Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு சிவபுரம் சிவன் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு சிவபுரம் சிவன் கோயில்
வேறு பெயர்கள் இராஜராஜீஸ்வரமுடைய மகாதேவர்
ஊர் சிவபுரம்
வட்டம் திருப்பெரும்புதூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் இராஜராஜீஸ்வரமுடைய மகாதேவர்
காலம் / ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜராஜ சோழன்
கல்வெட்டு / செப்பேடு கல்வெட்டுகள் உள்ளன.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறை தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் முறையே தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் அண்ணாமலையார், வடக்கில் பிரம்மன் அமைக்கப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் நந்தி மண்டபத்தில் சிறிய நந்தி சிற்பம் அமைந்துள்ளது. திருச்சுற்றின் பரிவாரத் தெய்வங்களாக தென்மேற்கில் கன்னிமூலை கணபதியும், வடமேற்கில் சண்டேசுவரரும் உள்ளனர். கோபுரங்கள் இங்கு இல்லை. சோழர்கால உருளைத்தூண்கள் முகமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன.
தலத்தின் சிறப்பு 1000 ஆண்டுகள் பழமையானது. முதலாம் இராஜராஜ சோழன் கால கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது. சிவபுரம் சோழர்காலத்தில் உரோகடம் என்றழைக்கப்பட்டுள்ளது.
சுருக்கம்
காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் சுங்குவார் சத்திரம் செல்லும் வழியில் சிவபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. சிவபுரம் சோழர்கள் காலத்தில் உரோகடம் என்றழைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தாங்குதளம் முதல் கலசம் வரை முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றளியாகும். ஒரு தள விமானத்தைக் கொண்டுள்ள இக்கற்றளி வேசர பாணியில் அமைந்துள்ளது. இக்கோயில் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டின் மூலம் அறியலாம். இங்குள்ள இறைவனை இராஜராஜீஸ்வரமுடைய மகாதேவர் என்று இக்கோயில் கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது. கூவம் ஆற்றிலிருந்து ஒரு கால்வாய் தோண்டி இக்கோயிலின் பயன்பாட்டிற்காக நீர் கொண்டு வரப்பட்ட செய்தியை இங்குள்ள ஒரு கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. சதுர வடிவ கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். கருவறையைத் தொடர்ந்து தென்வடலாக நீண்ட அர்த்தமண்டபமும், அதனைத் தொடர்ந்து சோழர்காலத் தூண்களுடன் விளங்கும் முகமண்டமும் அமைந்துள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுற்றின் சுவர்களில் அமைந்துள்ள தேவகோட்டங்களில் முறையே தெற்கில் தென்முகக்கடவுளான ஆலமர்ச் செல்வனும், மேற்கே அண்ணாமலையராகிய இலிங்கோத்பவரும், வடக்கில் நான்முகனான பிரம்மனும் காட்சியளிக்கின்றனர். அர்த்தமண்டப வெளிப்புறச் சுவர் கோட்டங்களில் தெற்கில் விநாயகரும், வடக்கில் விஷ்ணு துர்க்கை நின்ற நிலையிலும் அருள்பாலிக்கின்றனர். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயில் மரபுச்சின்னமாக விளங்குகிறது. நித்திய பூஜைகள் ஊர்மக்களால் நடத்தப்பெறுகின்றன. பிரதோஷம், சனிப்பிரதோஷம், மகாசிவராத்திரி முதலிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
அருள்மிகு சிவபுரம் சிவன் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் சோழர்கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. வேசரபாணியில் அமைந்துள்ளது. கருவறை திருமுன்னில் சோழர்கால வாயிற்காவலர்கள் காட்டப்பட்டுள்ளனர். இலிங்கவடிவில் இறைவன் காட்சியளிக்கிறார்.
பாதுகாக்கும் நிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் சிவன்கூடல், இடையார்பாக்கம் சிவன்கோயில்
செல்லும் வழி சென்னையிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லலாம். செங்கல்பட்டு இரயில் நிலையத்திலிருந்தும் காஞ்சிபுரம் செல்லலாம். அங்கிருந்து 25கி.மீ. பேருந்தில் சிவபுரம் செல்லலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
அருள்மிகு சிவபுரம் சிவன் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் சிவபுரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி காஞ்சிபுரம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் மதுரை கோ.சசிகலா
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 74
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்