன்கள் (சந்நிதி) இக்கோயிலில் அமைந்துள்ளன. இக்கோயிலின் மூலவர் அர்த்தநாரீசுவரர் கருவறை மேற்கு நோக்கியுள்ளது. அர்த்தநாரீசுவரர் கருவறையினை அடுத்துள்ள முன்மண்டத்தில் ஆமை மண்டபம் ஒன்று உள்ளது. மேலும் இக்கோயிலில் செங்கோட்டு வேலவர் திருமுன், அர்த்தநாரீசுவரர் திருமுன்னுக்குத் தென்புறம் கிழக்கு நோக்கிய நாரிகணபதி திருமுன், தென்மேற்குப் பகுதியில் வெண்ணிற இலிங்கத்துடன் நாகேசுவரர் திருமுன், தென்புறத்தில் திருமகள், நிலமகள் உடனுறை ஆதிகேசவப் பெருமாள் (நின்ற கோலம்) திருமுன் ஆகியன அமையப்பெற்றுள்ளன. இக்கோயிலின் மண்டபத்தூண்கள் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தவையாக காட்சியளிக்கின்றன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் சங்ககிரி, பாண்டிக் கொடுமுடி, பவானி சங்கமேஸ்வரர் கோயில்
செல்லும் வழி ஈரோட்டில் இருந்து 18 கி.மி. தொலைவிலும், சேலத்தில் இருந்து 27 கி.மி. தொலைவிலும், திருச்செங்கோடு உள்ளது. சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து திருச்செங்கோட்டிற்கு பேருந்துகள் செல்கின்றன.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் மாலை 7.30 மணி வரை
அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருச்செங்கோடு
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சேலம், நாமக்கல்
அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர்
தங்கும் வசதி திருச்செங்கோடு, நாமக்கல் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் ஆறகழூர் வெங்கடேசன் பொன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் ஆறகளூர் வெங்கடேசன் பொன்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 22 Jun 2017
பார்வைகள் 1533
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்