வழிபாட்டுத் தலம்
தெப்பத்துப்பட்டி பொக்கிஷநாதர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | தெப்பத்துப்பட்டி பொக்கிஷநாதர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | பொக்கிஷநாதர் |
| ஊர் | எ.தெப்பத்துப்பட்டி |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | பொக்கிஷநாதர் |
| திருவிழாக்கள் | பிரதோஷம், சிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு / சோழபாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் இலிங்க வடிவில் சிவன் காணப்படுகிறார். கருவறை விமானக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மன் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. அர்த்த மண்டபக் கோட்டத்தில் கணபதி மற்றும் பைரவர் சிற்பங்கள் காணப்படுகின்றன. பைரவர் சிற்பம் கோட்டத்தில் வைக்கப்பட்டிருப்பது இங்குதான் எனக் கருத இடமுண்டு. சப்தமாதர்களின் சிற்பங்களும், சண்டேசர், நந்தி, ஆடல் மகளிரின் புடைப்புச் சிற்பங்கள், விநாயகர், விஷ்ணு, துர்க்கை ஆகிய சிற்பங்களும் காணப்படுகின்றன. |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலப் பாண்டியர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. |
|
சுருக்கம்
தெப்பத்துப்பட்டியில் உள்ள சிவன்கோயில் சோழர் பாண்டியர் கட்டடக் கலையைப் பெற்றுள்ளது. பொதுவாக பாண்டியர் கோயில் கலைப்பாணியில் கோட்டங்களில் சிற்பங்கள் அமைவது இல்லை. ஆனால் இக்கோயிலில் கோட்டச் சிற்பங்கள் அமைந்துள்ளன. மேலும் கோட்டத்தில் பைரவர் அமைந்திருப்பது சிறப்பு. சப்த மாதர்களின் சிற்பங்களும் மற்றும் துர்க்கை, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, இலிங்கோத்பவர் ஆகிய சிற்பங்களும் காட்டப்பட்டுள்ளன. இக்கோயிலில் கல்வெட்டுகள் எதுவும் இடம் பெறவில்லை. இக்கோயில் கட்டப்பட்ட காலம் சோழரும் பாண்டியரும் போரிட்டுக் கொண்டிருந்த காலமாய் இருக்கலாம். நிலையான அரசு அமையாததால் கல்வெட்டு இடம் பெறவில்லை எனலாம். மதிரை கொண்ட கோப்பரகேசரி என்ற பட்டத்தை முதலில் பராந்தக சோழனும், பின்னர் இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனும் பெற்றுள்ளனர். எனவே இவர்களின் காலத்திலோ அல்லது சமகாலத்திலோ இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. கோயிலில் அமைந்துள்ள சிற்பங்களின் கலைப்பாணியை நோக்குகையில் முற்காலச் சோழர் கலைப்பாணி நன்கு தெரிகிறது. எனவே இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்நத கோயில் எனலாம். பாண்டிய மன்னன் ஒருவன் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் திருப்பணிகளை மேற்கொண்டிருந்தபோது, திருப்பணிக்குத் தேவையான கற்களை உசிலம்பட்டியில் இருந்து தெப்பத்துப்பட்டி வழியாகக் கொண்டு வந்தான். இடைவழியில், கற்களைக் கொண்டு வரும் பணியாளர்களும் கால்நடைகளும் உணவும் நீரும் அருந்தி இளைப்பாற, இந்த ஊரில் ஒரு சத்திரத்தை ஏற்படுத்தி, அந்தப் பணிகளைக் கவனித்துக்கொள்ள தன் மகனை நியமித்தான். மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வந்தபோது, தெப்பத்துப்பட்டியில் இருந்த இளவரசனுக்கும் தன் தந்தையைப் போலவே இங்கே ஒரு கோயில் கட்டவேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அந்த எண்ணம் சிவனாரின் சித்தப்படியே தனக்கு உண்டானதாக நினைத்து, அவன் இந்தக் கோயிலைக் கட்டியதாகச் சொல்கிறார்கள். பொக்கிஷநாதரான சிவலிங்கமானது திருகக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள மக்கள் எல்லோரும் இக்கோயிலை ‘ஒட்டைக் கோயில்’ என்றே இதுநாள்வரை அழைத்து வந்துள்ளனர். சமீபத்தில்தான், இங்கு உறைந்திருக்கும் ஈசனுக்குப் ‘பொக்கிஷநாதர்’ என்ற திருநாமத்தைச் சூட்டியிருக்கிறார்கள். இந்தப் பெயருக்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் இருக்கிறது. இந்தக் கோயிலில் பொக்கிஷங்கள் இருப்பதாகவும், அதை முனி ஒன்று காவல் காத்து வருகிறது என்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் சிவலிங்கமும் திருகும் வடிவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாண்டிய மன்னனின் மகன் இந்த ஊரில் தங்கி இருந்தபோது, பொக்கிஷத்தைக் காப்பாற்றுவதற்காகக் கட்டிய கோயிலின் இறைவன் என்கிற வகையிலும் ‘பொக்கிஷநாதர்’ என்ற திருப்பெயர் இவருக்குப் பொருத்தம்தான். பொக்கிஷம் இருக்கிறது என்ற தகவலால், இங்கே பல கொள்ளைகளும் நடந்திருக்கின்றன. இந்தக் கோயிலிலிருந்து சிற்ப நுட்பம் மிகுந்த பல சிலைகள் களவாடப்பட்டிருக்கின்றன. தற்போது ஊர்மக்களின் தீவிர முயற்சியால் நற்துணை என்ற திருப்பணிக் கமிட்டி அமைக்கப்பட்டு, திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
|
|
தெப்பத்துப்பட்டி பொக்கிஷநாதர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இத்திருக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், நுழைவாயில் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. முழுவதும் கற்றளியாக விளங்குகிறது. தளப்பகுதி சிதைந்துள்ளது. விமானத்தின் மேற்பகுதி காணப்படவில்லை. எனவே விமானத்தின் கலைப்பாணி இன்னதென்று அறியக்கூடவில்லை. கருவறை விமானத்தின் சுவர்க் கோட்டங்களிலும், அர்த்த மண்டப புறச்சுவர் கோட்டங்களிலும் இறையுருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்று மாளிகை தூண்களுடன் அமைந்துள்ளது. தூண்கள் அடித்தளம், பட்டை, போதிகை ஆகிய உறுப்புகளைக் கொண்டுள்ளது. சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட தூண்கள் காணப்படுகின்றன. இக்கட்டடக் கலையை நோக்கும் பொழுது சோழர் கலைப்பாணியைக் காணமுடிகிறது.. அபிடேக நீர் வெளியேறும் பிரநாழி யானையாளி முகத்துடன் கூடியதாக உள்ளது. அதிட்டானப்பகுதியில் உபானம், ஜகதி, முப்பட்டைக் குமுதம், பாதங்களுடன் அமைந்துள்ள கண்டப்பகுதி ஆகிய உறுப்புகளைப் பெற்று விளங்குகின்றது. பாதபந்த அதிட்டானத்தை இக்கருவறை விமானம் பெற்றுள்ளது. சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை. அரைத் தூண்களுக்கிடையே அமைந்த கோட்டங்களின் மேலே மகர தோரணம் அலங்கார வளைவாக அமைந்துள்ளது. விமானத்தின் கூரைப்பகுதியில் கொடுங்கை, பூமிதேசம் ஆகிய உறுப்புகள் அமைந்துள்ளது. கொடுங்கையில் நாசிகைகள் கூடுமுகங்களாக அமைந்துள்ளன. பொதுவாக பாண்டியர் கலைப்பாணியில் கோட்டங்களில் சிற்பங்கள் அமைவது இல்லை. ஆனால் பாண்டிய நாட்டில் அமைந்த இக்கோயிலில் கோட்டச் சிற்பங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கருவறையில் அமைந்துள்ள சிவலிங்கம் சதுர வடிவ ஆவுடையாரைப் பெற்றுள்ளது. இது பாண்டியரின் கலைப்பாணியாகும். இலிங்கத்தின் பாணப்பகுதியும் சதுர வடிவமாக இங்குள்ளது குறிப்பிடத்தக்கது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | ஊராரின் கட்டுப்பாட்டின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | எம்.கீழப்பட்டி கம்ப காமாச்சி கருப்பசாமி கோயில், உத்தங்குடி கடை அய்யனார் கோயில் |
| செல்லும் வழி | மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில் இருந்து உத்தமநாயக்கனூர் செல்லும் வழியில், 20-வது கி.மீ-ல் உள்ளது தெப்பத்துப்பட்டி கிராமம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 May 2017 |
| பார்வைகள் | 71 |
| பிடித்தவை | 0 |