Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு வெங்கிடாசலபதி கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு வெங்கிடாசலபதி கோயில்
வேறு பெயர்கள் சிந்துபட்டி பெருமாள் கோயில், தென் திருப்பதி
ஊர் சிந்துபட்டி
வட்டம் திருமங்கலம்
மாவட்டம் மதுரை
தொலைபேசி 97918 35580 
உட்பிரிவு 2
மூலவர் பெயர் வெங்கிடாசலபதி
தாயார் / அம்மன் பெயர் அலர்மேல் மங்கை
தலமரம் புளியமரம்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் வைகாசி பிரம்மோற்ஸவம், ஆடிப் பெருந்திருவிழா, ஆவணி மாத கிருஷ்ணன் பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், கார்த்திகை தீபத் திருவிழா, மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு, தைமாதப் பிறப்பு (பொங்கல் சிறப்பு விழா)
காலம் / ஆட்சியாளர் நாயக்க மன்னர்கள் / கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு வெங்கடாசலபதி கோயில் சுவாமி சன்னதி முன்னுள்ள மண்டபத் தூண், அகத்தாரிலிருக்கும் இரசை கிராம நாட்டாண்மை சங்கரனாதர் மகன் கெண்டராமனாயக்கரின் உபையமாக அமைக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. தாசரிநாயக்கர் மகன் திருமலை நாயக்கரின் உபயமாக வெங்கடாசலபதி கோயில் சுவாமி சன்னதி முன்பாக ஒரு தூண் அமைக்கப்பட்டுள்ளது. வெங்கடாசலபதி கோயில் அம்மன் சன்னதி முன்புள்ள மண்டபத்தூண் ஏழாயிரம் பண்ணையிலிருக்கும் அங்கப்பனாசாரி என்பவரது மகனும், கல்வேலை செய்து வந்தவருமான வெள்ளையனாசாரி என்பவர் விப வருடம் பங்குனி மாதத்தில், அம்மன் மண்டபத்தின் முன்னுள்ள தூணை உபையமாகச் செய்தளித்துள்ளார். வெங்கடாசலபதி கோயில் அம்மன் சன்னதி முன்புள்ள மண்டபத் தூண், பொருப்புப்பட்டியின் நாட்டாண்மையாக இருந்த பெத்தி நாயக்கரின் மகன் தாசரி நாயக்கர் என்பவரின் உபையமாக நிறுவப்பட்டுள்ளது. மற்றொருத்தூணில் உள்ள கல்வெட்டு, இத்தூண் வெங்கடப்ப நாயக்கரின் உபையமாகச் செய்தளிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. மற்றொருத் தூண் இராமகிருஷ்ணம நாயக்கர் என்பவரால் செய்தளிக்கப்பட்டுள்ளது. வெங்கடாசலபதி கோயில் அர்த்த மண்டப நிலைக்கால் கல்வெட்டு, திருவேங்கட அய்யன், ரங்க அய்யன் ஆகியோரது சதா சேவையைக் குறிக்கிறது. வெங்கடாசலபதி கோயில் அர்த்த மண்டப நுழைவாயில் திருவாசியின் பின்புறமுள்ள உத்திரக்கல்லில் உள்ள கல்வெட்டொன்றில், ஊரின் பெயர் சிந்து நகரம் என்றும் சுவாமி சன்னதி திருவேங்கடமுடை யான் சன்னதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குப்பாண்டி முதலியார் இக்கோயிலில் திருவாசி செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப் பிடுகிறது. இப்பணி கி.பி. 1822-இல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோயிலுக்கு அருகிலுள்ள தனிக்கல் கல்வெட்டொன்று, திடியன் சீர்மை நாட்டாரான நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் சந்தக்குடி திருக்குள இறைவனுக்கு துப்பக்குடி, சேந்தங்குடி, பாப்பாரபட்டி முதலிய ஊர்களின் நிலவருவாயினை நல்கி பட்டையம் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது.
சுவரோவியங்கள் தற்கால சுவரோவியங்களாக பெருமாள், சரஸ்வதி, லெட்சுமி, முருகன் ஆகிய தெய்வ வடிவங்கள் வரையப்பட்டுள்ளன.
சிற்பங்கள் கருவறையில் நின்றநிலையில் வெங்கிடாசலபதி நிலமகள் மற்றும் திருமகளுடன் காட்சியளிக்கிறார். பெருமாள் சந்நிதி மற்றும் தாயார் சந்நிதியில் உள்ள மண்டபத் தூண்களில் அமைந்துள்ள நாயக்கர் மற்றும் அவர் தம் துணைவியர் சிற்பங்கள் எழில் வாய்ந்தவை. இச்சிற்பங்கள் எண்ணிறந்தனவாக காணப்படுகின்றன. மேலும் அனுமன், குரங்குடன் பாம்பு, காளி, இராமன், கொக்கு, அன்னம், பெண்கள் ஆகிய சிற்பங்களும் புடைப்புச் சிற்பங்களாக தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. பெருமாள் மற்றும் தாயார் கருவறை விமானங்களின் தளங்களில் சுதைச் சிற்பங்களாக கிருஷ்ணலீலை, பெருமாள், இராமர், லெட்சுமி போன்ற தெய்வ வடிவங்கள் அமைந்துள்ளன. திருச்சுற்றில் அண்மையில் புதிதாக சக்கரத்தாழ்வாருக்கு சந்நிதி அமைத்திருக்கின்றனர். சக்கரத்தாழ்வாரும் யோக நரசிம்மரும் அருள்புரிகின்றனர். திருச்சுற்றில் அமைந்துள்ள வாகன மண்டபத்தில் யானை, மயில், சிங்கம், பல்லக்கு, இரதம் போன்ற மரத்தால் செய்யப்பட்ட வாகனங்கள் காணப்படுகின்றன.
தலத்தின் சிறப்பு 300 ஆண்டுகள் பழமையானது. நாயக்கர் கால கட்டடக்கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.
சுருக்கம்
ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் பன்னிரண்டு பட்டி நாயக்கர்களும் வழிபட்டு, நிர்வாகம் செய்துள்ளனர். இந்தக் கோயில் தற்போது, தமிழக அரசின் அறநிலையத் துறையின் மேற்பார்வையில் உள்ளது. அரசு நியமனம் செய்த அறங்காவலர் குழு கோயில் நிர்வாகத்தை கவனித்து வருகிறது. திருப்பதி வேங்கடாசலபதிக்கு நேர்ச்சை செய்வதாக வேண்டிக் கொள்பவர்கள், ஏதாவது அசௌகரியத்தால் திருப்பதி செல்ல முடியாமல் போனால், அதை இங்கே நிறைவேற்றிக் கொள்ளலாம். பெருமாளும் திருப்பதி பகுதியில் இருந்து வந்தவர் என்பதால், இந்தத் தலம் தென்திருப்பதி என்றே போற்றப்படுகிறது. பெருமாளை அங்கப் பிரதட்சிணம் செய்து, இந்திரன் சாப விமோசனம் பெற்றதால், இங்கே அங்கப்பிரதட்சிணம் செய்து வழிபட்டால் தங்கள் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கம்பத்துக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால், குழந்தைப் பேறு, தடைபெற்ற திருமணம், தொலைந்துபோன பொருள்கள் உடனே கிடைக்கும் என்பதுவும் ஐதீகமாக கடைபிடிக்கப்படுகிறது. கோமாதா வழிபாடு செய்து வழக்கில் வெற்றி, குழந்தைப்பேறு ஆகியவற்றைப் பெறுகிறார்கள். புதுமணத் தம்பதியர், அந்த வருடத்தில் வரும் விஜயதசமித் திருநாளில் இங்கே வந்து, நோன்பு எடுத்து, அர்ச்சனை செய்து, பெருமாள், தாயார் அருள்பெற்றுச் செல்வதை மகர்நோன்பு என்கிறார்கள். இந்தப் பழக்கம் இப்போதும் பரம்பரையாக இந்தப் பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
அருள்மிகு வெங்கிடாசலபதி கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயிலின் நுழைவாயில் கோபுரத்துடன் தொடங்குகிறது. நீண்ட நெடிய மதிற்சுவரை நாற்புறமும் கொண்டுள்ளது. பெருமாள் திருமுன் (சந்நிதி), அம்மன் திருமுன் என்ற இரண்டு தனித்தனி சந்நிதிகளைக் கொண்டுள்ளது. பெருமாளின் திருமுன் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகின்றது. கொடிமரத்துக்குப் பின், கருடாழ்வார் சந்நிதி. தூண் வேலைப்பாடுகளுடன் கூடிய ஊஞ்சல் மண்டபம் மற்றும் விழா மண்டபம் அமைந்துள்ளது. திருச்சுற்றில் அண்மையில் புதிதாக சக்கரத்தாழ்வாருக்கு சந்நிதி அமைத்திருக்கின்றனர். சக்கரத்தாழ்வாரும் யோக நரசிம்மரும் அருள்புரிகின்றனர். திருச்சுற்றில் அமைந்துள்ள வாகன மண்டபத்தில் யானை, மயில், சிங்கம், பல்லக்கு, இரதம் போன்ற மரத்தால் செய்யப்பட்ட வாகனங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாயக்கர் சமூகத்தவரும் ஒவ்வொரு வாகன உற்சவத்தை நிகழ்த்துகிறார்கள். மண்டபங்களில் உள்ள தூண்களில் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. சில தூண்கள் கல்வெட்டுகளைப் பெற்றுள்ளன. பெருமாள் கோயில் கருவறை விமானம் தளங்களில் பெருமாளின் திருஅவதாரச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. அவை சுதைச் சிற்பங்களாக விளங்குகின்றன. தாயார் கருவறை விமானமும் தளச்சிற்பங்களைப் பெற்றுள்ளது. தலமரமாக புளிய மரம் முதற்சுற்றில் உள்ளது. மண்டபத் தூண்களில் அமைந்துள்ள வணங்கிய நிலையில் காட்டப்பட்டுள்ள நாயக்கர்கள் மற்றும் அவர் தம் துணைவியர் சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. இவர்களின் உருவ வேறுபாடுகள் மற்றும் ஆடையணிகளின் அமைப்புகள் சிற்பங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் கூடக்கோயில் பெருமாள் கோயில், திடியன் மலை கைலாசநாதர் கோயில், தொட்டப்பநாயக்கனூர் சிவன் கோயில்
செல்லும் வழி மதுரை மாவட்டம்- திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில், சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது சிந்துப்பட்டி பெருமாள் கோயில்.
கோவில் திறக்கும் நேரம்
அருள்மிகு வெங்கிடாசலபதி கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திடியன்மலை, சிந்துபட்டி, அம்பட்டையான்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 14 Jun 2017
பார்வைகள் 37
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்