வழிபாட்டுத் தலம்
அழகர்கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அழகர்கோயில்
வேறு பெயர்கள் திருமாலிருஞ் சோலை, உத்யான சைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷ பாத்திரி அல்லது இடபகரி
ஊர் அழகர்கோயில்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
தொலைபேசி 0452 - 2470228
உட்பிரிவு 2
மூலவர் பெயர் பரமசுவாமி, அழகன், அலங்காரன், திருமாலிருஞ்சோலை நின்றான், சுந்தரத்தோளுடையான், ஏறு திருவுடையான், நலத்திகழ் நாரணன்
தாயார் / அம்மன் பெயர் கல்யாணசுந்தரவல்லி
தலமரம் சந்தனமரம், ஜோதி விருட்சம்
திருக்குளம் / ஆறு நூபுரகங்கை, (சிலம்பாறு)
வழிபாடு விச்வரூபம், பொங்கல் காலம், சாயரட்சை, உச்சிகாலம், நித்திய அனு சந்தான கோஷ்டி, சம்பாக்காலம்
திருவிழாக்கள் சித்திரைத் திருவிழா, வசந்தவிழா, ஆடிப்பெருந்திருவிழா, தைலக்காப்பு, பகல் பத்து, இராப்பத்து உற்சவம், கனு விழா, திருக்கல்யாண உற்சவம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு ‘இராஜராஜப் பாண்டிநாட்டு, ராஜேந்திரசோழ வளநாட்டுக் கீழிரணியமுட்டத்துத் திருமாலிருஞ்சோலை’ என ஒரு கல்வெட்டு இவ்வூரினைக் குறிப்பிடுகிறது ராஜராஜன், ராஜேந்திர சோழன் முதலிய பெயர் வழக்குகள் பாண்டிய நாடு சோழர்களால் வெற்றி கொள்ளப்பட்டபின் எழுந்த கல்வெட்டு இது எனக் கொள்ள இடமளிக்கின்றன, ஆயினும் ‘இரணியமுட்டம்’ என்னும் பெயர், இந்நிலப்பகுதிக்குப் பழங்காலந்தொட்டு வழங்கிவந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாத்தினைப் பாடிய புலவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்க் கொளசிகனார்’ எனக் குறிக்கப்படுவதால் இரணியமுட்டம் என்னும் பெயர், இந்நிலப்பகுதிக்கு நெடுங்காலமாக வழங்கி வந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இன்றும் அழகர்கோயிலுக்குத் தென்கிழக்கே ஐந்து கல் தொலைவில் சிற்றூர் ‘இரணியம் என்ற பெயரோடு விளங்கக் காணலாம். ‘சாமந்த நாராயணச் சதுர்வேதிமங்கலம்’ என்ற பெயருடன் திருமாலிருஞ்சோலையில் ஒர் அக்கிரகாரம் இருந்த செய்தியை ஒரு கல்வெட்டால் அறிகிறோம்.மற்றொரு கல்வெட்டால் இதனை அமைத்துக்கொடுத்தவன் ‘பிள்ளைப் பல்லவராயன்’ என்று தெரிகிறது. இங்குக் கோயில் கொண்ட இறைவன் பெயரை ஒரு கல்வெட்டு ‘திருமாலிருஞ்சோலை ஆழ்வார்’ எனக் குறிக்கிறது. ‘திருமாலிருஞ்சோலைப் பரமஸ்வாமி’ என்ற பெயரை ஆனேகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சகம் 1464 (கி. பி. 1542) இல் எழுந்த விசயநகர மன்னர் காலத்திய ஒரு கல்வெட்டில் கோயில் இறைவன் ‘அழகர்' என்ற பெயரால் குறிக்கப்படுகிறார். ஆயினும் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகளில், ‘அழகர் திருச்சிறுக்கர்’, ‘அழகர் சிறுக்கர்’ஆகிய பெயர்கள் இக்கோயிற் பணியாளரில் ஒருவரைக் குறிப்பதால், பிற்காலப் பாண்டியர் காலத்திலேயே, ‘அழகர்’ என்ற பெயர் இறைவனுக்கு வழங்கியிருக்க வேண்டுமெனத் தெரிகிறது. ‘மிழலைக் கூற்றத்து நடுவிற்கூறு புள்ளூர்க்குடி முனையதரையனான பொன்பற்றியுடையான் மொன்னைப்பிரான் விரதமுடித்த பெருமாள்’ என்பவன் முனையதரையன் திருமண்டபத்தைக் கட்டிய செய்தியை ஒரு கல்வெட்டால் அறிகிறோம்இக்கோயில் மகா மண்டபமான இதற்கு, ‘அலங்காரன் மண்டபம்’ என்றொரு பெயரு முண்டு. இம்மண்டபத்தை அடுத்த வெளிப்புறமாக உள்ள மண்டபம் ஆரியன் மண்டபம்’ என வழங்கப்படுகிறது. இம்மண்டபத் தூணிலுள்ள ஒரு கல்வெட்டால் இப்படியேற்ற மண்டபத்தைத் தோமராசய்யன் மகனான ராகவராஜா என்பவன் கட்டிய செய்தி தெரிய வருகிறது. இரண்டாம் திருச்சுற்றிலிருந்து பத்துப் படிகள் ஏறி இம் மண்டபத்தை அடைய வேண்டும். எனவே இதற்குப் படியேற்ற மண்டபம் என்ற பெயர் வழங்கிற்றுப் போலும். கொடிக்கப்பத்திற்கு வடகிழக்கிலுள்ள மேட்டுக் கிருஷ்ணன் கோயிற் சுவரிலுள்ள ஒரு கல்வெட்டால், இதற்குப் ‘பொன்மேய்ந்த பெருமாள் மண்டபம்’ என்பது பெயரென்றும் சுந்தரபாண்டியன் இதனைக் கட்டினானென்றும் தெரிகிறது. தொண்டைமான் கோபுரத்துக்கீழ் ஒரு தூணில் காணப்படும் கல்வெட்டால் இக்கோபுரத்தைச் செழுவத்துரர் காலிங்கராயர் மகனான தொண்டைமானார் செய்தமைத்தார் என்பதை அறிய முடிகிறது. தொண்டைமான் கோபுரத்தின் கீழுள்ள சுவரில் காணப்படும் ஒரு கல்வெட்டு இக்கோயில் ஏகா(ங்)கி ஸ்ரீ வைஷ்ணவரான அழகர் திருச்சிறுக்கர், இக்கோயிலில் அரசன் பெயர் சூட்டப்பட்ட ‘கோதண்டராமன் திருமதில்’ கட்டியமைக்காக, சுந்தரபாண்டிய வளநாட்டுப் பெருங்கருணைச் சதுர்வேதிமங்கலத்தைத் திருப்பணிப்புறமாகப் பெற்ற செய்தியைக் கூறுகிறது.இவ்வூர் தற்போது முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள பெருங்கருணை என்ற ஊராக இருக்கலாம். சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு முன்னுள்ள மண்டபச் சுவரிலுள்ள ஒரு கல்வெட்டு, மலைமீதிருந்த திருவாழி ஆழ்வார் (சக்கரத்தாழ்வார்) கோயிலுக்குத் திருவிளக்கெரிப்பதற்குத் தரப்பட்ட நிவந்தங்களைக் குறிப்பிடுகிறது. இப்போது மலைமீது திருவாழி ஆழ்வாருக்குக் கோயில் ஏதும் காணப்படவில்லை. எனவே, மலை மீதிருந்த கோயில் பிற்காலத்தில் எக்காரணத்தாலோ கோயிலுக்குள் இக்கல்வெட்டு இருக்குமிடத்திற்கருகில் கொண்டுவரப்பட்டு திருநிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சகம் 1386 (கி. பி. 1464) இல் எழுந்த ஒரு கல்வெட்டு திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன் உறங்காவில்லி தாசன் ஆணையின்படி இக்கோயிலில் உபானம் (அடித்தளம்) முதல் ஸ்தூபி வரை திருப்பணி செய்த திருவாளன் சோமயாஜிக்கு, குல மங்கலம் என்னும் சிற்றூர் தானம் செய்யப்பட்டதைக் கூறுகிறது. சடாவர்மன் முதலாம் குலசேகரன் காலத்துக் கல்வெட்டொன்று இக்கோயிலில் இளையவில்லிதாசர் என்பவர் செய்த திருப்பணிக்காக அரிநாட்டுப் பராந்தகச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார் தேவதானமாகத் தந்த புனற்குளம் என்ற ஊரை இறையிலியாக்கிய அரச ஆணையினைக் கூறுகிறது. சுந்தரபாண்டியன் மண்டபத்தில் ஒரு தூணிலுள்ள கல்வெட்டு, அத்தூணைத் திருமாலிருஞ்சோலையில் வசித்த வெள்ளாளன் சுந்தர பாண்டிய விழுப்பரையனான குட்டன் அத்தியூர் நிறுவியதாகக் குறிப்பிடுகிறது. இம்மண்டபத்தில் இன்னொரு தூணிலும் இதைப் போன்றதொரு கல்வெட்டு உள்ளது. இம்மண்டபத்திலுள்ள மற்று மொரு தூணில் அத்தூணை வண்குருகூர் நாகரன்பட்டன் என்பவன் நிறுவிய செய்தி கூறப்படுகிறது. பதினெட்டாம்படிக் கோபுரத்தின்கீழ் உள்ள ஒரு கற்றூணில் அத்தூணைத் திருமலைதேவ மகாராஜாவின் கொடையாக இளையனாயனானான திருப்பணிப்பிள்ளை என்பான் அளித்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் ஒன்பதாம் திருநாளில் இறைவன் ஏறிவரும் திருத்தேரின் பெயர் ‘அமைத்த நாராயணன்’ என்பது ஒரு கல்வெட்டு தரும் செய்தியாகும். முதலாம் குலசேகரபாண்டியன் காலத்தில் கப்பலூருடையான் முனைதரையனான சீராமன் உய்யவந்தான் என்பவன் ஆடி, ஐப்பசி, மார்கழி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் பிராபணர்களுக்கு உணவளிக்க நிவந்தமளித்த செய்தி ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கிறது. சகம் 1578 (கி.பி 1656) இல் எழுத்த ஒரு கல்வெட்டினால் இக்கோயிலில் ஆடித்திருவிழா 10 நாட்கள் நடந்த செய்தியையும், பத்து நாட்களும் ‘இயல்’ (நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தின் முதலாயிரப்பகுதி) ஓதப்பெற்றதையும் அறியமுடிகிறது. சுந்தரபாண்டியன் மண்டபத்திலுள்ள ஒரு கல்வெட்டு, பாண்டிய மன்னன் ஒருவன், தன் அண்ணாழ்வி (அண்ணன்) பிறந்த திரு நட்சத்திரமான உத்திராடத்தன்று, ஒவ்வொரு மாதமும் இறைவனையும் இறைவியையும் சுந்தரபாண்டியன் மண்டபத்திற்கு எழுந்தருளச்செய்ய நிவந்தம் அளித்ததைக் குறிப்பிடுகிறது. மற்றொரு கல்வெட்டு மாறவர்மனான ஒரு பாண்டிய மன்னன் தன் அண்ணாழ்வி சொக்காண்டர் பிறந்த திருநட்சத்திரமான மீன மாதத்துச் சதையத்தன்று, சில பூசைகளை நடத்த நிவந்தமளித்த செய்தியைத் தருகிறது. திருமல்லிநாட்டுத் தடங்கண்ணிச் சிற்றுார் குருகுலத்தரையனான சிற்றூருடையான் சோரன் உய்யவந்தான் என்பவன், ‘குருகுலத்தரையன் சந்தி’ எனும் பூசைக்கு நிலமளித்த செய்தியை ஒரு கல்வெட்டால் அறிகிறோம். மற்றொரு கல்வெட்டு, அகளங்க நாடாள்வானான அழகன் என்பவன் தன்பெயரில் நிறுவிய, ‘அரச மிக்காரன் சந்தி’ எனும் பூசைக்கு சுந்தரத்தோள்விளாகம் எனும் சிற்றூரை நிவந்தமாக அளித்ததைக் கூறுகிறது. இரண்டாம் திருச்சுற்றில் தூண்களால் ஒரு கல்வெட்டினால் ‘(குல)சேகரன் சந்தி’ என்னும் ஒரு பூசை இக்கோயிலில் நடைபெற்றதை அறியமுடிகிறது.மாறவர்மன் இரண்டாம் சுந்தரபாண்டியன் கல்வெட்டொன்றால் அரசன் பெயரால் ஒரு பூசை ‘சுந்தரபாண்டியன் சந்தி’ என்ற பெயரில் நிறுவப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. மாறவர்மன் இரண்டாம் சுந்தரபாண்டியனின் மற்றொரு கல்வெட்டின் மூலம் ‘போசள வீரசோமதேவன் சந்தி’க்கு. கேரளசிங்க வளநாட்டுத் திருக்கோட்டியூரில் சில நிலங்கள் நிவந்தமாக அளிக்கப்பட்ட செய்தியை அறியலாம். பாண்டிய ஸ்ரீ வல்ல(ப) தேவன் காலத்துக் கல்வெட்டொன்று, குடநாட்டுக் கொற்கையூருடையான் தமிழபல்லவதரையனான அழகாண்டார், தன் தங்கைக்காக ஆனி மாத விசாக நட்சத்திரத்தில் இறைவனைச் சுந்தரபாண்டியன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வதற்காகக் குஞ்சரங்குடி என்ற சிற்றூரை வாங்கி நிவந்தமாக அளித்த செய்தியைக் கூறுகிறது. இக்கல்வெட்டு தரும் மற்றொரு செய்தி இக்கோயில் இறைவன் தியாகஞ்சிறியான் திருவீதியில் தேர் மீது வீற்றிருந்து சடகோபன் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த போது, இருஞ்சிறையுடையான் சுந்தரத் தோளுடையான் என்பவனுக்கும் அவன் வழியினருக்கும் சுந்தரத்தோள்விளாகம் என்னும் ஊரின் ‘காராண்மை’ உரிமையை அளித்தார் என்பதாகும். கோயில் அதிகாரிகள் செய்த முடிவு இறைவனின் ஆணையாகக் கல்வெட்டில் குறிக்கப்பட்டது போலும் தேர் தியாகஞ்சிறியான் வீதிக்கு வரும்போது, சடகோபன் பாடல்களை (நம்மாழ்வார் பாசுரங்களை) ஒதும் வழக்கமிருந்த செய்தியை இக் கல்வெட்டால் அறியலாம். மற்றுமொரு கல்வெட்டு இக்கோயிலில் இறைவன் திருமுன் ‘கோதைப்பாட்டு’ (ஆண்டாளின் பாசுரங்கள்) ஓதப்பெற்ற செய்தியைத தெரிவிக்கிறது. இக்கோயிலையொட்டி இங்கிருந்த மடங்களைக் குறித்துச் சில கல்வெட்டுகள் செய்திகளைத் தருகின்றன. சடாவர்மன் முதலாம் குலசேகரபாண்டியனின் காலத்துக் கல்வெட்டொன்று குலசேகரன் மடம் என்ற ஒரு மடத்தினைக் குறிப்பிடுகிறது. முத்தூற்றுக் கூற்றத்துக் கப்பலூரான உலகளந்த சோழ நல்லூர் முனையதரையனான சீராமன் உய்யவந்தான், ‘சுந்தரத் தோள்விளாகம்’ என்ற சிற்றுாரை, குலசேகரன் மடத்தில் ஆடி, ஐப்பசி, மார்கழித் திருநாட்களில் பிராமணர்களை உண்பிப்பதற்காகக் கொடுத்துள்ளான். மாளவராயர் வேண்டுகோளின்படி திருக்கானப் பேர்க் கூற்றத்து ராஜராஜநல்லூரான சுந்தரத்தோள்விளாகத்தின் சில நிலங்களை, மன்னன் இறையிலியாக மாற்றிக்கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. திருக்கானப்பேர் இன்று சிவகங்கை வட்டத்தில் காளையார் கோயில் என்ற பெயரோடு விளங்குகிறது. இரண்டாம் திருச்சுற்றில் தூண்களால் மறைக்கப்பட்டுள்ள பிற்காலப் பாண்டியர் கல்வெட்டொன்று இங்கிருந்த திருநாடுடையான் மடத்தில் ஏகா(ங்)கி ஸ்ரீ வைஷ்ணவர்களையும், திரிதண்டி (முக்கோல்) சன்யாசிகளையும் உண்பிக்க சில நிலங்களை மன்னன் இறையிலியாக மாற்றியதைக் குறிப்பிடுகிறது. இரண்டாம் திருச்சுற்றின் மேற்குச் சுவரில் வெளிப்புறமாக உள்ள ஒரு கல்வெட்டு, அமைத்த நாராயணன் மடத்திலும் வாணாதராயன் மடத்திலும் திரிதண்டி சன்னியாசிகளையும் அணுவிகளையும் உண்பிப்பதற்குத் தரப்பட்ட இறையிலி நிலக்கொடையினைக் குறிப்பிடுகின்றது. சகம் 1511 (கி. பி. 1589) இல் எழுந்த வெங்கடேஸ்வர மகா ராஜாவின் கல்வெட்டொன்று, அவர் சுந்தரத்தோளுடையான் மாவலி வாணாதிராயர் வேண்டுகோளின்படி, பன்னிரண்டு வைஷ்ணவர்களை உண்பிப்பதற்குக் கவுண்டன்பட்டியான ராமானுஜநல்லூரில் சில நிலங்களைத் தந்ததைக் குறிப்பிடுகிறது. சகம் 1578 (கி. பி. 1656) இல் எழுந்த ஒரு கல்வெட்டு திருமாலிருஞ்சோலை வெள்ளாளன் நல்லநயினாப்பிள்ளை மகன் அண்ணாவிப் பெருமாபிள்ளை, ஆடித்திருவிழாவில் சில மண்டபங்களின் செலவுக்கும். இத்திருவிழாவில் பத்து நாட்களும் ‘இயற்பா’ ஓதும் ஸ்ரீ வைஷ்ணவர்களை உண்பிப்பதற்கும் இரண்டு சிற்றூர்களை விட்ட செய்தியினைத் தருகிறது. வீரபாண்டியன் சில நிலங்களை இக்கோயிலுக்கு அடுக்களைப் புறமாக விட்ட செய்தியினை ஒரு கல்வெட்டு கூறுகின்றது. மற்றொரு கல்வெட்டு சுந்தரத்தோள்விளாகம் என்ற சிற்றூர் அடுக்களைப் புறமாக விடப்பட்ட செய்தியினைக் கூறுகிறது. கன்னடதேவன் என்ற மன்னன் தன் தம்பி வைசால (ஹொய்சள) தேவன் பெயரில் சில நிலங்களைத் திருமாலைப்புறமாக விட்ட செய்தியினை ஒரு கல்வெட்டு கூறுகின்றது. காஷ்மீர தேசத்து சகவாசி பிராமணன் ராமையதண்டநாத சொக்கையா சில நிலங்களை வாங்கித் திருமாலைப்புறமாகக் கொடுத்த செய்தி மற்றொரு கல்வெட்டால் தெரிகின்றது. கலிகடிந்த பாண்டிய தேவரான ராமன் கண்ணபிரான் திருநந்தவனப்புறமாக ஒரு தோட்டத்தை அளித்துள்ளான்.நந்தவனம் காப்போன் உணவுக்காக அகளங்கராயனான சாத்தன் ஆளவந்தான் சில தானங்களைச் செய்துள்ளான்.தன் தேவி தரணி முழுதுடையாள் வேண்ட சடாவர்மன் குலசேகர பாண்டியன் திருநந்தவனப்புறமாகச் சில நிலங்களை அளித்துள்ளான். மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துச் சாசனமொன்று அரசன் பெயரில் ஒரு நந்தவனம் அமைக்க நிலமளித்த செய்தியைக் குறிக்கிறது.திருநந்தவனப்புறமாகவும் திருஓடைப்புறமாகவும் துவரா பதிவேளான் அழகப்பெருமாள் நிலமளித்த செய்தியை ஒரு கல்வெட்டு கூறுகின்றது. வடதலைச் செம்பிநாட்டு மதுரோதய நல்லூரான கீழைக் கொடுமலூர் நீலகங்கரையனான அரையன் திருநாடுடையான் திருஓடை, திருநந்தவனப்புறமாக நிலமளித்த செய்தியை மற்றொரு கல்வெட்டால் அறிகிறோம். காசியபன் நாராயணன் அரைசு மனைவி சோலைசேந்த பிராட்டி ஒரு திருவிளக்குச்சட்டம் அளித்துள்ளார். திருவிழா ஊர்வலங்கில் விளக்கெரிக்கத் தரப்பட்ட நிவந்தம் ஒரு கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மகதநாயனார் பராக்கிரம பாண்டிய மகாபலி வாணாதராயர் என்பவனும் திருவிளக்கெரிக்க நிவந்தம் கொடுத்துள்ளான். திருவுடையாள் என்ற அரண்மனைப் பணிப்பெண் ஒருத்தி எட்டு திருவிளக்குகள் எரிக்கப் பத்து மாநிலம் கொடுத்துள்ளாள். வாணாதராயரான திருவேங்கடமுடையார் மலைமீதிருந்த திருவாழி ஆழ்வார் கோயிலில் திருவிளக்கெரிக்க நிவந்தம் கொடுத் துள்ளார். திருக்கோட்டியூரைச் சேர்ந்த ஒருவன் கோயில் கணக்கரிடம் பதினொரு அச்சு முதலாக வைத்து அதிலிருந்து பெறும் வட்டியிலிருந்து ஒரு நந்தாவிளக்கெரிக்க நிவந்தம் அளித்துள்ளான். முதல் திருச்சுற்றில் மேலைச் சுவரிலுள்ள பிற்காலப் பாண்டியர் கல்வெட்டொன்று இடைக்காட்டூர் அரையன் சடகோபதாசன் என்பவன் கோயிலுக்கு ‘யாக்ஞோபவீதம்’ (திருப்புரிநூல்) கொடுத்துச் சில வருமானங்களைப் பெற்றதைக் குறிப்பிடுகின்றது. இக்கோயில் பணியாளர்க்கிடையில் எழுந்த இரண்டு வழக்குகளைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. விசயநகர மன்னர் காலத்தில் இக்கோயில் பிராமணப் பணியாளர்களிடையில் சோழியர், சாமானியர் ஆகிய இரு பிரிவினருக் கிடையில் சில உரிமைகள் குறித்து எழுந்த வழக்கில், முன் வாணாதிராயர் காலத்தில் இருந்த நடைமுறையினையே பின்பற்றுவது என முடிவுசெய்யப்பட்டது. மற்றொரு வழக்கு, ‘தீர்த்த மரியாதை’ பெறுவதில் பட்டர் ஐயங்காருக்கும், திருமாலை ஆண்டார் ஐயங்காருக்கும் இடையில் ஏற்பட்ட வழக்கொன்றினை வைத்தியப்ப தீட்சதர், குப்பையாண்டி செட்டி, வசந்தராய பிள்ளை, திருங்கவேடையன் ஆகியோர் நடுவர்களாக இருந்து தீர்த்துவைத்த செய்தியினைக் குறிப்பிடுகிறது. விசயநகர மன்னர்கள் காலத்தில் தமிழ்நாட்டின் சில பகுதிகளை ஆண்ட வாணாதிராயர்கள் இக்கோயிலின் மீது கொண்டிருந்த பற்று குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாகும். இம்மன்னர்கள் இக்கோயில் இறைவனுக்குப் பாசுரங்களில் வழங்கும் பெயரையே தங்கட்குச் சூடிக்கொண்டனர். சகம் 1391 (கி.பி. 1369) இல் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள, மாவலி வாணாதராயன் கல்வெட்டு, ‘அழகர் திருவுள்ளம்’ என்ற தொடருடன் முடிகிறது. அழகர்கோயிலில் சகம் 1386 (கி.பி.1464) இல் எழுந்த ஒரு கல்வெட்டு, திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதராயன் உறங்காவில்லிதாசன் ஆணைப்படி திருவாளன் சோமயாஜி இக்கோயிலில் உபானம் முதல் ஸ்தூபி வரை திருப்பணி செய்ததைக் குறிப்பிடுகிறது. இக்கோயிலில் பெரிய அளவில் நடந்த திருப் பணியாகக் கல்வெட்டுச் சான்றுடன் இது ஒன்றையே குறிப்பிடமுடிகிறது. இக்கோயிலிலுள்ள ஒரு கல்திரிகையில், ‘திருமாலிருஞ் நின்றான் மாவலி வாணாதராயர் உறங்காவில்லிதாஸனான கோலாகலன்’ என்ற கல்வெட்டு காணப்படுகிறது. இப்பெயர், இக்கோயிலிலுள்ள வெள்ளியாலான ஒரு கலசப்பானையிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. தாயார் சன்னிதி மேலைச்சுவரின் அடிப்பகுதியில் கல்லில் ஒரு கோடு வெட்டப்பட்டுள்ளது. அதனருகில் இக்கோடு, ‘திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதராயன் மாத்ராங்குலம்’ என்ற கல்வெட்டு உள்ளது. இக்கோட்டின் நீளமுடைய கோலையே அளவுகோலாகக் கொண்டு இத்தாயார் சன்னிதி இவ்வாணாதிராயனால் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
சுவரோவியங்கள் அழகர்கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அதன் கட்டுமானத்திற்கு ஏற்றவாறு ஓவியங்களை வரையத் தீர்மானித்துள்ளனர். மைய மண்டப கூரையில் துவங்கி, பின்னர் வெளிப்புற மண்டபத்தின் சுவர்களில் தொடர் காட்சியாக வரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தொடரோவோவிய மரபு, செங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், இராமநாதபுரம், அதியமான்கோட்டை, திருக்கோகர்ணம் போன்ற இடங்களிலும் காணக்கிடைக்கின்றது. இவை ஓவிய வரைவு முறைகளில் ஓவியர்களுக்கிடையேயுள்ள தொடர்பினைக் கூறுவதாக அமைந்துள்ளது. மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் தங்கள் ஆளூகைக்கு உட்பட்டப் பகுதிகளில் எண்ணற்ற கோயில்களைக் கட்டினர். அவற்றுள் சிறந்த கோயில் வரிசையில் அழகர்கோயிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கு கட்டிடக்கலை, சிற்பக்கலையைத் தொடர்ந்து ஓவியக்கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இங்குள்ள வசந்த மண்டபத்தின் கூரை மற்றும் சுவர்ப்பகுதியில் இராமாயணத்தொடர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. முதல் காட்சியாக, இக்கோயிலின் உற்சவர் ஆன திருமால் தம் இரு தேவியருடன் சேர்ந்து காணப்படும் காட்சி மிக நுண்னிய வேலைப்பாட்டுடன் காட்சியளிக்கிறது. இதைத் தொடர்ந்து இராமன் பிறப்பு முதல் ஒவியம் தொடங்குகிறது. தசரதனின் மனைவியர் மூவரும் புத்திரகாமேஷ்டி யாகத்தில் கலந்து கொள்ளுதல், அமிர்தம் பெறுதல், மக்கட்பேறு அடைதல், தம் மக்களைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுதல், இராமன் முதலானோர் விசுவாமித்திரருடன் - சென்று கல்விப் பயிற்சி, போர்ப் பயிற்சி பெறுதல் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தாடகை வதம், அகலிகை சாபவிமோசனம், சீதா கல்யாணம், இராமன் காட்டிற்குச் செல்லுதல், குகனுடன் படகில் இராம, லட்சுமணர், சீதை ஆகியோர் சரயு நதியைக் கடத்தல், தசரதன் மரணம் போன்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஓவியக் காட்சிகளுக்கும் விளக்கம் அன்றைய வட்டார பேச்சுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த ஓவியங்கள் மூலம் அக்கால பேச்சு வழக்கு, ஆடை ஆபரணங்கள், சடங்கு, பண்பாடு முதலியவற்றை அறியலாம்.
தலத்தின் சிறப்பு 2000 ஆண்டுகள் பழமையானது. பாண்டியர், விசயநகரர், நாயக்கர் கலைப்பாணியைக் கொண்டுள்ளது.
சுருக்கம்
அழகர் மலை என்பது மதுரைக்கு வடக்கே 20 கி.மீ தூரத்தில் இருக்கிறது . இதில் அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது . இதற்குத் திருமாலிருஞ் சோலை , உத்யான சைலம் , சோலைமலை , மாலிருங்குன்றம் , இருங்குன்றம் , வனகிரி , விருஷ பாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு . இது கிழக்கு மேற்காக 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது .அதிலிருந்து பல சிறிய மலைகள் , நாலா பக்கமும் பிரிந்து போகின்றன . இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோயில் இருக்கிறது . இம் மலையில் பலவகை மரங்களும் ,செடிகளும் , கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து."அழகர் மலை" என்பது மதுரைக்கு வடக்கே 21 கி .மீ தூரத்தில் இருக்கிறது. இதில் அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது . இதற்குத் திருமாலிருஞ் சோலை , உத்யான சைலம் , சோலைமலை , மாலிருங்குன்றம் , இருங்குன்றம் , வனகிரி , விருஷ பாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு. இது கிழக்கு மேற்காக 18 கி .மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது .அதிலிருந்து பல சிறிய மலைகள் , நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோயில் இருக்கிறது. இம் மலையில் பலவகை மரங்களும் ,செடிகளும் , கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியைத் தந்து நிற்கின்றன. இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால் இதைச் சோலைமலை , திருமாலிருஞ் சோலை , வனகிரி , முதலிய பெயர்களால் அழைக்கிறார்கள். இச்சோலைகளில் பூக்களும் காய்களும், கனிகளும் மிகுதியாக உண்டாகிப் கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டுகிறது. ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்ரா பௌர்ணமித் திருநாள் தான் . மதுரை ஸ்ரீ மீனாட்சிக் கோயிலில் தொடங்கும் சித்திரைத் திருவிழாவும் இவ் விழாவும் ஒரே சமயத்தில் நடக்கின்றன . திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு இந்த இரண்டு உற்சவங்களும் வெவ்வேறு மாதங்களில் நடந்தன . அப்போது அழகரின் சைத்ரோற்சவம் சித்திரை மாதத்திலும் மீனாட்சி கோயில் உற்சவம் மாசி மாதத்திலும் நடந்தன . இதனால் தான் மாசி மாதத்தில் நடக்கும் இத் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர்களுடைய ரதம் செல்லும் வீதிகளுக்கும் மாசி வீதிகள் என்று பெயர் ஏற்பட்டது . திருமலை காலத்திற்கு முன்பு ஸ்ரீ அழகர் சித்திரை மாதத்தில் அலங்காநல்லூர் , தேனூர் முதலிய ஊர்கள் வழியாக வந்து வைகை ஆற்றில் இறங்கி வண்டியூரில் தங்கியிருந்து , மீண்டும் அழகர் மலையையைடைவது வழக்கம் . திருமலை நாயக்கர் , இந்த இரண்டு விழாக்களையும் ஒன்றாகச் சேர்ந்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கருதி அப்படியே செய்தார் . அவருடைய ஏற்பாட்டின் படியே இப்பொழுதும் நடந்து வருகிறது . இப்பொழுது கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி வண்டியூர் சென்று , தன் மலைக்குத் திரும்பி வருவதை பற்றி ஒரு கதை வழங்குகிறது . இக் கதைக்கு சாஸ்திர ,புராண ஆதாரம் ஒன்றும் இல்லை ஆகையால் பொதுவாக சைவ , வைஷ்ணவ மதங்களை ஐக்கியப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இதைக் கொள்ள வேண்டும் தன் தங்கை ஸ்ரீ மீனாட்சிக்கும் ஸ்ரீ சுந்தரேசுவரருக்கும் கல்யாணம் நடக்கும் போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீ அழகர் , கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபத்தைப் பார்க்க 24 கி . மீ தூரத்திலுள்ள தன் இருப்பிடத்தை விட்டுச் சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார் என்பது இக் கதை பல்லக்கில் கள்ளர் திருக் கோலத்துடன் வழியில் பல மண்டபங்களில் தங்கி , இந்தச் சேவையைப் பார்பதற்கும் அழகரை எதிர் கொள்வதற்கும் மதுரை மக்கள் திரண்டு வரும் காட்சிகள் ஸ்ரீ கள்ளழகர் எதிர் சேவை என்று சொல்லப் படும் இரவில் அம்பலத்துக்காரர் மண்டபத்தில் பிரம்மாண்டமான வாண வேடிக்கைகள் கூத்துக்கள் , கொட்டு மேளங்கள் முதலியவை நடக்கும் . மறுநாள் விடியற் காலை தல்லாகுளம் பெருமாள் கோயிலிருந்து ( சித்ரா பௌர்ணமியன்று ) அழகர் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வைகையை நோக்கி செல்வார் . புறப்படும் முன்பு ஸ்ரீவில்லிபுதூரிலிருந்து சூடிக் கொடுத்த நாச்சியராகிய ஸ்ரீ ஆண்டாளின் மாலையை சாற்றிக் கொள்கிறார் .
அழகர்கோயில்
கோயிலின் அமைப்பு இப்போது கோயிற் பணியாளர் குடியிருப்புக்களைத் தவிர மக்கள் வசிக்கும் ஊர்ப்பகுதி எதுவும் இக்கோயிலை ஒட்டி இல்லை. அண்மையிலுள்ள வலையப்பட்டி, கோனாவரையான், ஆயத்தபட்டி ஆகிய மூன்று சிற்றூர்களும் இணைக்கப்பெற்று, ‘அழகர்கோயில் ஊராட்சி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது . “இரணியமுட்ட நாடு என்பது பாண்டி மண்டலத்திலிருந்த உள்நாடுகளுள் ஒன்று என்பதும், அந்நாடு மதுரை மாநகர்க்கு வடகிழக்கேயுள்ள ஆனைமலை, அழகர் கோயில் (திருமாலிருஞ்சோலை) முதலான ஊர்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு பெருநிலப்பரப்பு என்பதும் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றன’’ என்பர் தி. வை. சதாசிவ பண்டாரத்தார். அழகர் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டும், ‘கீழிரணிய முட்டத்துத் திருமாலிருஞ்சோலை’ எனக் குறிப்பதால், இந்நிலப்பகுதி அக்காலத்தே, ‘கீழிரணியமுட்டநாடு’ என வழங்கப்பட்ட செய்தியை யறியலாம். இந்நிலப்பகுதியில் தென்கிழக்கிலிருந்து வடகிழக்குத் திசை நோக்கிச் செல்லும் ஒரு மலையும், கிழக்கேயிருந்து வரும் ஒரு மலையும் சந்திக்கின்ற இடத்தில் தென்திசையில் மலைச்சரிவில் கிழக்குத் திசையினை நோக்கியதாக அழகர்கோயில் எனப்படும் கோயில் அமைந்துள்ளது (படம் 1). கோயிலுக்கு மேற்கிலும் வடக்கிலும் மலைப் பகுதிகள் உள்ளன. கோயில் இரண்டு கோட்டைகளால் சூழப்பட்டுள்ளது. கோயில் அமைந்துள்ள உட்கோட்டை இரணியன்கோட்டை எனவும், வெளிக்கோட்டை அழகாபுரிக்கோட்டை எனவும் வழங்கப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் உட்கோட்டையினை, ‘ நள மகாராஜன் கோட்டை’ என்று குறிப்பிடுகின்றன. இரு கோட்டைகளும் ஏறத்தாழ 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. வட பக்கத்திலுள்ள உட்கோட்டையினைவிடத் தென்புறத்திலுள்ள வெளிக் கோட்டை ஏறத்தாழ நான்கு மடங்கு பெரிதாக உள்ளது. இதன் கிழக்குச் சுவரின் ஒரு பகுதி இடிந்த நிலையிலுள்ளது. மதுரையிலிருந்து வடக்குநோக்கி வரும் சாலையும் மேலூரிலிருந்து மேற்கு நோக்கி வரும் சாலையும் வெளிக்கோட்டையின் தெற்கு வாசலில் சந்திக்கின்றன. ‘மதில் சூழ் சோலைமலை’ என இத்தலத்தினைப் பெரியாழ்வார் பாடுவதால், அவர் காலத்திலேயே இக்கோயிலைச் சுற்றி ஒரு மதில் இருந்திருக்க வேண்டுமெனத் தெரிகிறது. அழகர்கோயில் வெளிக்கோட்டை பதினான்காம் நூற்றாண்டில் வாணா திராயர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என இரா. நாகசாமி கருதுவர். எனவே பெரியாழ்வார் குறிப்பிடும் ‘மதில்’ இரணியன்கோட்டை எனப்படும் உட்கோட்டை மதிலாக இருக்கலாம். வெளிக்கோட்டையின் தெற்குவாசல் வழியாகக் கோட்டைக்குள் செல்லவேண்டும். இவ்வாசலிலிருந்து நேர்வடக்காக உட்கோட்டையினை நோக்கி ஒரு சாலை செல்கிறது. சாலையின் இரு பக்கங்களிலும் வெளிக்கோட்டைப் பகுதியில் மரங்களே நிறைந்துள்ளன. இக்கோயிலிலுள்ள கல்வெட்டுக்களால் ‘சாமந்த நாராயணச் சதுர்வேதிமங்கலம்’ என்னும் பெயருடைய ஓர் அக்கிரகாரம் இங்கு இருந்தது எனவும், பிள்ளைப்பல்லவராயன் என்பான் அதனை அமைத்துக்கொடுத்தான் எனவும் தெரிகின்றது. இப்போது இக்கோயிலின் பிராமணப் பணியாளர் மதுரையில் தல்லாகுளத்தில் குடியிருக்கின்றனர். திருவிழாக்காலங்களில் மட்டும் , நாற்பதாண்டுகட்கு முன்னர்க் கோயில் நிருவாகத்தால் கட்டப்பட்டு, தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில் தங்குகின்றனர். இடைக்காலத்தில் ஏற்பட்ட அரசியற் படையெடுப்புக்கள் காரணமாக வெளிக்கோட்டையில் குடியிருந்த பிராமணர்கள் தல்லாகுளம் பகுதிக்குக் குடியேறியிருக்கவேண்டும். வெளிக்கோட்டையின் வடபகுதியில் இப்போது கோயில் அலுவலக பணியாளர் குடியிருப்பும், அடியவர் தங்கும் விடுதியும் உள்ளன. சாலையின் மேற்புறத்தில் அலுவலகப் பணியாளர் குடியிருப்பினையடுத்துச் சிதைந்தநிலையில் ஒரு மண்டபம் காணப்படுகிறது. இம்மண்டபத்தின் ஒரு தூணில் திருமலைநாயக்கரின் சிலை உள்ளது. ஆகவே இம்மண்டபம் அவரால் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. சாலையின் கீழ்ப்புறத்தில் தேர்மண்டபம் உள்ளது. இக் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டால் , ‘அமைத்த நாராயணன்’ என்பது இக்கோயில் தேரின் பெயர் என்பதும், தேரோடும் வீதிகளில் ஒன்றின் பெயர் ‘தியாகஞ் சிறியான் திருவீதி’ என்பதும் தெரிகின்றன. ஆடிமாதம் பெளர்ணமி அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. கோயிலமைந்த உட்கோட்டைக்கு வடக்கிலும் மேற்கிலும் மலைகள் இருப்பதால் இக்கோயிலின் தேர் கோயிலைச் சுற்றிவர இயலாது. மரங்களடர்ந்த வெளிக்கோட்டையின் நான்கு சுவர்களையும் ஒட்டித் தேர் ஒடுகின்றது. தேர்மண்டபத்தைத் தாண்டிச்சென்றால் உட்கோட்டையின் தெற்கு வாசலான “இரணியன் வாசலை’ அடையலாம். இவ்வாசலைத் தாண்டி உள்நுழைந்தால் இடப்புறம் இருப்பது யானைவாகன மண்டபமாகும். திருவிழாநாட்களில் கள்ளர் சமூகத்துக்குரியதாக இம் மண்டபம் உள்ளது. இதையும் தாண்டி வடக்கே சென்றால் இக்கோயிலின் இராஜகோபுர வாசலை அடையலாம். இக்கோபுர வாசலிலுள்ள கல்வெட்டுக்களில் சகம் 1435 (கி. பி. 1513) இல் எழுந்த விசயநகர மன்னர் கிருஷ்ணதேவ மகாராஜாவின் கல்வெட்டே காலத்தால் முந்தியதாகும். எனவே இக்கோபுரம் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது . இக்கோபுர வாசலை மக்கள் பயன்படுத்தமுடியாது எப்பொழுதும் அடைத்துக்கிடக்கும். இதற்கு முன்னர் பக்கச்சுவர்களோடு கூடிய இரட்டைக் கதவுகள் உள்ளன. இவையே பதினெட்டாம்படிக் கருப்பசாமியாக வழிபடப்பெறுகின்றன. இதனெதிரில் உள்ள பதினாறுகால் மண்டபம் ‘சமய மண்டபம்’ அல்லது ‘ஆண்டார் மண்டபம்’ எனப்படும். ஆடி, சித்திரைத் திருவிழாக் காலங்களில் இக்கோயில் ஆசாரியரான ஆண்டார் இம் மண்டபத்தில் வீற்றிருப்பார். இதனையடுத்து வடபுறத்தில் உள்ளது கொண்டப்ப நாயக்கர் மண்டபமாகும். சித்திரைத் திருவிழாவில் மதுரைக்குப் புறப்படும் அழகர் இம்மண்டபத்தில் எழுந்தருளி இரவு உணவை முடித்துக்கொள்வார். இதனையடுத்து வடக்கே முப்பதடி தூரத்தில் மலை செங்குத்தாக நிற்கிறது. மேற்கே இராஜகோபுர மதிலின் வடஎல்லையில் அம் மதிற்சுவர் உடைக்கப்பட்டு ஒரு வாசலாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாசலுக்கு, ‘வண்டி வாசல்’ என்று பெயர். இவ்வாசலே மக்கள் கோயிலுக்குள் செல்லப் பயன்படுத்தும் வாசலாகும். திருவிழாக்காலங்களில் இறைவனின் பல்லக்கு, கோயிலிலிருந்து இவ்வாசல் வழியாகத்தான் வெளியே வரும்; உள்ளே செல்லும். வண்டி வாசல் வழியாக, மேற்கு நோக்கி இராஜகோபுர மதிலின் உட்பகுதிக்கு வந்தால், மதிலின் வெளிப்பகுதியினைவிட உட்பகுதி சமதளமாக்கப்பபட்டு இருப்பதனை உணரலாம். கோயில் மலைச்சரிவில் அமைந்துள்ளது. எனவே இம்மதிலுக்கு வெளிப்புறப் பகுதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சரிந்ததாக உள்ளது. இராஜகோபுர மதிலுக்குள் காணப்படும் பரந்தவெளி ‘யதிராஜன் திருமுற்றம்’ என வழங்கப்படும். இம்முற்றத்தின் நடுவிலமைந்துள்ள மிகப்பெரிய மண்டபம் திருக்கலியாண மண்டபமாகும். பங்குனி உத்தரத்தன்று இக்கோயில் இறைவனின் திருமணம் இம்மண்டபத்திலேயே நடைபெறும். இம்மண்டபத்தை விசயநகர மன்னர் காலச் சிற்பங்கள் அணி செய்கின்றன. இரணிய வதம் செய்யும் நரசிம்மரின் இரண்டு தோற்றங்கள், குழலூதும் வேணுகோபாலன், திரிவிக்கிரமன், பூமிவராகர், ரதி, மன்மதன் ஆகிய சிற்பங்கள் இம்மண்டபத்திலுள்ளன. அவற்றுள் சில உடைக்கப்பட்டுள்ளன. “1757 இல் ஹைதர் அலி …. அழகர்கோயில் கலியாணமஹாலில் உள்ள விக்கிரங்களை உடைத்துக் கோயிலில் இருந்த ஏராளமான பணத்தையும் சொத்தையும் கைப்பற்றிக் கொண்டான்’ என ‘ஸ்ரீ கள்ளழகர் கோயில் வரலாறு’ கூறுகின்றது. யதிராஜன் திருமுற்றத்தில் தென்கிழக்கு மூலையிலுள்ளது கோடைத்திருநாள் மண்டபமாகும். சித்திரைத் திருவிழாவில் முதல் மூன்று நாட்களும் இம்மண்டபத்தில் திருவிழா நடைபெறும். இதனையடுத்து மேற்கே மதுரையைச் சேர்ந்த இடைச் சாதியினர்க்குச் சொந்தமான ஒரு மண்டபம் உள்ளது. இதன் மேற்கில் உடையவர் திருக்கச்சி நம்பி ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. இதன் மேற்கே கோயிற் பிராமணப் பணியாளர் குடியிருப்பு உள்ளது. யதிராஜன் திருமுற்றத்துக்கு வடக்கே மேற்கூரை வட்டவடிவிலான ராமகளஞ்சியம், லட்சுமண களஞ்சியம் எனப்படும் இரண்டு பெரிய கட்டிடங்கள் உள்ளன. இப்பொழுது நீர்த்தொட்டிகளாகப் பயன்படும் இவற்றில் முற்காலத்தில் தானியங்களைக் கொட்டிவைப்பார்கள் எனத் தெரிகிறது. அதற்கு மேற்கே ஒரு மண்டபம் உள்ளது. அதனையடுத்துக் கோயில் அலுவலகம் உள்ளது. திருக்கலியாண மண்டத்தினையடுத்து மேற்கே தொண்டைமான் கோபுர வாசல் உள்ளது. இவ்வாசலில் கல்லினால் ஆன இரண்டு துவாரபாலகர் உருவங்கள் உள்ளன. மதிலோடுகூடிய இக்கோபுரம் ‘தொண்டைமான் கோபுரம்’ என வழங்கப்படுகிறது. இக்கோபுரச்சுவரிலுள்ள ஒரு கல்வெட்டால் இதனைச் செழுவத்தூர் காலிங்கராயர் மகனான தொண்டைமானார் என்பவர் கட்டிய செய்தி தெரிய வருகின்றது. இக்கோபுர வாசல் வழியே கோயிலுக்குள் நுழைந்தால், வலப்புறத்தில் உயரமாக அமைக்கப்பட்ட ஒரு மண்டபத்தைக் காணலாம். இம்மண்டபச் சுவரிலுள்ள ஒரு கல்வெட்டால் இம் மண்டபத்தைச் சுந்தரபாண்டியன் கட்டினானென்றும் இதற்குப் ‘பொன்மேய்ந்த பெருமாள் மண்டபம்’ என்பது பெயர் என்றும் தெரிய வருகின்றது. இம்மண்டபத்தின் வடபுறத்தில் கிருஷ்ணர் சன்னிதி உள்ளது. உயரமான மண்டபத்திலிருப்பதால் இதற்கு ‘மேட்டுக்கிருஷ்ணன் கோயில்’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. தொண்டைமான் கோபுர வாசலிலிருந்து நேராகச் சென்றால் கொடிக் கம்பத்தையடுத்துள்ள ஆரியன் மண்டபத்தையடையலாம். இம்மண்டபமும் மிக உயரமானதே. சிற்பத்திறன் மிகுந்த இருயாளிகள் இம்மண்டபத்தின் தூண்களில் உள்ளன. உயரமாக இருப்பதனால் இதற்குப் ‘படியேற்ற மண்டபம்’ என்றும் பெயர் வழங்கப் படுகிறது. இம்மண்டபத்திலுள்ள ஒரு கல்வெட்டால் தோமராசய்யன் மகனான ராகவராஜா என்பவன் இம்மண்டபத்தைக் கட்டிய செய்தியை அறியலாம். படியேற்ற மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் இக்கோயிலின், மகாமண்டபமான முனையதரையன் திருமண்டபத்தை அடையலாம். இம்மண்டபத்திலுள்ள ஒரு கல்வெட்டால், ‘மிழலைக்கூற்றத்து நடுவிற் கூறு புள்ளூர்க்குடி முனையதரையனான பொன்பற்றியுண்டயான் மொன்னைப்பிரான் விரதமுடித்த பெருமாள்’ என்பவன் இம்மண்டபத்தைக் கட்டிய செய்தி தெரிகின்றது. இம்மண்டபத்திற்கு, ‘அலங்காரன் திருமண்டபம்’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. மகாமண்டபத்தை அடுத்துள்ள சிறிய அர்த்த (இடைசுழி) மண்டபத்தைத் தாண்டிச்சென்றால் வட்டவடிமான கருவறையை . ‘நங்கள்குன்றம்’ எனப் பெயர் வழங்கப்படும் இக்கருவறைக்குள்ளே ஒரு சிறிய வட்டவடிவிலான திருச்சுற்றும் உண்டு. கருவறையில் சீதேவி, பூதேவி ஆகிய இரு தேவியருடன், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் அழகர், சுந்தரராஜர் என்ற பெயர்களால் அழைக்கப்பெறும் இறைவன் காட்சி தருகிறார். இறைவனின் வல மேற்கையில் சக்கரம், இட மேற்கையில் சங்கு, வல கீழ்க்கையில் கதை, இட கீழ்க்கையில் சார்ங்கவில், இடையில் நாந்தகவாள் ஆகியவை உள்ளன. வல மேற்கையிலுள்ள சக்கரம், பொதுவாக வைணவக்கோயில்களில் மூலத்திருமேனிகளில் காணப்படுவது போல் அணியாக அமையாமல் பயன்படுத்தும் (பிரயோக) நிலையிலுள்ளது குறிப்பிடப்படவேண்டிய செய்தியாகும். முனையரையன் திருமண்டபத்திலிருந்து கருவறையைச் சுற்றி வரும் முதல் திருச்சுற்றுக்குள் செல்லவேண்டும். இத்திருச்சுற்றிலிருந்து இக்கோயிலின் வட்டவடிவக் கருவறைமேல் உள்ள வட்ட வடிவ விமானத்தைக் காணலாம். இவ்விமானத்துக்குச் ‘சோமசந்த விமானம்’ என்பது பெயர். சோமனை (சந்திரனை)ப் போல வட்ட வடிவிலிருப்பதால் இப்பெயர் எற்பட்டதெனக் கொள்ளலாம். மீண்டும் கிழக்குநோக்கிப் படியேற்ற மண்டபத்துக்குள் வந்தால் அங்கிருந்து இரண்டாம் திருச்சுற்றுக்குள் செல்லலாம். இவ் விரண்டாம் திருச்சுற்றுக்குத் தென்திசையில் உள்ளது ‘கலியாண சுந்தரவல்லித் தாயார்’ சன்னிதியாகும். இத்தாயார் சன்னிதியின் பின்புறம் உள்ளது. ‘திருவாழி ஆழ்வார்’ எனப்படும் சுதர்சனர் சன்னிதியாகும். இரண்டாம் திருச்சுற்றில் தென்பகுதியில் வடதிசையிலுள்ள தூண்களில் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்தவர்களின் சிலைகள் உள்ளன. இரண்டாம் திருச்சுற்றில் வடக்கு நோக்கித் திரும்பும் இடத்தில் ‘பள்ளியறை’ உள்ளது. பள்ளியறைக்கு வடக்கே கருவறைக்கு நேர் பின்னாக உயர்ந்த ஒரு மண்டபத்தில் கிழக்கு நோக்கி ‘யோகநரசிம்மர்" அமர்ந்துள்ளார். இவருக்கு "உக்கிர நரசிம்மர்", "ஜ்வாலா நரசிம்மர்" முதலிய பெயர்களும் உண்டு. இவரது சினம் தணிய நாள்தோறும் இவர்க்கு எண்ணெய்க் காப்பிடுவர். இரண்டாம் திருச்சுற்றில் கிழக்குநோக்கித் திரும்புமிடத்தில் ஆண்டாள் சன்னிதி உள்ளது. அதற்கு முன்னால் யாகசாலையும், வாகன மண்டபங்களும் உள்ளன. கலியாண மண்டபத்திலிருந்து கோயிலைச் சுற்றி வரும் நான்கு வீதிகளும் ‘ஆடிவீதி’ என்றும் , ‘யதிராஜன் திருவீதி’ என்றும் வழங்கப்பெறும். ஆடித்திருநாட்களில் இறைவன் இவ்வீதி வழியே வருவார். தென்திசையிலுள்ள ஆடிவீதியில் கோயில் இராஜகோபுர மதிலில் ஒரு வாசல் உள்ளது. இவ்வாசலின் வழியே தெற்குநோக்கி இறங்கினால் இக்கோயில் வசந்தமண்டபத்தை அடையலாம். வசந்த மண்டபத்தின் நடுவில் நீராழிமண்டபம் போல் அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்தத்திருவிழா நாட்களில் இறைவன் நாள்தோறும் எழுந்தருளுவார். இவ்வசந்த மண்ட பத்தின் மேற்கூரை முழுவதும் நாயக்கராட்சிக்கால ஒவியங்கள் காணப்படுகின்றன; இவ்வோவியங்கள் இராமாயணக் கதைகளைச் சித்திரிக்கின்றன. ஒவ்வொரு ஓவியத்தின் கீழும் அக்காட்சி நாயக்கர் காலத் தமிழ் எழுத்தில் ஓரிரண்டு வரிகளில் விளக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபத்திற்குக் கிழக்கே சற்றுத் தொலைவில் கட்டி முடிக்கப்படாமல் பாதியிலே நின்றுபோன ஒரு கோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இதிலுள்ள ஒரு கல்வெட்டு விசயநகர மன்னர்களின் ஆரவீடு வம்சத்து அரசர்களைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டின் காலம் சகம் 1468 (கி. பி. 1546) ஆம் ஆண்டாகும். எனவே கி. பி. பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்றுப் பாதியிலே நின்றுபோன இக்கோபுரத் திருப்பணியைப் பின்வந்த மன்னர்களும் நிறைவுசெய்ய முடியாமல் போய்விட்டனர் என்பதையறியலாம். இக்கோபுரத்துக்கு ‘ராயகோபுரம்’ என்பது பெயராகும். வெளிக்கோட்டைக்கு மேற்புறத்தில் உள்ள இக்கோயிலுக்குரிய ஒரு குளம், ‘ஆராமத்துக்குளம்’ என வழங்கப்படுகிறது. மலை மீதிருந்து வரும் சிலம்பாறு, இக்கோயில் மேற்கு மதிலை ஒட்டி இக்கோயிலுக்கருகில் ஓடுகிறது. கோயிலுக்குத் தெற்கேயுள்ள ஆரா மத்துக்குளத்தில் பாய்ந்து, அதன்பின் சிற்றோடைபோல மதுரையை நோக்கிச் செல்லும் சாலையை ஒட்டிச் செல்கிறது. பதினெட்டாம்படிச் சன்னிதிக்கெதிரிலிருந்த குளம் இருபத்தைத்து ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டுவிட்டது. கோயில் வடக்குக் கோட்டைச் சுவரையடுத்து மலைமீது செல்லும் சிறுபாதையினை அடுத்துள்ள குளம் ‘நாராயணராயர் தெப்பக்குளம்’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது. ஆராமத்துக்குளத்துக்கு வடக்கேயுள்ள நந்தவனம் ‘பெரியாழ் வார் நந்தவனம்’ என்றழைக்கப்படுகிறது. இறைவனுக்குத் திருமாலை கட்டித்தரும் பணியில் பெரியாழ்வார் ஈடுபட்டிருந்ததனால், கோயில் நந்தவனத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது போலும். கோயிலை ஒட்டியுள்ள பகுதிகள் தவிர, கோயிலுக்குத் தெற்கே ஒரு கல் தொலைவில் பொய்கைக்கரைப்பட்டி என்னும் சிற்றூரிலுள்ள தெப்பக்குளமும் இக்கோயிலுக்கு உரியதாகும். இக்கோயில் இறைவனின் தெப்பத்திருவிழா அங்குதான் நடைபெறும். கோயிலின் வடபுறத்தில் மலைமீது செல்லும் சிறுபாதையில் இரண்டுகல் தொலைவு சென்றால் மலைமீது ‘மாதவி மண்டபம்’ என்ற பெயருள்ள ஒரு மண்டபம் உள்ளது. ஐப்பசி மாதம் தலையருவித் திருவிழாவில் இக்கோயில் இறைவன் அம்மண்டபத்திற்குச் சென்று மலைமீதிருந்து வரும் சிலம்பாற்றில் நீராடுவார்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் பாலமேடு அருள்மிகு நாகம்மாள் கோயில், திருப்பாலை இராதாகிருஷ்ணன் கோயில், விராதனூர் அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோயில்
செல்லும் வழி மதுரையிலிருந்து வடக்கு - வடகிழக்குத் திசையில் பன்னிரண்டு கல் தொலைவில், மதுரைக்கு வடக்கே 21 கி .மீ தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.30 மாலை 3.30 மணி முதல் இரவு 8.00 வரை
அழகர்கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, புதூர், ஆரப்பாளையம் பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரை மாவட்ட விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் இந்து சமய அறநிலையத்துறை
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 18 May 2017
பார்வைகள் 67
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்