வழிபாட்டுத் தலம்
வாஞ்சிநாதர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | வாஞ்சிநாதர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | ஸ்ரீவாஞ்சியம், வாஞ்சியம்பதி, சந்தனவனம், ஜாந்தாரண்யம், பூகைலாசம் |
| ஊர் | ஸ்ரீவாஞ்சியம் |
| வட்டம் | நன்னிலம் |
| மாவட்டம் | திருவாரூர் |
| தொலைபேசி | +91-4366 291 305, 94424 03926, 93606 02973. |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | வாஞ்சிநாதேஸ்வரர் |
| தாயார் / அம்மன் பெயர் | மங்களநாயகி, வாழவந்த நாயகி |
| தலமரம் | சந்தனமரம் |
| திருக்குளம் / ஆறு | குப்த கங்கை, எமதீர்த்தம் |
| ஆகமம் | காமீகம் |
| வழிபாடு | காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
| திருவிழாக்கள் | மாசி மகம் பிரம்மோற்சவம், கார்த்திகை ஞாயிறு, ஆடிப்பூரம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/ |
| கல்வெட்டு / செப்பேடு | இக்கோயிலில் இருபத்தேழு கல்வெட்டுக்கள் படி எடுக்கப் பட்டிருக்கின்றன. அவைகளில் ஏழு பிற்காலச் சோழர்களது. ஏழு பாண்டியர்களுடையனவும், ஒன்று நாயக்கர் காலத்தவையாகும். திருவாஞ்சியம் குலோத்துங்க சோழவளநாட்டில் பனையூர் நாட்டில் திருவாஞ்சியம் எனக் கூறப்பட்டது. இவ்வூருக்கு இராஜகம்பீர சதுர்வேதி மங்கலம் என்ற மறுபெயர் உண்டு. நிலவிற்பனை, நிலதானம் வரி தள்ளுபடி இவைகளைப் பற்றிக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இரண்டாம் இராஜராஜதேவன் கல்வெட்டு ஒன்று கோயிலில் சேர்ந்த நிலங்களின் வரிசையைக் கூறுகிறது. இவ்வரசன் காலத்தில் அம்மனுக்கு ஒரு கோயில் கட்டப்பட்டு, பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. அப்போது நிலமும் வீடும் தானம் செய்யப்பட்டன. குலோத்துங்கன் காலத்தில் திருப்பள்ளியறை நாச்சியாருக்குக் கோமாங் குடியான் ஒருவன் நிலதானம் செய்தான். மங்களாம்பாள் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டின்படி, இராஜராஜதேவன் II காலத்தில் (கி.பி.18) திருவாஞ்சியமுடையார் கோயிலில் அம்மனுக்கு ஒரு கோயில்கட்டிப் பிரதிட்டை செய்யப் பட்டது. அப்போது நிலம் வீடுகள் தானம் செய்யப்பட்டன. ஒரு நிலத்தில் இருந்த கல்வெட்டின் படி, சிதம்பரத்துப் பிச்சை மடத்து அகோர சிவாசாரியார் சீடர் அச்சுற்ற மங்கலத்துப் பெருமாநாயனார் பண்டாரம் அம்மடத்திற்கு முண்டு வான்சேரியில் ஒரு வேலி நிலம் வாங்கியதாகக் கூறப் பெற்றுள்ளது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் இலிங்க வடிவில் வாஞ்சிநாதர் காணப்படுகிறார். கருவறை விமானக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. கொடுங்கையில் பூதகணங்களின் சிற்பங்கள் வரிசையாக உள்ளன. விமானத்தின் தளங்களில் சுதையாலான அர்த்த நாரீசுவரர், ஆலமர் செல்வன், வீணாதரர், கஜசம்மாரர், கண்ணப்பர், சட்டைநாதர், பிட்சாடனர், ஊர்த்துவதாண்டவர், அட்ட சம்மார மூர்த்திகள் போன்ற திருவுருவங்கள் காட்சியளிக்கின்றன. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். சோழர் கால கலைப் பாணியைப் பெற்றுள்ளது. |
|
சுருக்கம்
திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 70-ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர்மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு எமனுக்குத் தனிக்கோயிலுள்ளது. இயமன், பைரவர் இருவருக்கும் அதிகாரமில்லாத தலம் என்றும் காசியை விடவும் நூறு மடங்கு உயர்ந்த தலமாகவும் முனிவர்களால் கூறப்பட்டுள்ளது. காசிக்கு நிகராக ஆறு திருத்தலங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் இத்தலமும் ஒன்று. கிரகண சமயங்களில் மற்ற அனைத்து கோயில்களும் நடையடைக்கப்படுவது வழக்கம். ஆனால் வாஞ்சியம் திருக்கோயிலில் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனாருக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடத்தப்படுகின்றது. இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு அடுத்தப்படி நிகரற்ற தலம் திருவாஞ்சியம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும், தேவியும் பிரகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியருள்கின்றனர். திருவாஞ்சியம் கோயில் 3.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி இயமனையும் ஊர்தியாகக் கொண்ட பெருமையுடையவர். அவருக்கு இருப்பது போன்றே இயமனுக்கும் தனித்திருக் கோயில் உண்டு; இயமனுக்கு அருகே சித்திரகுப்தனுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ள சிறப்புடன் கட்டடக் கலை அமைந்துள்ளது. ஆலயம் 3 கோபுரங்களையும், 3 விமானங்களையும், 3 பெரிய பிராகாரங்களையும் கொண்டது. இரு பிராகாரங்களைக் கடந்து, கருவறையில் மூலவராகிய காந்தரண்யர் என்றும் அழைக்கப்படுகின்ற சுயம்பு மூர்த்தியைக் கண்டு வழிபடுவர். கட்டடக் கலை நோக்கில் கருவறையைக் காணின், விமானத்தில் அர்த்த நாரீசுவரர், ஆலமர் செல்வன், வீணாதரர், கஜசம்மாரர், கண்ணப்பர், சட்டைநாதர், பிட்சாடனர், ஊர்த்துவதாண்டவர், அட்ட சம்மார மூர்த்திகள் போன்ற திருவுருவங்கள் காட்சியளிக்கின்றன. இவ்வாலயத்தில் வனப்புமிகு சிற்பங்கள் பிராகாரத்திலும் மகாமண்டபத்திலும் காணலாம். மூர்த்தி தலம் ஆகிய பெருமைகளுடன் தீர்த்தப் பெருமையும் திருவாஞ்சியம் கொண்டு விளங்குகிறது. குப்தகங்கை எனும் இவ்வாலயத் திருக்குளம் சுமார் 440 அடி நீளமுள்ளது. இந்தத் தீர்த்தமும் தொன்மைச் சிறப்புடையது.
|
|
வாஞ்சிநாதர் கோயில்
| கோயிலின் அமைப்பு | திருக்கோயில் 3 கோபுரங்களை கொண்டுள்ளது. வாஞ்சிநாதரின் கருவறை விமானம், அம்மன் கருவறை விமானம் உட்பட 3 பெரிய பிரகாரங்களையும் கொண்டது. கருவறை விமானம் திராவிட பாணியில் எட்டுப்பட்டை சிகரங்களுடன் விளங்குகிறது. ஒரு தளத்தினை உடையதாக உள்ளது. தளங்களின் நாற்புறமும் சுதையாலான இறையுருவங்கள் அமைந்துள்ளன. அதிட்டானம் முதல் |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | மதுவனேஸ்வரர் கோயில், திருமீயச்சூர் கோயில், திருவாரூர் பெரிய கோயில் |
| செல்லும் வழி | மயிலாடுதுறையிலிருந்து 25கி.மீ தொலைவில் உள்ள நன்னிலத்திலிருந்து எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00-12.00 முதல் மாலை 3.00-8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 39 |
| பிடித்தவை | 0 |