வழிபாட்டுத் தலம்
அருள்மிகு ஜுரகேஸ்வரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு ஜுரகேஸ்வரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | ஜுரகேஸ்வரர் |
| ஊர் | காஞ்சிபுரம் |
| வட்டம் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | ஜுரஹேஸ்வரர் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / பல்லவர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறை தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. பரிவார சந்நிதிகள் இல்லை. கோபுரங்களில் கணேசர், முருகன், வாயிற்காவலர்கள், பணிப்பெண்கள், கோபுரம் தாங்கும் ஆண்கள் ஆகிய சுதைச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1200 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் கால கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. சுரத்தினால் அவதிப்படுவர்கள் இக்கோயிலை வணங்கி நலமடையலாம். |
|
சுருக்கம்
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இக்கோயில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு அருகே உள்ளது. சிற்பங்கள் அதிகமில்லாத இக்கோயில் தூங்கானை மாடக் கோயில் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலக் கற்றளியாக இருதளங்களைக் கொண்டதாக உள்ளது. இடைநாழிகை, அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய மண்டபங்களைப் பெற்று விளங்குகிறது. கருவறையில் இறைவன் இலிங்கவடிவில் எழுந்தருளியுள்ளார். இறைவனின் பெயர் ஜுரகேஸ்வரர். வெப்புநோயால், சுரத்தால் அவதிப்படுபவர்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால் நலமடைவார்கள் என்பது ஐதீகம். கருவறை தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. அவ்விடத்தில் காற்று புகுவதற்காக சன்னல்கள் அமைகப்பட்டிருக்கின்றன. இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான் வெப்பம் மிகுந்தவராகக் கருதப்படுவதால் இவ்வாறு சன்னல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்கின்றது தலபுராணம். விமான தாங்குதளம் உபபீடம் பெற்று விளங்குகிறது. உபபீட உறுப்புகளில் அழகான யாளி வரிசைக் காட்டப்பட்டுள்ளது. தாங்குதளம் உபானம், ஜகதி, குமுதம், கண்டங்களில் பாதம் பெற்று பாதபந்த அதிட்டானமாக விளங்குகிறது. சுவர்ப்பகுதிகளில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. இரண்டு அரைத்தூண்களுக்கு நடுவே கும்பப்பஞ்சரம் அமைப்பட்டுள்ளது. கூரைப்பகுதியில் கொடுங்கையின் கீழ் எழிலார்ந்த பூதகண வரிசை செல்கிறது. கணங்களின் உருவ அமைப்பு பல்லவர் கால சிற்பக் கலையை பிரதிபலிக்கிறது. உத்தரம் வரை கருங்கல்லால் அமைந்த பழைய அமைப்பாகவும், அதற்கு மேலே அமைந்த தள வரிசை சுதையால் தற்காலத்தில் அமைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. தளங்களில் சுதையாலான சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கணேசர், சிவன், முருகன், ஆண், பெண் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. சிகரத்தில் முடிவில் உலோகத்தாலான கலசம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
|
|
அருள்மிகு ஜுரகேஸ்வரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இருதளங்களைக் கொண்டுள்ளது. கற்றளியாக விளங்குகின்றது. இடைநாழிகை, அர்த்தமண்டபம், முகமண்டபம் பெற்று விளங்குகின்றது. தூங்கானை மாடக்கோயில் வகையைச் சார்ந்தது. கருவறை தேவகோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. அவ்விடங்களில் காற்று புகுவதற்தான சன்னல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பிற்காலக் கோபுரம் ஒன்று சுதைச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | ஏகாம்பரேஸ்வரர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், கைலாசநாதர் கோயில், கச்சி அனேகதங்காவதம், வைகுண்டபெருமாள் கோயில் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லலாம். செங்கல்பட்டு வரை புறநகர் தொடர்வண்டிகளிலும் சென்று அங்கிருந்து காஞ்சிபுரம் பேருந்தில் செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00-12.30 முதல் மாலை 5.00-8.30 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 77 |
| பிடித்தவை | 0 |