Back
வழிபாட்டுத் தலம்
திருவிற்கோலம் திரிபுராந்தகேசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருவிற்கோலம் திரிபுராந்தகேசுவரர் கோயில்
வேறு பெயர்கள் கூவரம், திருவிற்கோலம்
ஊர் கூவம்
வட்டம் திருவள்ளூர்
மாவட்டம் திருவள்ளூர்
தொலைபேசி 9443253325
உட்பிரிவு 1
தாயார் / அம்மன் பெயர் திரிபுராந்தகி, திரிபுரசுந்தரி
தலமரம் வில்வம்
திருக்குளம் / ஆறு அச்சிறுகேணி. கூவாக்கினி
ஆகமம் சிவாகமம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், ஆடியில் அம்மனுக்கு 10 நாட்கள் “பூ பாவாடை’ திருவிழா, சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம்.
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள்
கல்வெட்டு / செப்பேடு இக்கோயில் கிபி 7 ஆம் நூற்றாண்டில் செங்கற்கோயிலாகவும் ,கிபி 1055 ல் கற்றளி கோயிலாகவும் நகரத்தாரால் திருப்பணி செய்யப்பெற்ற கோயிலாகவும் விளங்குகிறது என இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன .இரண்டாம் ராஜேந்திரன் ,ராஜராஜ சோழன் ,மூன்றாம் ராஜராஜ சோழன் ,வீரக்கண்ட கோபாலன் ,விஜயகண்டகோபாலன் ,முதலாம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் இக்கோயிலின் நிர்வாக செலவிற்காக நிலங்களையும் காசுகளையும் தானமாக அளித்துள்ளார்கள் என்று இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன .
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் தேவகோட்டங்களில் அண்ணாமலையார், நான்முகன் மற்றும் அர்த்தமண்டப புறக் கோட்டங்களில் விநாயகர் மற்றும் துர்க்கை ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகர், தென்முகக் கடவுள் ஆகிய திருவுருவச் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. இறைவன் கருவறை விமானத்தின் தேவகோட்டத்தில் உள்ள அண்ணாமலையார் சிற்பம் கலையழகுடன் காட்சியளிக்கிறது.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.
சுருக்கம்
கூவம் திரிபுராந்தகர் என்பது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். கூவம் என்ற பெயரில் தற்போது அறியப்படும் இத்தலம் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து சுமார் 50 கி.மி. தொலைவில் இருக்கிறது. இத்தலத்தின் அருகே தான் கூவம் ஆறு உற்பத்தியாகிறது. இறைவன், மேருமலையை வில்லாகக் கையில் பிடித்த கோலம் = திரு + வில் + கோலம் - இதுவே தலத்தின் பெயராயிற்று. இவ்வூருக்குக் 'கூபாக்னபுரி ' என்றும் பெயர் சொல்வதோடு, கோயிலுக்கு எதிரில் உள்ள நிலங்களும் 'குமாரவட்டம் ' என்று முருகன் பெயராலேயே வழங்கப்படுகிறது. திரிபுராந்தக வதத்திற்கு சென்ற சிவன் என்பதால் இறைவன் இத்தலத்தில் “திரிபுராந்தகர்’ என்றும், உடனுறையும் அம்மன் “திரிபுராந்தகி அம்மன்’ என்றும் பெயர் பெற்றுள்ளனர். சக்கர அச்சு முறிந்து நின்றபோது, போருக்கு கையில் வில்லுடன் சென்ற சிவன், தேரில் இருந்து இறங்கி கையில் வில் ஏந்திய கோலத்திலேயே இங்கு நின்றார். எனவே, இங்குள்ள சிவனுக்கு “திருவிற்கோலநாதர்’ என்றும், தலத்திற்கு “திருவிற்கோலம்’ என்றும் பெயர் உள்ளது. சித்திரையில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் போது மட்டும் சுவாமி வில்லை ஏந்தியபடி காட்சி தருகிறார்.
திருவிற்கோலம் திரிபுராந்தகேசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு தெற்கு திசையிலுள்ள ஐந்து நிலை இராஜகோபுரம் தான் இத்திருக்கோயிலின் பிரதான நுழைவாயிலாகும். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வெளித்திருச்சுற்றில் உள்ள வாயில் வழியாக இறைவி மற்றும் இறைவன் கருவறைகள் உள்ள பகுதிக்குள் செல்லலாம். முதலில் இறைவி திரிபுரசுந்தரி கருவறை விமானமும், அதையடுத்து திரிபுராந்தக சுவாமி கருவறையும் கிழக்கு நோக்கு அமைந்துள்ளன. இறைவன் திருமுன் விமானம் தூங்கானை மாடக் கோயிலாகும். இரண்டு கருவறை விமானங்களையும் சேர்த்து வலம் வர ஒரு திருச்சுற்று உள்ளது. கருவறை உட்சுற்றின் தென்மேற்கு மூலையில் அச்சிறுத்த விநாயகர் திருமுன் அமைந்திருக்கிறது. இறைவன் மற்றும் இறைவி திருமுன்களுக்கு தனித்தனியே கொடிமரம், பலிபீடம் இருக்கின்றன. இறைவன் திருமுன் நுழைவாயிலுக்கு முன் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் திரிபுராதிகள் மூவருள் இருவர் இவர்கள் என்று சொல்லப்படுகிறது. சுவாமி திருமுன் நுழை வாயிலுக்கு முன் வலதுபுறம் தெற்கு நோக்கிய நடராஜர் திருமுன் உள்ளது. வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகர், தென்முகக் கடவுள் ஆகிய திருவுருவச் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. இறைவன் கருவறை விமானத்தின் தேவகோட்டத்தில் உள்ள அண்ணாமலையார் சிற்பம் கலையழகுடன் காட்சியளிக்கிறது. திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைவதும், நான்முகன் அன்னப் பறவை உருவில் தீ வடிவான உருவமான சிவபெருமானின் முடியைக் காண முயலுவதும் இலிங்கோத்பவர் சிற்பத்தில் காணலாம். அருகில் பாலமுருகன் திருமுன்னும் அடுத்து மீனாட்சி சுந்தரேசுவரர் திருமுன்னும் உள்ளன. துர்க்கை திருமுன்னுக்கு எதிரில் சந்தன மேடை உள்ளது. இதில் அரைத்த சந்தனம் இறைவனுக்கு சார்த்தப்படுகிறது.நவக்கிரக திருமுன் வடக்கு வெளிச்சுற்றின் வடகிழக்கு மூலையில் உள்ளது. இறைவி தனி கருவறை விமானம் கொண்டு இறைவனின் வலது புறத்தில் வீற்றியிருக்கிறார் . அம்மன் சிற்பத்தின் முன் ஸ்ரீ சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுரத்திற்கு எதிரே காத்தல் தாண்டவம் ஆடிய நடராஜர் தனிசன்னதியில் உள்ளார் . அருகில் உள்ள திருவாலங்காட்டில் நடராசருடன் தோல்வியுற்ற காளி கோபமாக இருந்தார். அவரை இக்கோயிலில் காத்தல் தாண்டவ நடனம் ஆடி சாந்தமாக்கினார். இங்கு அவர் ‘தர்க்க மாதா ‘ என்ற பெயரில் தனியாக உள்ளார்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் சிங்கீசுவரர் கோயில், தெய்வநாதேசுவரர் கோயில், இடையார்பாக்கம் மகாதேவர் கோயில்
செல்லும் வழி  சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம செல்லும் பேருந்து கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக கூவம் செல்கிறது. கூவம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 1கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சியிலிருந்து சுங்குவார்சத்திரம் வழியாகத் திருவள்ளூர் செல்லும் பாதையிலும் சென்று கூவம் கூட்ரோடில் இறங்கிச் செல்லலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6 .00 -12 .00 வரை, மாலை 5 .00 -8 .00 வரை
திருவிற்கோலம் திரிபுராந்தகேசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் கூவம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் கடம்பத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம் மீனம்பாக்கம்
தங்கும் வசதி திருவள்ளூர் நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 23
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்