Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு சித்திர ரத வல்லபப் பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு சித்திர ரத வல்லபப் பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் குருவின்துறை
ஊர் குருவித்துறை
வட்டம் வாடிப்பட்டி
மாவட்டம் மதுரை
தொலைபேசி 04543-258303, 99656 70975
உட்பிரிவு 2
மூலவர் பெயர் ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள்
தாயார் / அம்மன் பெயர் செண்பகவல்லி
திருக்குளம் / ஆறு வைகை ஆறு
திருவிழாக்கள் சித்ரா பௌர்ணமி தினம், வைகுண்ட ஏகாதேசி, குருப் பெயர்ச்சி
காலம் / ஆட்சியாளர் சடாவர்மன் ஸ்ரீவல்லப பாண்டியன் - கி.பி.1101- 1124
கல்வெட்டு / செப்பேடு பாண்டியர் கால நீர்ப்பாசன முறைகளைப் பற்றிய கல்வெட்டொன்று இக்கோயிலில் காணப்படுகின்றது. பராக்கிரம பாண்டியன் காலத்தில் அரசு அதிகாரியாக குருவித்துறை பகுதியில் பணியாற்றிய மாதவனான சோழ முத்தரையன் என்பவர் தனது நிலத்துக்காக வைகையிலிருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் மூலமாக பாசனம் செய்து வந்தார். அவ்வூரைச் சேர்ந்த மற்றொருவர், அக்கால்வாய்க்கு மேல் மற்றொரு கால்வாயை வெட்டி, தனது நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சினார். இதனால் ஏற்பட்ட பெரும் சிக்கலைத் தீர்க்கவியலா ஊர்ச்சபையார், இறுதியாக பராக்கிரம பாண்டிய மன்னனிடம் விசாரணையை கொண்டு சென்றனர். பராக்கிரம பாண்டியன் இதனை விசாரணை செய்து. இறுதியாக ஒரு கால்வாய்க்கு மேல் மற்றொரு கால்வாய் உருவாக்குவது சரியான நடைமுறையன்று எனத் தீர்ப்பளித்து, அத்தீர்ப்பினை குருவித்துறை கோயில் கல்வெட்டிலும் பொறித்தான். காலுக்கு மேல் கால் கல்லலாகாது என்பது தான் அந்தக் கல்வெட்டு. மேலும் சடாவர்மன் ஸ்ரீவல்லப பாண்டியனின் பெயரால் இவ்வூர் ஸ்ரீவல்லபபுரம் என்றே அழைக்கப்பட்டுள்ளது. அப்பெயராலேயே இங்குள்ள பெருமாளும் அழைக்கப்படுகிறார். “..........................................................................கோச்சடையபன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவல்லபதேவர் மாடக்குளக்கீழ் மதுரைக்கோயிலில் உள்ளாலை நாடகசாலையில் பள்ளிக்கட்டில் பாண்டியராயனில் எழுந்தருளி இருந்து இருபத்திரண்டாவது நாள் இருநூற்றினால் .........................................” அரசனின் 22-ஆம் ஆட்சியாண்டான கி.பி. 1180-ஆம் ஆண்டில், மதுரை அரண்மனையில் உள்ள நாடகசாலையில் அமைந்திருந்த பாண்டியராயன் என்னும் சிங்காதனத்தில் வீற்றிருந்து அரசன் ஆணை பிறப்பித்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. கல்வெட்டுகளில் இக்கோயிலின் பெயர் திருச்சக்கர தீர்த்தத்து நின்றருளிய பரமசுவாமிகள், எம்பெருமாள் என்றும் பெயர் குறிப்பிடப்படுகின்றன. பாகனூர்க் கூற்றத்துப் பிரமதேயம் சோழாந்தகச் சதுர்வேதிமங்கலத்து திருச்சக்கரத்தாழ்வார் என்றும் கூறப்படுகிறது. இக்கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ஸ்ரீவல்லபன் காலத்தில் கட்டப்பட்டது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் கொண்டு அறியலாம். இக்கோயிலில் இடைக்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் மொத்தம் 14 உள்ளன. இவை இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட நிலம், பொன் ஆகிய கொடைகள் பற்றிக் கூறுகின்றன. “உய்யக் கொண்டாள்வார்“ என்ற பெயரில் ஒரு செப்புத் திருமேனியை நெற்குப்பை நாட்டு கேரளாந்தகபுரத்து வியாபாரி அப்பன் ஈசுவரனின் மனைவி திருவரங்கன் பெற்றதிரு என்பவள் செய்தளித்துள்ளாள்.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் சித்திர ரத வல்லப பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மூலவரின் இச்சிற்பம் சந்தன மரத்தால் ஆனது. திருமகள், நிலமகள் உடன் நின்ற கோலம். தனிக் கருவறையில் செண்பகவல்லித் தாயார் வீற்றிருக்கிறார். குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் கருவறையை நோக்கி உள்ளனர். கருவறையின் வாயிலில் வாயிற்காவலர் உருவங்கள் அமைந்துள்ளன. மண்டபத் தூண்களில் கிருஷ்ணர், தவழும் கண்ணன், பெண், மலர்கள் ஆகியன புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. தூண்களின் மேற்பகுதியில் சிம்மங்கள் காட்டப்பட்டுள்ளன. கருவறைத் திருச்சுற்றில் ஸ்ரீநிவாசர், யோகநரசிம்மர், விஷ்வக்சேனர், பன்னிரு ஆழ்வார்கள் இவர்களின் திருவுருவச் சிற்பங்கள் அமைந்துள்ளன. பூதத்தான் எனப்படும் கருப்பசாமி மற்றும் குருபகவான் ஆகிய தெய்வத் திருவுருவங்கள் தனிக் கோயிலில் வழிபாட்டில் உள்ளன.
தலத்தின் சிறப்பு 1000 ஆண்டுகள் பழமையானது. இடைக்காலப் பாண்டியர்களின் கலைப்பாணியைக் கொண்டு விளங்குகின்றது.
சுருக்கம்
மதுரையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் இருக்கிறது சோழவந்தான். இங்கிருந்து தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம் வழியாக சுமார் 12 கி.மீ. தொலைவில் குருவித்துறை உள்ளது. வைகைக் கரையில் குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில், சோழவந்தானுக்கு அருகில் உள்ள குருவித் துறை இயற்கை எழில் மிகுந்த ஆற்றங்கரை ஊராகும். இந்த ஊர் அயன் குருவித்துறை மற்றும் கோயில் குருவித்துறை என இரு பகுதிகளாக விளங்குகிறது. இதில், 'கோயில் குருவித் துறை' பகுதியில் அமைந்துள்ளது சித்திர ரத வல்லப பெருமாள் கோயில். இக்கோயிலின் வெளியே குரு பகவானுக்கென்று தனிக் கோயில் இருக்கிறது. குருபகவான் வைகை ஆற்றங்கரையில் தவமியற்றி பெருமாளின் வரம் பெற்ற திருத்தலம். இதனால் இக்கோயில் குருபகவான் கோயில் என்றே மக்களால் அறியப்படுகிறது. இடைக்காலப் பாண்டிய மன்னர்களில் ஒருவனான சடாவர்மன் ஸ்ரீவல்லபன் (கி.பி.1101- 1124) காலத்தில் இந்தப் பகுதிக்குக் 'குருவிக்கல்' என்ற பெயர் இருந்திருக்கிறது. வைகை ஆற்றில் ஒரு சிற்றணையை ஒட்டி இருந்த ஆற்றுத் துறை, 'குருவிக்கல்துறை' என அழைக்கப்பட்டுள்ளது. இதுவே குருவித்துறை ஆகியிருக்கலாம். கி.பி.12-ஆம் நூற்றாண்டில் பரஞ்ஜோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணத்தில் காணப்படும் பன்றிக்குட்டிக்கு பால் கொடுத்த படலத்தில் குருவித்துறையில் எழுந்தருளி இருக்கும் குரு பகவான் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. குருவித்துறை என்கிற இந்த ஊர், 'குருவிருந்த துறை' என்று திருவிளையாடற் புராணத்தில் குறிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலப் பாண்டியர்களின் கலைப்பாணியைப் பெற்று இக்கோயில் விளங்குகின்றது. பாண்டியர்களின் தூண் கல்வெட்டுகள் மற்றும் கருவறை விமானத்தில் உள்ள தாங்குதளக் கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகளில் காணப்படுகின்றன. இக்கோயில் மூன்று திருச்சுற்றுக்களைக் கொண்டுள்ளது. தூண்கள் நிறைந்த முகமண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கோயில் காணப்படுகின்றது. அர்த்தமண்டப முகப்பின் இருபுறமும் வாயிற்காவலர்கள் சிற்பங்கள் உள்ளன. கருவறை விமானம் தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரை கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலே தளப்பகுதி, ஸ்தூபி ஆகிய கட்டுமானங்கள் பிற்காலத்தவை. புனரமைப்பு பணியாக காட்சியளிக்கின்றது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விமானத்தின் கோட்டங்கள் வெற்றுக் கோட்டங்களாக காட்சியளிக்கின்றன. இது பாண்டிய கலைப்பாணியாகும். சுவர்ப்பகுதியை அரைத்தூண்களும், மகரதோரணங்களும் அழகு செய்கின்றன. கருவறைத் திருச்சுற்றை ஒட்டி திருச்சுற்று மாளிகை தூண்களுடன் காட்சியளிக்கின்றது. சித்திரரத வல்லப பெருமாளின் கோயிலின் முதற்சுற்றில் ஸ்ரீநிவாசப் பெருமாள், யோக நரசிம்மர், விஷ்வக்சேனர் போன்ற விக்கிரகங்கள். இரண்டாம் திருச்சுற்றில் கம்பத்தடி மண்டபம், மடப்பள்ளி, ஆழ்வார்கள் சந்நிதி, ஏகாதசி மண்டபம், தாயார் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. மூன்றாம் திருச்சுற்றில் காவல் தெய்வமான பூதத்தான் எனப்படும் கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் வெளியே குருபகவானுக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது.
அருள்மிகு சித்திர ரத வல்லபப் பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் மூன்று திருச்சுற்றுக்களைக் கொண்டுள்ளது. தூண்கள் நிறைந்த முகமண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கோயில் காணப்படுகின்றது. அர்த்தமண்டப முகப்பின் இருபுறமும் வாயிற்காவலர்கள் சிற்பங்கள் உள்ளன. கருவறை விமானம் தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரை கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலே தளப்பகுதி, ஸ்தூபி ஆகிய கட்டுமானங்கள் பிற்காலத்தவை. புனரமைப்பு பணியாக காட்சியளிக்கின்றது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விமானத்தின் கோட்டங்கள் வெற்றுக் கோட்டங்களாக காட்சியளிக்கின்றன. இது பாண்டிய கலைப்பாணியாகும். சுவர்ப்பகுதியை அரைத்தூண்களும், மகரதோரணங்களும் அழகு செய்கின்றன. கருவறைத் திருச்சுற்றை ஒட்டி திருச்சுற்று மாளிகை தூண்களுடன் காட்சியளிக்கின்றது. சித்திரரத வல்லப பெருமாளின் கோயிலின் முதற்சுற்றில் ஸ்ரீநிவாசப் பெருமாள், யோக நரசிம்மர், விஷ்வக்சேனர் போன்ற விக்கிரகங்கள். இரண்டாம் திருச்சுற்றில் கம்பத்தடி மண்டபம், மடப்பள்ளி, ஆழ்வார்கள் சந்நிதி, ஏகாதசி மண்டபம், தாயார் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. மூன்றாம் திருச்சுற்றில் காவல் தெய்வமான பூதத்தான் எனப்படும் கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் வெளியே குருபகவானுக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் சோழவந்தான் ஜெனகமாரியம்மன் கோயில், கோச்சடை அய்யனார் கோயில், கோச்சடை மீனாட்சி சொக்கநாதர் கோயில், பரவை முத்துநாயகி அம்மன் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்
செல்லும் வழி மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்துகள் குருவித்துறை செல்கிறது. அரசரடி, கோச்சடை, சோழவந்தான் வழியாகச் செல்கிறது இந்தப் பேருந்து. குருவித்துறைப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு, சுமார் இரண்டு கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். அல்லது ஆட்டோக்களில் செல்லலாம். வியாழக்கிழமைகளில் மட்டும் நகரப் பேருந்து கோயில் முகப்பு வரை செல்கிறது.
கோவில் திறக்கும் நேரம் காலை 8.30 மணி முதல் 12.30 மாலை 3.30 மணி முதல் இரவு 5.30 வரை வியாழக்கிழமைகளில் கூடுதல் நேரம் திறந்திருக்கும்.
அருள்மிகு சித்திர ரத வல்லபப் பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் குருவித்துறை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை, வாடிப்பட்டி, சோழவந்தான்
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 07 Jun 2017
பார்வைகள் 51
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்