வழிபாட்டுத் தலம்
திருக்கண்ணபுரம் சௌரிராசப்பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருக்கண்ணபுரம் சௌரிராசப்பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருக்கண்ணபுரம் நீலமேகப்பெருமாள் கோவில் |
| ஊர் | திருக்கண்ணபுரம் |
| வட்டம் | நன்னிலம் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | நீலமேகப் பெருமாள் |
| தாயார் / அம்மன் பெயர் | கண்ணபுர நாயகி |
| திருக்குளம் / ஆறு | நித்ய புஷ்கரிணி |
| வழிபாடு | காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
| திருவிழாக்கள் | வைகாசி, மாசி மாதங்களில் பிரம்மோற்சவத் திருவிழாக்கள், மாசி மாதம் பௌர்ணமியின் போது கடற்கரையில் நடைபெறும் கருடனுக்குக் காட்சி தரும் நிகழ்ச்சி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு / சோழர்கள் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | நீலமேகப் பெருமாள் மூலவராய் கருவறையில் காட்சியளிக்கிறார். சௌரிராஜன் நின்ற திருக்கோலம். |
| தலத்தின் சிறப்பு | 1200ஆண்டுகள் பழமையானது. பெரியாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி. |
|
சுருக்கம்
இப்பெருமாளைப் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரங்களிலும், திருமங்கையாழ்வார் 100 பாசுரங்களிலும், குலசேகர ஆழ்வார் 10 பாசுரங்களிலும், ஆண்டாள் ஒரு பாசுரத்தாலும், பெரியாழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். 108 திவ்ய தேசங்களில் “கீழைவீடு” என்று குறிக்கப்படுவது இத்தலம்தான். இங்கே ஸ்ரீமணவாள மாமுனிகள் ஓராண்டு காலம் எழுந்தருளியிருந்து மங்களாசாசனம் செய்தருளினார்.
|
|
திருக்கண்ணபுரம் சௌரிராசப்பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | இத்தலத்திற்கு எதிரில் இரண்டு யோஜனை தொலைவில் (ஒரு யோஜனை என்பது 10 மைல்) ஒரு மலை கடலுள் அமிழ்ந்துள்ளது. கருடனின் வடிவங்கொண்ட இம்மலை கருட பர்வதமென்றே அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் மலைகளின் இறக்கைகளை வெட்ட இம்மலை மட்டும் கடலுக்குள் மூழ்கி இந்திரனுக்குத் தப்பித்து விட்டதாம். இவ்விதம் தப்பித்ததால் இறுமாப்புக் கொண்ட கருடன் இறுமாப்போடு இங்குமங்கும் பறக்க, இத்தலத்தின் விமானத்தின் மீது பறக்க, இத்தலத்து பாலகர்கள் இவன் நிழலைப் பற்றியிழுக்க கீழே விழுந்த கருடன் தன் தவறு உணர்ந்து கருட பர்வதத்தின் மீதமர்ந்து இப்பெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி மோச்சம் பெற்றான், என்றும் இத்தலத்தைப் பற்றி புராணங்கள் கூறும். சித்த சரவசு என்னும் பாண்டிய மன்னன் மணலூரைத் தலநகராகக் கொண்டு ஆண்டான். அவன் தனது மகள் உத்தமையுடன் தாமிரபரணியில் நீராட இறங்கும் தருவாயில் திடீரென்று வெள்ளம் உயர்ந்து உடனே வடிந்து காணாமல் போய்விட்டது. மன்னனைக் காணாது அவன் மனைவி மக்களும், மந்திரி பிரதானிகளுந் திகைத்து நிற்க, பாண்டியனின் அவைக்கு வந்த சகல லோக சஞ்சாரியான அகத்தியரின் சீடர், மந்திரி பிரதானிகளை நோக்கி, மன்னனும் அவன் மகள் உத்தமையும் பிரம்ம லோகத்தில் இருக்கிறார்களென்று பின்வரும் நிகழ்வைச் சொன்னார். கங்கை முதலான சகல தீர்த்தங்களும், தம்மிடம் பல தரப்பட்ட மக்களும் நீராடி தமது புண்ணியங் குறைந்து பாவம் பெருக்கெடுத்துவிட்டதெனவும், இம் மாசினைப் போக்க யாதாயினுமோர் உபாயங்கூறு மென்றும் பிரம்மாவைக் கேட்க, சகல பாவங்களையும் போக்கும் பெருமாள் எழுந்தருளியுள்ள கண்ணபுரத்தில் உள்ள நித்ய புஷ்கரணியில் நீராடி அப்பெருமானைத் துதித்தால் எல்லாப் பாவங்களும் உடனே தீருமென்று பிரம்மா உரைக்க, சகல தீர்த்தங்களும், இப்புஷ்கரணியில் புகுந்தன. அப்போது தாமிரபரணி தீர்த்தமும் இந்த புஷ்கரணியில் புக அதனால் பூலோகத்தை அடைந்த பாண்டியனும் அவன் மகளும் இப்பெருமானை வழிபாடு செய்து நிற்க, இவ்வரலாறு உணர்ந்த சோழன், பாண்டியனை எதிர் கொண்டழைத்து தன் அரண்மனையில் விருந்தினனாய்த் தங்க வைத்து இறுதியில் பாண்டியன் மகள் உத்தமையை சோழராஜனின் மகன் சுசாங்கனுக்கு திருமணம் செய்துவைத்ததாகவும் வரலாறுண்டு. பாண்டி நாட்டின் வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நிகழ்ச்சி ஒரு ஆய்வுக்குரிய விஷயமாகும். வசு என்னும் மன்னன் (உபரிசரவஸு ) விஸ்வகர்மாவைக் கொண்டு இக்கோயிலை கட்டுவித்தான். அவன் புத்திரப் பேறு இன்மையால் இத்தலத்தில் அசுவமேதயாகம் செய்யயாக குண்டலியிலிருந்து தோன்றிய ஒரு புருஷன் இரண்டு செங்கழு நீர் மலர்களைத் தர அவற்றை முகர்ந்த வசுவன் மனைவி சுந்தரி அழகிய பெண்மகவைப் பெற்று பத்மினி (பதுமினி) என்று பெயரிட்டழைக்க, அப்பெண்தான் சௌரிராஜனையே மணவாளனாக ஏற்க வேண்டுமென்று, தவமியற்ற பெருமாளும் அவ்விதமே செய்து பத்மினியைத் தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார் என்பது பத்ம புராணம் செப்பும் செய்தியாகும். இக்கோவிலில் பூஜை புரிந்து வந்த சிரீதரன் என்னும் அர்ச்சகர் தான் காதல் கொண்ட கன்னிக்கு சூட்டிய மாலையை பெருமாளுக்குச் சூட்ட, இரவிலே சோழராஜன், சந்நிதிக்குவர, பெருமாளுக்குச் சூட்டிய மாலையை சிரீதரன் சோழனுக்கு அளிக்க, அதில் தலைமுடி ஒன்றிருக்க அரண்மனைக்கு சிரீதரனை அழைத்து காரணம் வினவ, பெருமாளுக்கு முடி வளர்ந்துள்ளதாக ஸ்ரீதரன் தெரிவிக்க, இதனைச் சோதிக்க மறு நாள் காலை சோழன் சந்நிதிக்கு வர பெருமாளின் தலையில் இரண்டு மூன்று கேசங்கள் நீண்டு வளர்ந்திருக்க, அவற்றை பிடித்து இழுக்குமாறு மன்னன் ஆணையிட, ஒரு கேசத்தையிழுக்க அதனின்றும் தெறித்த ரத்தத்துளிகள் மன்னனின் முகத்தில் தெறிக்க, இறைவன் தன் பக்தனைக் காப்பதற்கே இந்நாடக மாடினான் என்று உணர்ந்த சோழன் அர்ச்சகரின் பக்தியை மெச்சிய தோடு தானும் இப்பெருமானுக்கு அடிமையானான். இதன் காரணமாகத்தான் சௌரி ராஜன் என்னும் திருநாமம் இப்பெருமானுக்கு உண்டாயிற்றென்பர். இவ்வூரில் வாழ்ந்த “முனைய தரையர்” என்பவர், பெருமாளுக்கு வேண்டிய திருப்பணிகளை செய்து உண்மை பக்தராயிலங்கி வந்தார். அவர் பெருமாளுக்கு திருவாராதனம் செய்யாமல் ஒருநாளும் உண்பதில்லை. அவ்வாறிருக்கையில் ஒரு நாள் வெளியூருக்குச் சென்று விட்டு அர்த்த சாமத்தில் திரும்ப, அவர் மனைவி ஆக்கி வைத்த பொங்கலை மானஸிகமாக இறைவனுக்குப் படைக்க, மறு நாள் காலை கோவில் திறக்கும் போது பொங்கல் மணம் எங்கும் வீச, தம் அடியார் பொருட்டு பகவான் அப்பொங்கலை உகந்து ஏற்றுக் கொண்டார் என்றும் முனியோதரம் பொங்கல் என்றே பெயர் கொடுத்து, இன்றும் அர்த்த சாமத்தில் இப்பெருமானுக்கு முனியோதரம் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்தைப் போன்று மதில்கள் இருந்தன என்றும் சோழ மன்னன் ஒருவன் இம்மதில்களை இடித்து கருங்கற்களை அருகிருந்த இன்னொரு கோயிலுக்கு எடுத்துச் சென்றான் எனவும். இது கண்டு மனம் வருந்திய இப்பெருமானின் பரம பக்தர் அறையர் என்பர் “பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை” என்பது பொய்த்ததோ என்று தம் கையில் உள்ள தாளத்தை பெருமானின் மீது விட்டெறிய, பெருமாள் தமது பிரயோகச் சக்கரத்தை யேவி, மன்னனைக் கொன்றார். இதனால் இப்பெருமானின் நெற்றியில் தாளம் பட்டு புண்ணான “நெற்றி வடு” இன்றும் உள்ளதைக் காணலாம். மதில்களை இடித்தது போக எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில் ஒன்றுதான். விருத்திரன் என்னும் அரக்கன் தேவலோகத்தையழிக்க அவனைக் கொன்று இந்திரனுக்கு மீண்டும் இந்திர போகத்தை இப்பெருமாள் அளித்தார் என்றும் புராணம் கூறும். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருச்செங்காட்டங்குடி உருத்திராபதீசுவரர் கோயில், நன்னிலம் மதுவனேசுவரர் கோயில், திருமருகல், திருமீயச்சூர் |
| செல்லும் வழி | திருவாரூரிலிருந்து கோயில் வாசல் வரை பேருந்து செல்கிறது. நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வண்டியிலேறி திருப்புகலூர் என்ற ஊரில் இறங்கி சுமார் ஒருமைல் தூரம் நடந்து சென்றும் இப்பதியை எய்தலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை |
திருக்கண்ணபுரம் சௌரிராசப்பெருமாள் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | திருக்கண்ணபுரம் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | நன்னிலம், திருவாரூர் |
| அருகிலுள்ள விமான நிலையம் | திருச்சி |
| தங்கும் வசதி | திருக்கண்ணபுரம் விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 23 Nov 2018 |
| பார்வைகள் | 35 |
| பிடித்தவை | 0 |