Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு கங்காதரேசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு கங்காதரேசுவரர் கோயில்
வேறு பெயர்கள் வைத்தீஸ்வரர்
ஊர் புரசைவாக்கம்
வட்டம் அமைந்தகரை
மாவட்டம் சென்னை
உட்பிரிவு 1
மூலவர் பெயர் கங்காதரேஸ்வரர்
தாயார் / அம்மன் பெயர் பங்கஜாம்பாள்
தலமரம் புரசு
திருக்குளம் / ஆறு கங்கா தீர்த்தம்
வழிபாடு காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
திருவிழாக்கள் மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை
காலம் / ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு / விஜயநகரர்
கல்வெட்டு / செப்பேடு ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர் நாட்டுத் திருவான்மியூரில் உள்ள உலகாளுடைய நாயனாருக்கு விளக்கு எரிப்பதற்காக நீலகங்கரையன் என்பான் கொடையளித்துள்ளான். இக்கல்வெட்டு இக்கோயிலில் ஒரு கல்லில் உள்ளது. கங்காதரேசுவரர் கோயில் முதற் சுற்றில் உள்ள ஒரு கல்லில் காணப்படும் கல்வெட்டொன்று ஸ்ரீவீரப்பிரதாப தேவராய மகா இராயர் என்ற பெயரைக் கொண்டுள்ளது. பிற தகவல்கள் சிதைந்துள்ளன. இக்கோயிலில் காணப்படும் கல்லில் உள்ள மற்றொரு கல்வெட்டு, ஆயர்களில் ஒருவரான கொங்...கோன் அழகப்பெருமாள் என்பவரை கோயிலுக்கு நித்தம் திருவிளக்கு ஏற்றுவதற்காகக் குடி அமர்த்தப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இக்கோயில் கருவறையின் வடபுறத்தில் உள்ள மற்றொரு கல்வெட்டு முழுமையான செய்தியை பெற்றிருக்க வில்லை. காணிக்கை, வேண்டுகோள் போன்ற வரிகளைக் குறிப்பிடுகிறது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கிழக்கு நோக்கிய கருவறையில் இலிங்க வடிவில் கங்காதரேசுவரர் உள்ளார். தெற்கு நோக்கிய கருவறையில் பங்கஜாம்பாள் நின்ற நிலையில் உள்ளார். உற்சவர் மண்டபத்தில் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிச்சுற்றில் மேற்குப்புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மிகப்பெரிய சுதையாலான சிவன் வடிவம் நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. பகீரதன் இலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடும் சிற்பமும் உள்ளது. பாண லிங்கம், நவக்கிரக ஆலயம், வள்ளலார் மற்றும் பாலசுப்ரமணியர், விநாயகர், நந்தி ஆகியோருடைய தனிக் கோயில்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறைத் திருச்சுற்றில் சூரிய- சந்திரர்களையும், தில்லை வாழ் அந்தணர், திருநீலகண்ட நாயனார் முதலிய நாயன்மார்களின் உருவங்களைக் கொண்ட கல்தூண்களையும் காணலாம். சோமாஸ்கந்தர் அடுத்து நால்வர், நாகர்கள், தவக்கோலத்தில் பகீரதன், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் வீரபத்திரர் சிற்பங்கள் அமைந்துள்ளன. மேலும் ஊன்றீஸ்வரர், மின்னொளி நாயகி, உச்சிஷ்ட கணபதி, ஆறுமுகம், துர்க்கை, பைரவர் மற்றும் கருவறைக் கோட்டங்களில் தெற்கே விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், மேற்கே மகாவிஷ்ணு, வடக்கே பிரம்மன், துர்க்கை ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கருவறைத் திருச்சுற்றில் வடபுறத்தில் சண்டிகேசுவரர் அமர்ந்துள்ளார். கோயிலின் முதற் சுற்றில் சுவர்களில் சுதையாலான சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. அவை சிவபுராணச் சிற்பங்களாக அமைந்துள்ளன.
தலத்தின் சிறப்பு 600 ஆண்டுகள் பழமையானது. விஜயநகரர் கால கலைப்பாணியைப் பெற்றுள்ளது.
சுருக்கம்
சென்னையில் அமைந்தகரை வட்டத்தில் உள்ள புரசைவாக்கம் கங்காதரேசுவரர் திருக்கோயில் பிற்காலச் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. ஆனால் கல்வெட்டுகள் விசயநகரர் காலத்திலிருந்தே கிடைக்கின்றன. தற்போது இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. பழமையான கட்டடக்கலையின் எச்சங்கள் எதுவும் காணக்கிடைக்கவில்லை. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் பெரிய திருக்குளத்தைக் கொண்டுள்ளது. சிற்பங்களும் கோயில் புனரமைப்பின் போது நிர்மாணிக்கப்பட்டவையாகவே உள்ளன. சுமார் ஐம்பது அடி உயரம் கொண்ட சிவபெருமானின் சுதையாலான சிற்பம் இக்கோயிலுக்கு தனித்துவமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு கீழே லிங்கத் திருமேனிக்கு பகீரதன் பூஜை செய்வது போல அமைந்துள்ள இந்த சுதைச் சிற்பம், கோயிலின் தலவரலாற்றை எடுத்துக்கூறுவதாய் அமைந்துள்ளது.
அருள்மிகு கங்காதரேசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு கிழக்கு நோக்கியதாக இராஜகோபுரம் அமைந்துள்ளது. கோயிலின் முதல் திருச்சுற்றின் சுவர்களில் சுதையாலான சிவபுராணச் செய்திகள் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன. மேலும் இச்சுற்றில் பாணலிங்கம், நவக்கிரகம், விநாயகர், சுப்ரமணியர், வைத்தீசுவரர் ஆகிய தெய்வங்களுக்கான தனி சிறு கோயில்கள் அமைந்துள்ளன. கிழக்கில் இறைவன் கருவறைக்கான கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி அமைக்கப்பட்டுள்ளன. தென்புறத்தில் கொடிமரம், பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியன அம்மன் கருவறைக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளன. தென்புறத்தில் ஒரு நுழைவாயில் உள்ளது. தென் கிழக்கு மூலையில் குளம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கியதாக அமைந்துள்ள இறைவனின் கருவறை சதுர வடிவில் உள்ளது. ஒரு சிறிய அர்த்த மண்டபம் அதனைத் தொடர்ந்து தூண்களுடன் கூடிய மகாமண்டபம் ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இறைவனின் கருவறை மேல் அமைந்துள்ள விமானம் தற்காலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் சுதையாலானது. சுதைச் சிற்பங்கள் அவற்றில் இடம் பெற்றுள்ளன. மகாமண்டபத்திலேயே தெற்கு நோக்கிய நிலையில் அம்மன் கருவறை அமைந்துள்ளது. அம்மன் கருவறை சதுரவடிவமாகும். ஒரு சிறிய அர்த்தமண்டபமும் கொண்டுள்ளது. கருவறைத் திருச்சுற்றில் கோட்டத் தெய்வங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மன், துர்க்கை ஆகிய இறையுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென் கிழக்கு மூலையில் பைரவர் சிற்பம் காணப்படுகிறது. கருவறைச் சுற்றின் வடபுறத்தில் சண்டிகேசுவரர் சிறுகோயில் கொண்டுள்ளார். பள்ளியறை சிறிய கோயிலாக காட்சியளிக்கிறது. கங்காதரேசுவரரின் கருவறை அருகில் சோமாஸ்கந்தருக்கான தனி கோயில் அமைப்பு காணப்படுகிறது. அதனை ஒட்டி நால்வர் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதனையடுத்த வெளியில் உற்சவருக்கான மண்டபம் ஒன்று தூண்களுடன் காணப்படுகிறது. இம்மண்டபத்தில் 63 நாயன்மார்களின் சிற்பங்களும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலிச்சுவரர் கோயில், சிந்தாதிரிப்பேட்டை பெருமாள் கோயில்
செல்லும் வழி
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00-12.00 முதல் மாலை 4.30-8.30 வரை
அருள்மிகு கங்காதரேசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் புரசைவாக்கம், எழும்பூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சென்னை எழும்பூர்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி சென்னை மாநகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் மதுரை கோ.சசிகலா
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 775
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்