வழிபாட்டுத் தலம்
விட்டலர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் விட்டலர் கோயில்
வேறு பெயர்கள் விட்டலர் கோயில்
ஊர் விட்டலாபுரம்
வட்டம் செங்கல்பட்டு
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் விட்டலர்
காலம் / ஆட்சியாளர் கி.பி.16-ஆம் நூற்றாண்டு / கிருஷ்ண தேவராயர்
கல்வெட்டு / செப்பேடு இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை 111/1933, 119/1932-33, 118/32-33 -இல் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்-2 என்னும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள நூலில் இக்கோயில் கல்வெட்டுகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. விட்டலேசுவரர் கோயில் மண்டப வடக்கு ஜகதியில் உள்ள கல்வெட்டொன்று, கிருஷ்ணதேவராயர் ஆட்சியின் போது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து முகந்தனூர் நாட்டுத் திருக்கழுக்குன்ற பற்று பேரம்பாக்கத்துச் சீமையாநன ஜனநாத நல்லூரான வைப்பாக்கம் விட்டலாபுரத்திலிருக்கும் சுரகொண்டய தேவ சோழ மகாராசனான குலசேகரய்யன் விட்டலாபுரம் என்ற ஊரை உருவாக்கி விட்டலேஸ்வரன் கோயிலுக்குத் திருவாராதனை, திருப்பணி, அங்கரங்க வைபோகத்திற்காக நிலம் அளித்துள்ளான். நிலத்தின் நாற்புற எல்லைகளைக் குறிப்பிடும்போது புதுப்பட்டினம், ஆலங்குப்பம், நாரணப்பையன் குப்பம், வைப்பாக்கம் ஆகியவை கூறப்படுகின்றன. இக்கோயிலின் மகாமண்டபத் தெற்குக் குமுதப்படையில் உள்ள மற்றொரு கல்வெட்டில், விஜயநகர மன்னன் சதாசிவராயன் காலத்தில் இராமராசய்யன் ஆணைக்கிணங்க உய்யால நல்லதிம்மநாயகன், வாலுநாயகன், அண்ணாப்பிள்ளை நாயகன் ஆகியோர் தங்களுடைய தாய் தந்தையரின் நலனுக்காக விட்டலாபுரம் விட்டலேசுவரருக்கு திருத்தேர், திருநாள் வழிபாடு மற்றும் திருப்பணிகளுக்காக வெங்கம்பாக்கம், குன்றத்தூர், குழிநாவலகத்தி, மேலைப்புன்னப்பட்டு ஆகிய ஊர்களைக் கொடையாக அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. மகாமண்டபத் தெற்கு ஜகதியில் உள்ள கல்வெட்டொன்று, விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட விட்டலாபுரத்தில் விட்டலேஸ்வரர் கோயிலுக்கு அம்மரபில் வந்த சீரங்கதேவன் ஆட்சியின் போது காங்கேயநல்லூரும் கற்காட்டுச்சேரியும் போச்சுரங்க பதிதேவ மகாராசய்யன் புண்யமாக அவரால் அளிக்கப்பட்டுள்ளது. இக்கொடை மன்னன் சீரங்க தேவனின் அனுமதியுடன் வழங்கப்பட்டது என்று கூறுகிறது. வைணவ குரு பரம்பரையில் இடம் பெறும் பிள்ளைலோகாச்சாரியர் ஜீயருடைய சிஷ்யர்கள் தங்கள் பணிக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கிய செய்தி விட்டலேசுவர் கோயில் திருச்சுற்றில் வடமேற்கு மூலையில் உள்ள இராமானுஜ மண்டபம் நிலைப்படியில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள மற்றொரு கல்வெட்டு, கோயில் கொடிக்கம்ப அடிநிலை கிழக்குப்புறக் கம்பையில் உள்ளது. கோயில் கொடிக்கம்பத்தை எப்போதும் பேணும் பணியை மேற்கொண்டவர் முத்தி என்பவராவார். இவர் செல்வன் என்பானுடைய மகள்.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் விட்டலர் பேரளவில் நின்ற நிலையில் உள்ளார். இச்சிற்பம் பழமையானது.
தலத்தின் சிறப்பு 400 ஆண்டுகள் பழமையானது. விஜயநகரக் கால கட்டடக்கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.
சுருக்கம்
விட்டலர் கோயில் கருவறையில் விட்டலரின்திருமேனி நின்ற கோலத்தில் இடது கையில் சங்கு ஏந்தியும், வலது கையில் அபய முத்திரைத் தாங்கியும் காட்சியளிக்கின்றது. திருமாலின் பத்து அவதாரங்களுள் கிருஷ்ணாவதாரமும் ஒன்றாகும். கிருஷ்ணனின் மற்றொரு வடிவம் “விட்டலர்“ எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. விட்டலர் விஜயநகர மன்னர்களின் குலதெய்வமாகக் கருதப்படுகிறார். விட்டலருக்காக எடுக்கப்பட்ட தனிக்கோயில் தமிழகத்தில் இது ஒன்றேயாகும். இக்கோயிலில் தாயாருக்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது. கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், திருச்சுற்று மதில், கோபுர வாயில் ஆகிய பல்வேறு பகுதிகளுடன் பாங்குற அமைந்துள்ளது.
விட்டலர் கோயில்
கோயிலின் அமைப்பு சுதையாலான தற்போது புனரமைக்கப்பட்ட மூன்று தள விமானத்தைக் கொண்டுள்ளது. கருவறையில் விட்டலர் நின்ற நிலையில் உள்ளார். கருவறை சதுரவடிவில் உள்ளது. மகாமண்டபமும், முகமண்டபமும் விஜயநகரர் காலத்து கலைப்பாணியில் அமைந்த தூண்களுடன் அமைந்துள்ளது. இக்கோயிலில் தாயார் சந்நிதியும் தனியாக அமைந்துள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் சிவன்கூடல், இடையார்பாக்கம் சிவன்கோயில், சிவபுரம்
செல்லும் வழி சென்னை - பாண்டிச்சேரி சாலையில், சென்னையிலிருந்து 75கி.மீ. தொலைவில் செங்கல்பட்டு வட்டத்தில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
விட்டலர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் செங்கல்பட்டு
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, சென்னை விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 44
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்