Back
வழிபாட்டுத் தலம்
சௌந்தரநாதசுவாமி கோவில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் சௌந்தரநாதசுவாமி கோவில்
வேறு பெயர்கள் திருநாரையூர்
ஊர் திருநாரையூர்
வட்டம் காட்டுமன்னார்குடி
மாவட்டம் கடலூர்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் சௌந்தரநாதர்
தாயார் / அம்மன் பெயர் திரிபுரசுந்தரி
தலமரம் புன்னாகம்
திருக்குளம் / ஆறு காருண்ய தீர்த்தம்
வழிபாடு காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
திருவிழாக்கள் நம்பியாண்டார் நம்பிகள் குரு பூசை ஆண்டு தோறும் புனர்பூச நாளில் கொண்டாடப்படுகிறது.
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் சௌந்தரநாதர் சிவலிங்கத் திருமேனி. அம்மன் திருமுன்னில் தேவி காட்சி தருகிறார். இடபாரூடரின் வண்ணச் சுதைச் சிற்பம் காணப்படுகின்றது. நாரை, பொல்லாப்பிள்ளையார், இராசராசன், சந்திரசேகர், நால்வர் ஆகிய உலாப்படிமங்களாகிய செப்புத் திருமேனிகள் உள்ளன. கருவறைக் கோட்டத்து கடவுள்களாக தென்முகக் கடவுளும், கொற்றவையும் அமைந்துள்ளனர். சந்தானாசாரியர்கள், அடுத்திருப்பது நால்வருடன் சேக்கிழாரும், அகத்தியரும், பகமுனிவரும் ஒரு சேர சிலாரூபத்தில் எழுந்தருளியுள்ளனர். பொல்லாப்பிள்ளையார், வலம்புரி விநாயகராக தரிசனம் தருகின்றார். நம்பியாண்டார் நம்பிகள், ராசராசன் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி, திருமூலநாதர் சந்நிதிகளும், சனிபகவான், பைரவர், சூரியன் திருவுருவங்கள் ஒரே வரிசையிலும் வைக்கப்பட்டுள்ளன.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
சுருக்கம்
சோழநாட்டில் அமைந்துள்ள காவிரியின் வடகரைத் தலம். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த தலம். இங்குள்ள பொல்லாப் பிள்ளையாரின் அருளைக் கொண்டு இவர், தில்லையில் சேமித்து வைத்திருந்த தேவாரத் திருமுறைகளை உலகிற்கு வெளிப்படுத்தினார்.
சௌந்தரநாதசுவாமி கோவில்
கோயிலின் அமைப்பு கிழக்கு நோக்கிய திருக்கோயில். முகப்புவாயிலைக் கடந்ததும் உள்இடம் விசாலமாகவுள்ளது. நந்திமண்டபம்-கொடிமரத்து விநாயகர் உள்ளார். கொடிமரமில்லை. வலப்பால் அம்பாள் சந்நிதி. உள்கோபுரம் மூன்று நிலைகளை உடையது. உள் முகப்பு வாயிலின் மேற்புறம் ரிஷபாரூடர் வண்ணச் சுதையில் அழகுறக் காட்சி தருகிறார். நேரே மூலவர் சந்நிதி தெரிகிறது. உட்பிராகாரத்தில் வலமாக வரும்போது சந்தானாசாரியர் சந்நிதி உள்ளது. அடுத்திருப்பது நால்வருடன் சேக்கிழாரும், அகத்தியரும், பகமுனிவரும் ஒரு சேரசிலாரூபத்தில் எழுந்தருளியுள்ள சந்நிதி. அடுத்த தரிசனம் இத்தலத்திற்குச் சிறப்பாகவுள்ள பொல்லாப் பிள்ளையார் சந்நிதியாகும். இதைச் சுயம்பிரகாசர் சந்நிதி என்றும் அழைக்கின்றனர். (பொள்ளல் - உளி கொண்டு செதுக்குதல். இவ்வாறு செதுக்கப்படாமல் தானே தோன்றியவர். பொள்ளலில்லாப் பிள்ளையார் பொல்லாப்பிள்ளையார் என்றாகி விட்டது.) சந்நிதிக்கு முன் மங்களூர் ஓடுவேயப் பெற்ற மண்டபம் உள்ளது. வலம்புரி விநாயகராகப் பிள்ளையார் தரிசனம் தருகின்றார். சந்நிதியில் உட்புறத்தில் திருமுறை கண்ட வரலாறு வண்ணப் படங்களாக வைக்கப்பட்டுள்ளன. நம்பியாண்டார் நம்பிகள், ராசராசன் ஆகியோரின் சிலாரூபங்கள் உள்ளன. அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி, திருமூலநாதர் சந்நிதிகளும், தலமரமும் யாகசாலையும் உள்ளன. அடுத்துள்ள சந்நிதியில் நவக்கிரகங்களை சனிபகவான், பைரவர், சூரியன் திருவுருவங்கள் ஒரே வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. வலம்முடித்து மண்டபத்துள் நுழைந்தால் வலப்பால் நடராசசபை உளது. இடப்பால் நம்பியாண்டார் நம்பிகள் பாடியுள்ள திருநாரையூர் இரட்டைமணிமாலைப் பாடல்களும் தேவாரப் பதிகங்களும் பதிக்கப்பட்டுள்ளன. துவாரபாலகர்களை வணங்கி உட்சென்றால் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைத்திருத்தலைக் காணலாம். இவற்றுள் நாரை, பொல்லாப்பிள்ளையார், இராசராசன், சந்திரசேகர், நால்வர் முதலியன தரிசிக்கத்தக்கன. கோஷ்டமூர்த்தங்களுள் தட்சிணாமூர்த்தியும், துர்க்கையும் தனிச்சந்நிதிகளாக ஆக்கப்பட்டு வழிபடப் பெறுகின்றன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் ஞானபுரீசுவரர் கோயில், மங்கலம் காத்த அய்யனார் கோயில், சௌந்தரேசுவரர் கோயில்
செல்லும் வழி சிதம்பரம் - காட்டுமன்னார் கோயில் (காட்டுமன்னார்குடி) சாலையில், குமராட்சியை அடுத்து, சாலையில் திருநாரையூர் 1 கி.மீ. என்று கைகாட்டி உள்ள இடத்தில் அதுகாட்டும் பாதையில் (இடப்புறமாக) சென்றால் தலத்தையடையலாம். சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. சாலையில் சிமெண்ட் பெயர்ப்பலகையும் உள்ளது. சற்று குறுகலான பாதை. கோயில்வரை செல்லலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை
சௌந்தரநாதசுவாமி கோவில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருநாரையூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருநாரையூர், சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி சிதம்பரம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 23 Nov 2018
பார்வைகள் 43
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்