வழிபாட்டுத் தலம்
இரும்பேடு பூண்டி அருகர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | இரும்பேடு பூண்டி அருகர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | பொன்னெழில் நாதர் கோயில் |
| ஊர் | இரும்பேடு |
| வட்டம் | ஆரணி |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| உட்பிரிவு | 6 |
| மூலவர் பெயர் | பொன்னெழில் நாதர், பார்சுவநாதர் |
| தாயார் / அம்மன் பெயர் | ஜுவாலா மாலினி அம்மன் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு / பிற்காலச் சோழர் |
| கல்வெட்டு / செப்பேடு | சம்புவராயனின் பாடல் கல்வெட்டொன்று இக்கோயிலை “வீர வீர ஜீனாலயம்” எனக் குறிப்பிடுகிறது. நாட்டுப்பிரிவு முதல், எல்லை கூறி கல் நடுதல் வரை முழுமையும் பாடலால் அமைந்த கல்வெட்டு இங்கு காணப்படுகின்றது. சோழர் காலத்தில் சிற்றரசராக இருந்த சம்புவராய அதிகாரிகள் பலர் இக்கோயில் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனர். |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இரும்பேடு பூண்டி அருகர் கோயிலில் உள்ள மகாவீரர் முதலான கற்சிற்பங்களும், இருபதுக்கும் மேற்பட்ட சமணச் செப்புத் திருமேனிகளும் கோயிலின் பெருமையைப் பறைசாற்றி நிற்கின்றன. ஆதிநாதர், பொன்னெழில் நாதர் எனவும் வழங்கப்படும் மூலவர் சிற்பம் 3 அடி உயரமுடைய தனிக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்திலுள்ள தருமதேவியின் திருவடிவம் சிறிது உயரமான பீடத்தின் மேல் வடிக்கப்பட்ட தனிச்சிற்பமாகும். தேவியின் இருகுழந்தை வடிவங்களும், பணிப்பெண் வடிவமும் சிறியனவாக உள்ளன. மேலும் இக்கோயிலில் பிரம்மதேவர், சரஸ்வதி, லட்சுமி, சக்கரேஸ்வரி, பத்மாவதி ஆகியோருடைய சிற்பங்களையும் காணலாம். இக்கோயில் விமானத்தில் பல்வேறு சமணச் சுதை உருவங்கள் எழில் ஊட்டுகின்றன. |
| தலத்தின் சிறப்பு | 900 ஆண்டுகள் பழமையானது. பிற்காலச் சோழர் கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது. |
|
சுருக்கம்
பூண்டி அருகர் கோயில் சோழர்கள் காலத்தில் திருவண்ணாமலைப் பகுதியில் சிற்றரசர்களாயிருந்த சம்புவராயர்களால் கி.பி.11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். தென்னகக் கட்டடக் கலைக்கு சிறந்த சான்றாகத் திகழும் இக்கோயில் சமண தீர்த்தங்கரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். திராவிடக்கலைப் பாணியில் அமைந்த இக்கோயில் வீரவீர ஜீனாலயம் என்று அழைக்கப்படுகிறது. பொன்னெழில் நாதர் என்று கருவறையில் உள்ள ஆதிநாதர் அழைக்கப்படுகிறார். மகாவீரர் முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையில் உள்ளார். மேலும் சக்கரேஸ்வரி, பத்மாவதி போன்ற பெண் தெய்வங்களுக்கும், பிரம்மா, சரஸ்வதி, லட்சுமி போன்ற இந்து சமயக் கடவுளர்க்கும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். ஜ்வாலா மாலினி பெண் தெய்வத்திற்கு தனிக் கருவறை இக்கோயிலில் அமைந்துள்ளது. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் கோட்டங்கள் அமைந்துள்ளன. ஆனால் அவை வெற்றுக் கோட்டங்களாகவே உள்ளன. விமானத்தின் தளஉறுப்புகளில் சமணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் சுதையால் ஆனவை.
|
|
இரும்பேடு பூண்டி அருகர் கோயில்
| கோயிலின் அமைப்பு | தென்னகக் கட்டடக் கலையின் மரபு மாறாமல் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. விமானத்தின் அடிப்பகுதி கல்லாலும் மேற்பகுதி சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளது. பொன்னெழில் நாதர் அல்லது ஆதிநாதர் இக்கோயிலின் கருவறையில் உள்ளார். மேலும் ஜுவாலா மாலனி அம்மனுக்கும் தனிக் கருவறை அமைந்துள்ளது. உபபீடத்தின் மீது கருவறை விமானத்தின் தாங்குதளம் அமைந்துள்ளது. தாங்குதளம் பாதங்களைப் பெற்றுள்ளதால் பாதபந்த அதிட்டானம் என்றழைக்கப்படுகிறது. சுவர்களில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. இரு தளங்களைப் பெற்று திராவிடப் பாணியில் விமானம் அமைந்துள்ளது. விமானத்தின் தளங்களில் பல்வேறு சமணச் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறை சதுரவடிவமானது. அர்த்தமண்டபம், முகமண்டபம் அமைந்துள்ளது. முகமண்டபத்தில் வாயிற்காவலர்கள் அமைக்கப்பட்டுள்ளனர். திருச்சுற்று மாளிகை உள்ளது. மேலும் உபகோயில்களும் சுற்றுப்பிரகாரத்தில் அமைந்துள்ளன. சம்புவராயர் காலத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருவேதிபுரம், ஆர்காடு, போளுர் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ள ஆர்க்காட்டிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் ஆரணிக்கு முன்பு 3 கி.மீ. தொலைவில், ஆரணி வட்டத்தில் இரும்பேடு என்னும் ஊர் உள்ளது. ஆரணியிலிருந்து இரும்பேடு செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
இரும்பேடு பூண்டி அருகர் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | ஆரணி, ஆர்காடு, திருவேதிபுரம், போளுர் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | ஆரணி, பெண்ணாத்தூர், போளுர் |
| அருகிலுள்ள விமான நிலையம் | சென்னை - மீனம்பாக்கம் |
| தங்கும் வசதி | ஆரணி விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 793 |
| பிடித்தவை | 0 |