வழிபாட்டுத் தலம்
நெல்லையப்பர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | நெல்லையப்பர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | தாமிரசபை |
| ஊர் | திருநெல்வேலி |
| வட்டம் | திருநெல்வேலி |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | நெல்லையப்பர், வேணுவனநாதர், வேய்முத்தநாதர்,நெல்வேலிநாதர், சாலிவாடீசர், வேணுவனேஸ்வரர், வேணுவன மகாலிங்கேஸ்வரர், மூலவர் சுயம்பு மூர்த்தி |
| தாயார் / அம்மன் பெயர் | காந்திமதி அம்மை, வடிவுடையம்மை |
| தலமரம் | மூங்கில் |
| திருக்குளம் / ஆறு | பொற்றாமரைக்குளம், (ஸ்வர்ண புஷ்கரணி) கருமாறித்தீர்த்தம், சிந்துபூந்துறை |
| வழிபாடு | ஆறுகால பூசை |
| திருவிழாக்கள் | ஆனியில் 41 நாள்களுக்குப் பெருவிழா, ஆடிப்பூர உற்சவம், ஐப்பசியில் கல்யாண உற்சவம், கார்த்திகை சோமவாரம், மார்கழித் திருவாதிரை உற்சவம், தைப்பூச உற்சவம், பங்குனி உத்திரத்தில் செங்கோல் உற்சவம், மாசிமகம் தெப்பம் உற்சவம், வைகாசி விசாகம் சங்காபிஷேகம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு / சோழர், பாண்டியர், விசயநகர-நாயக்கர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இக்கோயிலில் உள்ள ‘சுரதேவர்’ - ‘ஜ்வரதேவர்’ சந்நிதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும் என்னும் செய்தி மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது. பொல்லாப் பிள்ளையார் சந்நிதி இங்கு மிகவும் விசேஷமானது. புத்திரப்பேறில்லாதவர்கள் நாற்பத்தொரு நாள்கள் விரதமிருந்து, கருப்பமுற்று, குழந்தையைப் பெற்றெடுத்தபின் இச்சந்நிதிக்கு எடுத்து வந்து இங்கு சன்னல் போல் உள்ள பகுதியில் உட்புறமாகத் தந்து வெளிப்புறமாக வாங்கும் பழக்கம் உள்ளது. இதனால் இவருக்குப் ‘பிள்ளைத்துண்ட விநாயகர்’ என்றும் பெயர். அறுபத்துமூவர் மூலத் திருமேனிகளைத் தொடர்ந்து மேலே கயிலாய பர்வதக் காட்சி உள்ளது. இங்குப் பெருமான் இராவணனை அழுத்திய - நொடித்த பாவனை நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. நடராசர் சந்நிதி மற்றொன்று தனியே உள்ளது. இப்பெருமான் அக்கினி சபாபதி என்றழைக்கப்படுகிறார். சிவகாமி உடன் நிற்க, காரைக்காலம்மையார் கையில் தாளமிட்டுப் பாட, சிரித்த முகத்துடன் ஆடும், அம்பலக்கூத்தன் அழகைக் காணக்கண் ஆயிரம் வேண்டும். காந்திமதி அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. கிழக்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். வியாழன் தோறும் அம்பாளுக்குத் தங்கப் பாவாடை சார்த்தப்படுகிறது. அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உள்ள இரு தூண்கள் இசைத் தூண்களாக விளங்குகின்றன. இங்குள்ள உற்சவத் திருமேனி கையில் தாரை வார்த்துத் தரும் பாத்திரத்துடன் இருப்பதைக் காணலாம். திருமால் பார்வதியைத் தாரை வார்த்துத் தர இறைவன் மணந்து கொள்ளும் நிகழ்ச்சியை இது நினைவூட்டுகிறது. திருமாலின் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது. சுவாமி பிராகாரத்தில் கன்னி விநாயகர், நந்தி தேவர், பாண்டியராஜா சந்நிதிகள் உள்ளன. பிட்சாடனர், ரிஷிபத்தினியர் உருவங்கள் கல்லில் வண்ணந் தீட்டப்பட்டுள்ளன. அகத்தியர் பிரதிஷ்டை செய்த சால்வடீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி சற்றுத் தாழ்வில் உள்ளது. இத்தலம், பஞ்ச சபைகளுள் தாமிரச் சபையாகும். இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராசர் ‘தாமிரசபாபதி’ என்றழைக்கப்படுகிறார். சபைக்கு மேலே தாமிரத் தகடு வேயப்பட்டுள்ளது. பின்னால் உள்ள நடராஜர்-சிலாரூபம்-சந்தன சபாபதி என்றழைக்கப்படுகிறார். உள்ளே ருத்திர விஷ்ணு, பேதங்கள், ரிஷிகளின் உருவங்கள் உள்ளன. கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் ஆக்கப்பட்டு ஏழு அடுக்குகளைக் கொண்டு திகழும் இச்சபை சித்திர வேலைப்பாடுகளுடன் அருமையாகத் திகழ்கின்றது. சபைக்குப் பக்கத்தில் தலமரம் உள்ளது. இக்கோயில் இரு துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. மகிஷாசுரமர்த்தினி சந்நிதி தெற்கு நோக்கியும், பண்டாசுரமர்த்தினி சந்நிதி வடக்கு பார்த்தும் உள்ளன. ஆறுமுகர் சந்நிதி இங்கு மிகவும் விசேஷமானது. வள்ளி தெய்வ யானையுடன் ஆறு முகங்களும் சுற்றிலும் திகழ, ஒவ்வொரு முகத்திற்கும் நேரே இரண்டிரண்டு திருக்கரங்கள் வீதம் சுற்றிலும் திகழ, அவ்வவற்றிற்குரிய ஆயுதங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்துள்ள பாங்கு அற்புதமானது. அமாவாசைப் பரதேசி என்பவர் ஒருவர் 120 வயது வரை வாழ்ந்திருந்து இச்சந்நிதியை விசேஷித்துக் காவடி எடுத்து இறுதியில் ஓர் அமாவாசையில் சித்தியடைந்தார். இவராலேயே இச்சந்நிதி மிக்க சிறப்பு பெற்றது. பாம்பன் சுவாமிகள் பதிகம் சுவரி் பதிக்கப்பெற்றுள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். |
|
சுருக்கம்
இத்தலத்திற்குத் தல புராணம் உள்ளது. ‘காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்’ சிறப்புடைய நூலாகும். சம்பந்தர் பாடல் பெற்ற தலம். இக்கோயிலில் மிகப் பழமையான கல்வெட்டுக்கள் உள. இக்கோயில் 4 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. காமிக ஆகம முறைப்படி அமைந்து நாடி வருவோர்க்கு நலமருளும் இத்திருக்கோயில் திருநெல்வேலி நகரின் நடுவில் அமைந்துள்ளது. இன்றும் ஐப்பசியில் நடைபெறும் திருக்கல்யாண விழாவில் ஒருநாள் வைணவர் வந்து தாரை வார்த்துத் தர, சிவாசாரியார் பெற்றுக் கொள்ளும் ஐதீகம் நடைபெறுகின்றது. நெல்லையப்பர் - சிவலிங்கத் திருமேனி, மேற்புறம் வெட்டப்பட்ட அடையாளம் உள்ளது. இப்போதுள்ளது 21-ஆவது ஆவுடையார் என்றும் 20 ஆவுடையார்கள் பூமியின் கீழ் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது. இம்மூர்த்தி ‘மிருத்யஞ்சமூர்த்தி’ ஆவார். அன்வர்கான் என்ற இஸ்லாமியரின் மனைவிக்கு உண்டான வயிற்றுவலி நீங்காமையால் அவன் வழிபட்டுப் பேறு பெற்ற சிவலிங்கம் ‘அனவரத லிங்கம்’ என்று வழங்கப்படுகிறது. இதற்கு அவர் தந்துள்ள நகை முதலியவைகளும் உள்ளன. நாள்தோறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. இவற்றுள் உச்சிக்காலத்தில் மட்டும் காந்திமதி அம்பிகையே – இறைவியே நேரில் வந்து சுவாமியை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். அகத்தியருக்கு இறைவன் கல்யாண காட்சியைக் காட்டி அருளிய தலமிதுவே. சுவாமிக்குப் பக்கத்தில் கோவிந்தராஜர் சந்நிதி உள்ளது.
|
|
நெல்லையப்பர் கோயில்
| கோயிலின் அமைப்பு | கோயிலுள் பொற்றாமரைக் குளம் உள்ளது. நாற்புறமும் நல்ல படிகள். நடுவில் நீராழி மண்டபம் உள்ளது. இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம் போன்ற மண்டபங்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன. மூன்று தெப்பக் குளங்கள் இக்கோயிலில் உள்ளன. சுவாமிக்கு நான்கு ராஜகோபுரங்களும் அம்பாளுக்கு ஒரு கோபுரமும் உள்ளன. சுவாமி, அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை. நந்தி பெரியது- சுதையாலானது சுவாமி. சந்நிதிக்குச் செல்லும் வழியில் இசைத் தூண்கள் உள்ளன. துவாரபாலகர்களைக் கடந்து மகா கணபதி, முருகன் சந்நிதிகளைத் தரிசித்து உட்புகுந்தால் சுவாமி சந்நிதி மிகவும் விசாலமானது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | கிருஷ்ணாபுரம் கோயில், நவதிருப்பதி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து விரைவுப் பேருந்துகளும், புகைவண்டி வசதிகளும் உள்ளன. மதுரையிலிருந்தும், பிறவூர்களிலிருந்தும் மதுரை வழியாகவும் நெல்லைக்கு அடிக்கடிபேருந்துகள் உள்ளன. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Nov 2018 |
| பார்வைகள் | 59 |
| பிடித்தவை | 0 |