Back
வழிபாட்டுத் தலம்
திருவாரூர் தியாகராஜர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருவாரூர் தியாகராஜர் கோயில்
வேறு பெயர்கள் திருமூலட்டானம், பூங்கோயில், க்ஷேத்ரவரபுரம், ஆடகேசுரபுரம்,  தேவயாகபுரம்,  முசுகுந்தபுரம்,  கலிசெலாநகரம், அந்தரகேசுபுரம், வன்மீகநாதபுரம்,   தேவாசிரியபுரம்,  சமற்காரபுரம், மூலாதாரபுரம், கமலாலயபுரம்
ஊர் திருவாரூர்
வட்டம் திருவாரூர்
மாவட்டம் திருவாரூர்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்
தாயார் / அம்மன் பெயர் கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள்
தலமரம் பாதிரி
திருக்குளம் / ஆறு கமலாலயம், சங்கு தீர்த்தம், கயாதீர்த்தம், வாணிதீர்த்தம்
வழிபாடு காலை 6 மணி - திருப்பள்ளி எழுச்சி , பால் நிவேதனம், காலை 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம், காலை 8 மணி - முதற் கால பூஜை, மதியம் 11.30 மணி - மரகத லிங்க அபிஷேகம், பகல் 12 மணி - உச்சிக்கால பூஜை, பகல் 12.30 மணி – அன்னதானம், மாலை 4 மணி -நடை திறப்பு, மாலை 6 மணி - சாயரட்சை பூஜை, இரவு 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம், இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை
திருவிழாக்கள் திருவாரூர் தேர்த்திருவிழா
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு / சோழர்கள்
கல்வெட்டு / செப்பேடு இக்கோயிலில் 65 கல்வெட்டுக்கள் உள்ளன. இவை பெரும்பாலும் சோழர் காலத்தியவை. செம்பியன்மாதேவி ஆரூர் அரநெறிக் கோயிலைக் கட்டியதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆண்டொன்று ஐம்பத்தாறு திருவிழாக்கள் நடைபெற்றனவாம்.
சுவரோவியங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
சுருக்கம்
“பிறக்க முத்தி திருவாரூர்” என்று புகழப்படும் சிறப்பினது. மூலாதாரத்தலம். ‘திருவாரூர்த்தேர் அழகு.’ பஞ்சபூதத்தலங்களுள் பிருதிவித்தலம். எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம். சுந்தரர், திருத்தொண்டத் தொகையைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது. பரவையார் அவதரித்த பதி. ‘கமலை’ என்னும் பராசக்தி தவம் செய்யுமிடம். திருமகள் இராமர் மன்மதன் முதலியோர் வழிபட்ட பதி. முசுகுந்த சோழன் ஆட்சி செய்த சீர்மையுடையது. தியாகராஜா பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் தலம். செல்வத்தியாகேசர், மனுச்சோழனுக்கு அருள்செய்த பெரும் பதி.  இவ்வரலாற்றைப் பெரிய புராணத்தின் வாயிலாக அறியலாம். இத்தியாகேசப் பெருமானே சோமாசிமாற நாயனாரின் வேள்விக்கு எழுந்தருளி அவிர்ப்பாகம் ஏற்றார் என்னும் வரலாற்றை திருமாகாளத் தலபுராணத்தால் அறிகிறோம். திருவாரூரில் பாடல் பெற்ற தலங்களுள் மூன்று, அவை :-     (1) திருவாரூர்     (2) ஆரூர் அரநெறி  (3) ஆரூர்ப்பரவையுள் மண்டளி என்பன. திருவாரூர்க் கோயில் - தியாகராஜா கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுவது. ஆரூர் அரநெறி என்னும் கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே தெற்குச் சுற்றில் உள்ளது. கீழவீதியில் தேரடியில் உள்ளது ஆரூர்ப்பரவையுள் மண்டளியாகும். (1) தண்டியடிகள் (2) கழற்சிங்கர் (3) செருத்துணையார் (4) விறன் மிண்டர் (5) நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களுடைய திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே.  இத்தலத்தில் பெருஞ்சிறப்பு தியாகேசருக்குத்தான்.
திருவாரூர் தியாகராஜர் கோயில்
கோயிலின் அமைப்பு கோயில் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடன் - கோபுரங்களுடன் விளங்குகிறது. கீழ்க்கோபுரம் 118 அடி உயரமுள்ளது. மொத்தம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்கள், கிழக்குக் கோபுர வாயில் உள்ளே நுழைந்தால் இருபுறமும் விநாயகர் முருகன் கோயில்கள், வீதிவிடங்க விநாயகர் தரிசனம். பின்னால் பிரமநந்தி எழுந்தருளியுள்ளார். மழை வேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பசுக்கள் பால் கறக்க உதைத்தால் நன்கு கறக்க இவர்க்கு அறுகுசாத்தி அதைப் பசுக்களுக்குத் தருதலும் இன்றும் மக்களிடையேயுள்ள நம்பிக்கையும் பழக்கமுமாகும். அடுத்து பெரிய பிராகாரத்தில் வலமாக வந்தால் பக்தகாட்சி மண்டபம் (பங்குனி உத்திர விழா முடிந்து நடனக்கோலத்தில் தியாகராசர் எழுந்தருளுமிடம்) ; ஊஞ்சல் மண்டபம் (சந்திரசேகரின் ஊஞ்சல் உற்சவம் நடக்குமிடம்) காணலாம். அடுத்து ஆகாசவிநாயகர், துலாபார மண்டபம், சரஸ்வதி தீர்த்தம் முதலியவை உள்ளன. அடுத்துள்ளது சித்திரசபாமண்டபம் - பெரியது. இதன் பக்கத்தில் கோயில் ஓரமாகவிருப்பது சிறியது - புராணமண்டபம். அடுத்துக் கமலாம்பாள் சந்நிதி. பராசக்தி பீடங்களுள் ஒன்று. அம்பிகை தவக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். ஆடிப்பூர விழா இச்சந்நிதியில் விசேஷம். பக்கத்தில் உச்சிட்ட பிள்ளையார் உள்ளார். மகாமண்டபம் தாண்டி உட் சென்றால் கமலாம்பிகை தரிசனம். நான்கு கரங்களுடன் (தாமரை, பாசம், அக்கமாலை, அமைந்தநிலை) யோகாசனத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷரபீடமுள்ளது. இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளன. நின்று தியானித்துச் செல்லவேண்டும். அடுத்தாற்போல் சண்முகர், பாலசுப்பிரமணியர், கலைமகள், மகரிஷிகள் வழிபட்ட லிங்கங்கள் - சந்நிதிகள் உள்ளன. வெளிவந்தால் எதிரில் பார்ப்பதீச்சரம். இங்குள்ள தீர்த்தக் கிணறு ‘முத்திக்கிணறு’ எனப்படும். இதை மக்கள் உருமாற்றி ‘மூக்குத்திக் கிணறு’ என்றழைக்கிறார்கள். ஒட்டுத்தியாகர் கோயில் உள்ளது. சுந்தரரைக் கோயிலுள் போகாதவாறு விறன் மிண்டர் தடுக்க, இறைவன் இங்கு வந்து சுந்தரரை ஆட்கொண்டார் என்பர். “ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட” என்னும் சுந்தரர் வாக்கு இங்கு எண்ணத்தக்கது. அடுத்துள்ளது, தேவாசிரியம் எனப்படும் ஆயிரக்கால் மண்டபம். செல்வத்தியாகர் ஆழித்தேர் விழா முடிந்து இம்மண்டபத்தில்தான் வந்து மகாபிஷேகம் கொண்டு-செங்கோல் செலுத்துவார். அதனால் இஃது ராஜதானி மண்டபம் என்று வழங்கப்படும். “தேவாசிரியன் எனும் திருக்காவணம்” என்னும் சேக்கிழார் வாக்குக்கேற்ப இம்மண்டபத்தின் முன்னால் பந்தலிட பலகால்கள் நடப்பெற்றுள்ளமையைக் காணலாம். அடுத்துள்ள தீர்த்தம் - சங்க தீர்த்தம். இதில் இறங்கிக் கைகால் சுத்திசெய்து கொண்டு, ஆரியன் கோபுரம் வழியாக உட்செல்ல வேண்டும். கோபுர வாயிலில் இடப்பால் விறன்மிண்டர் காட்சி தருகிறார். இவரை வணங்கி வாயிலைக் கடந்து சென்றால் - இந்திரன் கொடி மரமும், ராஜநாராயண மண்டபமும் வரும். பங்குனி உத்திர விழா இறுதியில் பெருமான் இம்மண்டபத்தில் எண்ணெய்க் காப்பு கொள்வாராதலால் இதற்கு எண்ணெய்க் காப்பு மண்டபம் என்று பெயர். ராஜநாராயண சோழன் கட்டியது. இம்மண்டபத்தின் வலப்பால் விநாயகர், இடப்பால் துர்க்கை, அடுத்து ஜ்வரஹரேஸ்வரர், ஏகாதசருத்ரர் வழிபட்ட சிவலிங்கங்களை வழிபட்டுச் சென்று, அபிஷேகக் கட்டளை அறை, வாகன அறை, ராஜன் கட்டளை அறை இவைகளைக் கடந்து முசுகுந்தரைத் தொழுது, இந்திரலிங்கம் வணங்கி, அங்குள்ள சதுரக்கல்லின் மேல் நின்று ஏழுகோபுரங்களையும் ஒருசேர ஆனந்தமாகத் தரிசித்துப் பின்பு ஆரூர் அரநெறியை அடையவேண்டும்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம்
செல்லும் வழி மயிலாடுதுறை, சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால் முதலிய ஊர்களிலிருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
திருவாரூர் தியாகராஜர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருவாரூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி திருவாரூர் வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 23 Nov 2018
பார்வைகள் 136
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்