Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு ஸ்ரீ ம்ருத்திஞ்ஜயேஸ்வரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு ஸ்ரீ ம்ருத்திஞ்ஜயேஸ்வரர் கோயில்
வேறு பெயர்கள் இறவாதீஸ்வரர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் இறவாதீஸ்வரர்
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-8-ஆம் நூற்றாண்டு / பல்லவ மன்னன் இராஜசிம்மன்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறைக் கோட்டங்களில் தெற்கில் தென்முகக் கடவுள் (தட்சிணாமூர்த்தி) தனது பரிவாரங்களுடன் உள்ளார். மேற்கில் ஆனையுரித்த பிரான் (கஜசம்ஹாரமூர்த்தி), ஆடல்வல்லான், சண்டேசருக்கு அருள்பாலித்த சண்டேச அனுக்கிரக மூர்த்தி வடக்கில் காலனை வதைத்த காலாரி (காலாந்த மூர்த்தி), இராவணனுக்கு அனுக்கிரகம் செய்த இராவணானுக்கிரக மூர்த்தி, கங்கையை சடையில் தாங்கிய கங்காதர மூர்த்தி அர்த்த மண்டபக் கோட்டங்களில் தெற்கில் விநாயகர் தனது பரிவாரங்களுடனும், வடக்கில் எருமைத்தலையனை வென்ற தேவி விஷ்ணு துர்க்கை அமைக்கப்பட்டுள்ளனர்.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் கால கலை மற்றும் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
சுருக்கம்
நகரங்களில் சிறந்த பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்தில் பல்லவர் கால கற்றளியாக இறவாதீஸ்வரம் விளங்குகின்றது. இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டுள்ளது. உபபீடம் சுட்ட செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. தாங்குதளத்திலிருந்து (அதிட்டானம்) மணற்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மணற்கற்களிலேயே புடைப்புச் சிற்பங்களை எளிதாக வடிக்க இயலும். எனவே கருங்கல்லின்றி மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. கோயிற் கட்டடக் கலைப் பாணிகளுள் ஒன்றான நாகரபாணியில் அமைந்துள்ளது. தளங்களில் சுதைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை இந்தியத் தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளன. தாங்குதளத்தில் கல்வெட்டுகளோ, கதைவிளக்கச் சிற்பங்களோ காணப்படவில்லை. இவ்வமைப்பு காலத்தால் முந்தையதாகும். மிகவும் எளிய அமைப்பாக தாங்குதளம் உபானம், ஜகதி, குமுதம், பாதகண்டம் பெற்று பாதபந்த அதிட்டானமாக விளங்குகின்றது. சுவர்ப்பகுதியில் சிவவடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக பெரிய அளவில் இடம் பெற்றுள்ளன. சுவர்களின் மூலைப்பகுதியில் தூண்களைப் போன்று நின்றநிலையில் பெரிய யாளி உருவம் காட்டப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள குடைவரைகளில் யாளிகளின் தலைமேல் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலில் அதன் வளர்ச்சிக் கட்டமாக நின்ற நிலை யாளியே தூணின் சதுரம் மற்றும் கட்டுப்பகுதி போன்று அமைக்கப்பட்டுள்ளது இவ்வமைப்பு பல்லவர்களின் கட்டடக் கலைச் சிறப்பைக் காட்டுகிறது. யாளி பாயும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.சுவரில் காட்டப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் அழகிய, எளிய வடிவினவாக அதிக அலங்காரமின்றி, இயல்பான நேர்த்தியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. எழிலார்ந்த இச்சிற்பங்களின் உருவத் தன்மையை நோக்குங்கால் உண்மையான வடிவங்களாக அவை விளங்குவதைக் காணலாம். சுவர்க் கோட்டங்களில் அமைந்துள்ள சிவவடிவங்களின் மேல் அமைந்துள்ள அலங்கார மகரத் தோரணங்களின் நடுவே யோகபட்ட நிலையில் அமைந்த ஆண் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலும் காணப்படுகின்றது.கருவறை வெளிப்புற சுவரில் இடம்பெற்றுள்ள புடைப்புச்சிற்பங்களின் இருபுறமும் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் திசைக்கு இரண்டாக வாயிற்காவலர்கள் இரண்டு அரைத்தூண்களுக்கு நடுவில் நின்ற நிலையில் கதாயுதத்துடன் காட்டப்பட்டுள்ளனர். பல்லவர்களின் குடைவரைகளில் வாயிற்காவலர்கள் காட்டப்பட்டிருப்பது நாம் அறிந்ததே. அதன் வளர்ச்சி நிலையாக விமானச் சுவர்களில் அமைந்துள்ள கோட்ட புடைப்புச் சிற்பங்களுக்கு வாயிற்காவலர்கள் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.விமானத்தின் கூரைப்பகுதியில் பூதவரிகள் இடம் பெற்றுள்ளன. கபோதத்தில் கூடுமுகங்களில் விநாயகர் வடிவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் வள்ளிமண்டலமும், சந்திரமண்டலமும் காட்டப்பட்டுள்ளன. தளஉறுப்புகளாக கர்ணக்கூடு, பஞ்சரம், சாலா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதன் கோட்டங்களில் இறைவடிவங்கள் அமைந்துள்ளன. நாற்கரவடிவத்தில் அமைந்த இதன் சிகரமானது அதன் கலசமின்றி, கழுத்துப்பகுதியில் நான்குபுறமும் நந்தியைக் கொண்டுள்ளது.
அருள்மிகு ஸ்ரீ ம்ருத்திஞ்ஜயேஸ்வரர் கோயில்
கோயிலின் அமைப்பு இறவாதீஸ்வரர் கோயில் மூன்று தளங்களை உடையது. நாகரபாணியில் அமைந்த விமானத்தைப் பெற்றுள்ளது. சதுரவடிவ கருவறை அதனைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் மற்றும் முன் நீண்டுள்ள முக மண்டபம் ஆகியவை உயரமான உபபீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதளத்தில் உபானம், ஜகதி, குமுதம், பாதகண்டம், வேதிகை ஆகிய உறுப்புகள் இடம் பெற்றுள்ளன. பாதபந்த அதிட்டானமாக விளங்குகிறது. அதிட்டானத்தில் கல்வெட்டுகளோ, புடைப்புச் சிற்பங்களோ காணப்படவில்லை. கருவறைச் சுவர்ப் பகுதியில் சிவ வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக காட்டப்பட்டுள்ளன. விமானத்தின் தளங்களில் சுதைச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. தென்மேற்கு மூலையிலும், வடகிழக்கு மூலையிலும் இரண்டு தனிச் சந்நிதிகள் உள்ளன. சிறிய நந்தி மண்டபம் உள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது. வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் காஞ்சி கைலாசநாதர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சியம்மன் கோயில்
செல்லும் வழி சென்னையிலிருந்து 65 கி.மீ. தொலைவிலுள்ள காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாகவும் செல்லலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00-9.00 மாலை 4.00- 8.00 வரை
அருள்மிகு ஸ்ரீ ம்ருத்திஞ்ஜயேஸ்வரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி காஞ்சிபுரம் தங்கும் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் காந்திராஜன் க.த.
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 64
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்