வழிபாட்டுத் தலம்
நாகை காயாரோகணநாதர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | நாகை காயாரோகணநாதர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | கடல் நாகைக் காரோணம், நாகைக் காயாரோகணம், திருநாகைக்காரோணம் |
| ஊர் | நாகப்பட்டினம் |
| வட்டம் | நாகப்பட்டினம் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| தொலைபேசி | 04365 242 844 |
| உட்பிரிவு | 1 |
| தாயார் / அம்மன் பெயர் | நீலாயதாட்சி |
| தலமரம் | மாமரம் |
| திருக்குளம் / ஆறு | புண்டரீக தீர்த்தம், தேவதீர்த்தம் |
| ஆகமம் | சிவாகமம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | வைகாசி விசாகப் பெருந்திருவிழா, ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறும் பஞ்சகுரோச விழாவில் பஞ்சகுரோச யாத்திரைத்தலங்களாகிய பொய்கைநல்லூர், பாப்பாகோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய சப்த ஸ்தலங்களுக்கும் எழுந்தருளல், நீலாயதாட்சி அம்மனுக்கு ஆடி மாதம் பரணி நட்சத்திரம் கூடிய நாளில் தொடங்கி பத்து நாட்கள் விழா |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நுற்றாண்டு/சோழர்கள் |
| கல்வெட்டு / செப்பேடு | ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன; முதல் இராசராசன், குலோத்துங்கன் முதலியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் அவை. |
| சுவரோவியங்கள் | திருச்சுற்றுச் சுவர்களில் தலபுராணத்துக் காட்சிகளாக புண்டரீக முனிவர் இங்கு இறைவனைப் பூஜித்து முக்தி அடைந்த கதை வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. |
| சிற்பங்கள் | கருவறையில் இறைவன் இலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். சோழர்காலத்து இலிங்கமாக வடிக்கப்பட்டுள்ளது. இங்கு மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்தரின் சிற்பம் உள்ளது. கருவறைத் திருச்சுற்றின் தேவகோட்டங்களில் இலிங்கோத்பவர், பிச்சாடனர், உமையொருபாகர் ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.தலபுராணம் கூறுவது போன்று புண்டரீக முனிவர் திரு உருவம் உட்பிரகார கிழக்குப் பகுதி தூணில் அழகுற செதுக்கப்பட்டிருக்கிறது. அம்பாள் நீலாயதாட்சி இங்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரில் காட்சி அளிக்கிறாள். மேலும் நாகாபரணப் பிள்ளையார், இறைவன் திருமுன் முன் உள்ள மிகப் பெரிய சுதை நந்தி, ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆறுமுகக் கடவுள், பஞ்சமுக விநாயகர் உருவச்சிலை, அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ள நந்தி ஆகிய கலைத்திறன் மிக்க சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. நந்திக்கு தென்புறம் முக்தி மண்டபம் உள்ளது. ஆலயப் பிரகாரத்தில் வல்லப கணபதி, அகோர வீரபத்திரர், பஞ்சமுக லிங்கம், ஆத்ம லிங்கம், மாவடிப் பிள்ளையார், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், பழனி ஆண்டவர், இடும்பன், சூரியன், கஜலட்சுமி, அறுபத்து மூவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர் சன்னிதிகள் இருக்கின்றன. தனி சந்நிதியில் ஒரே கல்லினால் ஆன ஆறுமுகப் பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் அருகில் காட்சி தருகின்றனர். |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவார மூவரால் பாடல் பெற்ற தலம்.பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 82-ஆவது சிவதலமாகும். அதிபத்த நாயனாரின் அவதாரத் தலம். ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. |
|
சுருக்கம்
சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாகவும் இவ்வூர் விளங்கியுள்ளது. நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகம் சென்று நாககன்னியைக் கூடிப்பெற்ற புதல்வனே தொண்டை நாட்டை அரசாண்ட இளந்திரையன் எனப் பத்துப்பாட்டால் அறிகிறோம். குறுந்தொகைப் புலவர் ஒருவரின் பெயர் நன்நாகையார் எனக் கூறப்படுகிறது. அதிபத்த நாயனார் அவதரித்து, வழிபட்டு முத்தி அடைந்தத் திருப்பதியாகும்.அதிபத்த நாயனார் வழிபட்ட அமுதீசர் திருக்கோயில் நுளைபாடியில் (நம்பியார் நகர்) உள்ளது. அதிபத்த நாயனாரின் திருவுருவச் சிலை, நாகைக்காரோணம் திருக்கோயிலில் உள்ளது. சேக்கிழார் பெருமான் குறிப்பிடும் நாகப்பட்டினத் திருநகர "நுளைபாடி" என்பது தற்போது "நம்பியார்நகர்" என்று வழங்கப்படுகின்றது. இது நாகப்பட்டின நகரின் ஒரு பதியாகும். ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. (தியாகராஜர் - சுந்தர விடங்கர், நடனம் - பாராவாரதரங்க நடனம்). கயிலையையும், காசியையும் போல இத்தலம் முத்தி மண்டபத்தைக் கொண்டுள்ளது. மூவர் பெருமக்களால் பாடல் பெற்றத் திருத்தலம். அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களும் பெற்றத் தலம். இத்தல ரதம் கண்ணாடித் தேராகும். நாகைக்காரோணப் புராணம் 61 - படலங்களையும், 2506 பாடல்களையும் கொண்ட இந்நூல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப் பெற்று 1860 அரங்கேற்றம் பெற்றது. 2506 பாடல்களைக் கொண்ட இப்புராணத்தைத் திருவாவடுதுறை ஆதீனம், 1970 ம் ஆண்டு, குறிப்புரையுடன் வெளியிட்டது.
|
|
நாகை காயாரோகணநாதர் கோயில்
| கோயிலின் அமைப்பு | நகரின் மத்தியில் இக்கோயில் 180 மீட்டர் நீலம், 75 மீட்டர் அகலம் நிலப்பரப்பு கொண்டு, இரண்டு திருச்சுற்றுகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சதுரவடிவ கருவறையில் இறைவன் இலிங்க வடிவில் காணப்படுகிறார். நீலாயதாட்சி அம்மன் தனித் திருமுன் கொண்டுள்ளார். சுவாமி கோபுரம் அம்பாள் கோபுரம் ஆகியன கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. கோபுர வாயிலையடுத்து மகாமண்டபம், நந்தி மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியன கலை வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் சுந்தரவிடங்கர் எனப்படுகிறார். 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் இத்தலத்தில் அவதரித்து முக்தியும் அடைந்தவர் அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாக இவ்வாலயம் திகழ்கிறது. மூலவருக்கு அருகில் தியாகராஜர் சுந்தர விடங்கராய் உள்ள சன்னிதியும் இருக்கிறது. காசியைப் போல காயாரோகணேசுவரர் கோயிலில் முக்தி மண்டபம் உள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | அமரநந்தீஸ்வரர் கோயில், சட்டை நாதா் கோயில், அகஸ்தீஸ்வர சுவாமி கோயில், நாகூர் நாகநாதர் கோயில், நாகூர் தர்கா, நடுவதீஸ்வரர் கோயில் |
| செல்லும் வழி | நாகப்பட்டிணம் இரயில் நிலையதிலிருந்து, இக்கோவில் 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6-30 மணி முதல் 11-30 மணி மாலை 4-30 மணி முதல் 8-30 மணி |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 34 |
| பிடித்தவை | 0 |