Back
வழிபாட்டுத் தலம்
உத்தரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் உத்தரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் ஸ்ரீவேலி விஷ்ணுக்ரஹம் , கொங்கரையர் நின்ற பெருமாள் கோயில், வெள்ளைமூர்த்தி ஆழ்வார் கோயில், இராஜேந்திர சோழ விண்ணகர், புருஷோத்தமத்துப் பெருமாள் கோயில், பஞ்சவரதர் கோயில்
ஊர் உத்தரமேரூர்
வட்டம் உத்தரமேரூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 2
ஆகமம் பாஞ்சராத்திரம்
வழிபாடு ஐந்து காலப் பூசை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை, ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன்
கல்வெட்டு / செப்பேடு தாங்குதளத்தின் கருங்கல்லில்தான் கல்வெட்டுகள், எல்லாம் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள பழமையான கல்வெட்டு சம்ஸ்கிருத மொழியில் பல்லவ கிரந்த எழுத்துகளில் உள்ளது. இக்கோயிலை காஞ்சிபுரத்துப் பாடகம் என்னும் ஊரில் வாழ்ந்த பரமேசுவரன் என்ற தச்சன் கட்டினான். அவன் நல்ல அறிவாளி. வாய்மையே தலையாய் நின்றவன். அவனால் இப்பெருங்கோயில் கட்டப்பட்டது. இதன் அளவுகளையும், அங்கங்களையும் அணிகளையும் எவன் ஒருவன் அறிகிறானோ அவனே வாஸ்து வித்தையில் சிறந்தவன். இவ்வாஸ்து மிகவும் மகோன்னதமானது. பெயராலும், வகையாலும் மிகச் சிறந்தது. வாஸ்துக்களில் எல்லாம் சூரியனைப் போன்றது. இவ்வூரில் ஆகம வல்லுநர்கள் பலர் இருக்கின்றனர். அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என அனுபவம் மிக்கவர்கள் உள்ளனர். அவர்கள் அறிவுரைப்படி இக்கோயில் கட்டப்பட்டது என அக்கல்வெட்டுக் கூறுகிறது. ஏவம் வாஸ்து அபவத் மஹத் ப்ரவிகதம் நாமனாச ஜாத்யாதினா ஏனாஸ்மின் பகுபிஹ் யதாகம விதை: க்ராமே ப்ரயோகான் விதை; ஸ்ரீமத்பாடக வாஸினா க்ருத தியா தக்ஷ்ணா சதா வாக்மினா தேன இதம் பரமேசுவரேன மஹதா ஸ்ரீவாக்மினோ பாஸ்கர: அஸ்ய அலங்காரமானம் ச யதா லக்ஷண சம்யுதம் யஸ்சைனம் வேத்தி சகலம் ஸ வை வாஸ்துவிதாம் வர: என அக்கல்வெட்டில் உள்ளது. இதிலிருந்து இக்கோயிலை எட்டாம் நூற்றாண்டில் மிகச் சிறந்த கோயிலாகக் கட்டியிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை . இக்கோயிலில் திருமாலின் ஒன்பது மூர்த்தங்கள் உள்ளன என்றும் இது மரீசி ஸம்ஹிதை என்னும் வைணவ நூல்படி கட்டப்பட்டது என்றும் கண்டோம். அந்நூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறையோர்கள் வசிக்கும் ஊர்களில் நவமூர்த்தி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இவ்வூர் 1200 மறையோர்களுக்கு நந்திவர்மனால் தானம் அளிக்கப்பட்டது என்று கண்டோம். இவ்வூரில் பலர் ஆயிரத்து இருநூற்றுவர் எனப் பெயர் கொண்டிருந்ததை கல்வெட்டுகள் காட்டுகின்றன. ஆதலின் இக்கோயில் தோற்றுவித்த காலத்திலேயே மரீசி ஸம்ஹிதையைப் பின்பற்றி கட்டியிருக்கிறார்கள் என அறியலாம். இதன் பின்னர் பல்லவன் தந்திவர்மனின் கல்வெட்டு முழுமையாக எழுதப்படாமல் நின்றுவிட்டது. பத்தாம் நூற்றாண்டில் கொங்கரையர் என்பவனால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆதலின் இக்கோயில் கொங்கரையர் ஸ்ரீ கோயில் என்றும் பெயர் காணப்படுகிறது. கோயில் அதிட்டானத்தில் "கொங்கரையர் நின்ற பெருமாள்'' என்ற பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்திருப்பணி செய்யப்பட்டபோது கோயிலின் பண்டைய அமைப்பை எவ்விதத்திலும் மாற்றாமல் பணி செய்துள்ளது போற்றத்தக்க ஒன்றாகும். பார்த்திவேந்திர வர்மனின் ஒரு கல்வெட்டில் கொங்கரையர் எடுப்பித்த ஸ்ரீவேலி விஷ்ணுக்ருஹம்" என்ற குறிப்பு காணப்படுகிறது. இது பத்தாம் நூற்றாண்டில் நடைபெற்ற திருப்பணி. இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் இக்கோயிலில் பல காணப்படுகின்றன. இவற்றில் கொங்கரையர் கோயில் என்றும், கொங்கரையர் கோயிலான ஸ்ரீவேலி விஷ்ணுக்ருஹம் என்றும் புருஷோத்தமம் என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. 1002வது ஆண்டில் இராஜராஜன் காலத்தில் கொங்கரையர் ஸ்ரீ கோயிலில் நின்ற பரமசுவாமிகளுக்கு விளக்கெரிக்க 96 ஆடுகள் தானம் அளிக்கப்பட்டன. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புருஷோத்தமத்து பெருமானுக்கு நைவேத்யத்துக்காக ஒரு நிலம் கொடுக்கப்பட்டது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு திரிவிக்ரமச் சேரியில் வாழ்ந்த ஒரு பெண்மணி ஸ்ரீவேலி விஷ்ணுகிருஹத்து வெள்ளைமூர்த்தி பெருமானுக்கு விளக்கெரிக்க 96 ஆண்டுகள் கொடுத்தாள். இதே போல ஹ்ரீஷீகேசச் சேரியைச் சேர்ந்த ஒருவர், ஸ்ரீவேலி விஷ்ணுக்ருஹத்தில் எழுந்தருளி நின்ற ஸ்ரீராகவப் பெருமானுக்கு விளக்கெரிக்க 96 ஆடுகள் கொடுத்தார். இராஜராஜனின் அண்ணன் ஆதித்த கரிகாலனின் தேவி திரு அயோத்தி பெருமானுக்கு கோயில் கட்டினாள் என்று கண்டோம். அது வேறு கோயிலோ எனத் தோன்றுகிறது. இக்கோயில் சுந்தர வரதர் கோயிலேயே இருந்த மற்றொரு இராமர் கோயில் எனலாம். இராஜராஜனின் இறுதி ஆண்டில் வெள்ளை மூர்த்தி ஆழ்வார்க்கும், ஸ்ரீராகவ தேவருக்கும் நாள்தோறும் மூன்று சந்திகளிலும் திரு அமுது படைக்க ஊர்ச்சபையார் நிலம் அளித்தனர். இக்கோயிலில் திருப்பதியம் பாடும் ஸ்ரீ வைணவர்களுக்கு இந்த சந்திகளில் படைக்கப்படும் நைவேத்ய ப்ரஸாதத்தை விநியோகிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டது. இவற்றிலிருந்து இராஜராஜன் காலத்தில் இக்கோயில் மிக உன்னத நிலையில் இருந்தது என்றும், பெரும்பாலும் ஸ்ரீவேலி விஷ்ணுக்ருஹம் என்றே அழைக்கப்பெற்றது என்றும் பெருமாள் வெள்ளைமூர்த்தி ஆழ்வார் என்றே அழைக்கப்பெற்றார் என்றே அறிகிறோம். இங்கிருந்த ஸ்ரீராமரும் சிறப்பாக வழிபடப்பட்டார் என்றும் அறிகிறோம். இவ்வளவு சீரும் சிறப்புமாக இருந்த நிலையில் இராஜேந்திர சோழன் இக்கோயிலுக்கு திருப்பணி செய்திருக்கிறான். இக்கோயில் "இராஜேந்திர சோழ விண்ணகர்'' என்று அழைக்கப்பட்டது. பண்டைய பெயரும் சிலகாலம் வழங்கப்பெற்று பின்னர் அது வழக்கற்றுப் போயிற்று. உத்தரமேரூரின் பெயரும் இராஜேந்திர சோழ சதுர்வேதி மங்கலம் என மாறியதைக் கண்டோம். இந்தப் பெயர் மாற்றம் இராஜேந்திர சோழனின் நான்காவது ஆட்சியாண்டில் அதாவது 1016ல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து இக்கோயில் வழிபாடு செய்வதற்காக நான்கு வைகானஸர்கள் அமர்த்தப்பட்டனர். இவர்கள் அரசாணிமங்கலத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்து இக்கோயிலுக்கு மாற்றப்பட்டு, இங்கு வழிபட பங்குக்கள் கொடுக்கப்பட்டன. இதிலிருந்து இக்கோயிலில் வைகாஸனர்களே பூஜை செய்தனர் என்று அறிகிறோம். இன்றும் வைகானஸப் பிரிவினரே பூஜை செய்கிறார்கள் என்பது குறிக்கத்தக்கது. இராஜேந்திரன் காலத்தில் 1017ல், இக்கோயிலில் இருந்த கிருஷ்ணப் பெருமானுக்கு பூஜைக்கும், நைவேத்யத்துக்கும், திருவிழாக்களுக்கும், நிலம் தானம் அளிக்கப்பட்டது. இவற்றை ஸ்ரீ கிருஷ்ணகணப் பெருமக்களே மேற்பார்வையிட வேண்டும் என விதிக்கப்பட்டது. இக்கோயிலில் இராமபிரானுக்கு சிறப்பாக வழிபாடு நடந்ததைப் போலவே கண்ணபிரானுக்கும் சிறப்பாக பூஜை திருவிழாக்கள் நடைபெற்றன. இதே சோழ மன்னன் காலத்தில் கி.பி.1031ல் இவ்வூரில் 2240 குழி நிலம் தரிசாக இருந்தது. இவற்றிலிருந்து எவ்வித வரியும் வரவில்லை. ஆதலின் ஊர்ச்சபையார் இந்நிலங்களை தாங்களே மேற்கொண்டனர். இவற்றை வரி ஏதுமில்லாமல் கோயிலுக்கே கொடுத்து விட்டனர். இந்நிலங்களைத் திருத்தி இவற்றின் வருவாயைக் கொண்டு கோயிலின் மூன்று சந்நிதிகளில் பூஜைக்கும், நான்கு அயனங்களில் சிறப்பு வழிபாட்டுக்கும், கிரஹண காலங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் இக்கோயிலில் மேல் தளத்தில் உள்ள அனந்தசயனப் பெருமாளுக்கு பூஜைக்கும் விளக்குக்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் இக்கோயிலில் காலையிலும் மாலையிலும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாட மூவர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஊதியங்களுக்கும் இதைப் பயன்படுத்த வேண்டும். இதிலேயே மற்றொரு தானம் இக்கோயிலில் இருந்த ஸ்ரீ ராகவதேவருக்கு சிறப்பு பூஜைக்கும் பயன்படுத்த வேண்டும் என ஊர்ச்சபையார் விதித்தனர். இராஜேந்திர சோழனின் ஆட்சியில் 1042ல், இக்கோயிலுக்கு ஒரு நந்தவனம் அமைக்கவும் குந்தவை ஆழ்வார் பெயரில் ஒரு மடம் ஏற்படுத்தவும் அம்மடத்தில் ஸ்ரீ வைணவர்களுக்கு உணவு அளிக்கவும் நிலம் கொடுக்கப்பட்டது. கோயில்களை ஒட்டி மடம் அமைத்து அதில் வைணவர்களுைக்கு உணவளிப்பது தொன்று தொட்டு வரும் ஒரு மரபாகும். 1038ல் இராஜேந்திரனின் ஆட்சியில் ஊர்ச்சபையார் இக்கோயிலுக்கு நிலமளித்தார். அந்நிலத்தின் வருவாய் கொண்டு இரண்டு பணிகள் செய்ய பணித்தனர். ஒன்று நாள்தோறும் இக்கோயிலில் மூவர் திருவாய் மொழி விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதே போல நாள்தோறும் வாஜஸனேய வேதம் ஓதவும் ஏற்பாடாயிற்று. இதிலிருந்து திருவாய்மொழி ஓதவும், வேதம் ஓதவும் இரண்டு மகா நிலம் அளித்துள்ளது. வேதத்தையும் திருவாய்மொழியையும் சமமாக பாவித்தனர் என அறிய முடிகிறது. இராஜேந்திர சோழன் ஆட்சியிலேயே இரண்டு முறை திருவாய்மொழி விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது குறித்துக் கொள்ளத்தக்கது. இக்கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்க சோழனின் காலச் சான்றும் சிறப்பு மிக்கதே. சோழவிச்சாதர பல்லவரையன் என்பவன் இவ்வூரில் 30 பாடகம் நிலம் வாங்கினான். இந்நிலம் 60-70 ஆண்டுகளாக விளைச்சலின்றி தரிசாகக் கிடந்தது. கோயிலை ஒட்டி ஒரு மடம் அமைத்து அதன் செலவுகளுக்காக கொடுத்தான். அத்துடன் திருமழிசை வள்ளல் என்பவரும் வீற்றிருந்தான் தாசன் என்பவரும் பணம் கொடுத்தனர். அவர்களது பணம் கொண்டு ஒரு மனை வாங்கப்பட்டது. இதில் அருளாளாசன் மடம் என்று ஒரு மடம் வைக்கப்பட்டது. அந்நிலத்தின் வருவாயைக் கொண்டு இம்மடத்தை நடத்த ஏற்பாடாயிற்று. அந்நிலத்துக்கு வாங்கி அளித்தவர் பெயரால் சோழ விச்சாதர விளாகம் எனப் பெயர் வைக்கப்பட்டது. அந்நிலத்துக்கு நிலம் வாங்கிய ஆண்டு வரி விலக்கும் கொடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐந்து காசு வரிகட்ட வேண்டும். நிலத்தைப் பண்படுத்த முதலாண்டு வரி விலக்களித்து ஊக்கமளித்து அடுத்த ஆண்டு முதல் வரிவிதிக்கும் முறை, அக்காலத்து வேளாண் - வரலாற்றை அறிய முடிகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் இரண்டு செய்திகள் இங்கு இடம் பெற்றுள்ளன. 38வது வருடம் இக்கோயிலில் நாட்டியமாடும் ஒரு பெண் ஆயிரத்து இருநூற்றுவ மாணிக்கம் என்பது அவளது பெயர். அவள் இக்கோயிலின் பிரகாரத்தையும் முன் மண்டபத்தையும் பிற சில கட்டிடங்களையும் கட்டினான். அவளது பணியையும் பக்தியையும் பாராட்டி, ஊரார் கோயில் தானத்தாரின் அனுமதியுடன் தினந்தோறும் பெருமாளுக்கு படைக்கப்படும் நைவேத்யத்திலிருந்து ஒரு குறுணி, திருவமுதை, இவளுக்கும் இவள் வம்சத்தாருக்கும் அளிக்க ஏற்பாடு செய்தனர். நாட்டியப் பெண்கள் கோயில்களுக்கு எவ்வளவு திருப்பணி செய்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு இவனுக்கு அடுத்து வந்த மூன்றாம் இராஜராஜனது காலத்தில் இப்பெண் இக்கோயிலுக்கு மேலும் சில திருப்பணிகள் செய்தாள். அதையும் மெச்சி ஊரார் இவளுக்கு சில சலுகைகளை அளித்தனர். விக்ரம் சோழனின் 11ம் ஆண்டில், ஆடி மாதம் தோறும் வெள்ளைமூர்த்தி ஆழ்வாரின் திருவிழாவில் சொக்கப் பெருமாள் உலா வரும்போது அபிஷேகத்துக்கும் அமுதுபடி சாத்து படிகளுக்கும், அழகிய தேவன் என்பவன் நிலம் அளித்தான். இக்கல்வெட்டில், வெள்ளைமூர்த்தி ஆழ்வார் கோயிலில் திருவிழா எழுந்தருளும் சொக்கப்பெருமாள் என்பதால் வெள்ளைமூர்த்தி ஆழ்வார் என்பது மூலவர் பெயராகவும், சொக்கர் என்பது உத்ஸவர் பெயராகவும் காணப்பெறுகின்றன. மதுரையில் சொக்கநாதர் என்பது சுந்தரேசுரர் என அழைக்கப்படுவது நாம் அறிந்ததே அது போல. சொக்கப் பெருமாள் என்பதே சுந்தரவரதர் எனும் பெயரின் பிரதிபலிப்பு எனலாம். பின்னர் வந்த பிற்கால பாண்டியன் வீரபாண்டியன் காலத்தில், இக்கோயில் சொக்கப் பெருமாள் கோயில் என் அழைக்கப்பட்டது. சொக்கப்பெருமாள் கோயிலைச் சுற்றி வசிக்கும் வணிகர்கள், கேதாரீசுரர் , கோயிலைச் சுற்றி வசிக்கும் வணிகர்களைப் போல செக்குகளுக்கும், எண்ணைக்கும் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என உத்தரவு இடப்பட்டது. 12ம் நூற்றாண்டிலிருந்து கோயில் சொக்கப் பெருமாள் கோயில் என மக்கள் வழக்கில் வந்துள்ளமை காணலாம். தெலுங்கு சோழ மன்னன் விஜயகண்ட கோபாலன் என்பவன் காலத்திலும் இங்கு உத்ஸவர் சிறப்பிடம் பெற்றிருக்கிறார். ஆதலின் சொக்கப் பெருமாளுக்கு ஓர் ஊர் அளிக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசன் கிருஷண் தேவராயன் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்தான் என்று கண்டோம். அவனது கல்வெட்டும் இக்கோயிலில் உள்ளது. அது பாதியிலேயே நின்று போய் காணப்படுகிறது. முற்றிலும் எழுதப்படவில்லை .
சிற்பங்கள் நடுத்தளத்தில் கிழக்கு நோக்கி பெருமிதமாக அமர்ந்திருக்கும் பெருமான் - வைகுந்த வரதர் என அழைக்கப்படுகிறார். இது தவிர, இத்தளத்திலும் தெற்கு, மேற்கு, வடக்கு என திக்குக்கு ஒன்றாக கருவறைகள் உள்ளன. தெற்கு நோக்கிய கருவறையில் கிருஷ்ணனும் அர்ச்சுணனும் நரநாராயணர்களாக அமர்ந்து விளங்குகின்றனர். மேற்கு நோக்கி நரசிம்ம பெருமானும், வடக்கு நோக்கி பூவராக மூர்த்தியும் அமர்ந்து விளங்குகின்றனர். மேல் தளத்தில் அனந்தசயனம் கொண்டாராக திருமால் படுத்த திருக்கோலம். ஆக கீழ்தளத்தில் நான்கு , நடுத்தளத்தில் நான்கு , மேல் தளத்தில் ஒன்று என மொத்தம் திருமாலின் ஒன்பது மூர்த்தங்கள் உள்ளன. ஒன்பது மூர்த்தங்கள் உள்ளத்தை நவமூர்த்தி பிரதிஷ்டை என அழைப்பர். இக்கோயிலில் வைணவ மரபில் வைகானஸப் பிரிவில் மரீசி சம்ஹிதை என்ற நூலைப் பின்பற்றி வழிபாடு நடைபெறுகிறது. இந்த அமைப்புத் தவிர கீழ்தளத்தில் தெற்கு மேற்கு வடக்கு திக்குகளில் உள்ள கருவறைக்கு ஏறிச் செல்லப் படிகள் உள்ளன. அவற்றின் கைப்பிடிச் சுவர்கள் உள்ளன. தெற்கு கைப்பிடிச் சுவரில் சரஸ்வதியின் உருவம் உள்ளது. இவ்வுருவம் ஒரு சிறப்புடையது. இதைப் பார்த்தால் கஜலக்ஷ்மி போல் இருக்கும். இரண்டு புறங்களில் யானைகள் நின்று இத்தேவியின் மீது கலசங்களால் அபிஷேகம் செய்வது போல் இருக்கிறது. இது மேலெழுந்த வாரியாக பார்த்தால் கஜலக்ஷ்மி என்று கூறி விடுவோம். ஆனால் இத்தேவியின் மேலிரு கரங்களில் கலசமும் அக்கமாலையும் உள்ளன. இடது கரத்தில் புத்தகம் இருக்கிறது. வலது கரம் அபய ஹஸ்தமாகக் காணப்படுகிறது. இது சரஸ்வதியின் சிலை என்பதில் ஐயமில்லை . மரீசி சம்ஹிதை இந்த இடத்தில் சரஸ்வதி இருக்க வேண்டும் என்று கூறுகிறது. சரஸ்வதியை வாக்தேவி என்று அந்நூல் குறிக்கிறது. மேற்குப்புறப் படிச் சுவற்றில் இரதியும் மன்மதனும் நிற்கின்றனர். மன்மதன் எனக் காட்ட அவனுக்கருகில் மகரக் கொடி உள்ளது. மறுபுறம் கரும்பு வில்லும் மலர்களால் ஆன ஐங்கணைகளும் உள்ளன. வடபுறப் படிக்கட்டின் கைச்சுவற்றில் பிருகு மகரிஷி அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இக்கோயிலில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் மரீசி சம்ஹிதையில் கூறியுள்ளபடியே உள்ளன. இதன் விமானத்தில் தென்புறம், தக்ஷிணாமூர்த்தி, சந்திரசேகரர், உமா மகேசுரர், துர்க்கை , கணபதி ஆகிய சைவ உருவங்கள் உள்ளன. பிற திசைகளில் திருமால் கோலங்கள் உள்ளன.
தலத்தின் சிறப்பு 1100 ஆண்டுகள் பழமையானது. சோழர் காலக் கற்றளி.
உத்தரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயிலின் முன் மண்டபம் பிரகாரம் முதலியவை மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டன. எட்டாம் நூற்றாண்டில் முதன் முதலில் இக்கோயில் கட்டப்பட்ட போது இதன் அடிப்பகுதி மட்டும் கருங்கல்லால் கட்டப்பட்டது. மேல் பகுதி முழுவதும் செங்கல்லால் கட்டப்பட்டது. கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்களை உடையதாகக் கட்டப்பட்ட கோயில் இது. அதாவது ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று கர்ப்பக்கிருஹத்தை உடையதாக கட்டப்பட்ட கோயில் இது. பெருமாள் இக்கோயிலில் கிழக்குத் திருமுக மண்டலம் சாதிக்கிறார். கீழ்தளத்தில் நின்ற திருக்கோலமும், நடுத்தளத்தில் அமர்ந்த திருக்கோலமும். மேல்தளத்தில் கிடந்த திருக்கோலமுமாக விளங்குகிறார். கீழ்தளத்தில், கிழக்கு நோக்கிய கருவறையைத் தவிர, தெற்கிலும், மேற்கிலும், வடக்கிலுமாக மூன்று கருவறைகள் உள்ளன. ஆக நான்கு திக்குகளிலும், திக்குக்கு ஒன்றாக நான்கு கருவறைகள் உள்ளன. நான்கிலும் நின்ற நிலையில் திருமால் உருவங்கள் உள்ளன. கிழக்கு நோக்கிய திருமாலை இக்காலத்தில் சுந்தர வரதர் என்றும், தென்மேற்கு நோக்கியதை அச்சுத வரதர் என்றும், மேற்கு நோக்கியதை அநிருத்த வரதர் என்றும், வடக்கு நோக்கியதை கல்யாண வரதர் என்றும் கூறுகின்றனர். இவை நான்கையும் வைணவ மரபில் திருமாலின் நான்கு வ்யூகங்கள் என்று அழைப்பர்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் வைகுண்டப் பெருமாள் கோயில் குடவோலை கல்வெட்டு மகாமண்டபம்
செல்லும் வழி போளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. உத்திரமேரூருக்கு வடக்கே காஞ்சிபுரம் 28 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் அமைந்த தொடருந்து நிலையம் 26 கிமீ தொலைவில் உள்ள செங்கல்பட்டு ஆகும். இதன் மேற்கில் வந்தவாசி25 கிமீ மற்றும் ஆரணி 69 கிமீ தொலைவிலும், செய்யார் 32கி.மீ தொலைவிலும், தெற்கில் மதுராந்தகம் 26 கிமீ தொலைவில் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம்
உத்தரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் உத்தரமேரூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை மீனம்பாக்கம்
தங்கும் வசதி காஞ்சிபுரம் நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 141
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்