வழிபாட்டுத் தலம்
கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில் |
|---|---|
| ஊர் | கிருஷ்ணாபுரம் |
| வட்டம் | பாளையங்கோட்டை |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | வெங்கடாஜலபதி |
| தாயார் / அம்மன் பெயர் | அலர்மேல் மங்கை, ஸ்ரீதேவி, பூதேவி |
| தலமரம் | துளசி |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.16-ஆம் நூற்றாண்டு / கிருஷ்ணப்ப நாயக்கர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் மூலவர் வெங்கடாசலபதி உருவம் கருங்கல்லால் நான்கு அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி புடைசூழ அமைந்துள்ள பெருமாளின் மேலிரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் பற்றியுள்ளன; கீழிரண்டு கைகள் அபய மற்றும் கடிஹஸ்த முத்திரைகள் காட்டுகின்றன. உற்சவர் பெயர் ஸ்ரீனிவாசன், மூலவரைப் போலவே நான்கு கரங்களுடன் நின்றகோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி புடைசூழ காட்சியளிக்கிறார். கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் உள்ள வீரப்ப நாயக்கர் மண்டபத்தின் நுழைவாயிலில் இரண்டு யானைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலில் மொத்தம் 42 அழகு மிளிரும் சிற்பங்களைக் காணமுடிகின்றது. இவை உலகப்புகழ் பெற்றவை. மண்டபத்தின் தூண்களில் ஆளுயர உருவம் கொண்ட எழில் கொஞ்சும் சிற்பங்கள் புராணங்களின் அடிப்படையில் செதுக்கப்பட்டுள்ளன. ஆறு தூண்கள் மிக நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட சிற்பங்களை உள்ளடக்கியுள்ளன. இக்கோயிலிலுள்ள வீரப்பர் மண்டபமும், அரங்க மண்டபமும் உன்னத சிற்பங்களைக் கொண்டுள்ளன. வீரப்பர் மண்டபத்தின் முன்னுள்ள அர்ஜுனன், குறத்தி ராஜகுமாரனைத் தூக்கிச் செல்லுதல், நாடோடிப் பெண்ணின் நடனம், கர்ணன், குறவன் அரசகுமாரியைத் தூக்கிச் செல்லுதல், தேவகன்னியின் நடனம், மன்மதன், அரங்க மண்டபத்திலுள்ள வீரபத்திரன், மன்மதன், பீமன், புருஷாமிருகம், தருமர் ஆகிய சிற்பங்கள் உள்ள கற்றூண்கள், நடனமாது, ரதிதேவியும் தோழிகளும், வீரபத்திரன் ஏவலாளர் ஆகிய சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பியின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன. |
| தலத்தின் சிறப்பு | 500 ஆண்டுகள் பழமையானது. நாயக்கர் கலைப்பாணி |
|
சுருக்கம்
கி.பி.16-ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசின் கீழ் தமிழகத்தை ஆண்ட மன்னருள் ஒருவரான கிருஷ்ணப்ப நாயக்கர் இந்த கோவிலைக் கட்டி சிற்பங்களை நிறுவியுள்ளார். 110 அடி உயரத்தில் ஐந்து நிலை இராஜகோபுரமும், கருங்கல்லிலான திருச்சுற்று மதில்களும் சூழப்பெற்று விசாலமாக 1.8 ஏக்கர் (0.73 ஹெக்டேர்) பரப்பில் நாயக்கர் கலைப்பாணியில் எழிலுடன் விளங்கும் அளவில் பெரிய வாழ்வியல் மற்றும் புராண சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. கிருஷ்ணாபுரம் கோவில் ஒரு வைணவ வழிபாட்டுத் தலம் ஆகும். கிருஷ்ணப்பரின் மகன் வீரப்பரின் திருப்பணிகளும் இங்கு உள்ளன. கிருஷ்ணப்பர் நினைவாக இங்குள்ள கோவிலை அடுத்த ஊர் கிருஷ்ணாபுரம் என அழைக்கப்படுகிறது.
|
|
கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில்
| கோயிலின் அமைப்பு | சதுர வடிவக் கருவறை. கருவறையைத் தொடர்ந்து அர்த்தமண்டபம் அமைந்துள்ளது. அர்த்த மண்டப நுழைவாயிலில் ஆஜானுபவ தோற்றம் கொண்ட துவாரபாலகர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. அலர்மேல்மங்கைத் தாயாரின் தனி சன்னதி பிரகாரத்தில் உள்ளது. இக்கோவிலில் பந்தல் மண்டபம், வாகனமண்டபம், ரெங்கமண்டபம், நாங்குநேரி ஜீயர் மண்டபம் என்ற பெயர்களில் சில மண்டபங்கள் உள்ளன. பந்தல் மண்டபத்து தூண்களில் புஷ்பப் பொய்கை, பலகை மற்றும் வரிக்கோலம் போன்ற வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. விழாக்களின்போது ஊஞ்சல் மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளை ஊஞ்சலில் அமர்த்துகிறார்கள். வசந்தமண்டபம் கலை அழகுற அமைக்கப்பட்டுள்ளது. ஜீயர் மண்டபத்தில் அழகான தூண்களில் கேரளா கோயில்களைப்போல பாவைவிளக்கு புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. சொர்க்கவாசல் யாகசாலை மண்டபத்திற்கு மேற்குப்புறத்தில் உள்ளது. மணிமண்டபத்தில் பல யாளி-யானை தூண்கள் அணிவகுத்துள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | தென்காசி ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில், குற்றாலநாதர் கோயில், ஆழ்வார்குறிச்சி பெருமாள் கோயில் |
| செல்லும் வழி | திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் சாலையில் 10 கி.மீ. தொலைவில் கிருஷ்ணாபுரம் அமைந்துள்ளது. ஊரின் மத்தியில் வேங்கடாசலபதி திருக்கோயில் உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 மணி முதல் இரவு 5.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Mar 2019 |
| பார்வைகள் | 104 |
| பிடித்தவை | 0 |