Back
வழிபாட்டுத் தலம்
திருப்புல்லாணி கல்யாண சகந்நாதப் பெருமாள் கோவில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருப்புல்லாணி கல்யாண சகந்நாதப் பெருமாள் கோவில்
வேறு பெயர்கள் திருப்புல்லாணி, புல்லாரண்யம், தர்பசயனம்
ஊர் திருப்புல்லாணி
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
தொலைபேசி 04567-254527
உட்பிரிவு 2
மூலவர் பெயர் ஆதிஜெகந்நாதன் (தெய்வச்சிலையார்) நின்ற திருக்கோலம். சக்ரவர்த்தி திருமகன், தர்ப்பசயனம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார் / அம்மன் பெயர் கல்யாணவல்லி, பத்மாஸனி
தலமரம் அஸ்வத்த விருட்சம் (அரசமரம்)
திருக்குளம் / ஆறு சக்கர தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம், வருண தீர்த்தம், தரும தீர்த்தம், ஆதிஸேது (சேதுக்கரை) ராமதீர்த்தம்
வழிபாடு ஆறுகால பூசை
திருவிழாக்கள் ஸ்ரீபட்டாபிராமர் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீபவித்திரோற்சவம், ஸ்ரீஆதிஜெகநாதர் பிரம்மோற்சவம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பாண்டிய, சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர்(நின்ற கோலம்), அரசமரப் பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம். பொதுவாக மகாலட்சுமியை மடியில் இருத்திக் காட்சி தரும் நரசிம்மர், இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.
தலத்தின் சிறப்பு 108- திவ்ய தேசங்களில் ஒன்று. 39-வது திருத்தலமாகும். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்.
சுருக்கம்
கடற்கடவுள் தன் பத்தினியோடு இராமனைச் சரணமடைய அவனுக்கு மோட்சமளித்த ஸ்தலம். புல்லவர், கண்ணுவர், சமுத்திர ராஜன், வீடணன், போன்றோர் எம்பெருமானை இவ்விடத்துச் சரண் புகுந்து பரமபதம் பெற்றதால் இது ஒரு சரணாகதித் தலம் சரணாகதி தத்துவத்திற்கு 108 திவ்யதேசங்களில் இது தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வால்மீகி இராமாயணம், துளசிராமாயணம், மஹாவீர சரிதம், ரகுவம்சம் போன்ற நூல்களில் இத்தலம் குறிக்கப்படுதல் இதன் தொன்மைக்குச் சான்று. சங்க காலத்து புலவர் புல்லங்காடர் என்பவர் இவ்வூரினர். இவ்வூரின் பெயரை வைத்தே அவரை விளித்தமை இவ்வூரின் தொன்மைப் புகழுக்கோர் சான்று. இங்கு ஸ்தல விருட்சமாக அமைந்துள்ள அரசமரம் (அசுவத்தம்) மிகச்சக்தி வாய்ந்தது. லட்சுமி அரசமரத்தில் உறைகிறாள் என்றும், மரங்களில் நான் அரசமரமாக உள்ளேன் (அச்வத்த ஸர்வ விருட்சாணாம்) என்று கீதையில் கண்ணனும் கூறியது. இதன் சிறப்பை விளக்கும். புத்திரப்பேறு இல்லாதவர்கள் ஸேதுவில் நீராடி இத்தலத்தில் உள்ள மூர்த்தியை வணங்கி இங்குள்ள தெய்வாம்சம் பொருந்திய அரசமரத்தினடியில் நாகப் பிரதிஷ்டை, செய்து பால்ப் பாயாசம் அருந்தினால் புத்திரப்பேறு உண்டாகுமென்பது புராண வரலாறு. இத்தலத்தைப் பற்றி திருஞான சம்பந்தர் “அணையில் சூழ்கடல் அன்றடைத்து வழி செய்வதவன்” என்றும் “கடலிடை மலைகள் தம்மால் அடைந்த மால்களும் முற்றி” என்று திருநாவுக்கரசரும் தம் பதிகங்களில் புகழ்ந்துய்ந்தனர். தர்ப்பசயன ராமன், ரசாயனச் சத்து பொருந்திய சக்ர தீர்த்தம் இவ்விரண்டும் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். ஆதிஸேது, என்றழைக்கப்படும் சேதுக்கரை இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. ரத்னாகாரம் என்றும் இதனை அழைப்பர். ஸேது என்ற வட சொல்லுக்கு “அணை” என்று பெயர். எனவே ஸ்ரீ வைஷ்ணவர்கள் இந்த சேதுவைத் “திருஅணை” என்பர். ஒரு காலத்தில் இந்த ஸேதுவே (திரு அணை) இந்தியாவின் தெற்கெல்லையாகத் திகழ்ந்தது என்பதை “ஆதிஸேது ஹைமாசலம்” என்று பழங்கால நூல்களில் கூறுவதிலிருந்து அறியலாம். கண்ணன் திருமேனிபட்ட பிருந்தாவனம் என்ற நெருஞ்சிக்காடு புனிதம் பெற்றது போல், இராமனின் சம்பந்தத்தால் இந்த ஸேதுவும் மேன்மை பெற்றது. இந்த ஸேதுக் கரைக்குப் பக்கத்தில் கடலுக்குள் கிழக்கே சற்று தள்ளி ராமன் கட்டிய அணை என்று கூறப்படும் நீண்டதொரு “கல் அரண்” தென்படும். இதன் அருகில் சென்று பார்ப்பது சகல பாவங்களையும் போக்கும். என்று சொல்லப்படுகிறது. இந்தக் கடற்கரையில் இராம தூதனான அநுமான் தென்றிசை நோக்கி கூப்பிய கரங்களுடன் இராம தியானத்தில் ஆழ்ந்துள்ள காட்சி மிகவும் எழில் வாய்ந்ததாகும். இந்த ஆஞ்சநேயரும் மிகப் பெரும் வரப்பிரசாதியாக மக்களின் துன்பங்களைப் போக்கி அருள் பாலிக்கிறார். இராமாயணத்தோடும், இராமாயணம் பேசுவோருடனும் நீங்காத் தொடர்பு கொண்டது இத்தலம். திருமங்கையாழ்வாரால் மட்டும் 21 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இத்தலத்தில் கிருஷ்ண பரமாத்மா தொட்டில் கண்ணணாக அவதரித்துள்ளார். தசரதர் புத்திரப் பேற்றை வேண்டி இங்கு வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்தாரென்பர். அவர்கள் இங்கு செய்த யாகத்தின் பயனாகவே நான்கு வேதங்களும் இராமன் முதலான 4 புத்திரர்களாக அவதரித்தனர் என்பது வரலாறு. எனவே இன்றளவும் இத்தலம் புத்திரப் பேற்றை நல்கும் புனித தலமாகக் கொள்ளப்படுகிறது. மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியது மட்டுமன்றி இப்பெருமான் மீது அவர் கொண்ட ஈடுபாடும் பெருமைக்குரியதாகும். ஆழ்வார், ஆச்சார்யர்கள் பாசுரம் தவிர்த்து புல்லை, அந்தாதி, திருப்புல்லாணி மாலை, தெய்வச்சிலையான் ஸ்துதி, வாசனமாலை, புல்லாணிப் பெருமாள், நலுங்கு போன்ற நூல்களும் இத்தலத்தைப் பற்றி செய்திகள் தருகின்றன. இத்தலத்தின் சிறப்பைப் பற்றி சங்க நூலான அகநானூற்றின் 70வது பாடல், வேலினை உடைய பாண்டியரது மிக்க பழமையுடைய திருவணைக் கரையின் அருகில் முழங்கும் இயல்பினதாக பெரிய கடலில் ஒலிக்கின்ற துறைமுகத்தில் வெல்லும் போரினில் வல்ல இராமன் அரிய மறையினை ஆய்தற் பொருட்டாக புட்களின் ஒலி இல்லையதாகச் செய்த பலவிழுதுகளையுடைய ஆலமரம் போல இவ்வூரில் எழும் ஒலி அவிந்து அடங்கியது. இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் சேதுபதிகள் தொன்றுதொட்டு இத்திருத்தலத்திற்கு ஆற்றும் தொண்டு அவர்தம் பெருமையை வரலாற்றோடு இணைக்கும் சிறப்பைப் பெற்றதாகும். ரத்னாகாரம் எனப்படும் இந்த சேதுவை கண்ணுற்ற பேர்கட்குப் பாவங்கள் இல்லையென்று இராமபிரானே தெரிவித்துள்ளார். “திரு அணை காண அருவினை இல்லை” என்று இதைக் கூறுவர். இதன் மேன்மையைக் கம்பர். “ஐயனே குபேரனது புண்ணியத்தால் முதலில் நான் அழகாகப் படைக்கப்பட்டேன். பின்பு உனது தவமகிமையால் ராவணன் வந்து குடியேறினான். நெடிது வாழ்ந்தான். நாளடைவில் அரக்கர்கள் பல கொடுஞ்செயல்கள் செய்து இங்கு பாபச் சுமை பெருகிவிட்டது. இனிமேல் என்னால் பொறுக்க முடியாது. நீ விரைவில் வந்து தீமை போக்கி என்னைப் புனிதமாக்கி அருள்“ என்று இராமனை நோக்கி இலங்கா தேவி கையை நீட்டி நின்றது போல் (சேது) இவ்வணை காட்சியளிக்கின்றதென்பதைக் கம்பன் தன் இராமாயணத்தே காட்டுகிறான். “நாங்கள் மணலில் சிறு வீடு கட்டி விளையாடிக் கொண்டிருக்கிறோம். எம்பெருமானே நீயோ அன்று கடலைத்திருத்தி அணைகட்டி விளையாடினாய். உன் பொற்பாதங்களின் மேன்மையை உலகோருணர முடியாது. ஓ, மாகடல் வண்ணனே நீ உன் தேவிமார்களுடன் வந்து நாங்கள் கட்டிக்கொண்டிருக்கும் இந்த மணல் வீடுகளை மிதித்து ஆடி சிதைக்கமாட்டாயா என்று கேட்கிறார் ஆண்டாள். திருமழிசையாழ்வார் சேதுவின் வரலாற்றையே தெளிவாகப் பேசிப் போகிறார். இராமன் வாலியைக் கொன்றதனால் இராமனுக்கு உதவ வந்த வானர சேனையினால் கட்டப்பட்டது, இந்த சேது. எனவே வாலியை வீழ்த்துவதற்கு இதுவே முன்னோடியாயிற்று. இலங்கையை அழிப்பதற்காக கட்டப் பட்ட சேது. இராவணனை ஒடுக்குவதற்காக இராமன் உகப்போடு வீறு நடைபோட ஏதுவாய் அமைந்தது இந்த சேது, என்று திருமழிசையாழ்வார் இந்த சேதுவை மங்களாசாசனம் செய்கிறார். இவ்விருவரின் மங்களாசாசனங்களைப் பார்த்தார் குலசேகராழ்வார். ஆகா, சேதுக்கரைக்கு இப்படியொரு மங்களாசாசனம் நல்கியுள்ளனரே நாமும் இதனை மங்களாசாசனம் செய்ய வேண்டாமோ என்று சிந்தை கொண்டார். இவர்கள் விட்டுவிட்ட ஒன்றைச் சேர்த்து (அதாவது சேது அணையை கட்டுவதற்கு அணில்கள் செய்த பேருதவியை நினைத்து) குரங்குகள் மலைகளைத் தூக்கிக் கொண்டு அத்துடன் கடலில் குதித்து தம்மைக் குளிப்பாட்டிக்கொண்டு ஓடியும் ஆடியும் புரண்டும் ஒரு பாதையை அமைத்தன. குரங்குகளால் போடப்பட்ட மலைக்கற்கள் மற்றும் பாறைகளில் இடையிலிருந்த இடுக்குகளை அப்பாதையின் (சேது அணையின்) நெடுகில் இருந்த மணலில் விழுந்து புரண்டு தம் மேனி முழுவதும் ஒட்டிக்கொண்டு இருந்த மணலைக் கொண்டு சென்று அவ்விடுக்குகளில் தண்ணீர் புகாமல் மணலை உதறி அடைத்து கைங்கர்யம் (பணிவிடை) செய்தனவாம் அணில்கள். எம்பெருமானுக்கு அந்த அணில்களைப் போலக்கூட நான் ஒரு சேவை செய்திலேன். வறிதே நின்றிருக்கும் மரங்கள் போல் வலிய நெஞ்சு படைத்தவனாகிவிட்டேன். வஞ்சகனாகி விட்டேன். அரங்கத்து எம்பெருமானுக்கு ஆட்படாமல் எளியேன் அயர்கின்றேனே என்று, இந்த சேதுக்கரைப் பெயரைச் சொல்லாமல் மறைமுகமாக மங்களாசாசனம் செய்கிறார். இவ்விதம் சேது அணையும் ஆழ்வார்களின் மங்களாசாசனங்களைப் பெற்றதால் திருப்புல்லாணி திவ்ய தேசத்தைத் தரிசித்தபின் இந்த சேதுக்கரைக்கு வந்து சேது அணை இருக்கும் திக்கை நோக்கித் தொழுது கடல் நீராடிச் செல்வர். தற்போது இவ்வணை கடலுக்குள் அமிழ்ந்துவிட்டது. இங்குள்ள மீனவர்கள் தமது சிறு படகுகளில் கடலுக்குள் மூழ்கியுள்ள இவ்வணையருகே பக்தர்களை அழைத்துச் சென்று காட்டி வருவர். எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த நிகழ்வினை சமீபகால விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது. ஆம். விண்வெளியில் உலகைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளிக்கலம் ஒன்று இந்த சேது அணையை முழுவதுமாகப் படம் பிடித்துக் காட்டி நம் புராணங்கூறுவது யாதும் பொய்யே அல்லவென்றும், முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்றும் நிரூபணம் செய்துள்ளது. விபீடணன் சரணாகதிக்கு வந்துள்ளதை இராமபிரானுக்கு தெரிவித்து அவனுக்கு அடைக்கலம் கொடுத்தருள வேண்டுமென்ற பாவனையில் சிரந்தாழ்த்தி, வாய் புதைத்து நிற்கும் அனுமனின் தோற்றம் மனமுருக வைக்கிறது. இது போன்ற ஆஞ்சநேயரை மற்ற திவ்யதேசத்தில் காண்பதரிது. மூலவரின் திருநாமத்தை, “பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன் தெய்வச் சிலையாற் கென் சிந்தை நோய் செப்புமினே“ – 1780 என்று திருமங்கையாழ்வார் எம்பெருமானின் பெயரை இதில் குறிப்பிடுகிறார்.
திருப்புல்லாணி கல்யாண சகந்நாதப் பெருமாள் கோவில்
கோயிலின் அமைப்பு இத்திருக்கோயிலில் 3 மூலவர்களுக்கும், தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் ஆதி ஜகந்நாதர் அமர்ந்த கோலத்தில் கல்யாண விமானத்தின் கீழும், தர்ப சயன இராமர் சயனக்கோலத்தில் ஸ்வஸ்திக் விமானத்தின் கீழும், பட்டாபி இராமர் நின்ற கோலத்தில் புஷ்பக விமானத்தின் கீழும் காட்சியளிக்கின்றனர். மூலவராகத் திகழும் ஆதி ஜகந்நாதர் தன் திருமுகத்தை கிழக்கு திசையில் நோக்குகிறார். பத்மாஸினி தாயார், ஆண்டாள், சந்தான கோபாலர் ஆகியோருக்கு தனித்தனியான சன்னதிகள் உள்ளன. மிக நீண்ட பெரிய பெரிய திருச்சுற்றினைக் கொண்டுள்ளது இக்கோயில். திருச்சுற்றில் அமைந்துள்ள தூண்கள் சிறப்பம்சமுடையவை. திருச்சுற்று மாளிகை உயரமான தளத்தின் மேல் அமைந்துள்ளது. திருச்சுற்று மாளிகையின் தூண் அமைப்புகள் விசயநகர, நாயக்கர் மற்றும் சேதுபதிகளின் கலைப்பாணியில் காணப்படுகின்றன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் இராமேசுவரம் இராமசாமி கோயில், இராமலிங்க விலாசம் - இராமநாதபுரம் அரண்மனை, சேதுக்கரை, ஏர்வாடி தர்கா, உத்திரகோசமங்கை
செல்லும் வழி இராமநாதபுரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இராமேசுவரத்தில் இருந்து 75 கி.மீ. தூரத்தில் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 -12.30 முதல் மாலை 3.30-8.30 வரை
திருப்புல்லாணி கல்யாண சகந்நாதப் பெருமாள் கோவில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருப்புல்லாணி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் இராமநாதபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி இராமநாதபுரம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 21 Sep 2017
பார்வைகள் 87
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்