வழிபாட்டுத் தலம்
பெருங்குடி அகஸ்தீஸ்வரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | பெருங்குடி அகஸ்தீஸ்வரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | பெருமுடி பரமேஸ்வரம், திருப்பெருமுடி பரமேசுவரர் ஸ்ரீகோயில் |
| ஊர் | பெருங்குடி |
| வட்டம் | அந்தநல்லூர் |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | அகஸ்தீஸ்வரர், திருப்பெருமுடி பரமேசுவரர், பெருமுடி அகத்தீசுவரமுடையார் |
| தாயார் / அம்மன் பெயர் | சிவகாமசுந்தரி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன் (இரண்டாம் ஆதித்தன்) |
| கல்வெட்டு / செப்பேடு | சுந்தரசோழன் காலத்தில் கி.பி.969-இல் இக்கோயில் திருப்பெருமுடி பரமேஸ்வரர் ஸ்ரீகோயில் என்று பெயர் பெற்றிருந்தது. போசள மன்னன் வீரராமநாதன் காலத்தில் திருப்பணி நடைபெற்றது. விசயநகர மன்னன் விருப்பணன் காலத்தில் அம்மன் திருமுன் கட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள ஆதித்த கரிகாலன் கல்வெட்டு அவனை வீரபாண்டியன் தலை கொண்ட பரகேசரி வர்மன் என்று குறிப்பிடுகிறது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறை விமான தேவகோட்டங்களில் தெற்கே தென்முகக் கடவுளும், மேற்கே மாதொரு பாகனும், வடக்கே நான்முகனும் அமைக்கப்பட்டுள்ளனர். சண்டிகேசுவரர் சிற்பம் தனியாக உள்ளது. முகமண்டபத்தில் விஷ்ணு, ஆலிங்கனமூர்த்தி, முருகன், சப்தமாதர்கள், சனைஸ்சரன், கணபதி ஆகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அரைத்தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. விமானத்தின் கழுத்துப்பகுதியில நாற்புறமும் நந்தி காட்டப்பட்டுள்ளது. கொடுங்கைக்கு கீழே பூதவரி செல்கிறது. பூதகணங்கள் ஆடல் பாடலுடன் காட்சியளிக்கின்றன. |
| தலத்தின் சிறப்பு | 1000 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. |
|
சுருக்கம்
பெருங்குடியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில் இரண்டாம் பராந்தகனான சுந்தரசோழனின் எட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு காணப்படுவதால் சுந்தரசோழன் கி.பி.968 காலத்தில் இக்கோயில் எழுப்பப் பெற்றதாக இருக்கலாம். சுந்தரசோழனின் மகன் ஆதித்த கரிகாலனின் 3-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. வீரபாண்டிய தலைக்கொண்ட கோப்பரகேசரி என்று ஆதித்த கரிகாலன் குறிப்பிடப்படுகிறான். பிற்காலச் சோழர்காலக் கல்வெட்டுகளில் பெருமுடி அகத்தீஸ்வரமுடையார் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலும் சிற்பங்களும் சுந்தரசோழன் கால கட்டட-சிற்பக் கலைக்கு சிறந்த சான்றாகத் திகழ்கிறது. கருவறைக் கோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, சண்டிகேசுவரர், விஷ்ணு, முருகன் கணபதி ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன.
|
|
பெருங்குடி அகஸ்தீஸ்வரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் ஒரு தளமுடையதாக தற்போது விளங்குகிறது. கருவறை விமானத்தின் கூரைப்பகுதி வரை கல்ஹாரமாகவும், அதற்கு மேல் பகுதி சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கோயில் முழுவதும் கற்றளியாக சோழர்காலத்தில் கட்டப்பட்டது. போசளர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதை கல்வெட்டு கூறுகிறது. தாங்குதள உறுப்புகள் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன. தேவகோட்டங்களில் இறைவடிவங்கள் அமைந்துள்ளன. பஞ்சரக் கோட்டங்களிலும் திருவுருவங்கள் உள்ளன. அர்த்தமண்டபம், முகமண்டபம் பெற்று விளங்குகிறது. விசயநகரர் காலத்தில் அம்மன் திருமுன் கட்டப்பெற்றுள்ளது. கருவறையில் இலிங்கவடிவில் இறைவனும், நின்ற நிலையிலும் அம்மன் கருவறையில் அம்மன் காட்டப்பட்டுள்ளனர். முகமண்டபத்தில் முருகன், விஷ்ணு, ஆலிங்கனமூர்த்தி, கணபதி, சனைஸ்சரண் ஆகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | சோழமாதேவி, பாச்சில் அமலேஸ்வரர் கோயில் (அழகிய மணவாளம்), கோபுரப்பட்டி சிவன் கோயில் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து 316 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி - வயலூர் சாலையில் உய்யக்கொண்டான் அடுத்து திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் பெருங்குடி அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து உய்யக்கொண்டான் வழியாக பெருங்குடி செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 56 |
| பிடித்தவை | 0 |