வழிபாட்டுத் தலம்
பாமணி நாகநாதசுவாமி கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | பாமணி நாகநாதசுவாமி கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | சர்ப்பபுரீஸ்வரர், நாகநாதர், பாம்பணிநாதர், திருப்பாதாளேச்வரர் |
| ஊர் | பாமணி |
| வட்டம் | மன்னார்குடி |
| மாவட்டம் | திருவாரூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | நாகநாதர் |
| தாயார் / அம்மன் பெயர் | அமிர்தநாயகி |
| தலமரம் | மாமரம் |
| திருக்குளம் / ஆறு | பிரம்மதீர்த்தம், தேனு தீர்த்தம், ருத்ரதீர்த்தம், நிலத்வஜ தீர்த்தம், பாமணியாறு |
| ஆகமம் | காமீகம் |
| வழிபாடு | காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
| திருவிழாக்கள் | சித்திரை வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மகாசிவராத்திரி, கந்தசஷ்டி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு / நகரத்தார் |
| கல்வெட்டு / செப்பேடு | இக்கோவில் புனரமைப்பின் போது இக்கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டிருக்கலாம். நமக்கு கிடைத்துள்ள ஆண்டறிக்கை பதிவின் படி இக்கோவிலின் 6 கல்வெட்டுகளில் 3 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. முதலாம் ராஜராஜன் கல்வெட்டு ஒன்றும் மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டு ஒன்றும் அடங்கும். மற்றொரு கல்வெட்டில் அரசன் பெயர் காணப்படவில்லை. ஒரே ஒரு கல்வெட்டு பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தது. மற்ற இரு கல்வெட்டுகளிலும் வம்சம், அரசன் பெயர் அறிய இயலவில்லை. ஸ்ரீபூதி விண்ணகர் கோயிலில் தினமும் ஒரு அடியார்க்கு உணவிட காசு கொடை, ஸ்ரீபூதி விண்ணகர் ஆழ்வாருக்கு ஒரு நந்தா விளக்கெரிக்க 96 ஆடுகள் கொடை, சுத்தவல்லி வளநாட்டு பாம்புணிக்கூற்றம் என்ற குறிப்பு, விழுப்பரையரின் மகள் கங்காண்டார் முன்பு தான் நிறுவிய தெய்வத்திருமேனியை வழிபட நிலக்கொடை வழங்குதல், உடையான் காண்டன் நூற்றெண்மன் கோயிலுக்கு ஆடு கொடை, திருப்பாடலீஸ்வரம் உடையார் கோயில் நிலத்தை வடக்கில் மடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தல் ஆகிய செய்திகளை உள்ளடக்கிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | மூலவர் நாகநாதசுவாமி சன்னதியின் தெற்கு, மேற்கு, வடக்குப்புற தேவகோட்டங்களில் மட்டுமே கோட்ட மூர்த்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடமிருந்து வலமாக முதல் திருச்சுற்றில் தென்திசையில் முதலாவதாக நர்த்தன கணபதியும், இரு சிங்கங்கள் மீது அமைக்கப்பட்ட சிறு மண்டபத்தோடு கூடிய தேவகோட்டத்தில் சனகாதி முனிவர்களோடு கூடிய தக்ஷிணாமூர்த்தியும் காணப்படுகின்றனர். இதனையடுத்து இத்திருமுன்னின் பின்புறமுள்ள மேற்குப்புற தேவகோட்டத்தில் அண்ணாமலையார் எனும் லிங்கோத்பவர் வீற்றுள்ளார். இதனையடுத்து வடபுற தேவகோட்டத்தில் பிரம்மா, மகிஷன் தலை மீது நிற்கும் விஷ்ணுதுர்க்கை ஆகிய சிற்பங்கள் கோட்ட மூர்த்தங்களாக நிறுவப்பட்டுள்ளன. இக்கோவிலில் ஸ்வாமி, அம்பாள், விநாயகர், வள்ளி,தெய்வயானை சமேத சுப்ரமணியர், க்ராதமூர்த்தி, அம்பாள், பிரதோஷ நாயகர், நடராஜர், சிவகாமி, சுக்ரவார அம்மன் (பள்ளியறை சுவாமி, அம்பாள்), சந்திரசேகர சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர், நால்வர், சோமாஸ்கந்தர், போகசக்தி அம்மன் ஆகிய உற்சவ மூர்த்தங்கள் இக்கோவிலில் உள்ளன. கிழக்குப்புற திருச்சுற்று மாளிகையில் நின்ற திருக்கோலத்தில் காலபைரவர், சனீஸ்வரர், நவகிரகம், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் சிற்பங்களும் அதனையடுத்து இறுதியாக சந்திரன் சிற்பமும் உள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 104-வது தலம் இது. |
|
சுருக்கம்
பாமணி ஆற்றின் தென்கரையில் நாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. முன்பு இக்கோவில் பாமணி ஆற்றின் வடகரையில் இருந்ததாகவும் ஆற்றின் போக்கில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே இக்கோவில் தற்போது தென்கரையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் மூலவர் சிவபெருமான் சுயம்பு மூர்த்தமாக புற்று மண்ணால் உருவானவர். இவ்வாறு பாதாளத்திலிருந்து சுயம்பு மூர்த்தமாக சிவபெருமான் லிங்க வடிவில் வெளிப்பட்டதாலும் பாடல் பெற்றதாலும் இத்தலத்திற்கு திருப்பாதாளேச்சுரம் என்ற பெயரும் உண்டு. பாம்பணி, சர்ப்பபுரம் என்பன இதன் வேறு புராணப் பெயர்கள் ஆகும். இக்கோவில் முற்றிலும் நகரத்தார் கட்டிடக்கலைப் பாணியைக் கொண்டு காணப்பட்டாலும் இது பாடல் பெற்ற தலமாகையால் சோழர் காலத்திற்கும் முற்பட்ட கோவிலாக இருக்கலாம். இது பிற்காலத்தில் முற்றிலும் நகரத்தார்களால் புனரமைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. கிழக்கு நோக்கிய இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. மாறாக இரண்டாம் பிரகாரத்தின் பிரதான வாயிலின் மேற்புறம் உள்ள மாடத்தில் சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், பாலசுப்ரமணியர், நாரதரோடு காட்சி தரும் சுதைச் சிற்பம் உள்ளது. முதற்பிரகாரத்தின் வாயிலின் மேற்புரம் 3 கலசங்களோடு கூடிய ஒரே ஒரு நிலையுடன் சிறு ராஜகோபுரம் காணப்படுகிறது. இக்கோவிலுக்கு 30.06.1966 அன்றும் 5.2.2003 அன்றும் ஆக இரண்டு முறை திருக்குடமுழுக்கு நடைபெற்றதை இங்குள்ள இரு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. தற்போது குடமுழுக்கிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
|
|
பாமணி நாகநாதசுவாமி கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோவிலின் பிரதானக் கடவுள்களான மூலவர் நாகநாதசுவாமி, அமிர்தநாயகி அம்மன் மட்டுமின்றி விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களுக்கும் விமானத்தோடு கூடிய தனித்த சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஏகதள விமானம் என்பது ஒரு பொதுவான அம்சம். மூலவர் நாகநாதசுவாமி விமானத்தில் மட்டும் மூர்த்தங்களுடன் கூடிய வெகு அலங்காரமிக்க தேவகோஷ்ட்டங்கள் காணப்படுகின்றன. அதாவது ஜகதி, பத்மம், முப்பட்டகக் குமுதம், கண்டம், உச்சியில் புஷ்ப போதிகையும் அதன் கீழ் பலகையோடு உள்ள அரைத்தூண்களோடு கூடிய தேவகோஷ்ட்டம், பிரஸ்தரம் ஆகிய உறுப்புகளோடு மூலவர் சன்னதி விமானம் உள்ளது. அரைத்தூண்கள் சதுர வடிவிலும், உருளை வடிவிலும், நாற்பட்டையோடும் காணப்படுகிறது. வியாழ வரிசை மற்றும் பூதகண வரிசை விமானத்தில் காணப்படவில்லை. கபோதப் பகுதியில் வழக்கம்போல் கர்ணகூடு உள்ளது. அதன் மேற்புறம் கலசம் வரையில் முற்றிலும் சுதையால் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கட்டுமானம் ஆகும். அம்மன் சன்னதி மற்றும் பிற மூர்த்தங்களுக்கான விமானம் மேற்கூறப்பட்ட அலங்காரங்கள் இன்றி சதுர வடிவ அரைத்தூண்களோடு அமைக்கப்பட்டுள்ளது. நகரத்தார் திருப்பணி செய்துள்ளதை முற்றிலும் மெருகூட்டப்பட்டுக் காணப்படும் கட்டிடக்கலைக்கூறுகளைக் கொண்டே எளிதில் அறிய முடிகிறது. அம்பாளை வலம் வந்தால் ஓம் என்ற வடிவம் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பாளுக்கென தனி சண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. மூலவர் நாகநாதசுவாமி மற்றும் அமிர்தநாயகியம்மன் சன்னிதிகள் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டுள்ளன. இங்குள்ள தூண்கள் சதுரவடிவுடையதாகவும் கட்டு, சதுரம் என்ற அமைப்பில் 16 பட்டைகளைக் கொண்டதாகவும் உச்சியில் புஷ்ப்ப போதிகையோடும் காணப்படுகிறது. தூண்களின் சதுரப் பகுதியில் மலர், யாளி, பாம்பு போன்ற விலங்குருவங்கள், சிவலிங்கம் என பல வகையான சிறு புடைப்புச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்தின் புறச் சுவர்களில் அதிக அலங்காரங்கள் ஏதுமின்றி சதுரவடிவ அரைத்தூண்கள் காணப்படுகின்றன. இவை தவிர இரண்டாம் திருச்சுற்றில் கொடிமரத்தை அடுத்து சிறு நந்திமண்டபமும் அதனையடுத்து கோவிலின் தென்புறம் வசந்தமண்டபமும் காணப்படுகிறது இந்த வசந்த மண்டபத்தில் உற்சவ மூர்த்தங்களுக்கான வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் திருச்சுற்று மண்டபம் முதலாம் திருச்சுற்றின் மதில்சுவரையொட்டி அமைக்கப்படாமல் மூலவர் நாகநாதசுவாமி சன்னதியின் கருவறை, அர்த்தமண்டபத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுமானத்தில் எங்கும் சுதையோ அல்லது சிமெண்ட் போன்ற தற்காலக் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தாது முற்றிலும் கருங்கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்குக் காணப்படும் தூண்கள் கட்டு, சதுரம் என்ற அமைப்பில் உச்சியில் புஷ்ப்பபோதிகையோடு உள்ள எண்பட்டைத் தூண்கள் ஆகும். அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபம் ஆகியவற்றில் உள்ள தூண்களைப் போலவே இத்தூண்களில் மலர், மரம், பூந்தொட்டி, பூங்கொடி, சிவலிங்கம், யாளி போன்ற பல புடைப்புச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | மன்னார்குடி இராஜகோபாலசுவாமி கோயில், திருத்துறைப்பூண்டி சிவன் கோயில், திருவாரூர் சிவன் கோயில் |
| செல்லும் வழி | உடையார் மானியத்திற்கு தெற்கேயும் மன்னார்குடி இரயில் நிலையத்திற்கு வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவிலும் மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 4 கி.மீ. தொலைவிலும் நாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.30 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 37 |
| பிடித்தவை | 0 |