Back
வழிபாட்டுத் தலம்
திருபுவனை ஸ்ரீதோதாத்ரிநாத வரதராஜப் பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருபுவனை ஸ்ரீதோதாத்ரிநாத வரதராஜப் பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் வீரநாராயண விண்ணகரம்
ஊர் திருபுவனை
வட்டம் திருபுவனை
மாவட்டம் புதுச்சேரி
உட்பிரிவு 2
மூலவர் பெயர் தோதாத்ரி பெருமாள்
தாயார் / அம்மன் பெயர் வரமங்கை
வழிபாடு உஷைக்காலம், காலை சந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தசாமம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தகச் சோழன்
கல்வெட்டு / செப்பேடு கருவறை விமானத்தின் தாங்குதளத்தின் ஜகதி, குமுதம் ஆகிய உறுப்புகளில் சோழர்கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. வீரநாராயண விண்ணகரம் என்பது இக்கோயிலின் பழைய பெயராகும். முதலாம் பராந்தக சோழனால் இக்கோயில் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். வீரநாராயணன் என்பது பராந்தகனின் பட்டப் பெயராகும். மேலும் இவ்வூர் இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளில் திருபுவனை மகாதேவி சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்படுகிறது. திருபுவனை மகாதேவி என்பவள் பராந்தகனின் பட்டத்தரசியாவாள். மேலும் இவ்வூரிலுள்ள ஏரி கோகிழாரடி பேரேரி என்று பராந்தகனின் மற்றொரு மனைவியின் பெயரால் அழைக்கப்பட்டதும் கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் பெருமாள் சிற்பம் உள்ளது. கருவறை விமானத்தின் கோட்டங்களில் சிற்பங்கள் இடம் பெறவில்லை. கருவறை விமானத்தின் தாங்குதளத்தின் பாதகண்டத்தில் யாளிவரியும், யானைச்சிற்பங்களும் அமைந்துள்ளன. தாங்குதளத்தின் வேதிகை என்னும் உறுப்பின் கழுத்துப்பகுதியில் இராமாயணக் காட்சிகளும், பாகவதபுராணக் காட்சிகளும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. கருவறையின் நுழைவாயிலின் படிகளில் பலவித உருவங்கள் சிற்பங்களாக உள்ளன. அவற்றுள் ஆடல் மகளிர், யானைச் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.
தலத்தின் சிறப்பு 1000 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
சுருக்கம்
முதலாம் பராந்தகச் சோழனால் முற்காலச் சோழர் கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோயில் பெருமாளுக்கு எடுப்பிக்கப்பட்டதாகும். வீரநாராயண விண்ணகரம் என்ற பெயர் கொண்ட இத்தலம் பராந்தகனின் பட்டப்பெயரான வீரநாராயணன் என்ற பெயரில் விளங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வூர் திருபுவனை மகாதேவி சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டுள்ளது. நான்கு வேதங்கள் தெரிந்த பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட ஊரே சதுர்வேதி மங்கலமாகும். அவ்வகையில் இவ்வூர் பிரம்மதேயமாகும். இவ்வூரில் பராந்தகன் காலத்தில் ஒரு ஏரி வெட்டப்பட்டுள்ளது. கோக்கிழானடி பேரேரி எனப்பெயர் பெற்ற அவ்வேரி பராந்தகனின் பட்டத்தரசியின் பெயரால் விளங்கியது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே திருபுவனை மகாதேவி என்ற பெயரால் அமைந்த ஊரும் பராந்தகனின் மற்றொரு மனைவியின் பெயரால் அமைக்கப்பட்டதே. சோழர்கள் காலத்தில் ஊரினை பிராமணர்களுக்கு பிரம்மதேயமாக அளித்து மேலும் ஏரியையும் வெட்டுவித்து சிவன் மற்றும் விஷ்ணு கோயில்களை மன்னன் கட்டுவித்தல் மரபாயிருந்திருக்கிறது.
திருபுவனை ஸ்ரீதோதாத்ரிநாத வரதராஜப் பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றுடன் எளிமையாகக் காணப்படுகிறது. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. தேவக்கோட்டப்பகுதியில் சாளரம் அமைந்துள்ளது. கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. கருவறை விமானத்தின் உயரத்தை அதிகரிப்பதற்காக உபபீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உயரமாக அமைக்கப்பட்ட உபபீடத்தின் மீது தாங்குதளம் அமைந்துள்ளது. தாங்குதளம் உபானம், பத்மஜகதி, உருளைக்குமுதம், புடைப்புச்சிற்பங்கள் அமைந்துள்ள பிரதிபந்த கண்டம், இராமாயண மற்றும் பாகவத காட்சிகளின் புடைப்புச் சிற்பங்கள் அமைந்த வேதிகைக் கண்டம் ஆகிய உறுப்புகளை பெற்று விளங்குகிறது. இக்கோயில் விமானம் உபபீடத்திலிருந்து கூரைப்பகுதி வரை கற்றளியாக அமைந்துள்ளது. முதலாம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட இக்கற்றளி மேற்புற விமானத்தின் தளப்பகுதி தற்போது சுதையால் அமைக்கப்பட்டுள்ளது. இரு தளங்களைக் கொண்டதாக விமானம் அமைந்துள்ளது. முகமண்டபத்தில் தூண்கள் அமைந்துள்ளன. தென்புறத்திலும் வடபுறத்திலும் அமைந்த வாயிற்படிகளில் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சிற்பங்கள் யாவும் முற்காலச் சோழர் கலைப்பாணியாகும். திருச்சுற்றில் தாயாருக்கும், ஆண்டாளுக்கும் தனித்தனி திருமுன்கள் உள்ளன. கருடாழ்வாருக்கு தனி திருமுன் பலிபீடத்தின் முன் அமைந்துள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது. வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருபுவனை சிவன் கோயில், ஆரோவில், பாண்டிச்சேரி கடற்கரை
செல்லும் வழி புதுச்சேரியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் திருபுவனை அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-8.30 வரை
திருபுவனை ஸ்ரீதோதாத்ரிநாத வரதராஜப் பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் புதுச்சேரி, திருபுவனை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் புதுச்சேரி
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி புதுச்சேரி விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 51
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்