Back
வழிபாட்டுத் தலம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
வேறு பெயர்கள் திருவல்லிக்கேணி
ஊர் திருவல்லிக்கேணி
வட்டம் திருவல்லிக்கேணி
மாவட்டம் சென்னை
உட்பிரிவு 2
தாயார் / அம்மன் பெயர் ருக்மணி, திருமகள், பூமகள்
தலமரம் மகிழ மரம்
திருக்குளம் / ஆறு கைரவிணி புஷ்கரிணி
ஆகமம் வைகானசம், தென்கலை
வழிபாடு ஆறுகால பூசை
திருவிழாக்கள் சித்திரை மாதம் - பிரம்மோற்சவம், ஆனி மாதம் - நரசிம்மர் பிரம்மோற்சவம், ஆடி மாதம் - பௌர்ணமி மறுதினம் உற்சவரின் தங்ககவசம் கலைந்து திருமஞ்சனம் நடைபெறும், ஆவணி மாதம் - ஸ்ரீ ஜெயந்தி, புரட்டாசி – அனைத்து சனிக்கிழமைகளில் விசேஷம், மார்கழி – பகல்பத்து, வைகுண்டஏகாதசி, இராப்பத்து திருவிழா, மாசி மாதம் – தெப்ப உற்சவம்.
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள்
கல்வெட்டு / செப்பேடு சோழர் மற்றும் விசயநகர, நாயக்கர் காலக் கல்வெட்டுகள் இங்கு உள்ளன.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் இக்கோயிலில் எங்கும் இல்லாத சிறப்பாக மூலவர் மீசையுடன் காணப்படுகிறார். திரண்ட புஜங்களோடு வலது கையில் சங்கு ஏந்தி, இடது கை பாதத்தைச் சுட்டிக்காட்ட, உயரமாய் அகலமாய், கம்பீரனாய் பெரும் விழிகளோடு முகத்தில் வெள்ளை மீசையோடு இடுப்பில் கத்தியோடு சாலக்கிராம மாலையணிந்து ஆதிசேஷன் தலையில் நின்றவாறு காட்சியளிக்கிறார். வேங்கடகிருஷ்ணனுக்கு அருகே அதே கம்பீரத்தோடு, கூர்மையான நாசியும் புன்சிரிப்பு தவழும் உதடும் வலது கையில் குமுத மலரும் கொண்டு ருக்மணி தேவி இருக்கிறார். ருக்மணி தேவியின் வலப்பக்கத்தில் உழு கலப்பையோடு பலராமர் காட்சி தருகிறார். வேங்கடகிருஷ்ணரின் இடப்பக்கம் தம்பி சாத்யகியும், அவருக்கு அருகே தெற்கு நோக்கி மகன் பிரத்யும்னனும், பேரன் அநிருத்தனும் காட்சி தருகிறார்கள்.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர். 108-திவ்ய தேசங்களில் ஒன்று.
சுருக்கம்
கேணி என்றால் குளம் என்றும் ஒரு பொருள் உண்டு. முற்காலத்தில் இக்கோயில் குளத்தில் “அல்லி” மலர்கள் நிறைந்திருந்ததால் இந்த ஊர் “திரு அல்லிக்கேணி” என்று அழைக்கப்பட்டது. காலப் போக்கில் அது திருவல்லிக்கேணி என்றானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இது இருந்தாலும் இக்கோயில் கற்றளியாக கி.பி. 8-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான முதலாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டது. பின்னாளில் சோழர்களும், விஜயநகர பேரரசர்களும் இக்கோயிலை விரிவுபடுத்தியுள்ளனர். ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் ஆகும். இது 108 திவ்ய தேசங்களில் முக்கியமான கோவில்களில் ஒன்றானதாகும். இக்கோயிலின் மூலவரான பார்த்தசாரதி பெருமாளின் சிலை 9 அடி உயரம் கொண்டது. இத்திருக்கோயிலின் மூலவர் வேங்கடகிருஷ்ணன் முகத்தில் மீசையுடன் காட்சி தருகிறார். பெருமாள் தன் மனைவி மற்றும் சகோதரர் என குடும்பம் சகிதமாக இருக்கிறார். இக்கோவிலில் திருமாலின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்கள் உள்ளன. அவையாவன நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர். இக்கோயிலில் வேதவல்லி தாயார், ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதராஜ சுவாமி, நரசிம்ம, ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் வைகானச ஆகமத்தினையும், தென்கலையையும் பின்பற்றுகிறது. உடன் நரசிம்மர் மற்றும் கிருஷ்ணருக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. இக்கோயிலின் கோபுரங்களிலும், மண்டபத் தூண்களிலும் கலைத்திறன் மிக்க சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இக்கோயிலில் ஆழ்வார்களுக்கும் ஆச்சாரியர்களுக்கும் பிரம்மாண்ட அளவில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி மற்றும் சித்திரை திங்களின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர். இங்கு உள்ள மண்டபங்களில் கதா காலக்ஷேபங்கள் மற்றும் புராண கதை சொல்லுதல் நடைபெறுகின்றன.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
கோயிலின் அமைப்பு கோவிலில் முன் மண்டபங்கள் முதலில் உள்ளன. அடுத்து மகா மரியாதை மண்டப வாயில் உள்ளது. இதன் மீது ராஜகோபுரம் அமைந்துள்ளது. ஐந்து நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட கோபுரம் சில வருடங்களுக்கு முன்பாக புதுப்பிக்கப்பட்டது. கோவிலில் உள்ள ஐந்து விமானங்கள் ஆனந்த விமானம், பிரணவ விமானம், புஷ்பக விமானம், சேஷ விமானம், தைவிக விமானம் ஆகியவை ஆகும். புராண காலத்தில் இத்தலம் “பிருந்தாரயண்ய சேத்திரம்” என அழைக்கப்பட்டது. இக்கோயிலில் ஐந்து கருவறை விமானங்கள் இருக்கின்றன. மூலவரின் கருவறையில் உள்ள இறைவனின் பெயர் வேங்கட கிருஷ்ணன் ஆகும். இவருடைய ஒரு புறத்தில் ருக்மணி தாயாரும் பலராமரும் மறுபுறத்தில் சாத்தகி, பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக மூலவர் காட்சியளிக்கிறார். இரண்டாம் சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு மூலவர் அரங்கநாதன் காட்சியளிக்கிறார். மூன்றாவது சந்நிதியில் தனது வாகனமாகிய கருடன் மீது அமர்ந்தபடி வரதராஜ பெருமாள் சேவை தருகின்றார்.இவரது மறுபெயர் தேவப்பெருமாள் ஆகும். கிழக்கு நோக்கிய சந்நிதியாகும். நான்காவது சந்நிதியில் மேற்குப்புறமாக நோக்கியபடி அழகிய சிங்கரான நரசிம்மர் வீற்றிருக்கும் கோலம் அமைக்கப்பட்டுள்ளது. நரசிம்மரின் சந்நிதிக்கு அடுத்த படியாக ஆண்டாள் சந்நிதி உள்ளது. ஐந்தாவது சந்நிதியில் தெற்கு நோக்கியபடி சக்ரவர்த்தி திருமகனாக ராமர் நின்ற கோலத்தில் சேவை அளிக்கின்றார். மூலவருடன் சீதாப் பிராட்டியார், பரதன், லட்சுமன், சத்ருக்கன், அனுமன் ஆகியோரும் சேவை தருகின்றனர். இந்த ஐந்து சந்நிதிகளிலும் உள்ள மூலவர்கள் ஐந்து பேரும் மங்களாசாசனம் பெற்றிருப்பதால் தலத்திற்கு பஞ்சமூர்த்திதலம் என்ற பெயரும் உண்டானது. கூரத்தாழ்வார், முதலியாண்டான், மணவாள மாமுனிகள், ராமானுஜர், தேசிகர், திருக்கச்சி நம்பிகள் ஆகியோர்களுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் விவேகானந்தர் நினைவு மண்டபம், மகாகவி பாரதியார் நினைவு இல்லம், அமீர் மகால், பெரிய வாலஜா மசூதி
செல்லும் வழி திருவல்லிக்கேணி சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். மெரீனா கடற்கரையிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருவல்லிக்கேணி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருவல்லிக்கேணி
அருகிலுள்ள விமான நிலையம் மீனம்பாக்கம்
தங்கும் வசதி திருவல்லிக்கேணி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 74
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்