Back
வழிபாட்டுத் தலம்
மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில்
வேறு பெயர்கள் திருக்கடம்பூர்
ஊர் மேலக்கடம்பூர்
வட்டம் காட்டுமன்னார்குடி
மாவட்டம் கடலூர்
தொலைபேசி 0435-2414 453, 98653 06840
உட்பிரிவு 1
தாயார் / அம்மன் பெயர் சோதிமின்னம்மை, வித்யூஜோதிநாயகி
தலமரம் கடம்பமரம்
திருக்குளம் / ஆறு சக்தி தீர்த்தம், சிவ தீர்த்தம்
ஆகமம் காமிகாகமம்
வழிபாடு மூன்று கால பூசை
திருவிழாக்கள் மகா சிவராத்திரி, மாசி மகம், மார்கழி திருவாதிரை.
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள்
கல்வெட்டு / செப்பேடு முதலாம் குலோத்துங்க சோழனின் கற்றளியாகும் இக்கோயிலில் அம்மன்னனின் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறைச்சுவர் வெளிப்புறம் முழுவதும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கருவறை விமானத்தின் மேற்கில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். விஷ்ணுவின் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இச்சிற்பத்தின் அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருமாலுக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். கருவறை விமானத்தின் சுவரிலேயே கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி ஆகியோரின் சிற்பங்களும் இருக்கின்றன. கருவறை விமானத்தில் தென்முகக்கடவுள் புல்லாங்குழல், வீணையுடன் வீணாதரராய் காணப்படுகிறார். வடபுற கோட்டத்தில் உள்ள நான்முகன் சிவனை பூசித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர். அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது ஆடல்வல்லானின் நடனக்கோலம் காட்டப்பட்டுள்ளது. வலப்பக்க சுவரில் உமையொருபாகர் நந்தியுடன் இருக்க, அவருக்கு கீழே அரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் "ரிஷபதாண்டவமூர்த்தி" நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் செப்புத்திருமேனியாக உற்சவராக இருக்கிறார். இச்செப்புத்திருமேனிக்கு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன. இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு, ஆரவார விநாயகர் என்று பெயர். இவர் தலையை இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சி தருகிறார். இச்சிற்பங்களைத் தொடர்ந்து விமானத்தின் தளத்திலுள்ள சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அவற்றுள் உரோமச முனிவரின் சிற்பம் உள்ளிட்டவை கலைநயமிக்கவை.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலம். திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடியுள்ளனர்.
சுருக்கம்
இக்கோயில் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் அமைந்துள்ள 34-வது திருத்தலமாகும். அப்பர் பாடிய கோயில் வகைகளுள் கடம்பூர் திருக்கோயில், கரக்கோயில் வகையினைச் சார்ந்தது. கரக்கோயில் தேர்வடிவத்தில் அமைந்திருக்கும். தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் இதுவாகும். இத்தலத்தினை அப்பர், சம்பந்தர் பாடியுள்ளனர். முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி 1113-ல் அவரது 43–ம் ஆட்சியாண்டில் கட்டப்பெற்றதை இங்குள்ள கல்வெட்டால் அறியமுடிகிறது.
மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயில் என்ற பெயர்ப் பலகையுடன் முகப்பு வாயில் காணப்படுகிறது. அதையடுத்து ஆலயத்தின் கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது. கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் நேரே உள்ள முன் மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் இருக்கக் காணலாம். கொடிமரமில்லை. முன்மண்டபத்திற்கு நேரே மூலவர் கருவறையும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்மன் கருவறையும் உள்ளன. கருவறை தேர் சக்கரங்களுடன் குதிரை இழுப்பதைப் போன்று தேர் வடிவில் அமைந்துள்ளது. இரண்டு திருச்சுற்றுகளுடன் காணப்படுகின்றது. தேர்வடிவில் அமைந்துள்ள கருவறை விமானம் கரக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. கரம் என்றால் சக்கரம் என்ற பொருளும் உண்டு. மூன்று தளங்களைக் கொண்டதாக இக்கோயில் விமானம் வடிக்கப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கச் சோழனின் கற்றளியான இக்கோயிலின் அமைப்பானது சோழர் கற்றளிகளுள் தனித்துவம் வாய்ந்தது எனலாம்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் கீழக்கடம்பூர் ருத்திராபதீசுவரர் கோயில், காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோயில்
செல்லும் வழி சிதம்பரம் - காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் சாலை வழியில் சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 32 கி.மி தொலைவில் கடம்பூர் உள்ளது. காட்டுமன்னார்குடியில் இருந்து எய்யலூர் செல்லும் சாலையில் முதலில் கீழக்கடம்பூரும் அதையடுத்து மேலைக்கடம்பூரும் உள்ளன. கீழக்கடம்பூர் ஒரு தேவார வைப்புத் தலம். மேலக்கடம்பூரில் உள்ள ஆலயமே பாடல் பெற்ற தலம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 முதல் பகல் 11.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை
மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் மேலக்கடம்பூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் காட்டுமன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி காட்டுமன்னார்குடி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 37
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்