வழிபாட்டுத் தலம்

அருள்மிகு திருமறை நாதர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு திருமறை நாதர் கோயில் |
---|---|
வேறு பெயர்கள் | திருவாதவூர் |
ஊர் | திருவாதவூர் |
வட்டம் | மேலூர் |
மாவட்டம் | மதுரை |
தொலைபேசி | 0452-2344360 |
உட்பிரிவு | 1 |
மூலவர் பெயர் | திருமறைநாதர் |
தாயார் / அம்மன் பெயர் | வேதநாயகி, ஆரணவல்லி |
தலமரம் | மகிழமரம் |
திருக்குளம் / ஆறு | கபிலதீர்த்தம், பைரவ தீர்த்தம் |
வழிபாடு | காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
திருவிழாக்கள் | மாசி மகாசிவராத்திரி, புரட்டாசி நவராத்திரி, வைகாசி மாத பிரம்மோற்சவம் மற்றும் திருக்கல்யாணம், ஆவணிமூலத் திருவிழா, திருக்கார்த்திகை |
காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/ இரண்டாம் வரகுணப்பாண்டியன் |
கல்வெட்டு / செப்பேடு | பிற்காலப்பாண்டியர்களின் கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் வரிசையில் கி.பி. 1223ம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டே தொன்மையானதாகும். இக்கல்வெட்டு இவ்வாலயத்து ஈசனை ‘‘திருமறைநாயனார்’’ என்று குறிக்கின்றது. தென்ன கங்கதேவன் என்ற உயர்நிலை அலுவலன் ஒருவன், சிலரால் இவ்வாலயத்திற்கு அளிக்கப் பெற்ற நிலங்களுக்கு அரசு வரிகளை நீக்கி ஆணையிட்டமையை விவரிக்கின்றது. மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மற்றொரு கல்வெட்டு குழைஞ்ஞாள் ஆச்சன் எனப் பெறும் ஆலால சுந்தரநங்கை என்ற ஆடற்குலப்பெண் தன் கணவன் பட்டன் தேவன் துணையோடு இவ்வாலயத்திற்கெனச் சந்திரசேகரப்பெருமான், கெளரி ஆகிய தெய்வங்களுக்குத் திருமேனி எடுத்தமை பற்றியும், அதற்காக அப்பெண் பெற்ற கோயில் மரியாதைகள் பற்றியும் விவரிக்கின்றது. சோழ நாட்டை வென்று தன்னை அடிமைப்படுத்திய முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டினின் ‘பூமருவிய திருமடந்தையும்...’ எனத் தொடங்கும் மெய்கீர்த்திப் பாடலுடன் காணப்பெறும் இம்மன்னவனின் கல்வெட்டுகளில் திருவாதவூர் தென்பறம்பு நாட்டில் இடம் பெற்ற ஓரூர் என்பதைக் குறிப்பிடுவதோடு, ஈசனின் பெயரினை ‘வாதபுரி ஈசர்’ என்றும் குறிப்பிடுகின்றன. மாறவர்மன் வீரபாண்டியனின் கல்வெட்டுச் சாசனமொன்றில் கி.பி. 1281ல் திருமறைநாயனார் எனப்பெறும் இவ்வாலயத்து ஈசனின் திருமேனியை விழாக்காலங்களில் தோளில் சுமந்தவாறு வீதிவலம் வரும் எண்மர்க்கு நிலம் அளித்தது பற்றி பேசுகின்றது. மாறவர்மன் குலசேகர பாண்டியனின் சிலா சாசனம் ஒன்றில் நல்லக்கோன் என்பான் விக்கிரம பாண்டிய விழுப்பரையர் என்பவரின் துணையோடு முக்தீஸ்வரம் உடையார் என்ற பெயரில் இவ்வாலயத்தில் ஈசனுக்கென ஒரு சிற்றாலயம் அமைத்ததை விவரிக்கின்றது. முதலாம் குலசேகர பாண்டியன் காலத்தில் பிக்ஷாண்டார் என்ற கைக்கோளமுதலி ஒருவரும், மறைதந்தான் ராகுத்தன் என்பாரும் இத்திருக்கோயிலில் திருவிளக்கு ஒன்று எரிப்பதற்காக அளித்த சாவா மூவா பேராடுகளை இவ்வாலயத்து பசுமடத்து இடையர்கள் அவற்றைப் பேணுவதாக ஒப்புக் கொண்டு திருவிளக்கிற்கு நாளும் நெய் அளக்க சம்மதம் தெரிவித்ததை மற்றொரு கல்வெட்டு விவரிக்கின்றது. இவ்வூரின் பேரேரியை அவ்வூர் மக்களும், அரசனும், அலுவலர்களும் பேணிக் காத்தமையை பல சாசனங்கள் எடுத்துரைக்கின்றன. திவாகரன் எனும் ஸ்தபதியான பெருமாள் பெரியான் என்ற இக்கோயிலின் கட்டுமான சிற்பாச்சாரியன் ஒருவன் பற்றியும் அவனுக்கு திருக்கோயிலும், அரசனும் அளித்த சலுகைகள் பற்றியும் பாண்டிய மன்னனின் கல்வெட்டொன்று சுட்டுகின்றது. திருவாதவூரில் திருவாதவூருடையாரான மணிவாசகர் கோயில் அருகே நடப்பெற்றிருந்த ஒரு கற்பலகையில் இருந்த ஒரு கல்வெட்டு சாசனத்தினை இந்திய தொல்லியல் துறையினர் 1903ம் ஆண்டில் படி, எடுத்து தென்னிந்திய கல்வெட்டு சாசனங்கள் தொகுதி எட்டில் 423ம் எண் கல்வெட்டாகப் பதிப்பித்துள்ளனர். அதில் கோமாறபன்மரான திருபுவன சக்கரவர்த்திகள் சோணாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் பண்ணியருளிய சுந்தரபாண்டிய தேவரின் பதினாறாம் ஆட்சியாண்டில் தென்பறம்ப நாட்டுத் திருவாதவூரில் திருவாதவூர் பெருமாள் ஸ்ரீபாதத்துத் திருமடவளாகத்தில் தான் இருந்தவாறு அம்பலத்தாடி நல்லூரைச் சார்ந்த மும்முடிச்சோழன் பூவண முனிவனான அதிகைமான்தேவன் என்பான் அறக்கொடையாக நிலம் வாங்கி திருமடத்திற்கு அளித்தமை பற்றி விவரிக்கப் பெற்றுள்ளது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் மணிவாசகரின் திருக்கோயில் சீர்மையுடன் விளங்கியதை இக்கல்வெட்டு காட்டி நிற்கின்றது.திருக்கோயில்களில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை வழிபாட்டில் இடம் பெற்றமையை பல கல்வெட்டு சாசனங்கள் எடுத்துரைக்கின்றன. |
சுவரோவியங்கள் | இல்லை |
சிற்பங்கள் | கருவறையில் இலிங்க வடிவில் திருமறை நாதர், ஆரணவல்லி அம்மன், அனுக்ஞை விநாயகர், சிந்தாமணி விநாயகர், காளீஸ்வரர், விஸ்வநாதர், நடராஜர், வியாக்கிரபாதர், பதஞ்சலி, மாணிக்கவாசகர் மற்றும் சுந்தரர் ஆகிய சிற்பங்கள் காணக்கிடக்கின்றன. மகாவிஷ்ணுவின் காவல் தெய்வமாக ஸ்தாபிக்கப்பட்ட புருஷ மிருகத்துக்கு இங்கு சிலை உள்ளது. நூற்றுக்கால் மண்டபத்து கொடுங்கைகள், ஆறுகால் மண்டபத்து கொடுங்கைகள், மற்றும் அம்மனின் சந்நிதியிலுள்ள கொடுங்கைகளிள் சிற்பங்கள் கலைநயம் மிக்கவை. |
தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. மாணிக்கவாசகர் பிறந்த திருத்தலம். பிற்காலப் பாண்டியர், நாயக்கர், நகரத்தார் கலைப்பாணியைக் கொண்டுள்ளது. |
சுருக்கம்
திருவாதவூர் தலத்தில் இறைவன் சுயம்பு இலிங்கம் அருள்பாலிக்கிறார். இலிங்கத்தின் தலைப்பகுதியில் பசுவின் குளம்படிகள் காணப்படுவதாக நம்பப்படுகிறது. திருவாசகம் இயற்றிய மாணிக்கவாசகருக்கு சிலம்பொலி கேட்பிக்கச் செய்ததாக கூறப்படுகிறது. இத்தல பைரவரைத் தொடர்ந்து 8 அஷ்டமி தினங்களில் வழிபட்டு வந்தால் தொலைந்து வாகனங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல சனி, பைரவர் மற்றும் திருமறைநாதரை 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான தோஷங்களும் அகன்றுவிடும் என்பதுவும் தொன் நம்பிக்கை.
|
அருள்மிகு திருமறை நாதர் கோயில்
கோயிலின் அமைப்பு | இக்கோயில் பரந்த பரப்பளவில் அமைந்துள்ளது. ஐந்து நிலைகள் உடைய ராஜகோபுரம் பிற்காலப் பாண்டியர் கட்டுமானத்தில் காணப்படுகின்றது.. கருவறையில் இலிங்க வடிவில் திருமறைநாதர் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளார். ஆலயத்தின் கிழக்கே நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இக்கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்டது என்பர். இந்த மண்டபத்தின் கொடுங்கைகள் சிற்பநுட்பம் வாய்ந்தவை. மூலவரின் கருவறைச் சுவர்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை. இங்கு அனுக்ஞை விநாயகர் சந்நிதி அருகிலுள்ள ஆறுகால் மண்டபம் ‘கொடுங்கைகளுக்குப் புகழ் பெற்றதாகும். நடராசருக்கென அழகிய சந்நிதி உள்ளது. அம்மனின் சந்நிதியிலுள்ள கொடுங்கைகளும் வேலைப்பாடுமிக்கவை. மகாவிஷ்ணுவின் காவல் தெய்வமாக ஸ்தாபிக்கப்பட்ட புருஷ மிருகத்துக்கு இங்கு சிலை உள்ளது. |
---|---|
பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், யானைமலை இலாடன் (முருகன்) கோயில், திருச்சுனை அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில் |
செல்லும் வழி | திருவாதவூர் திருமறைநாதர் கோயில் மதுரையிலிருந்து வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும், மேலூரிலிருந்து மேற்கே எட்டு கி. மீ., தொலைவிலும் உள்ள திருவாதவூரில் அமைந்துள்ளது. |
கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 11.00 மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 வரை |
வழிபாட்டுத் தலம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 09 Jun 2017 |
பார்வைகள் | 76 |
பிடித்தவை | 0 |