Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்
வேறு பெயர்கள் தென்பரங்குன்றம், தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை
ஊர் திருப்பரங்குன்றம்
வட்டம் திருமங்கலம்
மாவட்டம் மதுரை
தொலைபேசி 0452-2482248, 2482648
உட்பிரிவு 4
மூலவர் பெயர் பரங்கிரிநாதர், சுப்பிரமணியசுவாமி
தாயார் / அம்மன் பெயர் ஆவுடைநாயகி, தெய்வானை
தலமரம் கல்லத்தி
திருக்குளம் / ஆறு சரவணப் பொய்கை, லட்சுமி தீர்த்தம் மற்றும் ஒன்பது தீர்த்தங்கள்
ஆகமம் காமீகம், காரணாகமம்
வழிபாடு திருவனந்தல், விளாபூசை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம், பள்ளியறை
திருவிழாக்கள் வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, புரட்டாசி வேல் திருவிழா, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-8-ஆம் நூற்றாண்டு/ முற்காலப் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இக்கோயிலில் 11 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சுப்ரமணியசுவாமியின் கருவறை கி.பி.773இல் பராந்தக நெடுஞ்சடையன் (765-815) என்ற பாண்டிய மன்னர் காலத்தில் அவரது படைத்தலைவன், சாத்தன் கணபதி என்பவரால் சிவனுக்காக எழுப்பப்பட்ட குகைக்கோவில் என்று கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது. மதுரை நாயக்க மன்னர்களில் வீரப்பர் (1572-1595), திருமலை மன்னர் (1623-1659) ஆகியோர் திருப்பணிகளும், அரசி மங்கம்மாள் (1689-1706) திருப்பணிகளும் இக்கோயிலில் உள்ளன. முகமதியர் ஆட்சியில் திவானாக இருந்த ராஜகோபாலராயர் என்பவர் - ஐரோப்பியர் படைகள் மதுரையில் புகுந்து கோயிலை அழித்துக் கொண்டு வந்தபோது அவர்களை எதிர்த்து வயிராவி முத்துக் கருப்பன் குமரன் செட்டி என்பவன் தடுத்து அப்பணியில் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட, அவன் குடும்பத்தாருக்கு இறையிலியாக நிலங்கள் அளித்த செய்தி இத்தலத்தின் கல்வெட்டு ஒன்றின் மூலம் தெரியவருகிறது.
சுவரோவியங்கள் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் உள்ள முருகப்பெருமானின் தோற்றங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இவை நவீன காலத்தைச் சேர்ந்தவையாகும்.
சிற்பங்கள் திருப்பரங்குன்றம் குடைவரைக் கோயிலில் ஐந்து கருவறைகள் அமைந்துள்ளன. மூன்று கருவறைகள் வடக்கு நோக்கியும், இரு கருவறைகள் கிழக்கு மற்றும் மேற்காகவும் அமைந்துள்ளன. கிழக்கு நோக்கிய கருவறையில் சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பமும், மேற்கு நோக்கிய கருவறையில் விஷ்ணுவின் அமர்ந்த கோல உருவமும், தெற்கில் அமைந்துள்ள மூன்று கருவறைகளில் முறையே முருகன், துர்க்கை, கணபதி ஆகிய திருவுருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. மேலும் முருகன் திருவுருவின் அருகே நாரதர், தெய்வானை வடிவங்களும், மேலே கந்தர்வ உருவங்களும் காட்டப்பட்டுள்ளன. கணபதியைச் சுற்றிலும் முனிவர்கள் அமர்ந்துள்ளனர். துரக்கை நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளார். இச்சிற்பங்கள் யாவும் கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. பாண்டியர் கலைப்பாணியைக் கொண்டு விளங்குபவை. சேட்டை தேவி, யானைத் திருமகள் ஆகிய சிற்பங்களும் இங்குள்ளன.
தலத்தின் சிறப்பு 2000 ஆண்டுகள் பழமையானது. சங்க இலக்கியங்களில் இத்தலம் குறிப்பிடப்படுகிறது. தேவார மூவரால் பாடல் பெற்றத் திருத்தலம். நக்கீரரின் திருமுருகாற்றுப்படையில் பாடப்பட்டுள்ளது. அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் போற்றிப் பாடியுள்ளனர். முற்கால, பிற்காலப் பாண்டியர்கள், விசயநகரர், நாயக்கர் கால கலைப்பாணியைக் கொண்டுள்ளது.
சுருக்கம்
திருப்பரங்குன்றம் மதுரைக்கு அருகில் உள்ளது. முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுள் முதலாவதாக விளங்கும் தலம். முருகப்பெருமான் தெய்வயானையை மணம் புரிந்த தெய்வப் பதி. நக்கீரர் வாழ்ந்த தலம். பராசரமுனிவரின் புதல்வர், நக்கீரர், சிபிமன்னன், பிரம்மா ஆகியோர் இறைவனை வழிபட்டுப் பேறுபெற்ற பதி. இத்தலம் சிவத்தலமாயினும், இன்றைய நடைமுறையில் முருகனுக்குரிய சிறப்புதலமாகவே வழிபடப்படுகின்றது. சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடல் பெற்றது. ஆறுமுகர் சந்நிதி மிகவும் விசேஷமானது. மூலவர் தெய்வயானை திருமணக் கோலத்துடன் முருகன் காட்சியளிக்கின்றார். பரங்கிரி நாதர் - மூலத்திருமேனி - சிவலிங்கம் குடவரைக் கோயிலில் தரிசனம் தருகின்றார். பின்னால் கல்யாண சுந்தரேஸ்வரர் வடிவம் புடைப்புச் சிற்பமாகவுள்ளது. இத்தலத்தில் முருகப் பெருமானின் (ஞான) வேலுக்குப் பாலபிஷேகம் செய்வது தனிச்சிறப்பானது. கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. நாடொறும் ஆறுகால பூசைகள் நடைபெறுகின்றன. பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம். திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று. இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார். அகநானூற்றில் இந்த மலை முருகன் குன்றம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் திருமுருகாற்றுபடை, கலித்தொகை, மதுரை காஞ்சி, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். இலிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர். சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம்.
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் தென்பரங்குன்றம் குடைவரைக் கோயில், திருப்பரங்குன்றம் சமணர் குகைத்தளம், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள், மலை மீதுள்ள தர்கா
செல்லும் வழி மதுரைக்குத் தென்மேற்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றம். மதுரையிலிருந்து திருப்பரங்குன்றத்தை வெகு எளிதாக அடையலாம். கோயில் முகப்பு வரை வாகனங்கள் செல்கின்றன.
கோவில் திறக்கும் நேரம் காலை 5.30-1.00 முதல் மாலை 4.00-9.00 வரை
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருப்பரங்குன்றம், விளாச்சேரி, திருமங்கலம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரை நகர விடுதிகள், திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதி விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் இந்துசமய அறநிலையத்துறை
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 Jun 2017
பார்வைகள் 83
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்