Back
வழிபாட்டுத் தலம்
திருவழுந்தூர் ஆமருவியப்பப் பெருமாள் கோவில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருவழுந்தூர் ஆமருவியப்பப் பெருமாள் கோவில்
வேறு பெயர்கள் அழுந்தை, அழுந்தூர். திருவழுந்தூர்
ஊர் தேரழுந்தூர்
வட்டம் குத்தாலம்
மாவட்டம் நாகப்பட்டினம்
தொலைபேசி 04364-237 952
உட்பிரிவு 2
மூலவர் பெயர் தேவாதிராஜன், ஆமருவியப்பன், கோசகன்
தாயார் / அம்மன் பெயர் செங்கமல வல்லி
திருக்குளம் / ஆறு தர்சன புஷ்கரிணி, காவேரி
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நவராத்திரி
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பல்லவ, பாண்டிய சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர்
சுவரோவியங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் பாடப்பெற்ற திருத்தலம்.
சுருக்கம்
கவிச் சக்ரவர்த்தி கம்பன் பிறந்தது இந்த தேரழுந்தூரேயாகும். இப்பெருமான் மீது கம்பன் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். கம்பருக்கும் அவர் மனைவிக்கும் இக்கோவிலில் சிலைகள் உள்ளன. “கம்பன் பிறந்தவூர், காவிரி தங்குமூர் கும்பமுனி சாபம் குலைந்தவூர் செம்பதுமத் தாதகத்து நாண்முகனும் தாதையும் தேடிக் காணா ஓதகத்தார் வாழும் அழுந்தூர்” என்பது புலவர் புராணம் என்னும் நூலில் வரும் செய்தியாகும். இங்கு கம்பர் மேடு என்றழைக்கப்படும் பகுதியே கம்பன் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது. இப்போது அழகான கம்பன் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களில் தேரழுந்தூர் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. முதற் கரிகாலனின் தலை நகரமாக இவ்வூர் விளங்கியது. நீடாமங்கலத்துக்கு அருகில் உள்ள வெண்ணியென்னும் ஊரில் (வெண்ணிப் பறந்தலை) கரிகாலன் பதினொரு குறு நில மன்னரையும், சேர, பாண்டியரையும் ஒருங்கே முறியடிக்க அந்த ஆரவாரம் அழுந்தூரில் கொண்டாடப்பட்ட செய்தியை புறநானூற்றின் 65, 325, 395 ஆம் பாடல்கள் விளக்குகின்றன. இரண்டாம் கரிகாலன் காலத்தே இத்தலைநகர் உறையூருக்கு மாற்றப்பட்டது. அழுந்தை, அழுந்தூர். திருவழுந்தூர், என்பன தமிழிலக்கியம் சூட்டும் பிற பெயர்கள். மார்க்கண்டேயன் கதை அனைவரும் அறிந்தவொன்றாகும். இத்தலத்துப் பெருமாளைச் சேவித்து மார்க் கண்டேயர் மோட்சம் பெற்றார் என்பதும் ஒரு வரலாறு. பிரகலாதன் நரசிம்ம அவதாரத்தைக் கண்டு பயந்து பெருமானின் சாந்த சொரூபத்தைக் காட்ட வேண்டுமென்று வேண்டிய போது, சினம் அடங்கப்பட்ட சிங்கமாகப் பெருமாள் காட்சி தந்தும், பிரகலாதனின் அச்சம் குறையாதிருக்க இத்தலத்தில் அமர்ந்துள்ள ஆமருவியப்பனாக காட்சி தந்தார் என்பதும் ஒரு பெருஞ் சிறப்பு நிகழ்ச்சியாகும். இத்தலத்தில் பிரகலாதனும் இடம் பெற்று நித்திய பூஜைகள் பெறுகிறான். அகத்திய மாமுனிவர் ஒரு சமயம் காவிரித் தாயை அணுகி தன்னை மணந்து கொள்ள விண்ணப்பிக்க, காவிரி மறுக்க, இதனால் கோபமுற்ற அகத்தியர் காவிரியைக் குடத்திலடைக்க, ஒரு சமயம் தரையில் வைக்கப்பட்ட அக்குடத்தைக் காகம் சாய்க்க, காவிரி வழிந்தோடியது. இதனால் மீண்டும் சினமுற்ற முனிவர் காவிரியால் வளம் பெறும் பகுதியில் உள்ளோர் அனைவரும் துன்புற்று வறுமையுறட்டும் என்று சாபமிட, இச்சாபத்தை போக்க தேரழுந்தூரில் தேவாதிராஜனைக் குறித்து தவமிருந்து காவிரி சாபம் துடைத்தாள் என்பதும் வரலாறு. இப்பெருமானை நோக்கித் தவமிருந்த நிலையில் காவிரித் தாயாரும் இச்சந்நிதியில் இடம் பெற்றுள்ளாள். தேவேந்திரன் ஒரு சமயம் கருடனை அழைத்து, ஒரு வைர முடியினையும் ஒரு விமானத்தையும் தந்து, அவைகள் எந்தப் பெருமாளுக்கு உகந்தவைகளோ அவ்வவரிடம் சேர்ப்பிக்குமாறு வேண்ட, திருநாராயண புரத்தில் உள்ள (மைசூர்) செல்லப் பிள்ளை பெருமாளுக்கு வைரமுடியினையும், இந்த தேவாதிராஜனுக்கு விமானத்தையும் அளித்தார். இதனால் இப்பெருமாள் கருடனைத்தன் பக்கத்திலேயே அமர்த்திக் கொண்டார். “திருவுக்கும் திருவாகிய செல்வா” என்பது இப்பெருமானுக்குத் திருமங்கை சூட்டியுள்ள செல்லப் பெயராகும், திருமங்கையால் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். 45 பாசுரங்களில் பாடித்துதித்துள்ளார். இதற்கருகில் உள்ள வேறு ஒரு கோவிலும் பாடல் பெற்ற ஸ்தலமென்று கூறுகின்றனர். மணவாள முனிகளும் தேவாதி ராஜனை மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருவழுந்தூர் ஆமருவியப்பப் பெருமாள் கோவில்
கோயிலின் அமைப்பு வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் வலப்புறம் கம்பர் சன்னதியில் கம்பரும் அவருடைய மனைவியும் உள்ளனர். அடுத்து ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. அருகே பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்துள்ள கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது திருச்சுற்றில் வலது புறத்தில் தேசிகர் மடப்பள்ளி, ஆழ்வார் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. இடது புறம் ஆண்டாள் சன்னதி உள்ளது. சற்று உயர்ந்த தளத்தில் மூலவர் தேவாதிராஜன் நின்ற நிலையில் கிழக்கு நோக்கி உள்ளார். இடது புறம் கருடாழ்வாரும், வலப்புறம் பிரக்லாதாழ்வாரும் உள்ளனர். இடது கையில் ஊன்றிய கதை உள்ளது. இடது புறம் காவிரித்தாய் மண்டியிட்ட நிலையில் உள்ளார். கோயிலின் எதிரே குளம் உள்ளது. பெரிய திருமொழி ஏழாம் பத்து ஐந்தாம் திருமொழி கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில்
செல்லும் வழி இத்திருவழுந்தூர்    தஞ்சை    மாவட்டத்தில் மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் இருக்கிறது. (மாயவரம் - கும்பகோணம் பாதையில் இரண்டாவது ரயில் நிலையம்)
கோவில் திறக்கும் நேரம் காலை 5.00 -12.30 முதல் மாலை 4.30-9.30 வரை
திருவழுந்தூர் ஆமருவியப்பப் பெருமாள் கோவில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் தேரழுந்தூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி குத்தாலம், நாகப்பட்டினம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 20 Jul 2017
பார்வைகள் 35
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்