Back
வழிபாட்டுத் தலம்
திருக்கழுக்குன்றம் பக்தவத்சலேசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருக்கழுக்குன்றம் பக்தவத்சலேசுவரர் கோயில்
வேறு பெயர்கள் வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம், வேதகிரி
ஊர் திருக்கழுக்குன்றம்
வட்டம் செங்கல்பட்டு
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் பக்தவத்சலேஸ்வரர்
தாயார் / அம்மன் பெயர் திரிபுரசுந்தரி
தலமரம் வாழை
திருக்குளம் / ஆறு சங்கு தீர்த்தம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் சித்திரைப் பெருவிழா
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர்
கல்வெட்டு / செப்பேடு கல்வெட்டில் இத்தலம் ‘உலகளந்த சோழபுரம்’ என்று குறிப்பிடப்படுகிறது. தொண்டை நாட்டுக்குரிய 24 கோட்டங்களுள் இது களத்தூர்க் கோட்டத்தைச் சார்ந்தது. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
சுவரோவியங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
சுருக்கம்
தொண்டை நாட்டுத் தலம். வேதமே, மலையாய் இருத்தலின் ‘வேதகிரி’ எனப் பெயர் பெற்றது. வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோயில் உள்ளது. ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில் தாழக்கோயில் என்றழைக்கப் படுகின்றன. மலை 500 அடி உயரமுள்ளது. மலையில் நாடொறும் உச்சிப்போதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்குப் ‘பட்சி தீர்த்தம்’ என்று பெயர். மலைமீது உள்ள கோயிலில் வீற்றிருந்தருளும் இறைவன் -வேதகிரீஸ்வரர் (சுயம்பு மூர்த்தி), இறைவி - சொக்கநாயகி. சுனை ஒன்றும் உள்ளது. மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். வடநாட்டிலிருந்து வரும் யாத்ரிகர்களுக்குப் ‘பட்சி தீர்த்தம்’ என்று சொன்னால்தான் புரியும். மலைமீது ஏறிச்செல்ல நன்கமைக்கப்பட்ட மலைப்பாதை - செம்மையான படிகளுடன் உள்ளது. இம்மலையை வலம் வருதல் சிறப்புடையது. வலம் வருவதற்கேற்ப நல்ல பாதையுள்ளது. விளக்கு வசதிகள் உள்ளன. இதைச் சேர்ந்த கிராமங்கள் சுற்றிலும் உள்ளன. அன்னக்காவடி விநாயகர், சனிபகவான் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, இம்மலையை வலம் வரின் உடற்பிணி நீங்கும். இதைச்சில மருத்துவர்களே மேற்கொண்டு அனுபவத்தில் உணர்ந்துள்ளனர். மூவர் பாடலும் பெற்ற தலம். மணிவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம். அப்பெருமான் வாக்கிலும் -திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. இத்தலத்திற்கு அந்தகக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது. ஊருக்குள் உள்ள கோயில் ‘தாழக்கோயில்’ என்றழைக்கப் படுகின்றது. கோயிலின் சந்நிதி வீதியில் திருவாவடுதுறை ஆதீனக்கிளை மடம் ஒன்றுள்ளது.
திருக்கழுக்குன்றம் பக்தவத்சலேசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு மிகப் பழமையான கோயில். நாற்புறமும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன - கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம். கோயிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சந்நிதிக்கு நேர் எதிரில் வீதியின் கோடியில் மிக்க புகழுடைய ‘சங்கு தீர்த்தம்’ உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இதிற்கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. இக்குளத்திற்குச் சற்றுத் தொலைவில் ‘ருத்ரகோடி’ என்னும் பெயர் பெற்ற வைப்புத் தலம் உள்ளது. தாழக்கோயில் கிழக்குக் கோபுரம் ஏழு நிலைகளையுடையது. உச்சியில் நவ கலசங்கள். கோபுரத்தில் சிற்பங்களில்லை. விநாயகரும் சுப்பிரமணியரும் இருபுறமும் உள்ளனர். கருங்கல்லில் அமைந்துள்ள துவாரபாலகர்கள் உருவங்கள் அழகுடையவை. கிழக்குக் கோபுர வாயில் வழியே உட்புகுந்தால் வலப்பால் மண்டபத்தில் அலுவலகம் உள்ளது. இடப்பால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் பக்கமாகத் திரும்பி வெளிப் பிரகாரத்தை வலம் வரும் போது, விநாயகர் சந்நிதி, ஆமை மண்டபம் முதலியன உள்ளன. இம்மண்டபத் தூண்கள் கலையழகு மிக்கவை. வடக்கு வாயிலை அடுத்து வரும்போது ‘நந்தி தீர்த்தம்’ உள்ளது. கரையில் நந்தி உள்ளது. வலமாக வரும்போது அலுவலக மண்டபக் கற்சுவரில், (நமக்கு இடப்பால்) அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது. இதன் கலையழகு கண்டுணரத்தக்கது. நான்கு கால் மண்டபம். ஒருபுறம் துவார விநாயகர், மறுபுறம் சுப்பிரமணியர். இருவரையும் வணங்கி, ஐந்து நிலைகளையுடைய உள் கோபுரத்துள் நுழைகிறோம். இக்கோபுரம் வண்ணக்கோபுரமாகச் சிற்பங்களுடன் காட்சி தருகிறது. நுழையும்போது, வாயிலில் இடப்பால் ‘அநுக்கிரக நந்திகேஸ்வரர்’ தேவியுடன் காட்சி தருகின்றார். உள் நுழைந்து வலமாகப் பிராகாரத்தில் வரும்போது சோமாஸ்கந்தர் சந்நிதி மிக அழகாகவுள்ளது. இப்பிரகாரத்தில் ஆத்மநாதர் சந்நிதி (பீடம் மட்டுமே கொண்டது), இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் முதலிய சந்நிதிகள் தனித் தனிக் கோயில்களாக அமைந்துள்ளன. ஆறுமுகப் பெருமான் சந்நிதி அழகாகவுள்ளது. கந்தர் அநுபூதிப் பாடல்கள் சலவைக்கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் அழகான முன்மண்டபத்துடன் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. உள்ளே வலம் வரலாம். நின்ற திருக்கோலம். அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது அம்பாளுக்கு எதிரில் ‘பிரத்யட்ச வேதகிரீஸ்வரர்’ சந்நிதி உள்ளது. அடுத்துள்ள நடராச சபையில் உள்ள மூர்த்தி சிறியதாயினும் அழகாகவுள்ளது. வலமாக வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்று வலப்பால் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவாரபாலகர்களை வணங்கி உட்சென்றால், உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர், சுந்தரர் முதலாகவுடைய அறுபத்துமூவர் மூலத்திரு மேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து அறுபத்து மூவரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. பைரவர் வாகனமின்றி உள்ளார். மூலவர் தரிசனம் - சிவலிங்கத் திருமேனி (பக்தவத்சலேசுவரர்.) சதுரபீட ஆவுடையாரில் அமைந்துள்ள அழகான மூர்த்தம். கருவறை தூங்கானை மாடக் (‘கஜப்பிருஷ்ட’) அமைப்புடையது. தேவகோட்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உளர். சண்டேசுவரர் உள்ளார்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் ருத்ரகோடீசுவரர் கோயில்
செல்லும் வழி செங்கற்பட்டில் இருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. 14கி.மீ. தொலைவு. செங்கற்பட்டிலிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம் முதலிய ஊர்களுக்கான பேருந்துகளும் இத்தலத்தின் வழியே செல்கின்றன.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
திருக்கழுக்குன்றம் பக்தவத்சலேசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருக்கழுக்குன்றம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Nov 2018
பார்வைகள் 98
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்