வழிபாட்டுத் தலம்
சொக்கீஸ்வரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | சொக்கீஸ்வரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | ஸ்ரீகௌசிகேஸ்வரர் திருக்கோயில் |
| ஊர் | காஞ்சிபுரம் |
| வட்டம் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | சொக்கீஸ்வரர் |
| தாயார் / அம்மன் பெயர் | ஸ்ரீகாமாட்சியம்மன் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-10ஆம் நூற்றாண்டு / உத்தம சோழன் |
| கல்வெட்டு / செப்பேடு | சொக்கீஸ்வரர் திருக்கோயில் சோழமன்னன் கண்டராதித்தன் மகனும் செம்பியன் மாதேவி திருவயிற்றில் உதித்தவனுமாகிய உத்தமசோழனால் கி.பி.985-இல் எடுப்பிக்கப்பட்டது என்று இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. இக்கோயிலை “தெற்க்கிருந்த நக்கர் கோயில்“ என்று கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. நக்கர் என்பது சிவபெருமானின் பிட்சாடனர் கோலத்தைக் குறிப்பதாகும். |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் இலிங்கம் காணப்படுகின்றது. சோழர்காலச் சிற்பங்களாக தென் அர்த்தமண்டபக் கோட்டத்தில் கணபதியும், தென் தேவகோட்டத்தில் ஆலமர்ச்செல்வனும் அமைந்துள்ளனர். இக்கோயில் கருவறை விமானத்தின் தலைப்பகுதியின் (சிகரம்) கீழே வேதிப்பட்டை என்னும் பூமிதேச உறுப்பில் உள்ள நந்தியின் கற்சிலைகள் மிகவும் எழில் வாய்ந்தவை. |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. |
|
சுருக்கம்
கி.பி.9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எளிய அமைப்புடைய காஞ்சிபுரம் சொக்கீஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியாகும். ஒரு தள விமானத்தைக் கொண்டுள்ளது. விமானம் வட்டவடிவமுள்ளது. விமானத்தின் தலைப்பகுதியில் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகள் அமைந்துள்ளன. தாங்குதளத்தில் உபானம், ஜகதி, குமுதம், கம்பு, பட்டிகை போன்ற தாங்குதள உறுப்புகள் நன்கு அமைக்கப்பட்டுள்ளன. தெற்க்கிருந்த நக்கர் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயிலில் சோழர்கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அரைத்தூண்கள் அமைந்துள்ள கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் அமைந்துள்ள தேவகோட்டத்தில் சோழர்கால சிற்பங்கள் உள்ளன. தெற்க்கிருந்த நக்கர் கோயில் என்று இக்கோயில் கூறப்படுவதிலிருந்து இக்கோயிலின் தென்புறத்தில் பிச்சையேற்கும் பெருமானின் (பிட்சாடனர்) சிற்பம் அமைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. முற்காலச் சோழர் கோயில்களில் தென்புறத்தில் பிச்சையேற்கும் பெருமானை வைப்பது வழக்கமாகும். பல முற்காலச் சோழர் கற்றளிகளில் இச்சிற்பத்தைக் காணலாம்.
|
|
சொக்கீஸ்வரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இது சோழர் காலத்துக் கற்றளியாகும். இக்கோயில் தாங்குதளத்திலிருந்து உச்சிவரையில் கருங்கல்லால் கட்டப்பட்ட ஒற்றைத் தள கற்றளியாகும். விமானத்தின் உச்சி தலைப்பகுதி வட்டவடிவில் அமைந்துள்ளது. எனவே வேசரபாணியாகும். இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டு எளிமையாக எடுக்கப்பட்டுள்ளது. உத்தமசோழன் காலத்துக் கலைப்பாணிக்கு இக்கோயில் சிறந்த சான்றாகத் திகழ்கிறது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | காமாட்சியம்மன் திருக்கோயில், ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், கைலாசநாதர் கோயில், ஜுரஹரேஸ்வரர் கோயில் |
| செல்லும் வழி | சென்னையிலிருந் 75 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சிபுரத்தில் சிவக்காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 45 |
| பிடித்தவை | 0 |