வழிபாட்டுத் தலம்
திருச்சென்னம்பூண்டி சடையார் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருச்சென்னம்பூண்டி சடையார் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | சடையார் கோயில், திருக்கடைமுடி நாதர், திருச்சடைமுடி நாதர் |
| ஊர் | திருச்சென்னம்பூண்டி |
| வட்டம் | பூதலூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | திருச்சடைமுடியுடைய மகாதேவர், சடையார், திருக்கடைமுடிநாதர் |
| தாயார் / அம்மன் பெயர் | திரிபுரசுந்தரி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தகச் சோழன் |
| கல்வெட்டு / செப்பேடு | இக்கோயில் நுழைவாயில் முன்புறமுள்ள தூண்களில் பல்லவ மன்னர்களான மூன்றாம் நந்திவர்மன் மற்றும் நிருபதுங்கனின் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இக்கோயிலில் மாசிமகம் விழா எடுக்கப்படுவதைப் பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. கல்வெட்டுகளில் பெரும்பாலும் பொன்கழஞ்சு வழங்கப்படுவதைக் காணலாம். இது வளமான பொருளாதார நிலையைக் குறிக்கிறது. சோழர்கள் காலத்தில் அதிகமான விளக்குக் கொடைகள் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளன. கல்வெட்டுஅறிக்கை ARE 1901 No. 283 முதல்(SII, VII) 303 முடிய கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறை விமானம் தாங்குதளத்தில் இராமாயணக் காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. வேதிகை எனப்படும் தாங்குதள உறுப்பில் சிவவடிவங்களும், பிடாரி, யானைத்திருமகள், காளி, மகிசாசுரமர்த்தினி போன்ற தாய்த்தெய்வ வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் தேவக்கோட்டங்களில் தெற்கில் தென்முகக்கடவுளும், வடக்கில் நான்முகனும் உள்ளனர். மேற்குக் கோட்டத்தில் சிற்பம் இடம் பெறவில்லை. |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. |
|
சுருக்கம்
கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இக்கோயில் வழிபாட்டில் இருந்துள்ளது. பல்லவர் காலத்தில் இக்கோயில் மண் தளியாக இருந்திருக்க வேண்டும். பல்லவர் காலக் கல்வெட்டுகள் கற்றூண்களிலே காணப்படுகின்றன. திருஞானசம்பந்தர் இத்தலத்தை திருக்கடைமுடி என்று பாடியுள்ளார். காவிரியின் வடகரைத் தலமாகவும், கொள்ளிடத்திற்கு தென்கரைத் தலமாகவும் சடையார் கோயில் அமைந்துள்ளது. காவிரியின் வளத்தினாலே அதன் கரையில் கட்டப்பட்டுள்ள இக்கற்றளி அதிகமான கொடைகளைப் பெற்றுள்ளது. பல்லவர் காலத்தில் மண்டளியாக இக்கோயில் இருந்திருக்க வேண்டும். முதலாம் பராந்தகன் காலத்தில் கற்றளியாக அமைக்கப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பாடியுள்ளார். தேவாரப் பாடல் பெற்ற பல காவிரிக் கரைத் தலங்களுள் இதுவும் ஒன்றாகும். தற்போது இக்கோயில் பிடாரி அம்மனுக்கு உரிய கோயிலாக ஊர்மக்களால் வழிபடப்படுகிறது. பல்லவர்கால தூண் கல்வெட்டுகள் இங்கு உள்ளன. நிருபதுங்க வர்மனின் அரசியார் அளித்த மாசிமக விழாவிற்கான கொடைகள் குறிப்பிடத்தக்கவை. பொன்கழஞ்சுகள் அதிகமாக கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. விளக்குக் கொடைகள் சோழர்கள் காலத்தில் அளிக்கப்பட்டுள்ளன. கருவறை ஏகதள விமானத்தைப் பெற்றுள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் இராமாயணப் புடைப்புச் சிற்பங்களும், வேதிகையில் சிவவடிவங்களும், தாய்த் தெய்வங்களும் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. கோயில் தற்போது தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது.
|
|
திருச்சென்னம்பூண்டி சடையார் கோயில்
| கோயிலின் அமைப்பு | சடையார் கோயில் கருவறையும், அர்த்தமண்டமும் கொண்ட எளிமையான கோயிலாகும். முழுவதும் கற்றளியாகும். ஒரு தள விமானத்தைக் கொண்டுள்ளது. முகமண்டபம் சிதிலமடைந்துள்ளது. முகமண்டபத்திற்கு தாங்குதளம் மட்டுமே காணப்படுகின்றது. பராந்தகனின் பிறக் கோயில்களைப் போன்றே அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள இக்கோயில் விமானத்தின் தாங்குதளத்தில் இராமாயணப் புடைப்புச்சிற்பங்கள் அமைந்துள்ளன. சிவ வடிவங்களும், தாய்த்தெய்வங்களும் புடைப்புச்சிற்பங்களாக காணப்படுகின்றன. தற்போது தளப்பகுதி புனரமைக்கப்பட்டுள்ளது. சுவர்களில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. கருவறைச் சுவரில் தேவக்கோட்டங்கள் அமைந்துள்ளன. கோட்டச் சிற்பங்களில் சில அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருமழபாடி, கோயிலடி விஷ்ணு கோயில் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து 342 கி.மீ. தொலைவில் உள்ள தஞ்சாவூரில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் திருச்சென்னம்பூண்டி அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம், திருக்காட்டுப்பள்ளி வழி கல்லணை செல்லும் வழியில் கோவிலடி பஸ் நிறுத்தம் சுமார் 12 கி.மீ.தொலைவில் உள்ளது. இக்கோயில் கோவிலடியிலிருந்து 3கி.மீ.தொலைவில் வடக்காக திருச்சென்னம்பூண்டி உள்ளது. இத்தலம் தற்போது சடையார்கோவில் என்றுஅழைக்கப்படுகின்றது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
திருச்சென்னம்பூண்டி சடையார் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | கல்லணை, திருமழபாடி, கோயிலடி |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | தஞ்சாவூர், திருச்சி |
| அருகிலுள்ள விமான நிலையம் | திருச்சி |
| தங்கும் வசதி | திருச்சி, தஞ்சாவூர் விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | மதுரை கோ.சசிகலா |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | மதுரை கோ.சசிகலா |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 65 |
| பிடித்தவை | 0 |