வழிபாட்டுத் தலம்
திருப்பறியலூர் வீரட்டேசுவரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருப்பறியலூர் வீரட்டேசுவரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | வீரட்டானம், அட்டவீரட்டம் |
| ஊர் | கீழ்ப்பரசலூர் |
| வட்டம் | தரங்கம்பாடி |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | வீரட்டேஸ்வரர், தக்ஷபுரீஸ்வரர் |
| தாயார் / அம்மன் பெயர் | இளங் கொம்பனையாள் |
| தலமரம் | வில்வம் |
| திருக்குளம் / ஆறு | உத்தரவேதி தீர்த்தம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | கார்த்திகை ஞாயிறு நாள்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| கல்வெட்டு / செப்பேடு | சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலக் கல்வெட்டில் இத்தலம் “ஜயங்கொண்ட சோழவளநாட்டு வீழைநாட்டு ராஜ நாராயண சதுர்வேதி மங்கலமான பறியலூர்” என்று குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் ‘திருவீரட்டான முடையார்’, ‘தக்ஷேஸ்வரமுடையார்’ என்று குறிக்கப் பெற்றுள்ளார். |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கோஷ்ட மூர்த்தங்களாகத் துர்க்கை, பிரம்மா, லிங்கோற்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. கருவறைச் சுவரில், தக்கன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளது. விநாயகரையும், நால்வரையும் வணங்கி, உள் நுழைந்து மண்டபத்தில் இடப்பால் உள்ள தக்ஷசம்ஹார மூர்த்தியைத் தரிசிக்கலாம். எதிரில் சாளரவாயில் உள்ளது. சூலம், தண்டு, வாள், மணி, கபாலம் வாள் முதலியன ஏந்திய ஆறு திருக்கரங்களுடன இம்மூர்த்தி (உற்சவத்திருமேனி) காட்சி தருகின்றார். கீழே செப்புத் தட்டில் தக்கன் யாகம் செய்வது போலவும் பிரமன் இருப்பது போலவும் சிற்பம் உள்ளது. இம்மூர்த்தியின் திருவடியில் தக்கன் வீழ்ந்து கிடப்பதைப் போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதைத் தகட்டால் மூடிவைத்துள்ளனர். சிவாசாரியரிடம் கேட்டு, அத்தகட்டைத் தள்ளச் செய்து, இச்சிற்பத்தைக் கண்டு தரிசிக்கலாம். சம்ஹாரமூர்த்திக்குப் பக்கத்தில் நடராச சபையுள்ளது. மூலவர் பெரிய திருமேனி - சுயம்பு - சதுர ஆவுடையார். கோமுகம் மாறியுள்ளது. மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மயில்மீது ஒரு காலூன்றி நிற்கும் முருகன், சோமாஸ்கந்தர், விநாயகர், பிரதோஷ நாயகர் முதலியன சிறப்பாகவுள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். |
|
சுருக்கம்
சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் வழக்கில் கீழப் பரசலூர் என்று வழங்குகின்றது. வீரட்டேஸ்வரர் கோயில் என்று கேட்டால்தான் மக்கள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. வீரபத்திரை ஏவித் தக்கனைச் சம்ஹரித்த தலம். தருமையாதீனத் திருக்கோயில். தக்கன் யாகம் செய்த தலமாதலின் தக்ஷபுரம் என்றும்; தேவர்களுக்கு ஏற்பட்ட பாவத்தைத் தண்டனை மூலம் பறித்ததால் ‘பறியலூர்’ என்றும் பெயர்களுண்டு. சம்பந்தர் பாடியது. சிறிய கிராமம்.
|
|
திருப்பறியலூர் வீரட்டேசுவரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | மேற்கு நோக்கி அமைந்துள்ள பழமையான கோவில். இரண்டு திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலிற்கு இராஜகோபுரம் இல்லை. மதிற்சுவர்க்கும், இரண்டாவது திருச்சுற்றுக்கும் இடையில் கருவறையை நோக்கி நந்தியும், பலிபீடமும் உள்ளன. இரண்டாம் திருச்சுற்று முகப்புடன் அமைந்துள்ளது. உள் திருச்சுற்றின் வாயிலுக்கு வலப்புறம் விநாயகரும், பாலசுப்பிரமணியரும் இடப்புறம் சமயகுரவர்கள் நால்வரும் காட்சியளிக்கின்றனர். திருச்சுற்றின் வடபுறம் சண்டிகேசுவரர் திருமுன் உள்ளது. கீழ்புறம் பைரவர் மற்றும் சூரியன் உள்ளனர். கருவறையின் வெளிச்சுவர் புரைகளில் நான்முகன், கொற்றவை, லிங்கோற்பவர், ஆலமர்செல்வன், கணபதி, சிவலிங்கத்தைப் வழிபடும் தக்கன் ஆகியோர் அமைக்கப்பட்டு உள்ளனர். கருவறை யாளி வரிசை வரை கருங்கல்லால் கட்டப்பட்டு, அதற்குமேல் செங்கல்லால் அமைந்துள்ளது. வட்ட வடிவிலான விமானத்தில் துணைவியருடன் நான்முகனும், துணைவியருடன் முருகனும் மற்றும் ஆலமர்செல்வனும் உள்ளனர். கருவறையில் லிங்கத் திருவுருவில் வீரட்டேசுவரர் எழுந்தருளியுள்ளார். கருவறைக்கு முன் மகாமண்டபமும், முகமண்டபமும் அமைந்துள்ளன. முகமண்டபத்தில் அம்மன் திருமுன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. வலம் வந்து உள் பிராகாரம் நுழைந்தால் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தருமபுர ஆதினம் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | செம்பொனார் கோயில், சிவலோகநாதர் கோயில், விஷன் கார்மெல் மவுண்ட் சர்ச் |
| செல்லும் வழி | மயிலாடுதுறை - தரங்கம்பாடி பாதையில் ‘செம்பொன்னார் கோயிலை அடைந்து, அவ்வூர் மெயின் ரோட்டில் நல்லாடை’ என்று கைகாட்டி காட்டும் பாதையில் (வலப்புறமாக) சிறிது தூரம் சென்று, ‘பரசலூர்’ என்று கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் (வலப்புறமாக) திரும்பி 2 கி.மீ. செல்லவேண்டும். இப்பாதை ஒரு வழிப்பாதை - குறுகலானது. இதன் வழியே சென்றால் கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Nov 2018 |
| பார்வைகள் | 39 |
| பிடித்தவை | 0 |