Back
வழிபாட்டுத் தலம்
விசயமங்கலம் கரிவரதராசப் பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் விசயமங்கலம் கரிவரதராசப் பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் கரியமாணிக்கப் பெருமாள் கோயில்
ஊர் விசயமங்கலம்
வட்டம் பெருந்துறை
மாவட்டம் ஈரோடு
உட்பிரிவு 2
வழிபாடு இருகாலப் பூசை, காலை 9 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நைவேத்தியம் படைத்து பூசை செய்யப்படுகின்றன.
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை, ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி
காலம் / ஆட்சியாளர் கி.பி.11-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு கல்வெட்டுகளில், 'விசையமங்கலத்து சித்திரமேழி விண்ணகரம் 'பெருமான் கரியமாணிக்காழ்வார்' என்று குறிப்பிடப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டுகளிலே காலத்தால் முந்தியது திரிபுவனச் சக்கரவர்த்தி வீரராசேந்திரச் சோழனின் கல்வெட்டாகும் இவனது 10-ஆவது ஆட்சியாண்டில் அக்கல்வெட்டு எழுதப்பட்டது. இவனுடைய ஆட்சியின் காலம் கி.பி. 1207 முதல் 1255 வரையாகும். வீரராசேந்திர சோழனின் 10-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு சித்ரமேழி விண்ணகராழ்வார் கோயிலுக்கு அச்சு என்கின்ற 29 நாணயங்களை கொடுத்ததைக் குறிக்கின்றது.
தலத்தின் சிறப்பு 800 ஆண்டுகள் பழமையானது.
விசயமங்கலம் கரிவரதராசப் பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு கருவறை, அந்தராளம், அர்த்த மண்டபம், முன் மண்டபம் இவைகளுடன் கூடிய கற்கோயிலாகும். அதிட்டானத்தில் கீழிருந்து மேலாக உபானம், கம்பு, ஜகதி, முப்பட்டைக் குமுதம், கண்டம், வேதிகை முதலிய அமைப்புகள் உள்ளன. அர்த்தமண்டபமும், முன் மண்டபமும் இதே அமைப்பில் உள்ளன. அதிட்டானத்தின் மேலுள்ள பகுதியாகும் தேவகோஷ்டம் உள்ளது. அதில் சிற்பம் கிடையாது. மொத்தம் மூன்று தேவகோட்டங்கள் கருவறையைச் சுற்றி உள்ளன. தேவகோட்டத்திற்கு மேலே வேலைப்பாடில்லாத மகர தோரணம் இருக்கின்றது. கால் விகள் காணப்படுகின்றன. அதில் பத்ம பந்தம், தாடி, இதழ் பலகை, போதிகை முதலிய அமைப்புகள் உள்ளன. சுவரின் மேல் வரும் கூரையே அறையை மூடும் அங்கமாகும். இது பூத, கொடுங்கை, யாளிவரி என மூன்று பகுதிகளை உடையது. இக்கோயிலில் பூதவரிக்கும் பதிலாக பதும வரி உள்ளது. கொடுங்கையில் கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலே யாளி வரி காணப்படுகிறது. இரு நிலைகளையுடைய நாகர விமானமாகும். விமானம் ஒவ்வொரு நிலையிலும் இருபுறமும் கர்ணகூடு, இடையில் சாலை அமைப்புக் கொண்டுள்ளது. அர்த்தமண்டபம், முன்மண்டபம் முதலியவைகளின் அமைப்புகள் கருவறைச் சுவரைப் போலவே அமைந்துள்ளன. ஆனால் முன்மண்டபத்தில் தேவகோட்டங்கள் கிடையாது. கருவறைக்கும் அர்த்தமண்டபத்திற்கும் இடையிலுள்ள அந்தராளத்தில் 'குய பஞ்சரத் தூண் உள்ளது. இதேபோல அர்த்தமண்டபத்துக்கும் முன்மண்டபத்துக்கும் இடையிலுள்ள இடத்திலும் தூண் ஒன்று உள்ளது. மகாமண்டபம் தற்காலத்தில் கட்டப்பட்டது ஆகும். முன்மண்டபத்தினுள் முழுத்தூண்கள் நான்கும் அரைத்தூண்கள் நான்கும் உள்ளன. அதிகமான வேலைப்பாடுகள் எதுவும் இல்லை. கீழ்ப்புறம் சதூரமாகவும் அதை அடுத்த எண்பட்டைகளாகி பின்னர் நீண்ட சதூர போதிகை முடிவும் கொண்டதாகத் தூண்கள் இருக்கின்றன. ஒரே ஒரு திருச்சுற்று மட்டும் உள்ளது. அதுவும் வெளித் திருச்சுற்றாகும் இத்திருச்சுற்றில்தான் கருட பகவானின் கருவறையும், பலி பீடமும் அமைந்துள்ளன. மதிற்சுவர் கீழே கருங்கல்லாலும், மேலே செங்கற்களாலும் கட்டப்பட்டது. வெளியே இருபுறமும் திண்ணையும் நடுவில் கோயிலினுள் செல்லும் வழியாகவும் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளேயும் இருபுறமும் திண்ணை அமைக்கப்பட்டுள்ளது. எட்டு முழுத்தூண்களும் நான்கு அரைத்தூண்களும் இருக்கின்றன. தூண்களில் நாக பந்தம் பெரியதாகவும், போதிகையிலிருந்து வாழைப்பூ மாதிரியும் தொங்குகின்றன. நான்கு தூண்களைக் கொண்ட சிறுமண்டபத்தின் நடுவில் துவஜஸ்தம்பம் இருக்கின்றது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் நாகீசுவரர் கோயில், சந்திரப்ரப தீர்த்தங்கரர் கோயில்
செல்லும் வழி விசயமங்கலம் கோயமுத்தூரில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 47 நான்கு வழிச்சாலையில் விஜயமங்கலம் (பெருந்துறையில் இருந்து 12 கி.மிட்டர்) தொலைவில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம்
விசயமங்கலம் கரிவரதராசப் பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் விசயமங்கலம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் பெருந்துறை
அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர்
தங்கும் வசதி ஈரோடு நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 71
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்