வழிபாட்டுத் தலம்
திருவையாறு ஐயாறப்பர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருவையாறு ஐயாறப்பர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | பஞ்சநதக்ஷேத்திரம் - ‘ஐயாறு’ |
| ஊர் | திருவையாறு |
| வட்டம் | திருவையாறு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | பஞ்சநதேஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன் |
| தாயார் / அம்மன் பெயர் | தர்மசம்வர்த்தினி, அறம்வளர்த்தநாயகி |
| தலமரம் | வில்வம் |
| திருக்குளம் / ஆறு | சூரிய தீர்த்தம், காவிரி |
| வழிபாடு | ஆறுகால பூசை |
| திருவிழாக்கள் | சப்தஸ்தானத் திருவிழா - ஏழூர் திருவிழா |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-16-ஆம் நூற்றாண்டு/ பல்லவ, பாண்டிய சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர் |
| கல்வெட்டு / செப்பேடு | பஞ்ச நதீஸ்வர் சந்நிதி முகப்பு வாயிலின் முன்னுள்ள ஒரு கல்வெட்டு வள்ளல் பச்சையப்பரின் அறக்கட்டளையை உணர்த்துகிறது. “இக்கட்டளை மூலம் ஒரு லட்சம் வராகன், முதல் தொகையாக வைக்கப்பட்டு அதிலிருந்து வரும் வட்டித்தொகையிலிருந்து பஞ்ச நதீஸ்வரர் நித்திய கட்டளை நடைபெறவும். மதுரைத் திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் அன்னதானம் மகேஸ்வர பூசையும் நடைபெறவும், இந்துக் குழந்தைகளுக்கு, இந்து விவகார சாஸ்திரங்களையும் ஆங்கிலப் பாடத்தையும் போதிப்பதற்கு ஒரு பண்டிதரையும், ஒரு ஆசிரியரையும் நியமித்து அவர்களுக்கு ஊதியம் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செய்திகளை இக்கல்வெட்டுச் செய்தி விளம்பரப்படுத்துகிறது. கோயிலுக்குப் பக்கத்தில் சற்றுதள்ளி, தியாகப் பிரம்மத்தின் சமாதி உள்ளது. சாலையிலேயே இதற்கான வளைவு கட்டப்பட்டுள்ளது. சென்று தரிசிக்கலாம். |
| சிற்பங்கள் | அம்பாள் ஆலயம் தர்மசம்வர்த்தினியின் திருச்சந்நிதி. தனிக் கோயிலாகப் பக்கத்தில் உள்ளது. கிழக்கு நோக்கியது. கவசமிட்ட கொடிமரம். நந்தி, பலிபீடங்கள் உள்ளன. கருவறை, சிற்ப அழகு வாய்ந்தது - இழைக்கப் பட்ட கருங்கல்லால் ஆனது. வலம்வர வசதியுள்ளது. சூரியன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரி சந்நிதிகள் உள்ளது. அம்பாள் நின்ற கோலம். அபயகரமும் தொடையைத் தொட்டுக் கொண்டிருப்பது போல மற்றொரு கரமும் உள்ள அமைப்பு. நான்கு திருக்கரங்கள் நல்ல பொலிவு. அறம் வளர்த்த நாயகி, தரிசிக்கும் நம் உள்ளத்தில் ஆனந்தத்தையும் வளர்த்து அமைதியையும் அருளுகின்றாள். மாதந்தோறும் சித்திரைச் சதய நாளில் தென்கயிலைக் கோயிலிலும் சித்தரை ஆதிரையில் வடகயிலையீச்சரம் உலகமாதேவீச்சரம் கோயிலிலும் சிறப்பு ஆராதனை நடைபெறுகின்றது. திருக்கோயிலின் தெற்கு வாயிலுக்கு நேரேவுள்ள வீதியின் கோடியில் காவிரியில் இறங்கி நீராட நல்ல படித்துறைகளுடன் கூடிய நீராடு கட்டடம் உள்ளது. ஆளுநாயகன் கயிலையில் இருக்கையைக் காணுமது காதலித்த அப்பர், ‘பழுதில் சீர் திருவையாற்றில் காண்’ என இறைவன் பணிக்க. வடகோடியில் தீர்த்தத்தில் மூழ்கித் திருவையாற்றில் வந்து எழுந்த அத்திருக்குளம் - அப்பர் குளம் - தற்போது மக்கள் வழக்கில் ‘உப்பங்குளம்’ என்று மருவி, கோயிலின் மேலக்கோபுர வாயில் வழியே சென்று வலப்பக்கம் திரும்பிச் சென்றால் வீதியின் கோடியில் உள்ளது. நல்லபடித் துறைகள் உள்ளன. குளத்தின் எதிரில் ‘அபீஷ்ட வரத மகாகணபதி’ கோயில் உள்ளது. இக்கோயிலில் மகாகணபதி சந்நிதியும், பக்கத்தில் விசுவநாதர் விசாலாட்சி சந்நிதியும், துர்க்கை சந்நிதியும் உள்ளன. அப்பர்பெருமானின் சந்நிதியும் உள்ளது. இதற்கு எதிரில், சுவற்றில், குளத்திலிருந்து அப்பர் எழுவது போலவும் எதிரே இறைவன் ரிஷபாரூடராய்க் காட்சி தருவது போலவும் சித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. ஐயாறு செல்லும் அன்பர்கள், அவசியம் இத்திருக்குளத்தையும் கண்டு வர வேண்டும். |
| தலத்தின் சிறப்பு | மூவர் பாடல் பெற்ற சிறப்புத்தலம். இத்தலத்திற்குப் பதினெட்டு பதிகங்கள் உள்ளன. |
|
சுருக்கம்
திருவையாறு தஞ்சை மாவட்டத்திலுள்ள பெரிய ஊர். சோழநாட்டு (வடகரை)த் தலம். தஞ்சாவூருக்கு 11 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சை கும்பகோணம் முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்கு வரப்பேருந்துகள் உள்ளன. சிறப்புக்கள் பல வாய்ந்த தலம். அப்பர் பெருமான் கயிலைக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த அற்புதத் தலம். இவ்வற்புதம் - கயிலைக் காட்சித் திருவிழா ஆண்டு தோறும் ஆடி அமாவாசையன்று நடைபெறுகிறது. சப்த ஸ்தான தலங்களுள் இதுவும் ஒன்று. இந்திரன், இலக்குமி ஆகியோர் வழிபட்ட தலம். தருமையாதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட பெருங்கோயில். மிகப் பழைமையும் சிறப்பும் வாய்ந்த ‘அரசர் தமிழ்க் கல்லூரி’ இத்தலத்தில்தான் உள்ளது. சுந்தரரும் சேரமானும் வந்த போது இறைவன் காவிரி வெள்ளத்தை ஒதுங்கி வழிவிடச் செய்து காட்சி தந்தருளிய தலம். “அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்னும் திருமுறை வாக்கின்படி இங்கு அம்பாளே அரியின் அம்சமாதலின் இத்தலத்தில் விஷ்ணு ஆலயம் இல்லை. தேவியே மகாவிஷ்ணுவின் அம்சம் என்பதற்கேற்ப, அம்பாளுக்கு எதிரில் கிழக்கே பாவாசாமி அக்ரஹாரத்தில் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. ‘பஞ்ச நதக்ஷேத்திரம்’ ‘ஐயாறு’ எனப்படும். இத்தலம் நாற்புறமும் கோபுர வாயில்களைக் கொண்டது.
|
|
திருவையாறு ஐயாறப்பர் கோயில்
| கோயிலின் அமைப்பு | கிழக்கு ராஜகோபுரமே பிரதானவாயில். ஏழு நிலைகளையுடையது. சிற்பங்களையுடைய பழைமையான கோபுரம். விசாலமான உள்ளிடம். வலப்பால் பெரிய மண்டபம் உள்ளது. இதில் வல்லபை விநாயகர், தண்டபாணி சந்நிதிகள் உள்ளன. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. சிற்பங்கள் அதிகமில்லை. வலப்பால் அம்பாள் கோயிலுக்குப் போகும் வழியுள்ளது. உள்நுழைந்து வலமாக வரும்போது சூரிய தீர்த்தம் நீராழி மண்டபத்துடன் நல்ல கட்டமைப்பில் உள்ளது. தெற்கு வாயில் வழியைக் (தெற்கு வாயிலில் வெளிப்புறம் ஆட்கொண்டார் சந்நிதி உள்ளது. இதற்கு எதிரில் உள்ள வேலியிட்ட பள்ளத்தில் குங்கிலியம் இட்டுப் புகைக்கும் பழக்கம் உள்ளது. இங்குக் குங்கிலியப் பொட்டலங்களை விற்கிறார்கள். மக்கள் அவற்றை வாங்கி அக்குழியில் புகையும் நெருப்பில் கொட்டுகிறார்கள்.) கடந்து சென்றால் பிராகாரத்தில் அப்பருக்குக் கயிலைக் காட்சியருளிய சுவாமி கோயில் (தென்கயிலை) தனிக்கோயிலாக - கோபுர, விமான அமைப்புகளுடன் உள்ளது. மூன்று நிலைக் கோபுரத்தையுடைய இக்கோயிலின் உட்சுற்றில் அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள் உள்ளன. நுழைவு மண்டபத்தில் வலப்பால் அப்பர் பெருமானின் நின்ற திருக்கோலம் காட்சியளிக்கிறது. மூலவர் சிவலிங்கத் திருமேனி. பின்னால் சுவாமி அம்பாள் நின்ற கோலம் உள்ளது. இக்கோயில் வாயிலில்தான் அப்பர் கயிலைக் காட்சி கண்ட ஐதீகம், ஆடி அமாவாசையன்று நடைபெறுகின்றது. பிராகாரத்தில் தொடர்ந்து வலம் வரும்போது விநாயகர் சந்நிதி உள்ளது. அடுத்து மேலக் கோபுரவாயில். ஏழுநிலைக் கோபுரம் சிற்பங்களுடன் புதுப் பொலிவுடன் விளங்குகின்றது. அடுத்துள்ள கோயிலும் விநாயகர் சந்நிதியே உள்ளது. அடுத்து இடப்பால் வடகயிலாயம் உலகமாதேவீச்சரம் என்று வழங்கப்படும் தனிக்கோயில் பிராகார மதிலை யடுத்து அப்பால் உள்ளது. செல்வதற்கு வாயில் உள்ளது. மூலவர் சிவலிங்கத் திருமேனி. வலம் முடித்து, மூன்று நிலைகளையுடைய மூன்றாவது கோபுரத்தைக் கடந்து துவார விநாயகராகவுள்ள இரட்டை விநாயகர்களையும் தண்டபாணியையும் வணங்கி உட்சென்றால் கவசமிட்ட கொடிமரம், முன்னால் சித்தி விநாயகரும் உள்ளார். பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. இப்பிராகாரத்தின் கோடியில் ஒலி கேட்கும் இடம் என்று குறிப்பிட்டுக் காட்டியுள்ள இடத்தில் நின்று, கற்சுவரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய குழியில் வாய்வைத்து, உரத்த குரலில் ‘ஐயாறா’ என்று அழைத்தால் அவ்வொலி பன்முறை பிரதிபலிப்பதைக் கேட்கலாம். (நாம் அழைத்தபோது ஐந்துமுறை கேட்டது, இன்னும் உரத்து அழைத்தால் ஏழுமுறை கேட்பதாகச் சொல்கிறார்கள்.) “ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே” என்னும் அப்பர் வாக்கு இங்கு நினைவிற்கொள்ளத் தக்கது. இப்பிராகாரத்தை வலமாக வந்து, கொடிமரத்தைத் தாண்டி, படிகள் ஏறினால் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. நீண்ட விசாலமான மண்டபம். மூலவர் நுழைவு வாயிலுக்குப் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் - சந்நிதியில் ஓர் இரும்புப் பேழையில் மரகத லிங்கம், ஸ்படிக லிங்கம், ஸ்படிக அம்பாள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு நாடொறும் காலையில் பூஜை நடைபெறுகின்றது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தருமபுர ஆதினம் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | தஞ்சாவூர் அரண்மனை, தஞ்சாவூர் பெரிய கோயில் |
| செல்லும் வழி | தஞ்சாவூருக்கு 11 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சை கும்பகோணம் முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்கு வரப்பேருந்துகள் உள்ளன. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 5.00 -12.30 முதல் மாலை 4.30-9.30 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 Sep 2017 |
| பார்வைகள் | 35 |
| பிடித்தவை | 0 |